Saturday, October 25, 2014

மாயா கோட்னானியை -விடுதலை செய்தது ஏன்..? நேர்மைத் துணிவிருந்தால் தமிழக பாஜக கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்…….

maya-kodnani-2

கோத்ராவில் 2002ம் ஆண்டு நிகழ்ந்த ரெயில் எரிப்பு
சம்பவத்திற்கு மறுநாள் நரோடா பாட்டியா என்ற இடத்தில் நடந்த வன்முறையில் 97 பேர் கொல்லப்பட்டனர்.
அந்த கால கட்டத்தில் ‘நரோடா’ எம்எல்ஏ வாகவும்,
பின்னர் குஜராத் மாநில அமைச்சராகவும் பணிபுரிந்தவர் மாயா கோட்னானி. 2008-ல் சுப்ரீம் கோர்ட் தலையிட்டு அமைத்த சிறப்பு விசாரணைகுழுவின் தீவிர முயற்சிகளால்
இந்த வழக்கு விசாரணை மேற்கொண்டு செல்லப்பட்டு,
இறுதியாக பா.ஜ.க. அமைச்சராக இருந்த மாயா கோட்னானிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இடையில் சில காலம் கைதைத் தவிர்க்க, தலைமறைவாகவும் இருந்த பாஜக மந்திரி தான் மாயா கோட்னானி.
97 அப்பாவிப் பொது மக்கள், துடிக்கத் துடிக்க கொல்லப்பட முக்கிய காரணமாகவும், அந்த கொலைக்குற்றங்களை உருவாக்கிய முக்கிய காரணகர்த்தாவாகவும் இவர் இருந்தார்
என்றும் சிறப்பு கோர்ட் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
மாயா கோட்னானி மீது சுமத்தப்பெற்ற குற்றச்சாட்டுக்கள் கொலை மற்றும் கொலைச்சதி. இவை சந்தேகமற நிரூபிக்கப்பட்டதாகக் கூறித்தான் சிறப்பு நீதிமன்றம் அவருக்கு இந்த சிறைத்தண்டனையை விதித்தது.
இந்த “தெய்வத்திருமகள்” சிறைக்குச் சென்றவுடன்,
உடல்நிலையை காரணம் காட்டி, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சகல சௌகரியங்களுடன் “சிகிச்சை” பெற்று வந்தார்.
தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து குஜராத்
நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். தண்டனையை “நிறுத்தி” வைக்கவும், உடல்நிலை காரணம் காட்டி தனக்கு “ஜாமீன்” கோரியும் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு போட்டார்.
மனுவை ஏற்ற குஜராத் உயர்நீதிமன்றம், அவருக்கு
“ஜாமீன்” கொடுத்தது மட்டுமல்லாமல், அப்பீல் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கும் வரை தண்டனையை நிறுத்தியும் வைத்து உத்திரவிட்டிருக்கிறது.
இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் “தடை ஆணை” (stay order) வாங்க SIT முயற்சி செய்தபோது, குஜராத் (பாஜக) அரசு அதற்கு அனுமதி கொடுக்க மறுத்து விட்டது.
ஆக, மாயா கோட்னானி சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்கவும், அவருக்கு ஜாமீன் கிடைக்கவும், குஜராத் அரசு வெளிப்படையாக செயலாற்றி இருக்கிறது.
கொலைக் குற்றச்சாட்டில் 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற ஒரு பாஜக அமைச்சரின் தண்டனையை நிறுத்தி வைக்கவும், அவர் ஜாமீனில் வெளியே வரவும் அதனை சட்டபூர்வமாக எதிர்க்க கடமைப்பட்ட மாநில அரசே அவர் விடுதலை பெற உதவுகின்ற -
இதே பா.ஜ.க.வின் லோக்கல் தலைமை தான்
இங்கு -
——————-
மலையாள தேசத்து திருவாளர் பொன்ரா. சொல்கிறார் -
“ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பைப் பொறுத்தவரை நீதி வழங்கப்பட்டு இருக்கிறது, பாஜக தமிழகத்தை ஆளும் காலம் நெருங்கி வருகிறது”
திருமதி தமிழிசை சொல்கிறார் -
“மத்திய அரசு திட்டமிட்டு அரசியல் சாசனப் பிரிவு 355-ஐ நோக்கி செல்லவில்லை. ஆனால், சட்டம் – ஒழுங்கு
பிரச்சினைகள், தீவிரவாதம் தொடர்பானவற்றை நாங்கள் கவனித்து வருகிறோம். தமிழக மக்களை பாதுகாக்க வேறுவழி இல்லை என்றால் இங்கு என்ன
வேண்டுமானாலும் நடக்கலாம்”
————————
( கொலை அல்ல, கொலைச்சதி அல்ல) -
வருமானத்தை மிஞ்சிய சொத்து வைத்திருந்தார்
என்கிற காரணத்திற்காக -
( 28 ஆண்டுகள் சிறை அல்ல)
வெறும் 4 ஆண்டுகள் மட்டுமே
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள -
பெரும்பாலான மக்களால் அண்மையில் தான்
முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட,
அவர்களது அன்புக்கும், பிரியத்திற்கும் பாத்திரமான
ஒரு தலைவரை “ஜாமீனில் விட வேண்டும்”
என்கிற கோரிக்கையை மட்டும் முன்வைத்து போராடும் அவரது கட்சியினரைப் பார்த்து மிரட்டுகிறார்கள்.
தள்ளிப்போடாமல், தாமதம் இல்லாமல்
“ஜாமீன்” மனுவை விசாரித்திருந்தால் இந்த போராட்டங்களுக்கு அவசியமே வந்திருக்காதே….
ஜெயலலிதாவை “ஜாமீனில்” விடவேண்டும் என்கிற
கோரிக்கையில் என்ன தவறு இருக்கிறது ?
சட்டம் அனுமதிக்கப்பட்டுள்ள
உரிமை அவருக்கு மறுக்கப்படுவானேன் ?
அவரது மனுவை விசாரிப்பதில் வேண்டுமென்றே
கால தாமதம் செய்யப்படுவது ஏன் ?
கொலைக்குற்றம் நிரூபணமானவருக்கு பாஜக அரசு
“ஜாமீன்” கொடுத்திருக்கும்போது -
கொலைக்குற்றத்திற்காக 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை
பெற்றவரின் தண்டனையை
பாஜக அரசு நிறுத்தி வைத்திருக்கும்போது -
அதிமுகவினரின் இந்த கோரிக்கையில் என்ன தவறு
காண முடியும் ? முதல் நாள் மட்டும் அவர்களின்
போராட்டத்தில் வன்முறை இருந்தது உண்மை. அது
தீர்ப்பைக் கேட்டவுடன் ஏற்பட்ட உணர்ச்சி வேகம்.
ஆனால் பின்னர் என்ன செய்கிறார்கள் …?
உண்ணாவிரதம் இருப்பதும், மண்சோறு தின்பதும்,
அங்கப்பிரதட்சணம் செய்வதும், யாகம் வளர்ப்பதும்,
மொட்டை போட்டுக் கொள்வதும், – இவற்றைப் பார்த்து
பாஜக தலைமை வயிறு எரிவது ஏன் ? ஜனாதிபதி ஆட்சி என்று பயமுறுத்துவது ஏன் …?
இதுவரை 212 பேர்கள் தற்கொலை செய்து
கொண்டிருக்கிறார்கள். இது போலியா ? நாடகமா ?
உங்கள் கட்சியில் இது போல் யாராவது ஒருவரையாவது
காண முடியுமா ? சரியோ, தவறோ – அவர்கள் தலைவியின் மீது அவர்கள் கொண்டுள்ள பாசம், நம்பிக்கை, ஏமாற்றத்தின் விளைவு அது….
மனசாட்சி இல்லாமல் இதனை
கொச்சைப்படுத்துபவர்களை கேட்கிறேன்.
உங்களில் யாருக்காவது ஒரு லட்சமோ, 5 லட்சமோ,
10 லட்சமோ ஏன் ஒரு கோடியோ கொடுத்தால் கூட
செத்துபோகத் தயாராக இருப்பீர்களா ?
இத்தகைய உயிர்த் தியாகத்தை வேறு எங்காவது
காண முடியுமா ? செத்துப் போனவர்களுக்கு பதவி
எதாவது கொடுக்க முடியுமா ? பணம் கொடுத்தாலும் – அது சாவுக்கு இணையாகி விடுமா ?
தேர்தல் களத்தில் நின்று ஜெயிக்க துப்பில்லை.
அத்தனை பேரையும் துணைக்கழைத்துக் கொண்டு கூட ஆறு சதவீத ஓட்டைத் தாண்டாத இவர்களுக்கு
ஆட்சியைப்பிடிக்க என்ன அருகதை இருக்கிறது ?
மோடி பிரதமராக இருந்தால், நாடே இவர்களுக்கு
சொந்தமாகி விடுமா ?
மோடி தேர்ந்தெடுக்கப்பட்டது மத்திய அரசை ஆளத்தான். தமிழ்நாட்டில் இவர்களைத்தான் மண்ணைக் கவ்வ வைத்து விட்டார்களே….பின் ஏன் கொல்லைப்புற வழியாக உள்ளே வர முயற்சி…?
தமிழ் மண்ணின் துரோகிகள் பாஜக வினர்..
காங்கிரஸ்காரர்கள் பேசாமலே துரோகம் செய்தார்கள்…
இவர்கள் பேசிப்பேசி ஏமாற்றிக்கொண்டே
துரோகம் செய்கிறார்கள் …
மக்களின் அனுமதி இல்லாமலே ஆள ஆசைப்படுகிறீர்களே -
என்ன செய்திருக்கிறீர்கள் நீங்கள் தமிழ்நாட்டிற்கு…?
தமிழக மீனவர்களின் 72 படகுகள் ராஜபக்சேயால்
பறிக்கப்பட்டு, வெய்யிலிலும், மழையிலும் நாசமாகிக்
கொண்டிருக்கின்றன.
உங்கள் சுப்பிரமணிய சாமி சொல்கிறார் நான் தான்
ராஜபக்சேயிடம் படகுகளை பிடித்து வைத்துக் கொள்ளச்
சொன்னேன் என்று. இன்று வரை பிரதமரோ,
மத்திய அரசோ இதை மறுத்துக் கூறி இருக்கிறதா ?
அப்படியென்றால் சு.சு. உங்கள் அரசின் பிரதிநிதியாகச்
செயல்படுகிறார் என்று தானே அர்த்தம் …?
மீனவர்கள் கைது செய்யப்படும் அவலம் இன்னும்
தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் -எடுக்கும் என்று
பேசிக்கொண்டே இருக்கிறீர்களே தவிர 5 மாதங்கள்
ஆகப்போகின்றன -பேசியதில் என்ன பலன் கிடைத்தது ….?
படகுகள் என்றைக்கு கிடைக்கும் என்று தேதி சொல்ல
முடியுமா உங்களால் …?
கச்சத்தீவை மீட்போம் என்று தேர்தலுக்கு முன் நீங்களும்
பேசினீர்கள். மத்திய அரசைப் பிடித்த பிறகு -
உங்கள் நிலை என்ன ?
காவிரி நதி நீர் ஆணையம் அமைப்பதில் நீங்கள் என்ன
செய்தீர்கள் …? கர்னாடகா பாஜக வெறியர்களுடன்
கூட்டு சேர்ந்து கொண்டீர்கள். ஆணையம் கோரிக்கை
கிணற்றில் போட்ட ‘கல்’ ஆகி விட்டது….
பார்க்கும் இடங்களில் எல்லாம் ‘இந்தி’யைத்
தெளித்துக் கொண்டே போகிறீர்கள்….
இன்றில்லா விட்டாலும், நாளையாவது பலன் தருமென்றா ..?
ராஜீவ் காந்தி வழக்கில் 22 ஆண்டுகளாக சிறையில்
வாடுபவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முயன்றபோது காங்கிரஸ் அரசு தான் குறுக்கே புகுந்தது.
உங்களுக்கென்ன வந்தது ?
நீங்களும் அதே நிலையை எடுப்பது எப்படி ?
இப்போது தமிழர்களின் விடுதலையை விட உங்களுக்கு
சோனியா காந்தி அம்மையாரை திருப்தி செய்ய வேண்டியது முக்கியமாகி விட்டதா …. ?
மற்ற விஷயங்களில் இவ்வளவு வாய் கிழிகிறதே உங்களுக்கு -
ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை
கேரள கவர்னராக நியமித்ததன் காரணமென்ன ?
பாஜக வில் வேறு கிழம்-கட்டைகள் இல்லையா என்ன ?
அதையும் கொஞ்சம் வெளியே சொல்லுங்களேன்…
இதுவரை தெரியாத அப்பாவித் தமிழர்கள்
அதையும் தெரிந்து கொள்ளட்டும்…
சு.சுவாமி ஜனாதிபதிக்கு மனு கொடுக்கிறார் -
“தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை.
356வது பிரிவின் கீழ் தமிழ்நாட்டை ஜனாதிபதி
ஆட்சியின் கீழ் ஒரு வருடத்திற்கு கொண்டு வர
வேண்டும். அதன் பிறகு தேர்தல் நடத்தினால் போதும்”
சு.சுவாமி யார் ? உங்கள் கட்சியின் கொள்கை வகுக்கும்
குழுவின் தலைவர்…! அப்படியானால் அவர் கொடுத்த
பெட்டிஷன், பாரதீய ஜனதா கட்சி கொடுத்தது போலத்தானே ?
நீங்கள் இதுவரை தமிழக மக்களுக்கு செய்துள்ள,
இப்போது செய்து கொண்டிருக்கும் சேவைகளுக்கு
தமிழக மக்கள் உங்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து
வரவேற்பு கொடுப்பார்கள் என்று நினைக்கிறீர்களா ?
துடப்பக்கட்டை என்னும் ஒரு சாதனம் -
“ஆம் ஆத்மி” கட்சி அறிமுகமாவதற்கு
முன்பிருந்தே தமிழகத்தில் புழக்கத்தில் இருந்தது
என்பதை தமிழ் நாட்டு மக்கள் யாரும் மறக்கவில்லை…..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...