Tuesday, October 21, 2014

வெற்றி பெற தேவையான 5 குணங்கள் - அப்துல்கலாம்


"நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை. உன்னால் வெற்றியை அடைய முடியும். உன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும். லட்சியத்தை அடைய அறிவாற்றலை பெருக்கு. அதனை அடைய உழைப்பு முக்கியம். உழை. உழைத்து கொண்டே இரு. இத்துடன் விடாமுயற்சி உனக்கு இருந்தால், நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும்." இதுவே வெற்றியின் ரகசியம்.

எங்கு சென்றாலும் இளைஞர்களிடம், வெற்றி பெற வேண்டும் என்ற நம்பிக்கையையும், லட்சியத்தையும், கனவையும் நான் பார்க்கிறேன்.


தாமஸ் ஆல்வா எடிசன், ரைட் சகோதரர்கள், அலெக்சாண்டர் கிரகாம்பெல், சர்.சி.வி.ராமன், மகாத்மா காந்தியடிகள் ஆகியோர், ஒவ்வொருவரும் ஒரு வகையில் தனித்தன்மை பெற்றவர்கள். இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால், அந்த பக்கத்தை இந்த உலகத்தையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது. நீங்கள் அனைவரும் தனித்துவமானவர்களே.

 இந்த உலகம் இரவும் பகலும் கடுமையாக உழைத்து கொண்டே இருக்கிறது. ஏன் என்று தெரியுமா? உங்களையும் மற்றவர்களைபோல் ஆக்குவதற்காகத்தான், அந்த கடுமையான உழைப்பு.

 எனவே, "இந்த மாயவலையில் மட்டும் நான் விழமாட்டேன். நான் தனித்துவமானவன் என்பதை நிரூபிப்பேன்" என்று நீங்கள் நினைத்த அடுத்த வினாடியிலேயே, வரலாற்றில் உங்களுக்கான பக்கம் எழுதப்பட, நீங்கள் விதை விதைத்து விட்டீர்கள் என்று அர்த்தம். எனவே நீ நீயாக இரு. மன எழுச்சியடைந்து உள்ள 60 கோடி இளைஞர்கள், இந்தியாவின் மிகப்பெரிய சொத்து.

நாட்டின் சவால்களை சமாளிக்க நமது இளைய தலைமுறைகள் எழுச்சி பெற வேண்டும். மாணவ மாணவிகளின் ஆராயும் மற்றும் சிந்திக்கும் திறனை வளர்ப்பதற்கு கல்வி நிறுவனங்கள் உதவ வேண்டும். அவ்வாறு வளர்க்கப்பட்டால், அது மாணவர்களின் படைப்பு திறனையும், ஆக்கப்பூர்வமான உற்பத்தி திறனையும் வளர்க்கும். இந்த திறமை பெற்ற மாணவர்கள், தன் வாழ்நாள் முழுவதும் தன்னிச்சையாகவே கற்கும் திறனை அடைவர்.

இப்போது நாட்டில் பெரும் சதவீதம் பேர் படிப்பின் பல்வேறு நிலைகளில், கல்வி கற்க இயலாத சூழ்நிலையில் மற்ற வேலைகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகின்றனர். பல்வேறு கவனச் சிதறல்கள், வறுமை, வேலைக்கு ஏற்ற படிப்பு மற்றும் சிறப்பு பயிற்சியும் இல்லாத சூழல், உலகமயமாக்குதல் கொள்கையால் ஏற்படும் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வு, குடும்பச்சூழல், மாற்று கலாசாரம் போன்றவை நம் இளைஞர்களை, வேகமாக மாற்றும் சூழலில் தள்ளி விடுகிறது.

இத்தனையும் தாண்டி நமது பாரம்பரியம், நமது நாட்டின் வளம், நமது நாட்டுக்கு ஏற்ற வளர்ச்சிமுறை, நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வு, முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற பழக்கவழக்கங்கள் இவைகளை அடிப்படையாக கொண்டு, இந்த கால முறைக்கு ஏற்றார்போன்று, நம்மை நாம் அறிவுப்பூர்வமாக மாற்றி அமைக்க வேண்டும். நாம் நம் முகவரியை இழக்காமல் நமது மக்களை அறிவார்ந்த சமுதாய மலர்ச்சிக்காக, அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

வாழ்நாள் முழுவதும் படித்துக் கொண்டு இருக்கிறோம். பணி செய்து கொண்டு இருக்கிறோம். இவைகளை செய்யும்போது நமக்கு வாழ்வில் ஒரு லட்சியம் வேண்டும். ஒரு நாடு வளமான நாடாக கருதப்பட வேண்டும் என்றால் நோயின்மை, செல்வச் செழிப்பு, நல்ல விளைச்சல், அமைதியும் சுமூகமான சமுதாய சூழலுடன், வலிமையான பாதுகாப்பும் அந்த நாட்டில் நிலவ வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார்.

நாம் எல்லோரும் உழைத்துதான் நம் நாட்டை வளமான நாடாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு மனிதனும், மானுடனாக வேண்டும் என்றால் நாம் ஒரு மரத்தையாவது வளர்க்க வேண்டும். இந்த தூத்துக்குடியில் ஒவ்வொரு மாணவரும் 5 மரங்களையாவது நடவேண்டும்.

பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வர ஒரு வருடம் ஆகிறது. பூமி சூரியனை வலம் வரும் போது, நம் வயதில் ஒன்று கூடுகிறது. நாம் எல்லோரும் பூமியில் வாழ்வதால் இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டே இருக்கும். வினாடிகள் பறக்கும். நிமிடங்கள் பறக்கும். மணித்துளிகள் பறக்கும். நாட்கள் பறக்கும். வாரங்கள் பறக்கும். மாதங்கள் பறக்கும். ஆண்டுகள் பறக்கும்.

இப்படி பறந்து கொண்டேயிருக்கும் நேரத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியுமா? நிச்சயமாக முடியாது. ஆனால் நம் வாழ்வில் உள்ள நேரத்தை நமக்கு பயன்படும் படியாக உள்ள, தகுந்த பணிக்கு நம்மால் செலவளிக்க முடியும். என் அறிவுரை என்னவென்றால் பறக்கும் நாட்களை, பறந்து கொண்டு இருக்கும் நாட்களை வாழ்க்கைக்கு பயன்படுமாறு உபயோகப்படுத்த வேண்டும்.

மனதில் உறுதி இருந்தால், வெற்றி அடைவீர்கள். இந்த வெற்றிக்கு ஒரு முக்கிய குணம் அவசியமாகும். அதுதான் நல்லொழுக்கம். இந்த நல்லொழுக்கத்தை ஆன்மிக சூழ்நிலையில் உள்ள உங்கள் தாய், தந்தை மற்றும் உங்களது ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆகிய 3 பேரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

உங்கள் வாழ்வு சிறக்கவும், தோல்வியை தோல்வி அடையச் செய்யவும் 5 குணாதிசயங்கள் உங்களுக்கு வரவேண்டும். வாழ்வில் லட்சியம் இருக்க வேண்டும்.

லட்சியத்தை அடையக்கூடிய அந்த அறிவை தேடிப்பெற வேண்டும். கடின உழைப்பு வேண்டும். பிரச்சினைகளை கண்டு பயப்படக்கூடாது. பிரச்சினைகளை தோல்வி அடைய செய்ய வேண்டும். வாழ்விலே நல்லொழுக்கம் வேண்டும்.

இவை ஐந்தும் இருந்தால் நம் எல்லோருக்கும் என்றென்றும் வெற்றிதான். நீங்கள் அவசியம் வெற்றி அடைவீர்கள்.


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...