Monday, November 3, 2014

ஏழ்மையில் உழலும் வங்கி ஊழியர்களின் ஸ்ட்ரைக்...

வரும் 12ம் தேதி ஊதிய உயர்வு, வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை போன்ற “ஞாயமான” (!!!!!) கோரிக்கைகளை ஏற்கக்கோரி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் எல்லாம் வேலை நிறுத்தம் செய்யப்போகிறார்களாம்.. ஏற்கனவே இந்த வருட ஆரம்பத்தில் இதே போல் அவர்கள் செய்த வேலை நிறுத்தம் உங்களுக்கு ஞாபம் இருக்கலாம்.. 

சரி எதற்கு சம்பளம் கூட்டிக் கொடுக்க வேண்டுமாம்? ஒழுங்காக வேலை செய்யும் ஆட்களுக்கு கொடுக்கலாம்.. எந்த அரசு வங்கியில் வேலையும், வாடிக்கையாளர் சேவையும் உருப்படியாக இருக்கிறது? ஸ்டேட் பேங்க்கை தவிர்த்து உருப்படியாக ஒரு வங்கியும் கிடையாது.. ஹ்ம் கொஞ்சம் அப்படியே உங்கள் மனதில் ஒரு அரசு வங்கிக்குள் செல்வதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்..

ஜூம் செய்யப்பட்ட ஒரு விஏஓ அலுவலகம் போல எங்கும் பேப்பராக நிறைந்து, எல்லோரும் ஒரு வித உர் முகத்துடன் உட்கார்ந்து கொண்டு, தரையில் காகிதங்கள் பரவி, நத்தையை ஜெயிக்க வைக்கும் வேகத்தில் வரிசை நகர்ந்து கொண்டு, எரிந்து விழும் கேஷ் கவுண்டர்கள் என்று அது ஒரு விதமான கெட்ட கனவின் பிறப்பிடம்.. இன்று ஒரு சாதாரண மனிதனிடம் கேளுங்கள் எந்த வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்க ஆசை என.. அவன் வாயில் இருந்து வரும் முதல் இரண்டு பெயர்கள் தனியார் வங்கிகளாகத் தான் இருக்கும்.. அரசு வங்கிகளில் தொடங்கப்படும் புதிய சேமிப்புக் கணக்குகள் கூட பெரும்பாலும் பிஎஃப், மகளிர் சுய உதவிக்குழுக்கள் போன்ற அரசு சார்ந்த விசயங்களுக்காக அரசு மூலம் ஆரம்பிக்கப்படும் கணக்குகள் தான்.. அதில் பணம் போட/எடுக்க செல்லும் மக்களைக் கூட ”ஏய் இந்தா இங்க வா...” “சும்மா ஏன் தொனத்தொனன்னு நச்சரிக்குற? பேசாம அங்க போய் ஒக்காரு போ..” “இப்படி அடிக்கடி தொந்தரவு பண்ணுனா நாளைக்குத் தான் காசைக் கொடுப்பேன்” என ஏதோ ஐந்தறிவு ஜீவன் போல் நடத்துவார்கள் நம் அரசு வங்கிகளில்.. இதையெல்லாம் கண்கூடாகப் பார்க்க வேண்டுமானால் ஏதாவது கிராமத்து வங்கிக்குப் போய்ப் பாருங்கள்..

சரி இதையெல்லாம் விடுங்கள், உங்கள் கணக்கில் பணம் போட ஒரு அரசு வங்கியில் எவ்வளவு நேரம் ஆகிறது? அதுவே தனியார் வங்கியில் எவ்வளவு நேரம் ஆகிறது என்று பாருங்கள்.. எனது டீலர்கள் பலரும் NEFT/RTGS முறையில் பணம் கட்டுபவர்கள் தான்.. பல கிராமங்களில் இருக்கும் 30 வருட, 35 வருட பேங்க் அனுபவஸ்த மேனேஜர்களுக்கு கூட அப்படியென்றால் என்னவென்றே தெரியாது.. சொகுசாக கிராமத்தில் வந்து காதைக் குடைந்து கொண்டு உட்கார்ந்திருப்பார்கள்.. அட அந்த வங்கியில் புதிதாக வேலைக்குச் சேரும் ஆட்களைக் கூட நாய் போல் குரைக்க வைத்து, வாடிக்கையாளரிடம் எரிந்து விழ வைத்து, அசமந்தமாக வேலை பார்க்க வைத்து கெடுத்து விடுவார்கள்.. இரண்டும் கிழட்டு மேனேஜர்களுக்கு நான் சொல்லிக்கொடுத்தேன் RTGS எப்படி அனுப்புவது என்று.. அதைக் கற்றுக்கொள்ளக் கூட அவர்கள் தயாராக இல்லை என்பது அவர்கள் என்னிடம் பேசிய விதத்திலேயே புரிந்தது. “இவன் எப்படா பிரான்ச்ல இருந்து கெளம்புவான்?” என்பது போலேயே முறைத்துக்கொண்டிருந்தார்கள்..

நான் ஏதோ அரசு வங்கிகள் மீது அபாண்டமாகப் பழி போடுவது போல் நினைக்காதீர்கள்.. கிராமங்களில் இருக்கும் அரசு வங்கிகளைக் கண்கூடாகப் பார்ப்பதால், அடிக்கடி அதன் பிரச்சனைகளை அனுபவிப்பதால் தான் இதைச்சொல்கிறேன்.. ஒரு சில நல்ல கிளைகளும் மேனேஜர்களும் ஊழியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. ஆனால் பொதுவாக அரசு வங்கி என்பது நான் சொல்வது போல் தான் இருக்கிறது.. ஒரு ஸ்ட்ரைக் செய்வதற்கு ஒன்றாகக் கூடி விடும் இவர்கள், என்றாவது இந்த அக்கறையை வேலை செய்வதில் காட்டியிருக்கிறார்களா? மொத்தமாக கம்ப்யூட்டர் கிளாஸ் போவோம், ஏதாவது பேங்கிங் சம்பந்தமான கோர்ஸை மொத்தமாகப் படிப்போம் என்று ஒன்று சேர்ந்திருக்கிறார்களா? ஆனால் ஸ்ட்ரைக் என்றால் வந்துவிடுவார்கள் முதல் ஆளாக.. ஒரு கவுண்ட்டரில் இருக்கும் ஊழியர் ஏதாவது வேலையாகக் கொஞ்ச நேரம் வெளியே சென்று விட்டால், அங்கு நின்று கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களை தன் கவுண்ட்டருக்குள் அனுமதிக்காமல், அவர் வரும் வரை காத்திருக்க வைக்கும் வங்கி ஊழியர்கள் தானே இங்கு அதிகம்? தனியார் வங்கிகள் எல்லாம் வரவில்லை என்றால் இவர்களின் வேலை இதை விட மோசமாக இருந்திருக்கும்.. சரி இப்போது எதற்கு இவர்களுக்கு சம்பள உயர்வு? வங்கியில் என்ன குறையாகவா சம்பளம் கொடுக்கப்படுகிறது? 

முதலில் ஒரு விசயத்தைத் தெளிவாக்கி விடுகிறேன்.. உடல் உழைப்பு அல்லாத பிற வேலைகளை அளவிட முடியாது.. அதாவது ஒரு லோடுமேன் இத்தனை மூட்டை சுமந்திருக்கிறான் என கணக்கிட முடியும்.. அதை வைத்து அவன் உழைப்பிற்குக் கூலி கொடுக்க முடியும்.. அதுவே ஒரு software engineer இத்தனை வேலை செய்திருக்கிறான் என்று அளவிட முடியாது.. அதனால் இங்கு அவனின் உழைப்பை அளவிட்டு கூலி கொடுக்க முடியாது, ஆனால் அவன் தகுதிக்கு கூலி கொடுக்க முடியும்.. So, உடல் உழைப்பை அளவிட முடிந்த வேலைகளுக்கு உழைப்பிற்கு ஏற்றபடியும், புத்தியைப் பயன்படுத்தும் வேலைக்கு அவனின் தகுதிக்கு ஏற்பவும் கூலி கிடைக்கும்.. அதாவது இந்த இடத்தில் BE என்னும் தகுதிக்கு.. இதில் வங்கி வேலை என்பது இரண்டாவது ரகம்.. இங்கு உங்கள் வேலை உங்கள் அறிவைச் சார்ந்து இருக்கிறது.. உடல் உழைப்பு தேவைப்படும் வேலையில் அதிகம் சம்பாதிக்க வேண்டுமானால் உங்கள் உடல் அதிகம் உழைக்க வேண்டும்.. அதாவது தினமும் 100மூட்டை சுமக்கும் லோடுமேன் 120 மூட்டை சுமந்தால் அவனால் அதிகம் சம்பாதிக்க முடியும்.. அவனுக்கு உடல் தான் மூலதனம், அதனால் அதை அவன் அதிகம் உழைப்பதற்கு ஏற்றவாறு பராமரிக்க வேண்டும்.. அதே போல் புத்தியை பயன்படுத்தி வேலை செய்பவன் அதிகம் சம்பாதிக்க என்ன செய்ய வேண்டும்? தன் புத்தியை, தன் திறமையை அதிகம் வளர்க்க வேண்டும்...

இரண்டு software engineerகள் ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.. சேரும் போது அவர்களுக்கு அந்த BE என்னும் தகுதிக்கு ஏற்ப 15000ரூ சம்பளம் தரப்படுகிறது.. இருவரில் ஒருவன் அவன் வேலைக்கு என்ன என்னவெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டுமோ அதையெல்லாம் தானாக கற்றுக்கொள்கிறான்.. அனைத்து வேலைகளையும் உடனுக்குடன் முடிக்கிறான்.. அப்பப்போ update ஆகும் தன் வேலை சம்பந்தமான சமாச்சாரங்களயும் தெரிந்து வைத்துக்கொள்கிறான்.. அந்த இன்னொரு ஆள் இருக்கானே அவன், மாசாமாசம் சம்பளம் வாங்கிக்கொண்டு, கேண்டினுக்கும், ரெஸ்ட் ரூமுக்கும், அலைந்து கொண்டு ஒரு வேலையும் பார்க்காமல், வேலைக்குத் தேவையான தன் தகுதியையும் வளர்த்துக்கொள்ளாமல் அப்படியே இருக்கிறான்.. ஒரு வருடம் முடிகிறது.. சம்பளம் யாருக்குமே கூட்டவில்லை.. வேலை செய்தவனுக்கும் கூட்டவில்லை.. செய்யாதவனுக்கும் கூட்டவில்லை.. இதில் வேலை செய்தவனை விட செய்யாதவனுக்குத் தான் கடுப்பு அதிகம்.. வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறான்.. ”சம்பள உயர்வு வேண்டும், நான் காலை 8மணியில் இருந்து மாலை 8 மணி வரை நாயாக அலுவலகத்தில் இருக்கிறேன், எனக்கு ஏன் சம்பளம் கூட்டவில்லை?” என பொங்குகிறான்.. ஒழுங்காக வேலை பார்த்து தன் திறமையை வளர்த்துக்கொண்டவனோ ‘இங்கு இல்லையா, என் திறமைக்கு இன்னொரு இடம் இருக்கும்’ என்று இன்னொரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துவிட்டான் 30000 ரூபாய் சம்பளத்திற்கு.. அந்த அறிவை வளார்த்துக்கொள்ளவே விரும்பாத ஆள் சம்பள உயர்வு கேட்டு போராடிக்கொண்டிருக்கிறான்.. இது software என்றில்லை, நான் இருக்கும் சேல்ஸ் வேலைக்கும், ஆசிரியர் வேலைக்கும், குமாஸ்தா வேலைக்கும் கூட இது பொருந்தும்.. உங்கள் ஆரம்ப சம்பளம் தகுதியை வைத்தும், அடுத்தடுத்த சம்பள உயர்வு உங்கள் updation மற்றும் வேலை சம்பந்தமான அறிவை வளர்த்துக்கொள்வதை வைத்தும் இருக்கும்.. இப்போது இதே இடத்தில் வங்கி ஊழியர்களை வைத்துப் பாருங்கள்..

அரசு வங்கியில் வேலைக்கு சேரும் நான் அரசு உத்தியோகம் கிடைத்து விட்ட சந்தோசத்தில் செக்கு மாடு மாதிரி பணத்தை எண்ணவும், சீல் குத்தவும், கையெழுத்துப் போடவும் நன்றாகக் கற்றுக்கொண்டேன்.. காலம் பூராவும் இதே வேலை தான்.. ஏதாவது ப்ரொமோசன் கிடைத்தால் லோன் அப்ளிகேசன் பார்மில் கையெழுத்துப் போடுவேன்.. அவ்வளவு தான்.. இந்த வேலைக்கு எனக்கு வருடத்திற்கு 1000ரூ ஊதிய உயர்வு போதாதா? இன்று ஒரு அரசு வங்கியில் நீங்கள் கிளர்க் வேலைக்கு சேர்ந்தால் குறைந்த பட்சம் 16000ரூபாய் சம்பளம்.. ஒவ்வொரு வருடமும் 1000ரூபாய் உயர்வு இருக்கும்.. ஆஃபிசராக சேர்ந்தால் 25000ரூபாய் சம்பளம், இரண்டாயிரம் ரூபாய் வருடாவருடம் ஊதிய உயர்வு இருக்கும்.. அனுபவத்திற்கு ஏற்ப இந்த ஊதிய உயர்வு வேறுபடும்..  அது போக அந்த அலவன்ஸ், இந்த அலவன்ஸ், லோன் சலுகைகள் என்று வேறு பலவும் இருக்கும்.. இதற்கு மேல் என்ன வேண்டும் இந்த வங்கி ஊழியர்களுக்கு? ஏன் ஸ்ட்ரைக் செய்கிறார்கள்?

ஐயா வங்கி ஊழியர்களே, நீங்கள் வங்கியில் வேலைக்குச் சேரும் போது இவ்வளவு தான் சம்பளம் என்று தெரிந்து தான் சேர்கிறீர்கள்.. வாரத்தில் 6 நாட்களும் வேலை இருக்கும் என்பதும் தெரியும் தானே? வருடத்திற்கு இவ்வளவு தான் increment இருக்கும் என்பதையும் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.. எல்லாம் தெரிந்து தான் வேலைக்குச் சேர்கிறீர்கள்.. பின் எதற்கு வேலைக்கு சேர்ந்த பின் மட்டும் ஸ்ட்ரைக் செய்ய வேண்டும்? ஒன்று இவ்வளவு கஷ்டமான வேலைக்கு வந்திருக்கவே கூடாது.. சரி வந்துவிட்டீர்கள், இந்த வேலை பிடிக்கா விட்டால் வேறு வேலைக்கு போக வேண்டியது தானே? அதையும் செய்யாமல் ஏன் ஸ்ட்ரைக் செய்கிறீர்கள்? ஏனென்றால் உங்களால் வேறு வேலைக்குப் போக முடியாது.. ஒரு கல்லூரி lecturer மாதிரியோ, மென்பொருள் வல்லுநர் மாதிரியோ, சேல்ஸ் ஆட்கள் மாதிரியோ உங்கள் திறமையை வளர்த்திருந்தால் எங்காவது செல்லலாம்.. ஆனால் நீங்கள் தான் ஒரே இடத்தில் கடிவாளம் கட்டிய குதிரை போல் அல்லவா உட்கார்ந்து விட்டீர்கள்? கம்யூட்டர் தெரியாது, கஸ்டமர் சர்வீஸ் தெரியாது, எந்த விதமான up-gradationஐயும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருக்காது.. பின் எந்த தைரியத்தில் ஊதிய உயர்வை மட்டும் எதிர்பார்க்கிறீர்கள்? 

உங்கள் வேலை கம்ப்யூட்டர் வந்த பின் பாதியாக குறைந்து விட்டது சார்.. ஏடிஎம் மிஷின் வைத்து விட்டீர்கள்.. ஆன்லைன் பேங்கிங் கொண்டு வந்துவிட்டீர்கள்.. உங்கள் வேலையே பாதியாகக் குறைந்த பின் சம்பளம் மட்டும் ஏன் அதிகரிக்கப்பட வேண்டும்? வங்கியில் வேலை பார்க்கும் ஒரு நண்பரிடம் இதைப் பற்றிப்பேசினேன்.. பணம் எண்ணுவதில் வரும் தவறு, லோன் கொடுப்பதில் நேரும் தவறுகள் என்று வங்கி வேலையில் அதிகம் ”ரிஸ்க்” (!!!!) இருப்பதால் ஊதிய உயர்வு வேண்டும் என்றார்.. அதை விட அவர் சொன்ன இன்னொரு விசயம், மத்திய அரசு ஊழியர்களுக்கு எல்லாம் சம்பளம் ஜாஸ்தியாம்.. அதனால் அதை ஈடுகட்டும் வகையில் இவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டுமாம்.. நல்ல வேளை எம்பி, எம்.எல்.ஏ சம்பளத்தோடு எல்லாம் அவர் போட்டி போடவில்லை என்று சந்தோசப்பட்டுக்கொண்டேன்.. 

நம்மில் பெரும்பாலானவர்கள் நம் அன்றாட வேலையையே ஏதோ பெரிய சாதனை போல் நினைத்துக்கொள்கிறோம்.. அதற்கு சரியான உதாரணம் தான் நண்பர் சொன்ன ”ரிஸ்க்”.. ஏன்யா பணத்தை கவனமாக எண்ணுவதும், சரியான ஆளுக்கு லோன் கொடுத்து அதை ஒழுங்காக வாங்குவதும் தானே உங்கள் வேலை? என்னமோ அதை பெரிய ரிஸ்க் என்கிறீர்கள்? உங்களின் அந்த வேலைக்குத் தானே சம்பளம் வருகிறது? உங்கள் வேலையில் என்ன விதமான முன்னேற்றத்தைக் காட்டியிருக்கிறீர்கள் என்று சம்பளம் அதிகம் கோருகிறீர்கள்? அடுத்த விசயம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் பற்றி.. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 1% பேர் இருப்பார்களா இந்த மத்திய அரசு ஊழியர்கள்? அவர்களை பென்ச் மார்க்காக வைத்திருப்பதெல்லாம் மிகவும் அபத்தம்.. அப்படி மத்திய அரசு ஊழியர் அதிகம் சம்பளம் வாங்குவது போல் இருந்தால், நீங்களும் படித்து அந்தப் பரிட்சையை க்ளியர் செய்து அந்த சம்பளத்தை வாங்க வேண்டியது தானே? இந்திய ஜனாதிபதிக்கும் தான் அதிக சம்பளம் கொடுக்கிறார்கள்.. முடிந்தால் ஜனாதிபதியாகக் கூட ஆகுங்கள் உங்களை யாரும் தடுக்கப்போவதில்லை.. ஆனால் நீங்கள் பார்க்கும் செக்கு மாட்டு வேலைக்கு ஜனாதிபதி சம்பளம் வேண்டும் என எதிர்பார்ப்பது தான் தவறு..

இன்னும் சிலர் சொல்கிறார்கள் விலைவாசியெல்லாம் கூடிவிட்டதால் சம்பள உயர்வு வேண்டுமாம்.. போன வருடத்தை விட இந்த வருடம் மாச சம்பளத்தில் 2000 முதல் 4000 வரை உயர்வு கிடைக்கிறது.. இந்தப் பணம் போதாதா அதிகரிக்கும் விலைவாசியை சரிக்கட்ட? உங்களின் ஒரு வருட ஊதிய உயர்வு தான் இந்திய நாட்டில் பலருக்கும் மாதச்சம்பளமே.. இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டுமானால் ஒரு 30000ரூபாய் சம்பளம் வாங்கும் வேறு நிறுவன ஊழியனையும், அதே அளவு சம்பளம் வாங்கும் வங்கி ஊழியனையும் எடுத்துக்கொள்ளுங்கள்.. அவனுக்கு சலுகைகளே கிடையாது.. ஆனால் இந்த வங்கி ஊழியர்களுக்கு பெட்ரோல், நியூஸ் பேப்பர், ஹவுஸிங் அலவன்ஸில் இருந்து, லோனுக்கு கொடுக்கப்படும் சலுகைகள் வரை எவ்வளவோ இருக்கின்றன.. அதையெல்லாம் கணக்கிட்டுப்பார்த்தால் அவர்கள் சம்பளத்தின் மதிப்பு அவர்கள் வாங்கும் சம்பளத்தை விட அதிகம் தான்.. 

இனியும் ஸ்ட்ரைக் அது இதுவென்று சொன்னால், அரசாங்கம் கூச்சமே படாமல் கூண்டாடு மாற்றிவிட்டு இளைஞர்களைக் கொண்டு வரலாம்.. பாவம் டிகிரி முடித்துவிட்டும், இன்ஜினியரிங் முடித்துவிட்டும் வேலை கிடைக்காமல் பலர் இருக்கிறார்கள்.. இப்போதைய ஊழியர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதியைக் கொடுத்தால் கூட அவர்களை விட கவனமாக வேலை செய்வார்கள்.. சம்பள உயர்வினால் வரும் பண வீக்கம் கூட குறையும் அதனால்..

வாரத்தில் இரண்டு நாட்கள் லீவு வேண்டும் என்றும் ஸ்டரைக்குகிறார்கள்.. இதை வேண்டுமானால் சம்பந்தப்பட்டவர்கள் பரிசீலிக்கலாம்.. அதற்கும் என்னிடம் ஒரு பிளான் உள்ளது.. அதாவது வாரத்தின் ஏழு நாளும் பேங்க் இயங்கும்.. வேலை செய்பவர்கள் வாரத்தின் ஏதாவது இரண்டு நாட்கள் லீவு போட்டுக்கொள்ளலாம்.. திங்களும் செவ்வாயும் ஒருவர் லீவு போட்டால் இன்னொருவர் புதனும் வியாழனும் போடலாம்.. வங்கியில் அன்றாட வேலைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த off இருக்குமாறு மேனேஜர் பார்த்துக்கொள்ள வேண்டும்.. மக்களும் வாரத்தின் 7நாட்களும் வங்கி இருப்பதால் பயன்பெறுவர், இவர்களுக்கும் கேட்டது போல் இரண்டு நாட்கள் விடுமுறை கிடைக்கும்..

இன்னொரு முக்கிய விசயம் தனியார் துறையில் இருப்பது போல் online performance appraisal போன்ற விசயங்களை அரசுத்துறைகளுக்கும் கொண்டு வர வேண்டும்.. அதை பாரபட்சம் இல்லாமல் சரியாக கவனித்து வேலையை, வேலையாட்களை அளவிட வேண்டும்.. வேலை செய்பவன் செய்யாதவன் என எல்லோருக்கும் சகட்டு மேனிக்கு ஊதிய உயர்வு கொடுப்பதை விட இது போன்ற நவீன உத்திகளால் ஒழுங்காக வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வும், பைல்ஸ் வரும் அளவிற்கு சீட்டைத் தேய்க்கும் ஆட்களுக்கு ஆப்பும் அடிக்கப்படும்.. கம்பெனிக்காகவோ, வாடிக்கையாளர்களுக்காகவோ இல்லாமல் அட்லீஸ்ட் தன் ஊதிய உயர்வுக்காகவாவது ஒரு தனியார் நிறுவன ஊழியன் பயந்து போய் வேலை பார்ப்பான்.. அந்த எண்ணம் அரசு ஊழியர்கள் மத்தியில் வராத வரை அவர்கள் வேலையும் செய்ய மாட்டார்கள், செய்யாத வேலைக்கு ஊதிய உயர்வும் கேட்டுக்கொண்டிருப்பார்கள்..

பி.கு: இந்தக் கட்டுரை, தன் கடமையை ஒழுங்காக செய்யும் வங்கி ஊழியர்களைக் குறிப்பிடவில்லை..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...