Friday, October 10, 2014

ஓங்கி மண்டையிலேயே அடிக்க முடியுமா?

‘அடுத்தவன் சொல்லுறதையெல்லாம் நீ எதுக்கு காதுல வாங்கிக்குற?’ இப்படி அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்வதற்கு எளிமையாகத்தான் இருக்கும். ஆனால் நம்மை யாராவது திட்டியிருக்கிறார்கள் என்றோ அல்லது பாராட்டியிருக்கிறார்கள் என்றோ தெரிந்தால் மனம் குறுகுறுப்படைந்துவிடும். திட்டும், பாராட்டும் கூட வேண்டாம் ‘உங்களைப் பத்தி அவர் சொன்னார்’ என்று சொன்னாலே போதும்- என்ன சொன்னார் என்று தெரிந்து கொள்ள மனம் ஆசைப்படத் தொடங்கிவிடும். இது ஒரு சாதாரண மனித இயல்புதானே? ஜெனிட்டிக்கல் இயல்பு. ஜீனிலேயே பதிந்து கிடக்கிறது. ஆனால் இந்த இயல்பைத் தாண்டி வர முடியும் என்றால் நாம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிடுவோம். ‘யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும். நாம் நம் வேலையைப் பார்க்கலாம்’ என்கிற மனநிலை அது. ஆனால் எப்படி சாத்தியம்? 

இங்கு அப்படித்தான். நல்லதோ கெட்டதோ ஒரு விஷயத்தை நான்கு பேர் நல்லவிதமாகச் சொன்னால் மூன்று பேராவது எதிர்மறையாகத்தான் பேசுவார்கள். எந்த விவகாரத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். காந்தி நல்லவரா கெட்டவரா என்பதில் ஆரம்பித்து ஜெயலலிதா வரைக்கும் எந்தப் பெரிய விவகாரமாக இருந்தாலும் இரண்டு பக்கங்கள் உண்டு. எல்லோருமே முழுமனதாக ஆதரிக்கும் விவகாரம் என்று ஒன்றைக்காட்டுங்கள் பார்க்கலாம். ரொம்ப கஷ்டம். அன்னை தெரசாவைக் கூட ஒரு சாரார் சேவகர் என்று பாராட்டினால் இன்னொரு சாரார் அவர் கிறித்துவத்தைப் பரப்பினார் என்பார்கள். இதில் எது உண்மை எது பொய் என்றெல்லாம் இப்பொழுது பேசவில்லை. ஆனால் எல்லாவற்றிலுமே இருதரப்பு உண்டு. பாஸிட்டிவான விமர்சனங்களும் உண்டு நெகடிவ்வான விமர்சனங்களும் உண்டு.

காந்தி, தெரசாவே தப்பிக்க முடியாத போது கருணாநிதியும் ஜெயலலிதாவும் எந்த மூலைக்கு? அவர்களே மிச்சமில்லாத போது சாமானியர்கள் எந்த மூலைக்கு? ஆக குத்துபவர்கள் குத்திக் கொண்டேதான் இருப்பார்கள். முடிந்தவரை கண்டுகொள்ளாமல் விட வேண்டும். கண்டுகொள்ள வேண்டிய சூழல் வந்துவிட்டால் நமக்கு எருமைத் தோல் வாய்த்திருக்கிறது குத்துபவர்களிடம் நிரூபித்துவிட வேண்டும்.

எதற்காக இந்த எருமைத் தோல் புராணம் என்றால்-


எழுத்து, சினிமா என்றில்லை. எல்லா இடங்களிலும் இந்த விமர்சனம் என்கிற ஆயுதம் இருக்கத்தான் செய்கிறது. பள்ளி கல்லூரிகளில் இல்லையா என்ன? பணிபுரியும் இடங்களில் இல்லையா என்ன? சகல இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. நம்மை முன்னால்விட்டு பின்னால் பேசுவார்கள். கேள்விப்படும் போது சுள்ளென்றிருக்கும். ‘அவனுக்கு stuff இல்லை பாஸ்..ஆனா சோப்பு போட்டே மேல வந்துட்டான்’ என்பார்கள். ‘அவளா...மேனஜரைக் கைக்குள்ள போட்டிருக்கா’ என்பார்கள். ‘அவன் சரியான ஜொள்ளன் மச்சி’ - இதெல்லாம் மிகச் சாதாரணமான உரையாடல்கள். இதையெல்லாம் தாண்டி உட்காரும் இடத்திலேயே ஊசியை நட்டு வைக்கும் விமர்சனங்களும் உண்டு. அவற்றை நிராகரிப்பது பற்றிய பேச்சுதான் சுவாரஸியமாக இருந்தது.

விமர்சனங்களில் இரண்டு வகை உண்டு. Constructive மற்றும் Destructive. முதல் வகை உண்மையான விமர்சனங்கள். தனிப்பட்ட எந்த காழ்ப்புணர்வுமின்றி விமர்சித்திருப்பார்கள். அவற்றை நிராகரிக்க வேண்டியதில்லை. கேட்டு வைத்துக் கொள்வது நம்முடைய நன்மைக்கு பயன்படும். இந்த விமர்சனங்களுக்கு ஏற்ப நமக்கு நாமே சில திட்டமிடல்களைச் செய்யலாம். எதைச் செய்தால் அந்த விமர்சனத்தில் சொல்லப்பட்ட குறைகளைத் தாண்டி வர முடியும் என்று யோசிக்கலாம். கடைசியில் நாரதர் கலகம் மாதிரி நன்மையில்தான் முடியும். 

இரண்டாவது வகை இருக்கிறது பாருங்கள்- மண்ணை அள்ளித் தூற்றுவது. அடுத்தவனை தூற்றும் போது ஒரு கிளுகிளுப்பு கிடைக்குமல்லவா? அதற்காகச் செய்யப்படும் விமர்சனங்கள். அந்தப் பெண்ணையும் அவனையும் எங்கேயும் சேர்த்து பார்த்திருக்கமாட்டார்கள். ஆனால் கிளப்பிவிட வேண்டியதுதான். ‘அவ இடுப்புக்கு கீழ கையை வெச்சுட்டு நடந்து போனானே..நான் பார்த்தேன்’ என்கிற வகையிலான விமர்சனங்கள். கேட்கிறவனுக்கும் கிளுகிளுப்பு. சொல்கிறவனுக்கும் கிளுகிளுப்பு.  ‘நீ ஏன் இப்படி செய்யற? வித்தியாசமா யோசி’ என்பார்கள். உண்மையில் நாம் சரியாகத்தான் செய்து கொண்டிருப்போம். நம்மை திசை திருப்புகிறார்களாம். 

இந்த இரண்டு வகையான விமர்சனங்களையும் வித்தியாசப்படுத்திப் பார்ப்பதுதான் முக்கியமான வேலை. சொல்கிற ஆள் எதற்காகச் சொல்கிறான், அவன் உண்மையைத்தான் சொல்கிறானா என்றெல்லாம் ஒரு பத்து நிமிடங்கள் நேரம் ஒதுக்கி யோசித்துப் பார்க்கலாம். அவன் சொல்வது சரி என்று பட்டால் முதல்வகை விமர்சனமாக எடுத்துக் கொண்டு அதற்கடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கலாம். ‘இவன் சொல்வதில் ஏதோ சூட்சுமம் இருக்கிறது’ என்ற சந்தேகம் வந்தால் மண் மீது அமர்ந்திருந்து எழும் போது தட்டிவிட்டுக் கொள்வோம் அல்லவா? அப்படித் தட்டிவிட்டுவிட வேண்டும். 

எந்தவகை விமர்சனமாக இருந்தாலும் சில நிமிடங்களுக்காவது மனம் வருத்தமடையத்தான் செய்யும். ஆனால் ஐந்து நிமிடங்களுக்கு மேல் மனதில் வைத்திருக்க வேண்டியதில்லை. பாட்டுக் கேட்கலாம். புத்தகம் படிக்கலாம். குழந்தைகளோடு விளையாடலாம். இப்படி கவனத்தை வேறு பக்கம் மாற்றிவிட வேண்டும். ஆரம்பத்தில் இதைச் செய்வதற்கு கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் இரண்டு மூன்று முறை பழகிவிட்டால் ‘நாங்க எல்லாம் ட்ரெயின் சக்கரத்திலேயே ட்ராவல் பண்ணுறவங்க தெரியுமா?’ என்று கெத்து காட்டத் தொடங்கிவிடலாம். விமர்சனங்களை எதிர்கொள்வது உண்மையிலேயே இவ்வளவு எளிமையான காரியம்தான்.

ஆனால் ஒன்று-

பொதுவாகவே விமர்சனங்களுக்கு தன்னிலை விளக்கங்கள் கொடுக்க வேண்டியதில்லை- அது எந்த வகை விமர்சனமாக இருந்தாலும் சரி- புன்னகை போதும். ஆனால் அப்படியே விட்டுவிடக் கூடாது. எதை விமர்சித்தார்களோ அதே வேலையை வெறித்தனமாகத் தொடர வேண்டும். நம்பிக்கையை மட்டும் தளரவிட்டுவிடக் கூடாது. வெற்றிக் கோட்டைத் தொடுவதற்கு இரண்டு இஞ்ச் பாக்கி இருக்கும் போது இரண்டு கால்களையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வெறித்தனமாக ஓடி வெற்றியை அடைந்த பிறகு திரும்பிப் பார்த்து சிரிப்போம் பாருங்கள்- அதுதான் நமது இரண்டு கால்களையும் அழுந்த ஊன்றி மொத்த சக்தியையும் திரட்டி ஓங்கி புறமண்டையில் அடிப்பது. அதன் பிறகு அவன் நம் திசைப்பக்கமே திரும்பமாட்டான். அப்படியே திரும்பினாலும் நாம் கண்டுகொள்ள வேண்டியதில்லை. தெருநாய் ‘உர்ர் உர்ர்’ என்னும் போது திரும்பிப் பார்ப்போமா? அப்படி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...