Saturday, October 25, 2014

வங்கிச் சேமிப்பில் அதிக வருமானம் வேணுமா ?

நம்முடைய எதிர்பாராதச் செலவுகளுக்குத் தேவைப்படும் பணத்தை நாம் பெரும்பாலும் வங்கிச் சேமிப்பு கணக்கில் வைத்திருப்போம். எப்போது பணம் தேவைப்பட்டாலும் எளிதாகப் பணத்தை எடுத்துக்கொள்ளும் வசதி இருப்பதால்தான் இப்படி செய்கிறோம்.

இதையே வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டு வைத்திருந்தால் நம் அவசரத்துக்குப் பணத்தைத் திரும்ப எடுக்க முடியாது. முதிர்வுக்கு முன் டெபாசிட் பணத்தை எடுத்தால், அபராதம் செலுத்தவேண்டும். வங்கிச் சேமிப்பிலிருந்து நமக்குக் கிடைக்கும் வருமானம் 4 சதவிகிதம்தான். இதுவே ஃபிக்ஸட் டெபாசிட் எனில், ஆண்டுக்கு 8% முதல் 9% வரை வட்டி வருமானம் கிடைக்கும். ஆக, பணம் தேவைப்படாதபோது அதை வங்கிச் சேமிப்பு கணக்கில் வைத்திருப்பதால் நமக்கு நஷ்டம்தான்!

இதற்கு என்ன தீர்வு? வங்கிச் சேமிப்புக் கணக்கிலிருக்கும் பணம் அதிக வருமானம் தரவேண்டும். அதேசமயம், தேவைப்படும் நேரத்தில் எந்த அபராதமும் இன்றி பணம் எடுக்கவேண்டும் என்கிற மாதிரி ஏதேனும் திட்டம் உண்டா என்று நீங்கள் கேட்டால், உண்டு என்பதுதான் பதில்.

ஒரு சில வங்கிகள் சேமிப்புக் கணக்கிற்கு ஆண்டிற்கு 6 - 7 சதவிகிதம் வரை வட்டி வழங்குகின்றன. இந்த வங்கிகளில் நீங்கள் சேமிப்புக் கணக்குத் தொடங்கலாம். ஆனால், இங்கு குறைந்தபட்ச பராமரிப்பு தொகை

ரூ. 1 லட்சத்திற்கு மேல் வைத்திருக்கவேண்டும். பலருக்கும் இது சாத்தியமானதல்ல. சாதாரண சேமிப்புக் கணக்கின் மூலம் எப்படி அதிக வருமானம் பெறுவது என்பதைப் பார்ப்போம்.

தற்போது பெரும்பாலான வங்கிகள், சேமிப்புக் கணக்கில் வாடிக்கையாளர்களுக்கு இரு வசதிகளைத் தருகின்றன.

1. ஸ்வீப் இன் ஃபெசிலிட்டி (Sweep in facility)

2. ஃபிளெக்ஸி டெபாசிட் (Flexi Deposit)



ஸ்வீப் இன் ஃபெசிலிட்டி!



இந்த வசதியின் மூலம் சேமிப்புக் கணக்கிற்கு தேவைப்படும் குறைந்தபட்ச தொகைக்கு மேல் இருக்கும் பணத்தை ஃபிக்ஸட் டெபாசிட்-ஆக வங்கியில் மாற்றிக்கொள்வார்கள். ஃபிக்ஸட் டெபாசிட்-ஆக மாற்றப்பட்ட பணத்திற்கு அதிக வட்டி கிடைக்கும். உங்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டில் இருக்கும் பணத்தை வங்கி காசோலை மூலமாகவோ அல்லது ஏ.டி.எம். மூலமாகவோ எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

உதாரணமாக, உங்கள் சேமிப்புக் கணக்கில் ரூ.50,000 இருக்கிறது. உங்களுடைய வங்கியின் குறைந்தபட்ச பராமரிப்புத் தொகை ரூ.5,000 எனில், கூடுதலாக இருக்கும் ரூ.45,000-த்தை ஃபிக்ஸட் டெபாசிட்க்கு மாற்றிவிடுவார்கள். இந்த ரூ.45,000-த்துக்கு 8 - 9 சதவிகிதம் வருமானம் கிடைக்கும். இடையில் நீங்கள் ரூ.20,000 எடுக்க விரும்பினால் எளிதாக காசோலை அல்லது ஏ.டி.எம். கார்டு மூலம் எடுக்கலாம். பணம் எடுத்தபிறகு உங்களுடைய ஃபிக்ஸட் டெபாசிட் ரூ.25,000-ஆக குறைந்துவிடும்.

இந்த வசதியின் மூலம் நீங்கள் உங்களுடைய சேமிப்புக் கணக்கிற்கு அதிக வருமானம் பெறமுடியும். அதேபோல் எப்போது பணம் தேவைப்பட்டாலும் எந்தவித அபராதமுமின்றி எடுத்துக்கொள்ள முடியும். ஒவ்வொரு முறையும் ஃபிக்ஸட் டெபாசிட்டாக மாற்றுவதற்கு எந்தப் படிவமும் நிரப்பித் தரவேண்டியதில்லை. உங்கள் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச பராமரிப்பு தொகைக்கு மேல் இருக்கும் பணம் ஒவ்வொரு முறையும் தானாக ஃபிக்ஸட் டெபாசிட்-ஆக மாற்றப்படும். ஃபிக்ஸட் டெபாசிட் மூலம் கிடைக்கும் வட்டி வருமானம் ஆண்டிற்கு ரூ.10,000 மேல் சென்றால் வங்கிகள் வருமான வரிப் பிடித்தம் (டி.டி.எஸ்.) செய்வார்கள். வரிப் பிடித்தத்தைத் தவிர்ப்பதற்கு படிவம் 15ஜி அல்லது 15ஹெச் சமர்ப்பிக்க வேண்டும். கூடவே பான் எண் விவரத்தையும் தருவது அவசியம்.



ஃபிளெக்ஸி டெபாசிட்!



இதன் மூலம் உங்கள் வங்கி யிலுள்ள ஃபிக்ஸட் டெபாசிட்டை, சேமிப்புக் கணக்கோடு இணைத்துவிடுவார்கள். உங்கள் சேமிப்புக் கணக்கிலிருக்கும் பணத்தைவிட அதிக பணம் தேவைப்பட்டால் உங்களுடைய ஃபிக்ஸட் டெபாசிட் மூலம் எளிதாக எடுத்துக்கொள்ளலாம். உதாரணமாக, உங்களிடம் ஃபிக்ஸட் டெபாசிட் ரூ.1 லட்சத்திற்கு இருக்கிறது. இந்த டெபாசிட் மூலம் 8 - 9 சதவிகிதம் வரை வருமானம் கிடைக்கும். இந்த ஃபிக்ஸட் டெபாசிட்டை உங்களுடைய சேமிப்புக் கணக்கோடு இணைத்துவிடுவார்கள். உங்களுக்கு ரூ.25,000 தேவை எனில், காசோலை அல்லது ஏ.டி.எம். அட்டை மூலம் எடுத்துக்கொள்ள முடியும். உங்களுடைய ஃபிக்ஸட் டெபாசிட் ரூ.75,000-ஆக குறைந்துவிடும்.



எது சிறந்தது?



ஃபிளெக்ஸி டெபாசிட்டைவிட ஸ்வீப் இன் ஃபெசிலிட்டிதான் சிறந்தது. ஸ்வீப் இன் ஃபெசிலிட்டி-ல் எப்போதெல்லாம் அதிக பணம் சேமிப்புக் கணக்கில் இருக்கிறதோ, அது தானாக ஃபிக்ஸட் டெபாசிட் ஆக மாற்றப்படும். இதனால் நமக்கு அதிக வருமானம் கிடைக்கும்.

பெரும்பாலான வங்கிகள் தரும் இந்த வசதியைப் பயன்படுத்தி அதிக வருமானம் பெற நீங்களும் முயற்சி செய்யலாமே!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...