Tuesday, October 28, 2014

லஞ்சப் பணங்கள் எங்கே போகிறது?


இந்தியாவில் வாழும் பெரும் பணக்காரர்கள், அரசியல் தலைவர்கள், மாபியா கூட்டாளிகள் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த பணத்தை, வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்கின்றனர். சுவிட்சர்லாந்து, ஜெர்மன் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வங்கிகளில் இந்தியர்களின் கறுப்புப்பணம் அதிகமாக முதலீடு செய்யப்படுகிறது.
“வெளிநாட்டு வங்கிகளில் 70 லட்சம் கோடி ரூபாய், இந்தியர்களால் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றின் கணக்கை காட்ட முடியாது’ என மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இந்நிலையில், கறுப்புப்பணம் எப்படி கைமாறுகிறது; இதில், யார், யாரெல்லாம் ஈடுபடுகிறார்கள் என்பது குறித்து விசாரித்தால், தலை கிறு கிறுக்கிறது. ஏனெனில், அந்தளவிற்கு, “ஹைடெக்’ முறையிலும், பல்வேறு “குறியீடுகள்’ மூலமும் இந்த தொழில் நடக்கிறது.
இது குறித்த பரபரப்பு தகவல்கள்:வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்ய இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ஏராளமான ஏஜன்டுகள் கள்ளத்தனமாக செயல்படுகின்றனர். இந்திய ஏஜன்டுகள் பெரும்பாலும் ஹவாலா மோசடி செய்யும் தொழிலில் கை தேர்ந்தவர்கள். இவர்கள், சென்னை, மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இருந்து இயங்குகின்றனர்.இதேபோல், கேரள மாநிலம் கண்ணூர், பாலக்காடு, கொச்சி மற்றும் மும்பை ஆகிய நகரங்களிலும் ஹவாலா ஏஜன்டுகள் பெருமளவில் உள்ளனர்.
ஹவாலா மோசடி திலகம் அப்ரோஸ்
வெளிநாட்டு வங்கியில் முதலீடு செய்ய விரும்புவோர், முதலில் மாநிலத்தில் உள்ள சப்-ஏஜன்டுகள் மூலம், மெயின் ஏஜன்டை பிடித்து பணம் கொடுக்கின்றனர். இவர்கள், வெளிநாடுகளில் உள்ள தங்கள் ஏஜன்டுகளுக்கு தகவல் அளித்து, எவ்வளவு பணம், எந்த வங்கியில் கட்ட வேண்டும் என தெரிவிப்பர்.அதன்படி, அவர்கள் அங்கே சம்பந்தப்பட்ட வங்கியில் பணத்தை முதலீடு செய்வர். வெளிநாட்டு வங்கிகளின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பிரதிநிதிகள், வெளிநாட்டில் இருக்கும் இந்திய ஏஜன்டுகளுக்கு, முதலீட்டு தொகைக்கு ஏற்ப அதிக அளவு கமிஷன் தருகின்றனர்.
இந்தியாவில் பணம் வாங்கிய ஏஜன்ட், வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் உள்ளவர்களுக்கு தர வேண்டிய பணத்தை, வெளிநாட்டு ஏஜன்டுகளின் கட்டளைக்கு ஏற்ப இங்கேயே பிரித்து கொடுக்கிறார். இம்முறை “உண்டியல்’ என்ற ரகசிய பெயரால் அழைக்கப்படுகிறது.
இதில், பெரும்பாலும் படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தான் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஒரு குறிப்பிட்ட முகவரிக்கு சென்று பணத்தை பத்திரமாக சப்ளை செய்தால், 1,000 ரூபாய் முதல் 1,500 வரை கமிஷன் தரப்படுகிறது. ரயில், பஸ்களில் பயணித்து இவர்கள் ரொக்கப்பணத்தை சப்ளை செய்கின்றனர்.
 பண சப்ளையின் போது, கொள்ளையர்களிடமோ, போலீஸ், உளவுத்துறை, லஞ்ச ஒழிப்பு, வருமான வரித்துறை, அமலாக்கத்துறையிடம் மாட்டினால் பணத்தை அனாதையாக விட்டு, தப்பி விடுவர்.இந்த ஏஜன்டுகள் “குருவிகள்’ என ரகசிய குறியீட்டுடன் அழைக்கப்படுகின்றனர்.
தற்போது கூரியர் மேன், பார்சல் பாய் என்றெல்லாம் புதிய, புதிய சங்கேத பெயர்களையும் பயன்படுத்த துவங்கியுள்ளனர். பண பறிமாற்றத்தில் “குருவிகள்’ முகவரி மாற்றி பணத்தை தராமல் இருக்க, சிறிய கைக்குட்டை, டோக்கன், மொபைல் எண், வித விதமான பொம்மைகள் என பலவற்றை பயன்படுத்துகின்றனர். வெளிநாட்டில் பணம் கட்டுபவருக்கு ஒரு டோக்கன் அல்லது ரகசிய அடையாளம் கொண்ட பொருள் தரப்படும்.
அந்தப் பொருள், கூரியர் மூலம் இந்தியாவில் பணம் பெறக்கூடியவருக்கு அனுப்பப்படும். அதேநேரம் அதேபோன்ற பொருள் அல்லது ரகசிய குறியீட்டு எண், இந்தியாவில் பணம் சப்ளை செய்யும் “குருவிகளுக்கும்’ தரப்படும்.”குருவிகள்’ பண சப்ளை செய்யும் முகவரிக்கு சென்று, அவர்களிடம் இருக்கும் ரகசிய அடையாள பொருள் அல்லது எண்ணை சரிபார்த்து பணம் தருவர். இந்த முறை பல ஆண்டுகளாக இந்தியாவில் கடைபிடிக்கப்படுகிறது.
தற்போது, மொபைல் போன் வசதி வந்து விட்டதால், மொபைல் எண் அடிப்படையில் மிக சுலபமாக பணம் சப்ளை செய்யப்படுகிறது.வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கிய பணத்தை மொத்தமாக கொண்டு வருவதற்கு, அன்னிய முதலீட்டு முறையும், தொண்டு நிறுவனங்கள் வழியாகவும், தங்கம் மற்றும் விலை மதிப்புள்ள பொருட்களை வாங்கி, சுங்கத்துறையை ஏமாற்றியும் பணத்தை இந்தியாவுக்குள் கொண்டு வருகின்றனர்.
தாராளமயமாக்கல், அன்னிய முதலீடு, வெளிநாட்டு இந்தியருக்கு வரிச்சலுகை போன்ற மத்திய அரசின் பல சலுகைகள் பொருளாதார முன்னேற்றத்திற்கு பயன்படுவதை விட, ஹவாலா, கறுப்புப்பண முதலைகளுக்கு மிக எளிதாக பயன்படுகிறது. இது மட்டுமின்றி, இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினர் மற்றும் வெளிநாடு சென்று வரும் இந்தியர்கள் கொண்டு வரும் வெளிநாட்டு கரன்சி, விமான நிலையத்திலேயே சட்ட விரோதமாக இந்திய பணமாக மாறி விடும்.
இந்தியாவில் கறுப்புப் பண ஏஜன்டுகளாக இருப்போர், விமான நிலையங்களில் தங்களது ஆட்களை இந்திய பணக்கட்டுடன் நிறுத்தி வைத்து, வெளிநாட்டு கரன்சி கொண்டு வருவோருக்கு, கூடுதல் விலை கொடுத்து இந்திய பணத்தால் அவற்றை வாங்கி விடுவர். 
இவ்வாறு பெறப்படும் பணம் மிக எளிதாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள வங்கிகளில் முதலீடு செய்யப்படுகிறது.
மோடி பிரதமாரன உடனே வெளி நாடுகளில் ,வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள70 லட்சம் கோடிகள் பணத்தை வெளிக் கொண்டுவரப்பொவதாக முழங்கினார்.அந்த முழக்கம் இன்று சின்ன முனங்களாக கூட இல்லை.
சரி இவ்வளவு பணம் வெளினாடுகளுக்கு எப்படி போய் சேர்த்து வைக்கப்பட்டது.?
இந்த ஹவாலா மோசடி, சென்னை, மும்பை, கொச்சி விமான நிலையங்களில் போலீஸ், சுங்கத்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்தே நடக்கிறது. இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் பதுக்கப்பட்ட பணம், நல்ல பணமாக (ஒயிட் மணி) தொழில் துவங்க வரும் வெளிநாட்டினர் வழியே ஏஜன்டுகள் மூலம் இந்தியாவிற்குள் கொண்டு வரப்படுகிறது. இதேபோல், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அந்தமான் வழியே பணத்தை கொண்டு வர சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி கொள்கின்றனர். மேலும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர் (என்.ஆர்.ஐ.,) வங்கிக் கணக்கு வழியிலும் கறுப்புப்பணம் பெருமளவு கொண்டு வரப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.
இப்படி பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் ஒரு பக்கம் இருந்தாலும், கறுப்பு பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வர முடியுமா?
 முடியாதா, இந்திய அரசு நடவடிக்கை எடுக்குமா, எடுக்காதா என்பதைப் பற்றி ஆங்காங்கே பட்டிமன்றங்கள் நடத்தாத குறையாக விவாதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடுகளில் முடங்கும் பணத்திற்கு இந்தியாவில் வரிச்சலுகை வழங்கி, அவற்றை இந்தியாவின் வளர்ச்சிக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து கறுப்புப் பணத்தை நல்ல பணமாக கொண்டு வருவதில், தொண்டு நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வெளிநாட்டு பணத்தை கொண்டு வர விரும்பும் தொண்டு நிறுவனங்கள், தங்களது தொண்டுகளை காட்டி, வெளிநாட்டு பணம் பெறுவதற்கான உரிமத்தை பெறுகின்றன. இந்த எண் பெற்றால், எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும், தடையின்றி, வரியின்றி கொண்டு வர முடியும். ஆனால், தொண்டு நிறுவனங்கள் உண்மையானவையா என இந்திய உளவுப்பிரிவான “ரா’ விசாரித்து அனுமதி தரும்.எப்.சி.ஆர்.ஏ., எனப்படும், “பாரின் கான்ட்ரிபியூட்டட் ரெகுலேஷன் ஆக்ட்’ என்ற வெளிநாட்டு பணப்பங்கு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், தடையில்லா எண் வழங்கும் முறை மாவட்ட கலெக்டரின் அதிகாரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனால், சில போலியான தொண்டு நிறுவனங்கள், கலெக்டர் அலுவலக ஊழியர்களை வசப்படுத்தி தடையில்லா எண் பெற்று, வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களின் கறுப்புப் பணத்தை நன்கொடை என்ற பெயரில் கொண்டுவந்து, பின் கமிஷன் பெற்று உரியவர்களிடம் ஒப்படைக்கின்றன.இதை “ரா’ அதிகாரிகள் கண்டுபிடித்து, தடையில்லா எண்ணை ரத்து செய்ய முயற்சித்தால், கோர்ட் மூலமே ரத்து செய்வதில் பல நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதனால் கறுப்புப்பண நடமாட்டத்தை அரசு நினைத்தால் மட்டுமே கடுமையான சட்ட திட்டத்தால் தடுக்க (கொஞ்சம் குறைக்காவாது )முடியும் என்பதே உண்மை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...