Tuesday, October 14, 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்!

தொலைபேசியில் பேசியவர்  நான் தான்  வங்கியின் தலைவர்  

பேசுகிறேன். என்றதும் முதலில் பதற்றம் அடைந்த அந்த அலுவலர் 

பின்னர் மிகவும் பணிவாக சார்.உதவி மேலாளர் பேசுகிறேன்.மேலாளர் 

இல்லை சார். என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள் சார்?’ என்று 

கன்னடத்தில் பேசத் தொடங்கிவிட்டார். 

 

பேசியவர் ஆங்கிலத்தில் விசாரித்தபோதும், அந்த அலுவலர் தனக்கும் 

கன்னடம் தெரியும் என்பதை தலைவரிடம் காட்டிக்கொள்ளவும், மேலும் 

கன்னடத்தில் பேசினால் மிக நெருக்கமாக இருப்பதுபோல் தோன்றும் 

என்பதால் அவ்வாறு பேசியிருக்கிறார். 

 

அந்த வங்கியின் தலைமையகம்  கர்நாடகாவில் இருந்ததால் 

பெரும்பாலான கிளைகள் அந்த மாநிலத்தில் தான் இருந்தன. அதனால் 

தென்னகத்தை சேர்ந்த பெரும்பாலான அலுவலர்கள் தங்கள் 

பணிக்காலத்தில் குறைந்தது மூன்று ஆண்டுகளாவது கர்நாடகத்தில்

பணியாற்றியிருப்பார்கள். எனவே அவர்கள் அனைவரும் கன்னட 

மொழியில் பேசும் அளவுக்கு தேர்ச்சி பெற்றிருப்பார்கள். 

 

பதில் சொன்னவர் கன்னடத்தில் பேசியதும், தொடர்புகொண்ட 

தலைவரும் கன்னடத்திலேயே பேசியிருக்கிறார். தனது நெருங்கிய 

உறவினர் மும்பையிலிருந்து அந்த ஊர் வழியாக இரயிலில் தங்கம் 

கொண்டு செல்லும்போது காவல் துறையினர் தற்செயலாக அவருடைய உடைமைகளை பரிசோதித்தபோது அவரிடம் உள்ள தங்கத்தைப் பார்த்து 

அந்த தங்கத்திற்கான ஆவணங்களைக் கேட்டதாகவும்  அவைகள் 

கையில் இல்லாததால் உடனே ரூபாய் 2 இலட்சம் (கவனிக்கவும்   

ஆயிரங்கள் அல்ல. இலட்சங்கள்!) கட்ட சொல்வதாகவும் அவரிடம் 

பணம் இல்லாததால் அவர் இரயில் நிலையத்தில் காத்திருப்பதாகவும்

சொல்லியிருக்கிறார். 

 

அவரது அங்க அடையாளங்களை சொல்லி உடனே இரயில் நிலையம் 

சென்று அந்த பணத்தைக் கொடுக்க சொல்லியிருக்கிறார் அந்த நபர்.   

தான் உடனே விமானம்  மூலம் சென்னை அன்று மதியமே 

வருவதாகவும் அப்போது அந்த பணத்தை சென்னையில் உள்ள 

வங்கியின் மத்திய கணக்கு அலுவலகம் மூலம் அனுப்பிவிடுவதாவும்

சொல்லியிருக்கிறார்.

 

அந்த அலுவலரும்.ஆகட்டும் சார். இப்போதே கொண்டு போய் 

கொடுக்கிறேன். என்று சொல்லிவிட்டார்.

 

இந்த இடத்தில் ஒன்றைக் கவனிக்கவேண்டும்.பேசுபவர் வங்கியின் 

தலைவர் என்றதும் அந்த அலுவலர் திடீரென ஏற்பட்ட மரியாதை 

கலந்த அதிர்ச்சியில் பேசுபவர்  தலைவர் தானா என்பதையும் அவர் 

ஏன் சென்னையில் உள்ள வட்டார அலுவலகத்தை தொடர்புகொள்ளாமல் 

நேரடியாக வங்கி கிளையை தொடர்புகொள்ளவேண்டும் என்பதையும் 

அவர் சொல்வது சரியா என்பதையும் கவனிக்கத் தவறிவிட்டார் என்பதை.

 

எப்போதும் வங்கிகளில் உயர் பதவியில் இருப்பவர்கள் நேரடியாக 

வங்கி கிளையில் உள்ளவர்களை எதற்கும் தொடர்பு கொள்ளமாட்டார்கள்.

எதுவானாலும் உரிய வழியாகத்தான் (Through proper channel)  

தொடர்புகொள்வார்கள். அதுவும் தலைவர் என்றால் கேட்கவே வேண்டாம். 

 

அதைப்பற்றியெல்லாம் சிந்திக்காமலும், சென்னை வட்டார அலுவலகத்தை 

தொடர்பு கொண்டு அந்த செய்தி சரிதானா என விசாரிக்காமலும் உடனே 

அவர் கேட்ட பணத்தை கொண்டுபோய் கொடுக்க முடிவு செய்து விட்டார்   

அந்த அலுவலர். மேலும் இந்த பணத்தை வங்கியிலிருந்து எந்த வித

அனுமதியில்லாமலும் எடுத்து செல்லலாமா என்பதையும் யோசிக்கத் 

தவறிவிட்டார் அவர்.

 

வெறும் ஆயிரம் என்றால் சொந்த பணத்தை எடுத்துக்கொண்டு 

செல்லலாம்.ஆனால் கேட்டது இரண்டு இலட்ச ரூபாய்கள் ஆயிற்றே. 

உடனே தன்னோடு வங்கியில் உள்ள இன்னொருவரிடம் விஷயத்தை 

சொல்லி அவரை அந்த தொகைக்கு ஒரு பற்றுச்சீட்டு (Debit Slip) எழுத 

சொல்லி தான் அதில் கையொப்பமிட்டு காசாளரிடம் காண்பித்து 

பணத்தைப் பெற்றுக்கொண்டு கூட தன்னுடன் ஒரு ஊழியரை 

அழைத்துக்கொண்டு இரயில் நிலையம் சென்றார்.

 

காசோலை இல்லாமல் பணம் எடுப்பது பற்றி வங்கி நடைமுறை 

தெரியாதவர்களுக்காக  இந்த இடத்தில் சிறிது விளக்கலாமென 

எண்ணுகிறேன். பொதுவாக வங்கி கணக்கு உள்ளவர்கள் தங்கள் 

கணக்கிலிருந்து பணம் எடுக்க காசோலைகளை உபயோகிப்பது 

வழக்கம்.

 

அப்படி காசோலை இல்லாதவர்களுக்கு சில வங்கிகளில்  

Withdrawal Slip என்று வைத்திருப்பார்கள். பணம் எடுக்க விரும்பும் 

வாடிக்கையாளர்கள் நேரில் தங்களது கணக்கு புத்தகத்துடன் சென்று 

அந்த Withdrawal Slip ஐ வாங்கி அதில் கணக்கு எண்ணை எழுதி 

தொகையையும் எழுதி கையொப்பமிட்டு பணத்தை எடுக்கலாம். 

ஆனால் அவைகளில் Self (தனக்காக) என அச்சிட்டு இருப்பதால் 

அந்த Slip ஐ  மற்றவர்களுக்குத் தர இயலாது. 

 

வங்கியில் அலுவலக ரீதியாக ஒரு கணக்கிலிருந்து குறிப்பிட்ட 

தொகையை இன்னொரு கணக்கிற்கு மாற்ற பற்றுச்சீட்டு (Debit Slip)  

உபயோகிப்பார்கள். மேலும் பணம் எடுக்கவும் பற்றுச்சீட்டு 

உபயோகிப்பதுண்டுஆனால் எந்தெந்த வணிக நடவடிக்கைகளுக்கு 

(Transaction) பற்றுச்சீட்டு உபயோகப்படுத்தலாம் என்பதற்கு ஒரு 

வரைமுறை உண்டு.

 

ஆனால் அந்த அலுவலர் பற்று சீட்டு மூலம் எடுத்து சென்ற 

பணம் அந்த வரைமுறைக்குள் இல்லை என்பது தான்  உண்மை.

 

பணத்தை எடுத்து சென்ற அந்த அலுவலர் இரயில் நிலையத்தில் 

தொலைபேசியில் சொன்னவர் சொன்ன அடையாளங்களோடு 

காத்திருந்த நபரிடம் கொடுத்துவிட்டார். ஆனால் அப்போது கூட 

காவலர்கள் யாரும் அங்கு இல்லையே என்பதை கவனிக்கத் 

தவறிவிட்டார்.

 

அவரது எண்ணமெல்லாம் தலைவர் சொன்னபடி செய்துவிட்டோம். 

நிச்சயம் அவரது பாராட்டு கிடைக்கும் என்பதிலேயே இருந்தது. 

கிளைக்குத் திரும்பி மேற்கொண்டு பணிகளைத் தொடர்ந்த அவர் 

மதியம் உணவு இடைவேளையின் போது சென்னை அலுவலகத்தை   

தொடர்புகொண்டு தலைவர் (Chairman) வந்துவிட்டாரா என 

விசாரித்திருக்கிறார். 

 

அதற்கு அவர்கள் அவரது பயணத் திட்டப்படி இன்று சென்னை 

வருகை இல்லையே. எதற்காக கேட்கிறீர்கள்? என்றதும் இவர் 

விஷயத்தை சொல்லிவிட்டு அவர் வராவிட்டாலும் பரவாயில்லை. 

இரண்டு இலட்ச ரூபாய் பணமாவது  கட்டப்பட்டுவிட்டதா   

எனக் கேட்டிருக்கிறார். 

 

உடனே வட்டார அலுவலகத்திலிருந்து தலைமை அலுவகத்தை   

தொடர்புகொண்டு விசாரித்துவிட்டு அந்த அலுவலரிடம் 

தலைமையகத்தை விசாரித்தபோது தலைவரின் உறவினர் யாரும் 

அவ்வாறு அங்கு தங்கம் கொண்டு வரவில்லையென்றும், மேலும் 

தங்களிடம் அவர் பேசவில்லையென்றும் சொல்கிறார்கள். எனவே 

தங்ளை யாரோ ஏமாற்றியிருக்கிறார்கள்.உடனே புகார் கொடுத்துவிட்டு 

அதுபற்றி விரிவான அறிக்கை தாருங்கள். என சொல்லியிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment