மீபகாலமாக ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்ற குரல் உரத்து ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது.
இந்த குரல் பெரும்பாலும் அரசியல்வாதிகளின் குரலாக இருக்கிறதே தவிர நிச்சயமாக ரசிகர்களின் குரலோ அல்லது பொதுமக்களின் குரலோ அல்ல என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
காரணம் ரஜினி அரசியலுக்கு வந்தாக வேண்டிய சரியான காரணிகள் எதுவும் பெரிய அளவில் தமிழகத்தில் நடக்கவில்லை.
மாறாக அவருடைய ஒவ்வொரு படம் ரிலீஸ் நேரத்தின் போதும் இதுபோன்ற குரலொலி கேட்கத்தான் செய்யும். இதுபோன்ற நேரத்தில் தமிழகத்தின் சமகால நிகழ்வுகளை வசனங்களாக தன் படத்தில் வைத்துக் கொண்டு படத்தை பரபரப்பாக்கினாரே தவிர அரசியலில் ஒரு தெளிவான முடிவை அவர் அறிவிக்கவில்லை. முந்தைய நிகழ்வுகளை பார்த்தால் இது நமக்கெல்லாம் புரியும்.
ஜெயலலிதா அவர்கள் முதல்முறை முதல்வராக இருந்த போது ரஜினிக்கும், முதல்வருக்கும் ஒரு பனிப்போர் நடந்து கொண்டிருந்தது.
அப்போது போயஸ்கார்டனில் முதல்வர் கோட்டைக்குக் கிளம்பும் நேரத்தில் போக்குவரத்தை நிறுத்தியிருந்தனர். அந்த நேரத்தில் அதே பகுதியில் இருந்த தன் வீட்டிற்கு ரஜினி தனது அம்பாஸிடர் காரில் வந்திருக்கிறார். காவலர்கள் அவரையும் தடுத்தி நிறுத்தி வைத்திருந்தனர். நேரம் கூடிக்கொண்டே போனது முதல்வர் கான்வாய் கடந்து போகவில்லை. இதில் கோபமான ரஜினி பட்டென்று காரை விட்டு இறங்கி ரோட்டில் நடக்க ஆரம்பித்து விட்டார்.
அந்த கூட்டத்தில் ரஜினி ஹாயாக ரோட்டில் நடந்து போவதை பார்த்து விட்டு மொத்தக்கூட்டமும் அவரை மொய்த்துக் கொண்டது. இப்போது முதல்வர் வரும் பகுதிக்குள் ரசிகர்கள் குதித்து ரஜியினிடம் ஓட, பாதுகாப்பு அதிகாரிகள் திணறிப் போனார்கள். பிறகு அவர்கள் ரஜினியை மட்டும் காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு அந்த பனிப்போர் உச்சத்திற்கு வந்தது. அப்போது தான் எடுத்த படத்திலெல்லாம் நாசூக்கான வசனக்களை வைக்க ஆரம்பித்தார் ரஜினி.
முத்து படத்தில் சாரட் வண்டி ஓட்டும் ரஜினியை காந்திமதியும், மீனாவும் சீண்டிக் கொண்டே வருவார்கள் அப்போது ரஜினி, “இதோ பாருங்க நான் பாட்டுக்கு என் வேலையை செய்துகிட்டு இருக்கேன். என்னைஏன் தொந்தரவு பண்றீங்க. என்னை வேலை செய்ய வுடுங்க. அப்புறம் உங்களுக்குதான் பிரச்சனை” என்று வசனம் பேசுவார். இது யதார்த்தமாக வைக்கப்பட்ட வசனம் போல் தெரிந்தாலும் தியேட்டரில் ரசிகர்கள் இந்த இடத்தில் விசிலடித்து கரகோசம் செய்தபோதுதான் தெரிந்தது இது ஏதோ அர்த்தத்தோடு வைக்கப்பட்ட வசனம் என்பது.
அதே படத்தில் இன்னொரு இடத்தில் நாடகம் பார்த்துக் கொண்டிருப்பார் ரஜினி. அப்போது நாயகியாக நடித்துகொண்டிருக்கும் மீனா வசனம் பேசும்போதெல்லாம் ரஜினிக்கு தும்மல் வந்து விடும். உடனே மீனா “யோவ் என்னய்யா கிண்டல் பண்றீயா” என்று கேட்பார். உடனே ரஜினி “என்னம்மா இது நாட்டுல தும்மினால் கூடவா தப்பு.” என்று கேட்பார். இதுவும் ரசிகர்களை உசுப்பேற்றி படம் பார்க்க வைத்தது. இப்படி தன்னுடைய அரசியல் சூழல்களையெல்லாம் தன் திரையுலக வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ளவே ரஜினி பயன்படுத்திக் கொண்டார்.
இப்போது ஜெயலலிதா அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ரஜினியை அரசியலுக்கு இழுக்கிறார்கள் சிலர். ஆனாலும் ஒருவேளை ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்றே வைத்துக் கொள்வோம்.
என்ன நிகழப்போகிறது…? எதுவும் நடக்காது என்பதுதான் பட்டவர்த்தனமான உண்மை.
ரஜினி எப்போதும் தேசிய சிந்தனையோடு இருப்பவர். ஆனால் நம் மக்கள் காலங்காலமாக மாநில சிந்தனையில் ஊறிப் போனவர்கள். இந்த முரண்பாடு ஒன்று போதாதா? ரஜினியை எதுவும் செய்ய விடாமல் கட்டிப்போடுவதற்கு.
அதோடு திரைக்கலைஞர்களை மக்கள் தலைவர்களாக பார்த்த காலம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அவர்களோடு முடிந்து போனது. இவர்கள் இருவரையும் வெறும் திரைக்கலைஞர்கள் என்ற பார்வையில் மட்டும் பார்க்க முடியாது. எம்.ஜி.ஆர். அவர்கள் பிறந்த இடம் வேறாக இருந்தாலும் அண்ணா அவர்களை சந்தித்தப்பிறகு அவர் தமிழர்களுக்காக தன்னையே தாரை வார்த்துக் கொடுத்தார். அடிப்படையில் அவர் மனதில் காங்கிஸின் பாசம் இருந்த போதும் திராவிட சிந்தனைக்கு மாறினார். இந்த வகையில் அவர் தமிழ் தேசிய தலைவர்களில் ஒருவர்தான்.. திமுகவின் வளர்ச்சிக்கு அவர் அளித்த பங்களிப்பு மகத்தானது.
அவர் மறைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அவர் புகழ் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. காரணம் தமிழீழத்திற்கு அவர் செய்த உதவிகள் அவர் மறைவிற்குப்பிறகு அதிக அளவில் வெளிவர ஆரம்பித்தன. உண்டியலை வைத்துவிட்டு தொண்டர்களின் சட்டைப்பையை பார்க்கும் தலைவர்களுக்கு முன்பு அவன் அடிவயிற்றைப் பார்த்து இவன் உண்டானா இல்லையா என்று கவலைபட்ட மாமனிதர் எம்.ஜி.ஆர். இவரின் அத்தனை முயற்சிக்கும் உறுதுணையாக இருந்து தோள் கொடுத்தவர் செல்வி.ஜெயலலிதா அவர்கள். இன்னும் சொல்லப்போனால் எம்.ஜி.ஆரின் எண்ணத்தை அப்படியே செயல்படுத்தி வந்தார்.
இப்போதும் அவர் நடித்த சில படங்களை பார்த்தால் அந்த உண்மை புரியும். ஒரு படத்தில் அவர் நெற்றிப்பொட்டாக உதயசூரியன் இருக்கும். இன்னொரு படத்தில் அவர் அணிந்திருக்கும் ரவிக்கையில் கூட உதயசூரியன் வரையப்பட்டிருக்கும். இப்படி எல்லா வகையிலும் எம்.ஜி.ஆர் சிந்தனையை செயல்படுத்தி வந்தவர் ஜெயலலிதா அவர்கள். பொது வாழ்க்கையில் மக்களுக்கு தொண்டு செய்ய ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது என்று தெரிந்தவுடன் இருவருமே சினிமாவை தூக்கி எரிந்தார்கள். அந்த தீர்க்கமான முடிவு ரஜினி இடத்தில் கிடையாது.
இந்த விஷயத்தில் ரஜினியை விட விஜயகாந்த் எவ்வளவோ மேல். அரசியலுக்கு வருவேன் என்பதை ஆணித்தரமாக சொல்லிவிட்டு வந்தவர். அவர் பெற்ற வெற்றியையைக் கூட ரஜினி பெற முடியுமா என்பது சந்தேகம் தான். விஜயகாந்த் தனியாக கட்சியை ஆரம்பித்து நடத்தியர். ஆனால் இன்றைய சூழலில் பி.ஜே.பிதான் ரஜினியை அழைக்கிறது தமிழகத்தில் பி.ஜே.பிக்கு உள் கட்டமைப்புகளில் ஏகப்பட்ட ஓட்டைகள் இருக்கின்றன.
அதை ரஜினியை வைத்து அடைக்க நினைக்கிறார்கள். இந்த முயற்சி ரஜினியின் ஒட்டுமொத்த புகழிலும் ஓட்டை போட்டுவிடும் என்பது அவர் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை. ரஜினி எப்ப்போதுமே கழுவுகிற நீரில் நழுவுகிற மீனாகதான் இருந்திருக்கிறார். நாடே நெய்வேலிக்கு திரண்டு போனபோது தான் மட்டும் தனியாளாக உண்ணாவிரத்தில் அமர்ந்தார். அதோடு மட்டுமில்லாமல் நதிநீர் இணைப்பிற்காக ஒரு கோடி கொடுப்பதாக அறிவித்தார். இதெல்லாம் அந்தந்த நேர பிரச்சனையிலிருந்து தப்பிப்பதற்காகத்தானே தவிர பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக அல்ல.
அந்த நிகழ்விற்குப்பிறகு நதிநீர் இணப்புப்பற்றி எங்காவது அவர் பேசியது உண்டா. அவருக்கு சாதகமான மத்திய அரசு இப்போது இருக்கும் போதாவது நதிநீர்த் திட்டதை செயல் படுத்த முயற்சிக்கவில்லையே ஏன் ? இப்படி விடை தெரியாத கேளிவிகளை வைத்துக்கொண்டு அவர அரசியலுக்கு வருவார் என்று சொல்லி யாரும் மக்களை திசை திருப்ப முயற்சிக்க வேண்டாம்.
இதையெல்லாவற்றையும் விட ’கருணாநிதி’, செல்வி.ஜெயலலிதாவும் அரசியலில் இருக்கும்வரை அவர்களை எதிர்த்து அரசியல் செய்வதை ரஜினே விரும்ப மாட்டார் என்பதே உண்மை.