பெங்களூர்: ஜெயலலிதாவுக்காக மார்க்கெட் மதிப்பில் 6 கோடி (அரசு மதிப்பில் 2 கோடி) மதிப்புள்ள சொத்துக்களை இருவர் பிணையமாக கொடுத்துள்ளனர்.
சுப்ரீம் கோர்ட் ஜெ. உட்பட நால்வருக்கும் தலா 2 பேர் பிணையம் தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது. அதன்படி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் உச்சநீதிமன்ற ஆர்டரை ஜெயலலிதா வக்கீல்கள் சமர்ப்பித்தனர்.
இதையடுத்து ஜாமீன் நடைமுறைகளை நீதிபதி குன்ஹா ஆரம்பித்தார். ஜெயலலிதாவுக்காக பரத் மற்றும் அதிமுக கர்நாடக செயலாளர் வா.புகழேந்தியின் மனைவி குணஜோதி ஆகிய இருவர் பிணையம் அளித்தனர்.
பெங்களூர் அடுத்த ஜிகனி பகுதியில் சர்வே எண் 442ல் 32 குண்டே (கர்நாடகாவில் நிலத்தை அளவீடு செய்யும் பெயர்) நிலம் பரத்துக்கு உள்ளது. இதன் மார்க்கெட் வேல்யூ ரூ.5 கோடியாகும். இதை அவர் பிணையம் அளித்தார். ஆனால் ரூ.1 கோடி மதிப்புக்கு பிணையம் அளித்தால் போதும் என்று விதிமுறை இருந்ததால், அதுகுறித்து பரத் நீதிபதி குன்ஹாவிடம் விளக்கம் அளித்தார். அதாவது நிலத்தின் மார்க்கெட் வேல்யூ ரூ.5 கோடி என்ற போதிலும், அரசு வழிகாட்டு நெறிமுறைப்படி அதன் வேல்யூ ரூ.1 கோடி என்று பரத் தெரிவித்து பிணையம் அளித்தார்.
குணஜோதி தனது 1 கோடி மதிப்புள்ள நிலத்தை பிணையம் அளித்தார். ஆகமொத்தம் 6 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பிணையமாகின. இதையடுத்து பார்மாலிட்டிக்காக சில கேள்விகளை குன்ஹா அவர்களிடம் கேட்டார். மேலும், ஜெயலலிதா தலைமறைவானார் உங்கள் சொத்துக்கள் முடக்கப்படும் என்பது உங்களுக்கு தெரியும்தானே என்று கேட்டார். ஆம் என்று அவர்கள் கூறியபிறகு பிணையத்தை ஏற்றுக்கொண்டார்.
No comments:
Post a Comment