Monday, November 3, 2014

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தப்பித்த சில பேர்கள் … புதிய தகவல்கள்….

ராஜீவ் காந்தி கொலை வழக்கில்
தப்பித்த சில பேர்கள் …
புதிய தகவல்கள்….
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினியின் சார்பாக
வழக்காடிய, 1970 முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில்
வழக்கறிஞராகப் பணியாற்றி வரும், 69 வயதாகும்,
திரு  எஸ்.துரைசாமி அவர்கள் எழுதி, விரைவில் 
வெளிவரவிருக்கும் ஒரு புத்தகம் தொடர்பாக -
டெஹல்கா ஆங்கில இதழில் அவருடன் ஒரு பேட்டி 
காணப்பட்டு, அதன் மூலம் இந்த வழக்கு பற்றிய 
பல புதிய தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
“Mysteries and Secrets Behind
the Rajiv Gandhi Murder”
என்று தற்காலிகமாகப் பெரிடப்பட்டுள்ள
இந்த புத்தகத்தில் பல அவிழ்க்கப்படாத முடிச்சுகள்
பற்றி விவரிக்கப்பட்டு இருக்கின்றன என்கிறது டெஹல்கா.
அந்த பேட்டியில் வெளிவந்துள்ள சில விஷயங்களை 
கீழே சுருக்கமாகத் தருகிறேன்.(இதில் வெளிவந்துள்ள
தகவல்களின் உண்மைததன்மைக்கு தான் பொறுப்பேற்க
முடியாது என்று டெஹல்கா கூறி இருக்கிறது )
கொலையில் சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய சில பேர்
விசாரணை வட்டத்திற்குள்ளேயே கொண்டு 
வரப்படவிலை என்பதே 
இந்த புத்தகத்தின் அடிப்படை. ராஜீவின் கொலைக்கு
காரணமானவர்கள் காங்கிரஸ் கட்சியின் உள்ளே தான்
இருந்தார்கள்/இருக்கிறார்கள் – அவர்கள் பக்கம்
சட்டத்தின் பார்வை போகவே இல்லை என்பதே
முக்கிய கருத்து !
இந்த வழக்கு சிபிஐ டைரக்டர் கார்த்திகேயன் அவர்களின்
தலைமையில் – 4 டிஐஜி, 8 எஸ்.பி., 14 டிஎஸ்பி,
44 இன்ஸ்பெக்டர்கள், 55 சப் இன்ஸ்பெக்டர்கள்
மற்றும் கான்ஸ்டபிள்கள் அடங்கிய ஒரு எஸ் ஐ டி
என்று சொல்லப்பட்ட விசேஷ விசாரணைக் குழுவால்
கையாளப்பட்டது. ராஜீவ் மரணமடைந்தது 21 மே,1991
அன்று. 24 மே, 1991 அன்று விசாரணையைத்
துவக்கிய சிபிஐ  20 மே, 1992 அன்று குற்றப்
பத்திரிகையை தாக்கல் செய்தது.
கிட்டத்தட்ட ஒரு வருட புலனாய்வுக்குப் பிறகு,
சிபிஐ, மொத்தம் 26 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
செய்திருந்தது. இதில் 19 பேர்கள் சுப்ரீம் கோர்ட்டால்
விடுவிக்கப்பட்டு விட்டார்கள். மீதி 7 பேர் -
அநேகமாக அவர்கள் எஸ்.ஐ.டி.யின் வசம் இருந்தபோது
கொடுத்திருந்த ஒப்புதல் வாக்குமூலங்களின்
அடிப்படையிலேயே தண்டிக்கப்பட்டனர்.
ராஜீவ் காந்தி மே 21ந்தேதி ஸ்ரீபெரும்புதூரில் திருமதி
மரகதம் சந்திரசேகரை ஆதரித்து பிரச்சாரம் செய்வது
என்கிற விஷயம் மே 18ந்தேதி தான் டெல்லியில்
காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் மே 17ந்தேதியே “தினத்தந்தி” செய்தித்தாளில்
ராஜீவ் காந்தி 21ந்தேதி ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தில்
பேசப்போகிறார் என்கிற செய்தி வெளி வந்து 
விட்டது – எப்படி ? தமிழ்நாட்டில்
காங்கிரஸ் தலைவர்களுக்கே தெரியாத விஷயம்
தினத்தந்தி நிருபருக்கு தெரிந்தது எப்படி ?
19ந்தேதி விஷயம் தெரிந்த பிறகு, தமிழ்நாடு
காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி இந்த
கூட்டம் கூடாது என்று ஆட்சேபித்திருக்கிறார்.
அதையும் மீறி, மரகதம் சந்திரசேகரின் செல்வாக்கில்
இந்த கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று 
உயர்மட்டத்தில்  தீர்மானிக்கப்பட்டது.
அதன் பிறகு  உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர்கள்
இந்த கூட்டத்தை ஸ்ரீபெரும்புதூர் உயர்நிலைப்பள்ளி
மைதானத்தில் நடத்த போலீசிடம் அனுமதி
வாங்கினார்கள்.  ஆனால் மரகதம் சந்திரசேகர்
இந்த கூட்டம் நடைபெறும் இடத்தை பள்ளிக்கூடத்திற்கு
பதிலாக, கோவில் மைதானம் என்று மாற்றி விட்டார்-
அது ஏனோ ?
இடம் மாற்றப்பட்ட விஷயம் போலீசிடம் சொல்லி
புதிய் அனுமதி பெறப்படவில்லை. அந்த மைதானத்திற்கு
சரியான பாதுகாப்பும்  போடப்படவில்லை.
அந்த கூட்டத்தில்  டெரில் பீட்டர் என்கிற பிஸினஸ்மேன்
ஒருவரும் வெடிவிபத்தில் சிக்கி இறந்து போனார்.
அந்த ஆள் உண்மையில் எப்படி, ஏன் அங்கு வந்தார் ?
அவர் மே 30தேதி அமெரிக்கா போவதற்காக அவரது
பெயரில் விமான டிக்கெட் எடுக்கப்பட்டிருந்தது.
அவரது மனைவி மத்திய பொதுப்பணித் துறையில்
பணி புரிந்து கொண்டிருந்தார். இந்த சம்பவத்திற்குப் 
பிறகு அவர் அமெரிக்கா போய் செட்டில் ஆகி விட்டார் !
இந்த சம்பவத்தில் அவர் எந்த அளவிற்கு, எப்படி
சம்பந்தப்பட்டிருந்தார் ?
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, விசாரணையில்
சரியாக ஒத்துழைக்கவில்லை. ஒரிஜினல் டூர்
ப்ரொக்ராமை அவர்கள் விசாரணையின்போது கொடுக்கவே
இல்லை. பின்னர் திரும்ப திரும்ப நினைவூட்டப்பட்ட
பிறகு நவம்பர் 28ந்தேதி - 6 மாதங்கள் கழித்து தான் -
அதுவும் திருத்தப்பட்டதைத் தான் கொடுத்தார்கள்.
அது ஏன் ?
தனுவுடன் பக்கத்தில் ராஜீவுக்கு மாலை போடுபவர்க்ளுடன்
நின்றிருந்த லதா கண்ணனின் கணவர் கண்ணன் 
4வது கிரேடில் பணிபுரியும் ஒரு சாதாரண தொழிலாளி.
கொலை நடந்த சில மாதங்களுக்குப் பின்னர் அவர் 
சொந்தமாக ஒரு லாரி வாங்கினார். அவருக்கு அவ்வளவு
பணம் கிடைத்தது எப்படி ?
இதை விசாரிக்காமல் விட்டது எப்படி ?
டிஐஜி ஸ்ரீகுமார் விசாரணைக்காக லண்டன் சென்று
வந்தார். அவர் அங்கு விசாரணையில் கண்டுபிடித்தது
என்ன என்று ரிப்போர்ட் எதுவும் கொடுக்கவில்லை.
அவர் விசாரணைக்கு அழைக்கப்படவும் இல்லை.
அவர் லண்டனில் இருந்தபோது முக்கியமான ஆவணங்கள்
அடங்கிய ஒரு சூட்கேஸ் காணாமல் போனது. ஆனால் -
இது தொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை !
ஐபி டைரக்டர் எம்.கே.நாராயணன் அந்த நிகழ்ச்சியின்
போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தம்மிடம் இருப்பதாக
கேபினட் செயலாளருக்கு எழுதி இருக்கிறார். ஆனால் -
இந்த வீடியோ – ஆவணமாக கோர்ட்டில் சேர்க்கப்படவில்லை.
எஸ் ஐ டி கஸ்டடியில்  இருந்தபோது, ஷண்முகம் என்கிற
சிறுவகைக் குற்றவாளி மர்மமான முறையில் இறந்தார்.
அதற்கான காரணங்கள் இன்னும் வெளி வரவில்லை.
மரகதம் சந்திரசேகரின் மகன் லலித் சந்திரசேகருக்கு
ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்காக, 
தான் ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்ததாக சிவராஜன்
தன் டைரியில் எழுதி வைத்துள்ளார்.இந்த தகவலை,
திரு ரகோத்தமன் (ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த்
முக்கிய சிபிஐ விசாரணை அதிகாரி)
அண்மையில் வெளியிடப்பட்ட தன் புத்தகத்தில் எழுதி
இருக்கிறார்.
ஆனால், கொலை வழக்கு விசாரணை நடந்தபோது, 
கோர்ட்டில் அவர் இந்த விவரத்தை தெரிவிக்கவில்லை.
சிவராஜனின் டைரியையும் ஆவணமாக
ஒப்படைக்கவில்லை !
சிவராஜன் லலித்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் கொடுததன்
பின்னணியைப் பற்றி, சிபிஐ விசாரிக்காதது ஏன் ?
தனுவும், சிவராஜனும் மரகதம் சந்திரசேகர்
குடும்பத்திற்கு எப்படி அறிமுகம் ஆனார்கள் என்பதை
சிபிஐ எங்கும் தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும்
லலித் சந்திரசேகரின் மனைவி ஒரு இலங்கைத் 
தமிழர் வேறு !
சிவராஜனின் டைரியில் ராஜீவ் காந்தி
விசாகப்பட்டினத்திலிருந்து கிளம்பும் நேரமும், சென்னை
வந்து சேரும் நேரமும் குறித்து வைக்கப்பட்டிருக்கிறது.
பின்னர், விசாகப்பட்டினத்தில் ராஜீவ் விமானம் 
யந்திரக் கோளாறு காரணமாக புறப்படத் தாமதம்
ஆன விஷயம் கூட சென்னையில் இருந்த சிவராஜனுக்கு
யாராலோ தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முதலில் இருந்தே கண்ணுக்குத் தெரியாத “கை” ஒன்று
இதில் தொடர்பு கொண்டு இருக்கிறது.
எஸ் ஐ டி இந்த கோணங்களில் விசாரிக்காதது ஏன் ?
சிவராஜனின் டைரிகளில் ஒன்றில் – சிவராஜன்
போபாலுக்குச்(மத்திய பிரதேசம்) சென்றதும்,
TAGக்கு ஒரு கோடியே எழுபத்திஆறு லட்சம் ரூபாய்
கொடுத்ததும் 13 மார்ச் 1991 தேதியிட்டு எழுதப்பட்டு
உள்ளது. இநத TAG யார் என்றும் எதற்காக இந்த
பணப்பரிமாற்றம் நடந்தது என்றும் எஸ் ஐ டி தீவிரமாக
விசாரிக்கவில்லை.  இதைத் தீவிரமாக
விசாரித்திருந்தால், உண்மையான குற்றவாளிகளின்
முகம் தெரிய வந்திருக்கும்.
இந்த பணம் செக்காக கொடுக்கப்படவில்லை.
மொத்த பணமும் ரொக்கமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
மார்ச் 8, 1991 தேதியிட்ட டைரி குறிப்பு -
இது குறித்து மத்திய பிரதேசம், குணா மாவட்டத்தில்
உள்ள ஒரு விலாசத்தையும் கொண்டிருக்கிறது.
ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளில் ஒருவராக
சிறையில் வைக்கப்பட்டிருந்த ஆதிரை என்கிற பெண்
செப்டம்பர் 25, 1992 அன்று சென்னை உயர்நீதி
மன்றத்தில் ராஜீவ் கொலை வழக்கு சம்பந்தமாக தான்
சில விவரங்கள் கூற விரும்புவதாகத் தெரிவித்திருந்தார்.
அதை  யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவே இல்லை.
மேலும், ஜூலை 29ந்தேதியன்று, பங்களூர் போலீஸ்,
சிவராஜனும் அவரது கூட்டாளிகளும், இந்திரா நகரில்
ஒரு வீட்டில் தங்கி இருக்கிறார்கள் என்கிற தகவலை
எஸ்.ஐ.டி க்கு தெரிவித்தது. அன்றே அந்த வீட்டை
கமாண்டோ படை வளைத்திருந்தால், சிவராஜன் உட்ப்ட
அத்தனை பேரையும் உயிருடன் பிடித்திருக்கலாம்.
ஆனால் எஸ்.ஐ.டி. இதற்கு 4 நாட்கள் எடுத்துக் 
கொண்டது. விளைவு – யாரும் உயிருடன் சிக்கவில்லை.
சிவராஜன் உடல் கிடந்த இடத்தில், ஒரு  AK-47
ரைபிளும், ஒரு 9mm பிஸ்டலும் இருந்தது. அவை 
எப்படி அங்கே வந்தன என்பதற்கு இன்று வரை சரியான
விளக்கம் இல்லை.
வெடிவிபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து, ஹரிபாபுவின்
காமிராவை போலீஸ் கைப்பற்றி இருந்தது. அதிலிருந்த
பிலிம் சுருளை 5 மணி நேரத்திற்குள்ளாக ப்ராசஸ்
செய்து புகைப்படங்களை எடுத்திருக்கலாம்.
குற்றவாளிகளின் புகைப்படங்கள் கிடைத்து, தேடுதலை
துவக்கி இருக்கலாம். அது நடக்கவில்லை.
ஆனால் – இந்த புகைப்படங்கள் 25ந்தேதி திடீரென்று
“இந்து” பத்திரிகையில் வெளிவந்தன. போலீஸ் வசம்
இருந்த பிலிம் சுருளின் புகைப்படங்கள்
இந்து பத்திரிகைக்கு கிடைத்தது எப்படி ? இதை
யாரும் விசாரிக்கவில்லை.
சம்பவம் நடந்த இடத்தில் 3 வீடியோ
புகைப்படக்காரர்கள் எடுத்த வீடியோக்கள் சிதைக்கப்பட்டும்,
சில் இடங்களில் அழிக்கப்பட்டும் இருந்தன.
அவற்றை கையாளும்போது தவறுதலாக இவை 
நிகழ்ந்து விட்டன என்று போலீஸ் தரப்பு பின்னர் கூறிய
காரணங்கள்  ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை.
கடைசியாக – பேட்டி முடியும்போது,
புத்தக ஆசிரியர் கூறுகிறார் “ராஜீவ் காந்தி மரணம்
துரதிருஷ்டவசமானது. அரசியல் விரோதம் காரணமாக
ஒரு உயிரைப் பறிப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.
நான் இவ்வளவு ஆண்டுகள் கழித்து 
இது குறித்து இவ்வளவு விவரங்களை வெளியிடுவதற்கு
காரணம் ராஜீவ் கொலை வழக்கு விசாரணை 
சரிவர நடைபெறவில்லை என்பதை இந்த புத்தகத்தின்
மூலம்  உலகிற்கு தெரிவிப்பதற்காகத் தான்”.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...