Sunday, October 12, 2014

திமுகவின் அசைக்கமுடியாத அடித்தளம்.

ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற பழமொழி உண்டு. தற்போதைய தமிழக அரசியல் சூழலில் பாரதிய சனதா கட்சி தலைகால் புறியாமல் ஆடிக்கொண்டுள்ளது. அடுத்த முதல் அமைச்சர் சுப்பிரமணிய சாமி, தமிழிசை சவுந்திரராசன், ராதாகிருசுணன், ரசினி என பல கோணங்களில் பரபரப்பாக நடிக்கின்றனர்.

அதிமுகவும் திமுகவும் முடிந்து விட்டன. தமிழக மக்கள் இனி திராவிட கட்சிகளை நம்ப மாட்டார்கள். தேசிய கட்சியின் ஆட்சிக்காக தமிழ்நாடு ஏங்குகிறது. அப்பப்பா என்ன ஆழமான கனவுகள்.

தனித்து போட்டியிட்டால் 1 சதவீத வாக்குகளை கூட வாங்க முடியாத பாரதிய சனதா கட்சி இப்படி கனவு காணலாமா?

மதிமுக, தேமுதிக, ஆதரவில் கன்யாகுமரியை பிடித்த பாசக, இப்போது தனித்து போட்டியிட்டு தமிழகத்தையே பிடிக்க கனவு காண்கிறது.

இதில் உச்ச கட்ட சிரிப்பு திமுக முடிந்துவிட்டது என்று சொல்வது தான்.

திமுக மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து இருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் 1 கோடி திமுக தொண்டர்கள் அசைக்கமுடியாத அடித்தளமாக இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியுமா?

2014 நாடாளுமன்ற தேர்தல் திமுக அசுர பலத்தில் உள்ளது என்பதை நிரூபித்து உள்ளது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டது. ஆனாலும் பல உதிரி கட்சிகள், அமைப்புகள் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தன. அரசின் நலத்திட்டங்கள், ஆளும் கட்சிக்கு ஆதரவான நிலை என பலதரப்பு வாக்குகளும் அதிமுகவுக்கு கிடைத்தது. 70 சதவீதம் பொதுமக்கள் அதிமுகவுக்கு ஆதரவாக வாக்கு அளித்தனர். இந்த அடிப்படையில் அதிமுக 44.3 சதவீதம் வாக்குகளை பெற்றது.

மதிமுக, தேமுதிக, பாமக, கொமதேக, புதியநீதிக்கட்சி, என 7 கட்சிகளின் ஆதரவுடன் பாசக கூட்டணி போட்டியிட்டது. மத்தியில் காங்கிரசுக்கு மாற்று அமைய வேண்டும் என்பதற்காக பல நடுநிலை வாக்காளர்களும் பாசக அணிக்கு வாக்கு அளித்தனர். பொதுமக்கள் 20% பேர் பாசக அணிக்கு வாக்கு அளித்தனர். இதன் அடிப்படையில் பாசக அணி 18.5 சதவீதம் வாக்குகளை பெற்றது.

திமுக விசி, மமக கட்சிகள் கூட்டணியிட்டு போட்டி இட்டன. இதில் விசி, மமகவின் வாக்கு வங்கிகள் 1.5 சதவீதம் தான் என்பது அனைவருக்கும் தெரியும். பொதுமக்களை பொருத்தவரை யாரும் திமுகவுக்கு வாக்கு அளித்திருக்க வாய்ப்பு இல்லை. அத்தனை பேரும் திமுக மீது வெறுப்பில் இருந்தார்கள். அதிக பட்சமாக 5 சதவீத பொதுமக்கள் வாக்கு திமுகவுக்கு கிடைத்திருக்கலாம். இப்படிப்பட்ட நிலையில் திமுக பெற்ற வாக்கு சதவீதம் 26.8%. இதில் விசி, மமக, பொதுமக்கள் வாக்குகளை கழித்தால் திமுக மட்டும் 20 சதவீத வாக்குகளை பெற்றிருக்கும். இந்த 20% வாக்குகள் முழுக்க முழுக்க திமுக தொண்டர்களுடையது. 

திமுக அணி மூன்றாம் இடம்தான் பெரும் என்ற பல கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கியது திமுகவின் அசைக்கமுடியாத 20% தொண்டர்  படை தான். 

அதிமுகவின் 20% தொண்டர்களுக்கு இணையாக திமுகவும் 20% தொண்டர்களை கொண்டுள்ளது. பொதுமக்கள் வாக்கு, தேர்தல் கூட்டணி என்பவை தேர்தலுக்கு தேர்தல் மாறக்கூடியவை. இன்று பாசக கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் 2016 தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் என்பதை மறுக்க முடியுமா?

7 கட்சி கூட்டணி, பொதுமக்கள் வாக்கு, இத்தனையும் சேர்த்தே பாசக அணியால் திமுகவின் 20% சதவீதத்தை நெறுங்க முடியவில்லை. இந்த லட்சணத்தில் 2016ல் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கிறார்களாம். 

அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்ற அதே நேரம், திமுக 30 இடங்களில் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது. பாசக அணியால் 8 இடங்களில் தான் திமுக அணியை முந்த முடிந்திருக்கிறது.

செயலலிதா உள்ளவரை அதிமுக அசுர பலத்தில் இருக்கும், கருணாநிதிக்கு பின்னும் திமுக அசுர பலத்தில் தான் இருக்கும். இதை பாசகவும் காங்கிரசும் கவனிக்க தவற வேண்டாம். அணிகள், தலைமைகள் மாறலாம், ஆனால் அதிமுகவையும் திமுகவும் இன்னும் குறைந்தபட்சம் 50 ஆண்டுகளாவது அசுர பலத்துடன் இருக்கும். அதற்கு பின்னர் பாசக, காங்கிரசு என்ற கட்சிகள் தமிழ்நாட்டில் இருந்தால் ஆட்சியை பற்றி யோசிக்கட்டும். 

எம்.சி.ஆருக்கு பின் அதிமுக முடிந்ததுவிடும் என்று கனவு கண்டதை போல, கருணாநிக்கு பின் திமுக முடிந்து விடும் என கனவு காண்பது அடி முட்டாள் தனம்.   

திராவிட கட்சிகளை வீழ்த்துவோம் என்ற தேசிய கட்சிகளின் கனவு ஒருகாலமும் தமிழ்நாட்டில் எடுபடாது. அவ்வளவு சீக்கிரம் இந்த மண்ணில் தந்தை பெரியாரை விழ்த்திவிட முடியாது. 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...