Monday, November 3, 2014

ஒரு குடம் பாலில் ஒரு துளி நஞ்சு இராமதாசு




"கட்சி மாறுவதால் என்னை கோழை என்றோ பச்சோந்தி என்றோ எண்ணி விடாதீர்கள். இருக்கின்ற கட்சியிலேயே இருக்கின்ற மேடையிலேயே இங்கிருந்து இன்னொரு கட்சிக்கு தாவும் தைரியமும் தன்னம்பிக்கையும் இந்தியாவிலேயே எனக்கு ஒருவனுக்குத்தான் இருக்கு என்று கூறிக் கொண்டு இங்கிருந்து விடை பெறுகிறேன்" என்று பல்டி அடித்துவிட்டு எதிர்க்கட்சிக்காரர் ஒருவரின் சைக்கிளின் முன்னால் உட்கார்ந்து போவார் நடிகர் வடிவேலு. ‘எல்லாம் அவன் செயல்’ என்ற திரைப்படத்தில் வரும் வண்டு முருகனைப் போல பா.ம.க. இராமதாசு அரசியலில் பல்வேறு துணிச்சல் மகுந்த ‘பல்டி’களை அடித்து வருகிறார். 


வன்னியர் சங்கமாக இருந்து பாட்டாளி மக்கள் கட்சியைத் தொடங்கியபோது தன் குடும்பத்திலிருந்தோ ஒருவர் கூட அரசியலுக்கு வரமாட்டார்கள் என பத்து சத்தியம் செய்தவர் இப்படித் தன் அருமை மகனுக்காகவே அரசியல் செய்து வருகிறார். தாழ்த்தப்பட்ட ஒருவரை முதல்வராக்குவேன் என்று கூறிவிட்டு தலித்துகளை ஒழித்துக் கட்டுவதற்காகவே தைலாபுரம் தோட்டத்தில் பயிற்சிகளை நடத்தி வருகிறார். “திராவிடக் கட்சிகளை ஒழிப்பதுதான் என் முதல் வேலை. கருணாநிதியை நம்பினால் கோவணத்தையும் பிடுங்கி ஓடவிட்டுவிடுவார். இனி எந்தக் காலத்திலும் திராவிடக் கட்சிகளோடு கூட்டணியை வைக்க மாட்டோம். ஜெயலலிதாவோடு கூட்டணி வைப்பது பெற்ற தாயுடன் உறவு வைப்பதற்குச் சமம்” என்றெல்லாம் வீராவேசத்தோடு வசனங்களைப் பேசிவிடடு இறுதியாக கோபாலபுரத்திற்கே வந்து கலைஞரின் காலில் விழுந்து அந்தர்பல்டி அடித்துவிட்டார். தனது பேத்தி திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க வந்த இராமதாசு தனது மனைவியுடன் கலைஞர் காலில் விழுந்து கூட்டணிக்கு அச்சாரம் போட்டிருக்கிறார். 

மருத்துவர் இராமதாசின் பேத்தியின் திருமண விழா கடந்த 30-10-2014 அன்று மாமல்லபுரத்தில் சிறப்பாக நடைபெற்து. மணமக்கள் சிறந்து வாழ விடுதலைச் சிறுத்தைகளும் வாழ்த்துகிறோம். முதல்நாள் திருமண வரவேற்பு நிகழ்வில் மதிமுக தலைவர் வைகோவும், மு.க.ஸ்டாலினும் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள். மறுநாள் நடந்த திருமண விழாவிற்கு திமுக தலைவரும் திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவருமான கலைஞர் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினார். வாழ்த்தும்போது, இராமதாசுக்கும் அவருக்கும் உள்ள நீண்டகால நட்பை விளக்கி உருகினார். 




‘கெழுதகை நண்பர்’ என்றெல்லாம் கூறி பெருமைப்பட்டார். இதில் எந்தக் குறையும் இல்லை. திருமண விழாக்களில் இதுபோன்ற நாகரிகங்களும் வாழ்த்துக்களும் தமிழர் பண்பாட்டின் அடையாளங்கள்தான்; வரவேற்கக் கூடியதுதான். ஆனால் இது கூட்டணி அரசியலுக்கு முகூர்த்த விழாவாக மாறியதுதான் நகைச்சுவையாகவும் விந்தையாகவும் உள்ளது. கலைஞரின் அன்பு நிறைந்த தம்பி இராமதாசு உண்மையிலேயே கலைஞர் மீது அன்பு கொண்டவர்தானா.. நாகரிகம் நிறைந்தவர்தானா.. அரசியல் பண்பாட்டுடன் நடப்பவர்தானா என்கிற கேள்விகள் துளைத்தெடுக்கின்றன.

தருமபுரி நத்தம் சேரியைச் சேர்ந்த இளவரசனை திவ்யா திருமணம் செய்த பிறகு நவம்பர் 7 அன்று நத்தம் சேரி சூறையாடப்பட்டது. பா.ம.க.வைச் சேர்ந்தவர்கள்தான் இந்த வன்முறைக்குக் காரணம் என்று பேராசிரியர் மார்க்ஸ் தலைமையிலான உண்மை அறியும் குழு முதல் அத்தனை மனித உரிமை அமைப்புகளும் குற்றம் சுமத்தின. தி.மு.க.சார்பில் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையிலான குழு நத்தம் சேரியைப் பார்வையிட்டுவிட்டு பா.ம.கவினரின் செயலைக் கண்டித்து அறிக்கை கொடுத்தார்கள். கலைஞரும் இராமதாசின் செயல்களைக் கண்டித்தார். இதற்கு எந்த பதிலும் சொல்லாத இராமதாசு, பா.ம.க.வைக் கண்டித்த அத்தனை தலைவர்களையும் ஏக வசனத்தில் திட்டினார்.
தீயசக்தி இராமதாசை தனிமைப்படுத்திய எழுச்சித் தமிழர் 

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி முதல் தோழர் ஜி.இராமகிருஷ்ணன் வரை பா.ம.க.விற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த அத்தனைத் தலைவர்களையும் ‘அவன் இவன்’ என்று சொல்லித்தான் செந்தியாளர்கள் சந்திப்பில் தன் வன்மத்தை வெளிப்படுத்தினார்.
மற்ற தலைவர்களையே இப்படித் திட்டியவர் தொல்.திருமாவளவன் அவர்களை எப்படித் திட்டியிருப்பார் என்பதைச் சொல்லவா வேண்டும். “அவன் முஞ்சியைப் பாரு! அவன் தாடியையும் மீசையயும் பாரு! அவனுங்க கட்சிக் கொடியைப் பார்த்தாலே அறுவறுப்பா இருக்கு!” என்றெல்லாம் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மீது வெறுப்பைக் கொட்டினார். 


அது மட்டுமல்லாமல், “ஜீன்ஸ் பேண்ட், 100 ரூபாய் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு செல் போனில் பேசிக்கொண்டு பஸ் ஸ்டாண்டில் பெண்களை தலித் இளைஞர்கள் மயக்குகிறார்கள்” என்று தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை மட்டுமல்லாது வன்னியப் பெண்களையும் அவமானப்படுத்தினார்.


தமிழகத்தில் தலித் மக்கள் பிரச்சனையை முன்வைத்துப் போராட்டங்களை முன்னெடுத்தாலும் தமிழர்களின் அனைத்து உரிமைப் போராட்டங்களிலும் வலுவாக சமரசமின்றிக் களமாடி வருவது விடுதலைச் சிறுத்தைகள்தான். தமிழீழப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளோடு தோளோடு தோள் நின்று சிறுத்தைகள் களமாடியதை ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்கும் வகையில் மேதகு பிரபாகரன் அவர்கள், திருமாவளவன் அவர்களை கிளிநொச்சிக்கே அழைத்து “அண்ணன் இங்கே நான் இருக்கிறேன்; தம்பி நீ தைரியமாக தமிழகத்தில் போராடு” என்று நம்பிக்கையூட்டி அனுப்பி வைத்தார். சமாதான ஒப்பந்த காலங்களில் தமிழகத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக விடுதலைப்புலிகளால் அழைக்கப்பட்ட ஒரே அரசியல் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட ஒரு தலைவரைத்தான் பா.ம.க. இராமதாசு அவர்கள் மிகவும் அறுவறுப்பாக ஒருமையில் பேசி வருகிறார். அப்பாவி வன்னிய மக்களிடையே தலித்துகளுக்கெதிரான வெறுப்புப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார்.

மானுடத்தின் உயரிய பண்பாடான காதலைக் கொச்சைப்படுத்தும் வகையில் தமிழகம் முழுக்கப் பரப்புரையை மேற்கொண்டார். தலித் மக்களுக்கெதிராக 60க்கும் மேற்பட்ட சாதிகளை ஒருங்கிணைத்து தமிழகம் முழுக்கக் கலவரங்களைத் தூண்டிவிட்டார். தலித்துகளுக்கெதிரான விசமப் பிரச்சாரங்களை பொது மேடைகளிலும் தனது ‘மக்கள்’ தொலைக்காட்சியிலும் திட்டமிட்டே பரப்பி விட்டார். பெண்களுக்கு சொத்தில் பங்குதரக் கூடாது என்று தந்தை பெரியாரின் கொள்கைகளுக்கெதிரான நச்சுக் கருத்துக்களைப் பரப்பினார். 

உச்சகட்டமாக கடந்த ஆண்டு மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் பெருவிழாவில் திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரான கலைஞரை ‘மோளம் அடிக்கிற சாதி’ என்றும், ஆசிரியர் வீரமணியை ‘கூட்டிக்கொடுப்பவர்’ என்றும் மிகக் கேவலமாக காடுவெட்டி குரு பேசியதை கைதட்டி ரசித்தவர்தான் மருத்துவர் இராமதாசு. 
அனைத்துத் தலைவர்களையும் ‘நிக் நேம்’ வைத்துக் குறிப்பிடும் ஒரே அரசியல் தலைவர் இந்தியாவில் இராமதாசு ஒருவராகத்தான் இருக்க முடியும். இப்படி அநாகரிகமான அரசியல் நடத்திவரும் இராமதாசு கடந்த ஓராண்டுக்கும் மேலாக, திராவிட அரசியலுக்கு எதிராகவும், மார்க்சிய சித்தாந்தத்திற்கு எதிராகவும் செய்துவந்த பரப்புரைகள் ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் பிரச்சாரங்களைவிடக் கொடியதாக இருந்தது. மனுதர்மத்தை நடைமுறைப்படுத்துவதாக இருந்தது. ஆனால் இன்று எல்லாம் மறைந்தே போய்விட்டது. 

ஒரு திருமணத்தை முன்னிறுத்தி, கூட்டணிக்கு பந்தக்கால் போட்டுள்ளனர். தமிழகத்தில் தனிமைப்படுத்த வேண்டிய தீய சக்தியான இராமதாசை நண்பர் என்று அள்ளி அரவணைக்கும் கலைஞர் நட்போடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் (நட்புக்குக்கூடப் பொருத்தமில்லாதவர் என்பது வேறு) கூட்டணி வைக்கக் கை கோர்ப்பது திராவிடக் கொள்கைக்கே எதிரானது இல்லையா? அல்லது திமுக பலவீனமாகிவிட்டதா? தந்தை பெரியாரின் கொள்கைகளான பெண்ணுரிமைக்கெதிராக, இடஒதுக்கீட்டுக்கு எதிராக, ஒடுக்கப்பட்ட மக்களுக்கெதிராக வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் இராமதாசைத் தனிமைப்படுத்தாமல் கொஞ்சிக் குழாவுவது திராவிட அரலியலுக்கு, தந்தை பெரியாரின் கொள்கைக்கு எதிரானது இல்லையா? ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் செய்யும் துரோகமில்லையா? ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் ஓரங்கட்ட நினைப்பவர்களைக் கண்டிக்காமல் அவர்களோடு கை கோர்ப்பது அவர்கள் கரத்தை வலுப்படுத்துவதாக அமையாதா? கூடுதலாகத் தூண்டிவிடுவதாகத்தானே அர்த்தம். இதனைக் கலைஞர் விரும்புகிறாரா? 


வரும் நவம்பர் 7 அன்று நத்தம் சேரி தீக்கிரையாக்கப்பட்டதன் இரண்டாம் ஆண்டு நினைவு நாள். அந்தக் கொடுமையிலிருந்து இன்னும் அந்தச் சேரி மீளவேயில்லை. குடிசைகள் எரிக்கப்பட்ட சாம்பலின் நெடி சனநாயகத்தின் மூச்சைத் திணற வைத்துக்கொண்டிருக்கிறது. 



காதலித்த காரணத்தால் படுகொலை சொய்யப்பட்ட இளவசரனின் குடும்பத்தின் கண்ணீர் இன்னும் காயவில்லை. மரக்காணம், வடக்கு மாங்குடி சேரி மக்களின் ஒப்பாரியும் ஓலமும் இன்னும் நின்றபாடில்லை. அதற்குள் அந்தக் கொடியவரோடு கலைஞர் கை கோர்ப்பது மேலும் பல சேரிகளைத் தீக்கிரையாக்காதா? இளவரசனைப் போன்ற பலரை கொலை செய்யத் தூண்டுவதாகாதா? தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எல்லோரும் துரோகம் செய்கிறார்கள். இதில் கலைஞர் மட்டும் விதிவிலக்கா என்ன? 

எல்லாச் சேரிகளும் எரிந்துபோகட்டும் தலித்துகள் என்னும் ஓர் இனமே இல்லாமல் போகட்டும். பெரியார், அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் சமூகநீதிக் கொள்கைகள் நாசமாகட்டும். கலைஞர், வைகோ, இராமதாசு ஆகியோரின் எண்ணங்கள் நிறைவேறட்டும். மானங்கெட்ட அரசியல் தமிழகத்தில் செழித்து வளர வாழ்த்துவோம். 

ஒரு குடம் பாலில் ஒரு துளி நஞ்சு இராமதாசு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...