Sunday, October 26, 2014

வேலை உங்களுக்குத்தான்...இவை இருந்தால் போதும், !


நமக்கான பணி வாய்ப்புகளைத் தேடும்போது, நம்மிடம் சில முக்கியமான தகுதிகளை நிறுவனங்கள் எதிர்பார்க்கும். அத்தகுதிகளைப் பெற்றிருக்கும் ஒருவரே, தான் விரும்பிய பணியை, நல்ல சம்பளத்தில் பெறுவார்.

அவை பற்றிய ஒரு கலந்துரையாடலை இக்கட்டுரை வழங்குகிறது


தகவல்தொடர்பு திறன்கள்

ஒருவர் தேவையான மொழிகளில், நல்ல அறிமுகத்தைப் பெற்றிருப்பதுடன், பணியைப் பெறுமளவிற்கு சிறப்பாக மொழியைப் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். திக்கித் திணறாமல், நல்ல வளமையோடு பேசுபவர், எளிதில் தனக்கான பணி வாய்ப்புகளைப் பெறுகிறார்.

வளவளாவென்று இல்லாமல், சொல்வதை ரத்தின சுருக்கமாகவும், அமைதியான முறையிலும், சிறப்பான வார்த்தைகளைப் பயன்படுத்தியும் பேசும்போது, நம்மால் இயல்பாகவே, பிறர் கவரப்படுவார்கள். பேசுவதோடு மட்டுமின்றி, நல்ல எழுதும் திறனும், நமக்கான பணி வாய்ப்பை உறுதி செய்வதில் முக்கியப் பங்கை வகிக்கின்றன.


தலைமைத்துவம்

ஒருவருக்கு முன்முயற்சியும்(ஒரு விஷயத்தை தொடங்குவதில் ஆர்வம்), பொறுப்பும் இருந்தால், அவரை இயல்பாகவே, ஒரு நிறுவனத்திற்கு பிடித்துவிடும். இத்தகைய இயல்பு, அனைவருக்கும் அமைந்து விடுவதில்லை. ஆனால், இந்த பண்புகள், பணி தேடும் ஒருவரிடம் கட்டாயம் எதிர்பார்க்கப்படுகின்றன.

எனவே, தலைமைத்துவப் பண்பைப் பெற்று, முன்முயற்சியும் இருக்கும் ஒருவர், தனக்கு பொருத்தமானப் பணியை எளிதாகப் பெறுவார்.


தன்னம்பிக்கை

நிறுவனங்கள், தங்களுக்காக பேசும் தன்னம்பிக்கை மனிதர்களையே விரும்புகின்றன. ஏனெனில், அவர்கள் பல பொறுப்புகளை ஏற்று, அவைகளை தன்னம்பிக்கையுடன் கையாள்வார்கள்.

ஒருவர் தனக்கான வேலை வாய்ப்பை பெறுவதற்கு தன்னம்பிக்கை என்பது கட்டாயத் தேவையாகும். நேர்முகத் தேர்வில்கூட, ஒரு குறிப்பிட்டப் பொறுப்பை ஒப்படைத்தால் அதை சிறப்பாக தலைமையேற்று செய்து முடிப்பீர்களா? என்றெல்லாம் கேட்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அப்போது, உங்களின் பதில் எப்படி வருகிறது என்பது ஊன்றி கவனிக்கப்படும்.


குழு உணர்வு

குழு உணர்வு என்பது ஒரு நிறுவனத்தில் பணியாற்றுவதற்குரிய அடிப்படைத் தகுதியாகும். யாருமே, இந்த உலகில் தனித்து இயங்க முடியாது. ஏனெனில், யாருமே அவர்களாக பிறக்கவில்லை. பிறந்தது முதல், அவர்களாகவே தங்களுக்கான அனைத்தையும் செய்து கொண்டதில்லை.

எனவே, சார்ந்தியங்குவதே இவ்வுலகின் தத்துவம். ஒரு வணிக நிறுவனத்திற்கும் அதுவே பிரதானம். இதன்பொருட்டு, உங்களின் குழு உணர்வு சோதித்தறியப்படும்.


இலக்கு

ஒருவர் நேர்முகத் தேர்வுக்கு வரும்போது, அந்த நிறுவனத்தைப் பற்றி என்ன தெரிந்து வைத்துள்ளார் மற்றும் அவர் அங்கே என்ன பொறுப்பை எதிர்பார்த்து, அதன்மூலம் எந்த இலக்கை நிர்ணயித்து அதை அடையப்போகிறார்? என்பதை ஒரு நிறுவனம் எதிர்பார்க்கும். இதுதொடர்பான கேள்விகளும் கேட்கப்படும். எனவே, அதற்கு தயாராக இருக்க வேண்டும்.

மாறாக, இல்லை, எனக்கு இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை; பணியில் சேர்ந்த பிறகுதான் திட்டமிட வேண்டும் என்று சொல்பவர் வேலை வாய்ப்பை பெறுவது அரிதினும் அரிதே...


கடின உழைப்பு

எந்தப் பணியிலும், கடின உழைப்பு என்பதை சமரசம் செய்துகொள்ளவே முடியாதுதான். உலகில் வாழும் அனைவருக்குமே பணம் என்பது அத்தியாவசியம். எனவே, நாம் பணி செய்வதன் முதன்மை நோக்கம் பணம்.

ஆனால், அந்த பணத்திற்கான நோக்கத்தோடு, நாம் செய்யும் பணியும் நமக்குப் பிடித்துப்போனால், நாம் தாராளமாக நமது கடின உழைப்பை அதில் செலுத்துவோம். இதன்மூலம், திருப்திக்கு திருப்தியும், பணத்திற்கு பணமும் கிடைக்கும். எனவே, கடினமாக உழைக்க தயாராய் இருப்பவர்களுக்கு, பணியும் தயாராகவே இருக்கும்.


படைப்புத் திறன்

படைப்பாக்கத் திறன் கொண்ட ஒருவரை, நிறுவனங்கள் எப்போதுமே விரும்புகின்றன. ஏனெனில், ஒரு நிறுவனத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை, வேறு எந்த முறையில் மாற்றியமைத்தால், செலவு குறைவாகவும், லாபம் அதிகமாகவும் இருக்கும் என்று ஒருவர் புத்தாக்க முறையில் தீர்வுகளை முன் வைக்கும்போது, அவர் இயல்பாகவே, நிறுவனங்களால், போட்டிப்போட்டு கொத்திக் கொள்ளப்படுவார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...