Tuesday, October 14, 2014

முன்னாள் ஜனாதிபதி கனவு நாயகன் அப்துல்கலாம் பிறந்தநாள்

'உறக்கத்தில் வருவதல்ல கனவு... உன்னை உறங்கவிடாமல் செய்வது தான் கனவு' என்ற தாராக மந்திரத்தை 64 கோடி இந்திய இளைஞர்களின் மனதில் விதைத்தவர் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம். வளர்ந்த இந்தியாவாக 2020க்குள் உருவாக்கும் லட்சியத்துடன், இன்றைக்கும் இந்தியா முழுவதும் சென்று அனைத்து தரப்பினரையும், குறிப்பாக 18 கோடி இளைஞர்களை சந்தித்து உங்களால் முடியும் என்ற நம்பிக்கையை விதைத்து ஊக்கமும், ஆக்கமும் கொடுத்து வருகிறார்.


நாட்டின் 11வது ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம் அரசியலமைப்பு சட்டப் பணியை முறையாக நிறைவேற்றியதுடன், தன் பணி முடிந்து விடவில்லை என்றார். அனைத்து தரப்பினரும் ஒரு தொலை நோக்கு பார்வையுடன், நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன், ஒற்றுமையாக உழைத்தால் வளர்ந்த இந்தியாவை 2020க்குள் அடைய முடியும் எனக்கூறி நம்பிக்கையை ஏற்படுத்தினார்.

தொலை நோக்கு திட்டங்கள் :


ஜனாதிபதியாக இருந்த போது 15 மாநிலங்களுக்கு சென்று, அந்தந்த மாநிலங்களின் வளம், சிறப்பான செயல்பாடு, தீட்ட வேண்டிய தொலை நோக்கு திட்டங்கள் குறித்து சட்டசபைகளில் விளக்கினார். பல மாநிலங்கள் அந்த திட்டங்களை இலக்காக கொண்டு செயல்பட்டன.லோக்சபாவில் 'வளர்ந்த இந்தியா 2020' தொலை நோக்கு திட்டத்தை குறிப்பிட்டு, எம்.பி.க்களுடன் சிற்றுண்டி சந்திப்பு நடத்தி, அதன் முக்கியத்துவத்தை விவரித்தார். எல்லோருக்கும் எரிசக்தி பாதுகாப்பு என்பது குறித்து சிந்தித்து, அதனை 2030க்குள் அடைய இலக்கு நிர்ணயித்து மக்களுக்கு விளக்கினார். ஐதராபாத்தில் ஜனாதிபதிக்கென ஒரு சொகுசு மாளிகை உண்டு. ஆண்டுக்கொரு முறை ஜனாதிபதிகள் ஓய்வெடுக்க பயன்படுத்துவர். அந்த மாளிகையை, பயோ எரிசக்திக்கென கொள்கை வகுக்க மாநாடு நடத்த பயன்படுத்த வேண்டும் எனக்கூறி அங்கு அனைவரையும் அழைத்து விவாதித்து அதில் பிறந்தது தான் 65 ஆயிரம் டன் பயோ எரிசக்தி கொள்கை.

கல்வியில் மாற்றம் :


தொடக்க கல்வியில் மாற்றங்கள் வேண்டும் என ஒரு குடியரசு தின விழாவில் கலாம் வலியுறுத்தியதால், சி.பி.எஸ்.இ., கல்வி முறையில் மாற்றம் ஏற்பட்டது. பேராசிரியர் யஷ்பால் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்து பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. அவரது வலியுறுத்தலால், 'நேஷனல் நாலெஜ் நெட்ஒர்க்' என்ற இணைப்பை மத்திய அரசு உருவாக்கி 5000 உயர்கல்வி நிலையங்களுக்கு உத்வேகத்தை கொடுக்க வைத்தது.உயர்கல்வி, ஆராய்ச்சி என சிந்தித்தவர் ஒரு நாள் என்னையும், மேஜர் ஜெனரல் சுவாமிநாதனையும் அழைத்து, இந்தியாவின் அடுத்த கட்ட ஆராய்ச்சி நானோ அறிவியல் தொழில்நுட்பத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் என விவாதித்தார். மாநாடு நடத்தி அதற்கான திட்டத்தை தயாரிக்க உத்தரவிட்டார். இதுதொடர்பாக அடுத்த 15 ஆண்டுகளுக்கான திட்டங்களை தீட்டி, ரூ.1500 கோடிக்கான முதற்கட்ட அறிக்கையை நாங்கள் சமர்ப்பித்தோம்.

விஞ்ஞானிகளுக்கு விருந்து :



வழக்கமாக ஜனாதிபதி மாளிகையில் விருந்து வைபவம், உலகத் தலைவர்களுக்கு மட்டுமே நடக்கும். இம்முறையை தகர்த்து, இந்திய விஞ்ஞானிகளுக்கும், இளம் ஆராய்ச்சியாளர்களுக்கும் ஜனாதிபதியாக இருந்த போது விருந்துக்கு (பேன்குவட் பார்ட்டி) ஏற்பாடு செய்தார். அந்த விருந்துக்கு அவர் அழைத்த மற்ற விருந்தினர்கள் யார் தெரியுமா? திட்ட கமிஷன் துணை தலைவர், மனித வள மேம்பாட்டு அமைச்சர், அறிவியல் தொழில் நுட்ப அமைச்சர். அவர்களிடம் மாநாட்டின் பரிந்துரையாக சமர்ப்பித்த ரூ.1500 கோடி நானோ தொழில் நுட்ப ஆய்வறிக்கையை விளக்கினார். அத்திட்டம் மத்திய அரசால் உடன் ஏற்கப்பட்டு, இரு கட்டங்களாக நிதி ஒதுக்கப்பட்டு, நானோ அறிவியல் ஆராய்ச்சி இந்தியாவில் உத்வேகம் பெற்றது.

தினமலர் நாளிதழும் கலாமும் :



கிராமப்புறங்கள் வளர்ச்சி அடைந்தால் தான் நாடு வளர்ச்சி அடையும் என 'புரா' திட்டத்தை கொடுத்தார். கலாம் ஜனாதிபதியானதும் முதலில் வலியுறுத்தியது நதிநீர் இணைப்பு திட்டம். அப்போதைய பிரதமர் வாஜ்பாய், அறிஞர் குழு அமைத்து திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவிட்டார். அதிதிறன் நீர் வழிச்சாலை திட்டத்தால், 1500 பி.சி.எம் வெள்ள நீரை 15000 கி.மீ., நீர்வழிச்சாலையில் மாநிலங்கள் பயன்பெற முடியும் இதனை தொடர்ந்து பிரதமர் மோடி, நதிநீர் இணைப்பு ஆய்வறிக்கை தயாரிக்க ரூ.100 கோடி ஒதுக்கியிருக்கிறார். இதனால் விவசாயம் செழிக்கும். இளைஞர்களுக்கு மதிப்பு கூட்டப்பட்ட வேலைவாய்ப்பு கிடைக்கும். 2050ல் உலகம் 9 பில்லியன் மக்கள் தொகையாக மாறும்போது, முதல் உணவளிக்கும் நாடாக இந்தியா திகழும்.

இரண்டு கோடி மரங்கள் :



நுாறு கோடி இந்தியர்கள் 100 கோடி மரம் நட வேண்டும் என்ற இயக்கத்தை ஒவ்வொருவரும் செய்ய கலாம் கேட்டுக் கொண்டார். பல்வேறு மாநிலங்களுக்கு அவர் சென்று வலியுறுத்தியதால், 2 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன. பதினெட்டு கோடி மாணவர்களிடம் ஒரு உறுதி மொழி ஏற்க வைத்தார். அதாவது உன் வீட்டை, தெருவை சுத்தமாக்கினால், நாடு சுத்தமாகும் என்றார். தற்போது பிரதமர் மோடி அதை ஒரு இயக்கமாக மாற்றி விட்டார்.ஒருவரை பற்றி பல குற்றச்சாட்டுகளை கூறினால் கலாம் அதை அமைதியாக கேட்பார். அவர்களை பற்றி இரு நல்ல விஷயங்களை கூறி, அதை மட்டும் பார் என்பார். நம் சிந்திக்கும் திறனை அதிகப்படுத்துவதுடன், அதில் என்ன புதுமை இருக்கிறது எனக் கேட்டு நம்மை மாற்றி சிந்திக்க வைப்பார்.

உன்னதமான தலைவர் :


நற்சிந்தனைக்கு இடமளிப்பார். எதிர்மறை சிந்தனைகளை தவிர்ப்பார். பேசுவதிலும், எழுதுவதிலும், எண்ணத்திலும் இந்தியாவின் வளர்ச்சியை பற்றி மட்டுமே சிந்திக்க வைப்பார். அறிஞர்களை அழைத்து விவாதித்து, நல்ல கருத்துக்களை மட்டும் எடுத்து கொண்டு அதன் மீதான முடிவை அறிவிப்பார். ஒரு கொள்கை சார்ந்த விவாதத்தில், அவர் தன்னையே விமர்சிக்குமளவுக்கு நேர்ந்தாலும், உரிமை கொடுத்து விமர்ச்சிக்க வைத்து, அதில் ெதளிவு பெற்று நல்ல முடிவு எடுப்பதில் அவருக்கு நிகர் அவர் தான். பழிவாங்கும் உணர்வு அவரிடம் இருக்காது. தன்னிடம் பயிற்சி பெறும் யாராக இருந்தாலும், அவர்களது தலைமை பண்பை வளப்படுத்துவதிலும், பல்வேறு சோதனைகளுக்கு ஆளாக்கி வெற்றி ெபறவைப்பதிலும் கலாம் ஒரு உன்னத தலைவர்.

தினமும் 10 ஆயிரம் பேர் :



64 கோடி இந்திய இளைஞர்களை நம்பி இந்த 83 வயதிலும் மாதத்தில் 20 நாட்கள் இந்தியா முழுமைக்கும் சென்று ஒரு நாளிலே குறைந்தது 10 ஆயிரம் மக்களை, இளைஞர்களை சந்தித்து உரையாடுகிறார். வழிகாட்டியாக, இளைஞர்களின் கனவு நாயகனாக இருக்கும் கலாம் பிறந்த இந்த நன்னாளில், 'இந்தியாவை வளமான நாடாக்கி காட்டுவோம்' என உறுதி மொழி ஏற்போம்.குழந்தைகளின் கேள்விக்கு பதிலளிக்கையில் டாக்டர் கலாம், '125 கோடி மக்களின் முகத்தில் என்றைக்கு புன்னகை தவழ்கிறதோ, அன்று தான் என் நாடு வளமான நாடு என்பதன் அர்த்தம் விளங்கும்' என்றார். அது தான் தன் பணி என்றார். கலாமின் கனவை நனவாக்குவோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...