Sunday, October 19, 2014

இ-காமர்ஸ் ஆஃபர்களும், மோசடி சர்ச்சையும்..!


 
மீபத்தில் மிகவும் பிரபலமடைந்த விஷயங்களில் ஒன்று ஆன்லைன் ஆஃபர்கள். தீபாவளி விற்பனையில் போட்டி போட்டு குதித்தன ஆன்லைன் நிறுவனங்கள். இதில் முதலில் இந்த போட்டியை ஆரம்பித்தது அமேசான் தான். ''மிஷன் மார்ஸ்'' என்ற ஆஃபர் மூலம் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை விற்றது.

அதன்பின் போட்டியாக களமிறங்கியது ஃப்ளிப்கார்ட். இந்த நிறுவனத்தின் அதிரடி விற்பனை தினமாக அக்டோபர் 6ஆம் தேதியை 'பிக் பில்லியன் தினம்' என்று அறிவித்திருந்தது. இதில் வித்தியாசமான உத்திகளை கையாண்டுள்ளது ஃப்ளிப்கார்ட். 'இந்த நாளில் பில்லியன் விற்பனையை அடைந்தே தீருவேன்' என்ற நோக்கில் விற்று தீர்ப்பதற்காக நான்கு ஆஃபர்களை வழங்கியது. குறைந்த நேரம் மட்டுமே உள்ள ஆஃபர், குறைந்த அளவு மட்டுமே உள்ள ஆஃபர், எதிர்பார்க்க முடியாத அளவுக்கு விலை குறைந்த ஆஃபர் மற்றும் பணத்தை மிச்சப்படுத்தும் ஆஃபர் என நான்கு பெரிய ஆஃபர்களால் இணையதளவாசிகள் அனைவரையும் ஃப்ளிப்கார்ட்.காமில் கட்டி போட்டிருந்தது இந்த ஆஃபர் மோதல். இதில் ஒரு ரூபாய்க்கு பொருட்களை விற்று ஆச்சர்யப்படுத்தியிருந்தது ஃப்ளிப்கார்ட். அதுமட்டுமின்றி இரட்டை இலக்க விலையில் தவிர்க்க முடியாத பொருட்களை வைத்து விற்ற ஃப்ளிப்கார்ட் சற்று நேரத்தில் விற்றுத்தீர்ந்தது என கடையை மூடியது.

மன்னிப்பு கேட்ட ஃப்ளிப்கார்ட்

ஆன்லைனில் பொருள் வாங்கியவர்களுக்கு சரியான சேவையை அளிக்க முடியாமல் போய் சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது ஃப்ளிப்கார்ட். இந்நிலையில் நேற்று ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனித்தனியே ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர்கள் சச்சின் மற்றும் பென்னி பன்சால் மின்னஞ்சல் மூலம் மன்னிப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். இந்த கடிதத்தில் விலையில் ஏற்பட்ட மாற்றத்திற்காகவும், ஸ்டாக் இல்லை என்ற அறிவிப்புகள் சிறிது நேரத்தில் தோன்றியதற்காகவும், புக் செய்த பொருட்கள் தனாகவே ரத்து செய்யப்பட்டதற்காகவும், இணையதள சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஆகிய காரணங்களை முன் வைத்து மன்னிப்பு கேட்டுள்ளனர் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தினர்.

சுதாரித்த அமேசான்

பிக் பில்லியன் டேயின் போதே ஏழு நாட்கள் தொடர்ந்து ஆஃபர்களை வழங்க போவதாக அறிவித்திருந்த சர்வதேச நிறுவனமான அமேசான், பிக் பில்லியன் டே சொதப்பல்களை கண்டும், ரீடெயில் நிறுவனங்களின் புகாரை தொடர்ந்தும், ஆஃபர்களை அள்ளி வழங்காமல் அதேசமயம் ஓரளவிற்கு நல்ல ஆஃபர்களில் பொருட்களை விற்றது. இந்த விஷயத்தில் கொஞ்சம் சுதாரித்து செயல்பட்டதால் அமேசான் பெயர் சொதப்பல் லிஸ்டில் இருந்து தப்பியது.

வெளிச்சத்துக்கு வந்த இ-காமர்ஸ் மோசடி

உட்கார்ந்த இடத்திலியே பொருட்களை வாங்குகிறோம், இதற்காக நாங்கள் அதிக தொகையும் செலவழிக்கவிலை, ரீடெயில் கடைகளைவிட குறைந்த விலையிலேயே பொருட்களை வாங்குகிறோம் என்றனர் வாடிக்கையாளர்கள். இந்நிலையில், ஆன்லைன் நிறுவனங்களில் நடந்துள்ள மோசடிகள் வெளியாக துவங்கியுள்ளன. பொருட்கள் வந்து சேர்வதற்கு முன்னதாகவே  ஆன்லைன் நிறுவனங்களின் மோசடிகள் அரங்கேற தொடங்கி இருப்பது அதிர்ச்சியான விஷயமாக மாறியுள்ளது. இதில் முதலில் சிக்கியது ஃப்ளிப்கார்ட். இந்த நிறுவனம் வைத்திருக்கும் பொருளின் மாடல் படத்தில் உள்ள காலணியிலேயே 194 ரூபாய் போட்டுள்ளது. ஆனால் அதனை 399 ரூபாய் என்று கூறி ஆஃபர் போக 198 ரூபாய் என்று கூறியிருந்தது, அந்த நிறுவனத்தின் கவனக்குறைவால் வெளிச்சத்துக்கு வந்தது.

அடுத்தது, ஷாப் க்ளூஸ் நிறுவனத்தில் வாங்கப்பட்ட முன்னனி நிறுவனம் ஒன்றின் சன் கிளாஸ். இதனை ஆர்டர் செய்யும் போது வாயை பிளக்கும் அளவிற்கு ஆஃபர் விலையில் அறிவித்திருந்தது. 15,000 ரூபாய் கண்ணடி 300 ரூபாய் என்று அனைவரும் ஆசையில் விழுந்தனர். இதனை வாங்கிய சென்னையை சேர்ந்த ஒருவர் கண்ணாடி வந்ததும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளானார். காரணம், கண்ணாடியில் கீறல்கள் இருந்துள்ளது. மேலும் பழைய கண்ணாடி போன்ற உணர்வும் இருந்துள்ளது. சரி கண்ணாடி ஒரிஜினல் தானே என்றவருக்கு அடுத்த அதிர்ச்சியும் காத்திருந்தது. அதுவும் ஏதோ ஒரு போலி நிறுவனம் என்பதும் தெரிய வந்துள்ளது.

அடுத்ததாக, சில பெரிய நிறுவனங்களை சமாளிக்க களமிரங்கும் சிறிய இ-காமர்ஸ் நிறுவனங்களும் மூன்று மாதத்திற்கு முன்பு இருந்து படிப்படியாக விலையை உயர்த்தி கடைசியாக ஆஃபர் என்று கூறி மூன்று மாதத்திற்கு முன்பு உள்ள விலைக்கு விற்கின்றன என்ற குற்றச்சாட்டும் எழுகிறது. இதனால் பொருட்களை ஆர்டர் செய்து விட்டோமே வேறு வழியில்லை என்று கூறி வாங்கிவிட்டு இனி இந்த ஆன்லை பக்கமே செல்ல மாட்டேன் என்பவர்களும் இருக்கிறார்கள். அதேசமயம் இதற்கு ஆனலைன் நிறுவனங்கள் காரணமல்ல, அவர்களுக்கு பொருட்களை விற்பவர்கள் தான் என்கிறார்கள் சிலர்.
போட்டியை சமாளிக்க போராடும் ரீடெயில் நிறுவனங்கள்: 

சமீபத்தில் ஒரு ரீடெயில் கடையில் தீபாவளி ஆஃபராக அறிவித்துள்ள விளம்பரம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிட்டது. நீங்கள் குறிப்பிட்ட 12 நாட்களுக்குள் 10 லட்சம் ரூபாய்க்கு பொருட்களை வாங்கினால் மாதம் 25,000 ரூபாய்க்கு ஒரு வருடத்திற்கு இலவசமாக எந்த பொருளை வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் என்று கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி, 5,000 தொடங்கி 10 லட்சம் வரை 11 ஆஃபர்களை இந்த நிறுவனம் அளித்துள்ளது. இந்த ஆஃபர் நல்லது தானே இதில் பொருட்களை வாங்கினால் மாதாமாதம் இலவசமாக பொருட்களை வாங்கலாமே என்று கூறுபவர்களுக்கு ஆஃபர் செக் வைத்துள்ளது.

இந்த ஆஃபரில் ஒரு லட்சத்திற்கு மேல் பொருள் வாங்குபவருக்கு தான் ஓரளவிற்கு நல்ல ஆஃபர் உள்ளது. அதற்கு குறைவாக இருப்பவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் என்ற அளவில் தான் உள்ளது என்கிறார்கள். நடுத்தர மற்றும் சற்று உயர் நடுத்தர குடும்பத்தினர் அதிகம் உள்ள ஊரில் இது சாத்தியமற்றது. இவர்கள் யாரும் தீபாவளிக்காக 1 லட்சம் ரூபாயை செலவழிக்க மாட்டார்கள். குறைந்த பட்சம் 10,000 ரூபாய் வரை செலவழித்தால் வெறும் 125 ரூபாய் மாத இலவசம் ஆஃபர் கிடைக்கும். இதற்கு அவர்கள் குறிப்பிடும் கடையில் ஒரு கிலோ எண்ணெய் பாக்கெட் தான் வாங்க முடியும். அதனால் இவர்களும் விற்பனை தந்திரமாக தான் இதனை அணுகுகிறார்கள். போட்டியை சமாளிக்க வேறு வழியின்றி இதுபோன்ற அணுகுமுறைகளை ரீடெயில் கடைகள் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
இ-காமர்ஸ் நிறுவனங்கள் மீது பாயும் ரீடெயில் குற்றச்சாட்டுகள்:

இந்த நிறுவனங்களை தொடர்ந்து, இந்திய வணிகர்கள் கூட்டமைப்பும், மத்திய வணிகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், இந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர். இதற்கு அமைச்சரும் இ-காமர்ஸ் சட்டம் திருத்தியமைக்கப்படும் என்று கூறியுள்ளார். வணிகர்கள் கூட்டமைப்போ அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில், நாங்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுகுவோம் என்று எச்சரித்துள்ளனர்.

அரசின் முடிவு என்ன?

இந்த இ-காமர்ஸ் நிறுவனங்கள் மீது நிறைய குற்றச்சாட்டுகள் அரசுக்கு குவிந்துள்ள நிலையில், ''இது குறித்து விசாரித்த பிறகே இந்த விஷயத்தில் முடிவுக்கு வர முடியும் என்கின்றன அரசு அமைச்சகங்கள். விற்பனை தொடர்பாக அரசு கேட்கும் தகவல்களை அளிக்க தயார் என்று ஃப்ளிப்கார்ட் நிறுவனமும் அறிவித்துள்ளது.

இவர்கள் எல்லாம் ஒருபுறம் வழக்கு தொடருவேன் என்று இருக்க வாடிக்கையாளர்களோ இவர்கள் ஏன் இப்படி கூறுகிறார்கள்? ரீடெயில் வீழ்கிறது என்றதும் கொடி பிடிக்கும் இவர்கள் இ-மெயில், எஸ்.எம்.எஸ். ஆகியவை வந்த போது தபால்துறை வீழ்கிறது என்றோ? ஆட்டோ, கார்கள் வந்த போது ரிக்‌ஷா ஓட்டுபவர் பாதிக்கப்படுவார்கள் என்றோ யாரும் குரல் கொடுக்கவில்லை. ஆனலைன் நிறுவனங்களை பொறுத்தவரையில் சில கவனக்குறைவுகளால் தவறுகள் நடந்தாலும், அது சரி செய்யப்பட்டு உடனடியாக பதிலளிக்கப்படுகிறது. ஆர்டர் செய்த பொருள் பேக் செய்யப்பட்டதில் ஆரம்பித்து கையில் வந்து சேரும் வரை ஒவ்வொரு செயலையும் எஸ்.எம்.எஸ். மற்றும் இ-மெயில் மூலம் தெரிவித்து கொண்டே இருக்கிறார்கள். அவர்களது சேவையை இந்த ரீடெயில் நிறுவனங்களால் வழங்க முடியாது என்கின்றனர் பொதுமக்கள்.

அரசு தலையிட்டு சில நெறிமுறைகளை வகுக்காத வரை இந்த ஆன்லைன் மற்றும் ரீடெயில் நிறுவன சண்டை ஓயாது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...