Clean-India-Mission
பொருளாதாரத்தை கிளீன் பண்ணி, கார்ப்பரேட்டுகளுக்கு கொடுக்கும் சதி!
மொத்த இந்தியாவும் துடைப்பக் கட்டையும் கையுமாக தெருவில் இறங்கி விட்டதாக நம்மை நம்பச் சொல்கின்றன முதலாளித்துவ பத்திரிகைகள். காந்தி ஜெயந்தி அன்று தில்லியில் உரையாற்றிய மோடி, அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் (அதாவது 2019 காந்தி ஜெயந்தி நாளுக்குள்) இந்தியாவை மொத்தமாக துடைத்து சுத்தமாக்கி விடுவதே லட்சியம் என்று முழங்கியிருக்கிறார்.
மோடி வழக்கமான பிரதமர் இல்லை என்பதால், இந்த வேலையை வித்தியாசமான கோணத்திலிருந்து யோசித்திருக்கிறார். அதாவது, உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருக்கும் பாரதமாதவுக்கு பொட்டு வைத்து பூவைத்து சிங்காரிக்கும் வேலையை தான் மட்டும் செய்தால் பத்தாது என்று சிந்தித்திருக்கிறார். இது அவரது கிச்சன் கேபினட் எழுதிக் கொடுத்த விளம்பரப் படம் என்றாலும் அவரது லட்சியத்தில் அதாவது விளம்பர படத்தில் மொத்த நாடும் பங்கேற்க வேண்டும் என்று வேறு விரும்பியிருக்கிறார். எப்படி பங்கேற்க வைப்பது?
தீவிர விளம்பர சிந்தனை காரணமாக இந்த லட்சியத்தை ’வைரல்’ ஆக்கும் யோசனை அவருக்குத் தோன்றியிருக்க கூடும். அதன்படி சச்சின் தெண்டுல்கர், அனில் அம்பானி, சஷி தரூர், கமல்ஹாசன் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இவர்கள் தங்கள் துடைப்பக்கட்டை கடைமையை ஆற்றிவிட்டு தங்கள் நட்புப் பட்டியலில் உள்ள வேறு ஒன்பது பேருக்கு அழைப்பு விடுக்க வேண்டும். இது தான் சுத்தப்படுத்தும் தொடர் விளையாட்டின் விதி. மல்டிலெவல் மார்க்கெட்டில் அடிபட்ட வர்க்கம் அடியை மறந்திருந்தாலும் இந்த சங்கிலி தொடர்பை மறந்திருக்காது.
modi-broom
பூனைப்படை பாதுகாப்புடன் புதுத்தணி கலையாமல் போஸ்!
போகட்டும். தனது காந்தி ஜெயந்தி உரையை முடித்த கையோடு விளக்குமாறோடு நேராக தில்லி ராஜபாதையை அடுத்த வால்மீகி காலனி என்கிற துப்புரவுத் தொழிலாளர்களின் சேரிக்கு திக்விஜயம் செய்த மோடி, அங்கே தெருப்பெருக்குவது போல் புகைப்படம் எடுத்து தனது வலைத்தளத்தில் வெளியிட்டுக் கொண்டார். அசுத்தம் என்றாலே அது தலித்துகளின் சேரியில்தான் இருந்தாக வேண்டும் என்பதே இதன் உள்ளர்த்தம்.
இது ஒரு பக்கம் இருக்க, தனது தூய்மை இயக்கத்திற்கு முதல் கட்டமாக மோடி தெரிவு செய்த முகரைகளின் யோக்கியதையை நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும். விளையாட்டை கார்ப்பரேட்மயமாகவும், விளம்பரக்காடாகவும் விளையாட்டு வீரனின் உடலையே ப்ளெக்ஸ் பேனராகவும் மாற்றி விளையாட்டை மாசுபடுத்திய சச்சின் தெண்டுல்கர், சுற்றுச் சூழல் சீர்கேடுகள் விளைவித்தது தொடர்பாக சுமார் 77 வழக்குகளை சந்திக்கும் தரகு முதலாளியான அனில் அம்பானி, காங்கிபசின் மேட்டுக்குடி மைனர் சசிதரூர், பாக்கின் ஐஎஸ்ஐயை எதிர்த்து போராடும் புதிய இந்திய ஜேம்ஸ்பாண்டு கமல், பாலிவுட் பொறுக்கி சல்மான் கான், மக்களின் மூளையை மாசுபடுத்தும் பாபா ராம்தேவ் போன்ற கலங்’கறை’ விளக்குகள் தான் மோடியோடு சேர்ந்து நாட்டை சுத்தம் செய்யப் போகிறார்களாம்.
“அட எப்பம் பார்த்தாலும் உங்களுக்கு அந்தாளோட ஒரண்டை இழுக்கறதே பொழப்பா போச்சி.. வேணும்னா நீங்களே சொல்லுங்களேன் அவர் எங்கே போயி எதைத் தான் சுத்தம் செய்யட்டும்?” என்று அப்துல் கலாம், அண்ணா ஹசாரே வகையறாக்கள் சலித்துக் கொள்ளக் கூடும். அது அத்தனை நியாயமான சலிப்பு அல்ல.
smriti3
மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி குப்பையில்லாத இடத்தில் பெருக்கி அவதிப்படுகிறார்!
ஏனெனில், ஒருவேளை மோடி வண்டியைக் கொஞ்சம் நேராக விட்டிருந்தால் அவர் தில்லியில் உள்ள சீலம்பூருக்குச் சென்றிருக்கக் கூடும். யோக்கியனாக இருந்தால் அங்கே தான் சென்றிருக்க வேண்டும் – ஆனால், அவர் செல்ல மாட்டார். ஏன் என்பதை பின்னர் பார்ப்போம். அதற்கு முன், ”சேரின்னாலே சுத்த கப்பு பாஸ். முதல்ல அங்க சுத்தம் பண்ணனும் இல்லேண்ணாக்க அவங்களை காலி பண்ணனும் பாஸ்” என்று சடைந்து கொள்வோர் சீலம்பூரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
வடகிழக்கு தில்லியில் அமைந்துள்ள சீலம்பூரில் தான் மாபெரும் மின்னணுக் குப்பைத் தொட்டிகள் அமைந்துள்ளன. இந்தியாவெங்கும் பயன்படுத்தப்பட்டு வீசியெறியப்படும் கனிணிகள் மற்றும் அதன் உதிரி பாகங்கள் தில்லியை வந்தடைகின்றன. தனியார் தொண்டு நிறுவனம் நடத்திய கள ஆய்வு ஒன்றின் படி, 2007-ம் ஆண்டு வாக்கில் தில்லியில் மட்டும் சுமார் 11594 டன் அளவாக இருந்த மின்னணுக் கழிவுகளின் அளவு, தற்போது 30,000 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. இன்றைய தேதியில் நாடெங்கிலும் சுமார் 13 லட்சம் மெட்ரிக் டன் மின்னணுக் கழிவுகள் சேர்வதாகவும் இவையனைத்தும் தில்லிக்கு இறக்குமதி செய்யப்படுவதாகவும் அசோசெம்மின் அறிக்கை ஒன்றின் அடிப்படையில் தெரிவிக்கிறது என்.டி.டிவி. இது தவிர உலகெங்கும் இருந்து மின்னணுக் கழிவுகள் தில்லிக்கு இறக்குமதி செய்யப்பட்டு வருகிறன.
மின்னணுக் கழிவுகள் மறுசுழற்சி செய்யும் பிரம்மாண்டமான இந்த தொழில் ஒழுங்கமைக்கப்படாமல் இருக்கிறதே – அதாவது, பெரிய தொழில் நிறுவனங்களுக்கு இதில் பங்கு கிடைக்கவில்லையே என்கிற கவலையில் இருந்து தான் அசோசெம் மேற்படி அறிக்கையை முன்வைத்துள்ளது என்பது இந்த பதிவுக்குத் தொடர்பில்லாத, ஆனால் அவசியம் மனதில் கொள்ள வேண்டிய உபதகவல்.
uma bharathi
உமா பாரதி மேடையில் மட்டுமல்ல, தெருவிலும் சண்டை போடுவார்!
இவ்வாறாக சீலம்பூர் வந்து சேரும் மின்னணுக் கழிவுகளை தரம் பிரித்து, உடைத்து மறுசுழற்சிக்குப் பயன்படுத்தியவற்றைத் தவிர எஞ்சிய கழிவுகள் அப்படியே எரிக்கப்படுகின்றன. இந்தப் பணியில் சுமார் 25,000 பேர் ஈடுபட்டுள்ளனர் – இதில் சுமார் 6,000 பேர் பதினைந்து வயதுக்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் என்கிறது டாக்ஸிக் லிங்க் என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பு ஒன்று. இத்தனை கழிவுகளையும் போட்டு குப்பைக் காடுகளை உருவாக்குவது சாட்சாத் சேரிகளுக்கு முகம் சுளிக்கும் அதே மேட்டுக்குடி வர்க்க இந்தியர்கள் தான்.
மின்னணுக் கழிவுகளில் இருந்து வெளியேறும் பாதரசம், காட்மியம், ஈயம், போன்ற ஆபத்தான இராசாயனங்களால் பணியாளர்கள் மட்டுமின்றி சீலம்பூர் பகுதியே பாதிக்கப்பட்டுள்ளது. சீலம்பூர் பகுதியை அடுத்த ப்ரேம் நகரில் மட்டும் கணினிகளில் பயன்படுத்தப்படும் பாட்டரிகளில் இருந்து ஈயத்தைப் பிரித்து எடுக்கும் குடிசைத் தொழில்கள்  சுமார் 110 இடங்களில் நடப்பதாக டாக்ஸிக் லிங்க் அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது. எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி பேட்டரிகளை அப்படியே நெருப்பில் பொசுக்கி அதில் உருகும் ஈயத்தை பிரிக்கும் ஆபத்தான வேலைகளில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டு வருவதை அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
plateform
சுத்தப்படுத்துவதாக போஸ் கொடுக்கும் மோடி அன் கோ, ரயில்வே நிலைய திடக்கழிவுகளை எடுக்க செல்லாதது ஏன்?
மோடி ஏன் சீலம்பூர் செல்ல மாட்டார்? அவருக்கு சீலம்பூரோடு வாய்க்கா வரப்புத் தகராறு ஏதும் இல்லை, அதற்கு வேறு அடிப்படை இருக்கிறது.
இந்தியாவில் குவியும் மின்னணுக் கழிவுகள் ஆகப் பெரும்பான்மையாக பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைங்கரியம் தான். இங்கே செயல்பட்டு வரும் கார்ப்பரேட் நிறுவனங்களில் மின்னணுப் பொருட்களை கழித்துக் கட்டுவதற்கு உருப்படியான வழிகாட்டுதல் நெறிமுறைகள் ஏதும் கிடையாது. ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில், மின்னணுக் கழிவுகளைக் கையாள்வதற்கென்றே சிறப்பான சட்டங்கள் உள்ளன. அந்த நாடுகளில் உள்ள நிறுவனங்கள் தங்களது மின்னணுக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்காக கணிசமான தொகையைச் செலவிட்டு வருகின்றன. அதாவது அந்த கழிவுகளை ஒரே அடியாக ஏழை நாடுகளில் கொட்டுவதற்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள். அப்படிக் கொட்டப்படும் கழிவுகளை துண்டேந்தி மேற்கத்திய எஜமான்களுக்கு முகம் துடைக்கும் வேலையை ‘தேசபக்தர்’ மோடி போன்ற உள்ளூர் ஆண்டைகள் முகம் சுளிக்காமல் செய்கிறார்கள்.
மேலும் திறந்த மடமான இந்தியாவில் அவ்வாறான வலுவான சட்டங்கள் ஏதும் இல்லை. மோடி சீலம்பூர் சென்று மின்னணுக் கழிவுகளை அகற்ற அவருக்கு ஜே.சி.பி இயந்திரங்களை இயக்கும் அறிவு இல்லாதது காரணமல்ல – கார்ப்பரேட் நிறுவனங்களின் டார்லிங்காக உருவகிக்கப்படும் அவர் தனது எஜமானர்களின் லாபத்தில் கைவைக்க விரும்ப மாட்டார். நமது வீடுகளில் கக்கூசு கட்டாமல் வயல்வரப்புகளில் ஆய் போவதால் தான் எய்ட்ஸ், கேன்சர் போன்ற நோய்கள் உருவாவதாக பூச்சி காட்டும் சுகாதாரத் துறையும், சுற்றுச் சூழல் துறையும் பன்னாட்டுக் கம்பெனிகள் பாரத மாதாவின் மூஞ்சில் ஆய் போவதற்கு ஆட்சேபம் தெரிவிக்காமல் இருப்பதன் அடிப்படை இதுதான்.
e waste
தலைநகரத்தில் மின்னணு கழிவு மலை! மோடி கண்டுகொள்ளாமல் ஓடுவது ஏன்?
காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தொண்ணூறுகளின் துவக்கத்திலிருந்தே படிப்படியாக இந்தியாவை தொழில்களுக்கு உகந்த இலக்காக மாற்றும் பொருட்டு தொடர்ந்து பெயரளவிலாவது இருந்து வரும் சுற்றுசூழல் சட்டம், மாசுக்கட்டுப்பாட்டுச் சட்டம் போன்றவற்றின் முதுகெலும்பை உடைத்தே வந்தனர் – இதில் பாரதிய ஜனதாவும் காங்கிரசும் எந்தக் கொள்கை வேறுபாடும் இன்றி கைகோர்த்துக் கொண்டனர்.
தற்போது மோடியின் வருகைக்குப் பின் பாரத மாதாவைப் அலேக்காக பிடித்து மலத்தொட்டிக்குள் அமிழ்த்தும் இந்த ”தொழில் முன்னேற்ற” நடவடிக்கைகள் வெறிகொண்ட வேகத்தில் பாய்ந்து முன்செல்கிறது.
சுற்றுப்புறச் சூழல் என்பதைக் காட்டி எந்தவொரு பெருந்தொழில் திட்டங்களுக்கும் முட்டுக்கட்டை விழுந்துவிடக் கூடாது என்பதற்காகவே காடுகளை மதிப்பிடுவதற்கான அளவுகோல்களை மாற்றியமைத்திருக்கிறது, மோடி அரசு. வன விலங்கு சரணாலயங்களிலிருந்து பத்து கிலோமீட்டருக்கு அப்பால்தான் தொழிற்சாலைகள் அமைய வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் வண்ணம், அந்த வரம்பை ஐந்து கிலோமீட்டர் எனச் சட்டப்படியே மாற்றிவிட்டது, மோடி அரசு.
இது தவிர,
1) காடுகளை தாயகமாக கொண்ட பழங்குடிகள், தமது நிலங்களை ஆக்கிரமித்து தொழில் துவங்குவதை எதிர்ப்பதற்கான உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. வனவாசி கிராம சபைகளின் கருத்துக்கள் கேட்கப்பட தேவையில்லை என்பதை வன உரிமைச் சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் சாதிக்க உத்தேசித்துள்ளது மோடி அரசு
2) மலைகள் மற்றும் வனப் பிரதேசங்களில் பெருந்தொழில் நிறுவனங்கள் துவங்க தடைகள் இல்லாதவாறு வன விலங்கு பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம்
3) நிலக்கரிச் சுரங்கங்கள் அமைக்க கட்டுப்பாடுகள் தளர்த்துவது
4) தொழிற்சாலைகளால் மாசடைந்த தொழிற்பேட்டைகளில் புதிய தொழிற்சாலைகள் துவங்க இருந்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தடைகளை அகற்றுவது
5) தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை நீர்த்துப் போகச் செய்வது
மேலும், அவ்வப்போது பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் உள்நாட்டு தரகு முதலாளிகளுக்கும் புதிது புதிதாக எழும் தேவைகளை ஒட்டி சட்டத்தை நெம்பி வளைக்கவும், அடித்து திருத்தவும் ஆவன செய்வதற்கான நிரந்தர கமிட்டி ஒன்றை அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. (Modi government has launched a silent war on the environment)
child labour
புது தில்லி குப்பை அகற்றும் சிறாரை காப்பாற்ற முடியாதவர் இந்தியாவை காப்பாற்றுவது எப்படி?
தென் தமிழகத்தின் கிரானைட் மலைகளை விழுங்கிய பி.ஆர்.பி மற்றும் மணல் திருடன் வைகுண்டராஜனை நாம் அறிந்திருப்போம். ஆனால், இவர்களையெல்லாம் விட அளவிலும், பரிமாணத்திலும் பிரம்மாண்டமான திருடர்கள் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளாகவும், தேசங்கடந்த தொழிற் கழகங்களாகவும் இந்தியாவெங்கும் கால்பதித்து நாட்டின் இயற்கை வளங்களைச் சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிறுவனங்கள் இயற்கையை வல்லுறவு கொண்டு அடிக்கும் லாப வேட்டைக்கு எந்த இடையூறும் வந்து விடக்கூடாது என்று மொத்த இந்திய ஆளும் வர்க்கமும் பாதுகாப்பாக விளக்குப் பிடித்து நிற்கிறது.
தண்டகாரண்யா மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் நக்சல்பாரி புரட்சியாளர்கள் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைவதற்கு இடையூறாக இருப்பதால் அவர்களை துடைத்தொழிக்க காங்கிரசின் காலத்தில் பச்சை வேட்டை என்கிற பெயரில் இராணுவத்தையே இறக்கினர். அதே காலத்தில் குஜராத் என்கிற எலி வளைக்குள் பதுங்கிக் கிடந்த சுண்டெலியான மோடி, தனது வரம்பிற்கு உட்பட்டு தனது மாநிலத்தை கார்ப்பரேட் நிறுவன்ங்களுக்கு பங்கிட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
மோடின் ஆளுகைக்கு உட்பட்ட குஜராத்தின் அஹமதாபாத் நகரின் கியாஸ்பூரில் தொழிற்சாலைகளின் திடக் கழிவுகள் பெரும் மலைச் சிகரத்தைப் போல் எழுந்து நின்றது. குஜராத்தின் வாபி நகரம் தொழிற்சாலைக் கழிவுகளுக்குள் அமிழ்த்தப்பட்டு வாழத் தகுதியற்ற நகரம் என்ற பெருமையைத் தட்டிச் சென்றது. குஜராத்தின் வாபி நகரத்தைப் போல் இந்தியாவெங்கும் சுமார் 88 தொழிற்பேட்டைகள் சுற்றுச் சூழலை நாசக்கேடாக்குவதாக கண்டறியப்பட்டு அங்கெல்லாம் புதிய தொழிற்சாலைகள் துவங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. மோடி பிரதமராக பதவியேற்றவுடன் செய்த முதல் காரியம் இந்த தடைகளை நீக்கியதே ஆகும்.
மேற்குலக நாடுகளில் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வு பெருகி வருவதன் விளைவாக கடுமையான சுற்றுச் சூழல் விதிமுறைகளுக்கு உட்பட வேண்டிருப்பதாலும், மனித உழைப்பின் மதிப்பு அதிகரித்து வருவதாலும் அந்நாடுகளில் உற்பத்திச் செலவுகள் பெருமளவுக்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களும் தேசம் கடந்த தொழிற்கழகங்களும் தங்களது உற்பத்தி அலகுகளை அங்கிருந்து இந்தியா போன்ற கீழ்த்திசை மூன்றாம் உலக நாடுகளுக்கு இடம் பெயர்த்துள்ளன.
இன்னொரு புறம் மேற்கில் சூதாட்டப் பொருளாதாரத்தின் விளைவாக உலகப் பொருளாதார கட்டமைப்பு நெருக்கடி 2008-ம் ஆண்டு துவங்கி இன்றைய தேதி வரை அமுக்குப் பேய் போல் முதலாளித்துவ நாடுகளைப் போட்டு அமுக்கி வருகிறது. தங்களது மூலதனத்தின் சுழற்சிக்கு புதிய சந்தைகளைத் தேடுவது, மேலும் இயற்கை வளங்களைக் கைப்பற்றுவது – கட்டுப்படுத்துவது என்ற நோக்கத்திற்காக இந்தியா போன்ற மூன்றாம் உலகநாடுகளை நோக்கி பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் படையெடுக்கின்றன.
இந்தப் படையெடுப்பில் அவர்கள் இரும்பாக, வெள்ளியாக, தங்கமாக, நிலக்கரியாக, பெட்ரோலிய பொருட்களாக, வன வளங்களாக, மனித வளங்களாக கார்ப்பரேட் நிறுவனங்கள் அள்ளிச் செல்லும் தேட்டை மதிப்பின் அளவு தான் இந்தியப் பொருளாதாரக் குறியீட்டு எண்ணின் வளர்ச்சி என்கின்றனர் முதலாளித்துவ அறிஞர்கள். அவ்வாறு அவர்கள் அள்ளிச் செல்ல உதவும் இந்தியர்களுக்கு அவன் போடும் எலும்புத் துண்டுகளைத் தான் புதிய வேலைவாய்ப்புகள் என்கிறார்கள் முதலாளித்துவ அறிஞர்களின் வாந்தியைத் தின்று பிழைக்கும் உள்ளூர் அறிஞர் பெருமக்கள். மேற்குலகத்தின் உள்ளூர் எடுபிடியாக  தரகுத்தனத்தில் திளைத்துக் கிடப்பதே தொழில் வளர்ச்சி என்கின்றனர் தரகு முதலாளிகள்  – இந்த மொத்த மனித குல விரோதிகளின் டார்லிங்கு டம்பக்கு தான் நரேந்திர மோடி.
எனவே தான் துடைப்பக் கட்டையை நமது கையில் கொடுத்து விட்டு பூவைக் காதில் சொருகிச் செல்கிறார். பாரதமாதாவை நம்மை விட்டு அலங்கரிக்கச் செய்த கையோடு வாயில் தாம்பூலத்தோடும் கக்கத்தில் லெதர் பேகோடும் ‘கஸ்டமரை’ வரவேற்கச் செல்கிறார் மோடி – இதைத் தொழில் வளர்ச்சி என்று விதந்தோதுகின்றனர் தினமணி வைத்தி வகையறாக்கள்.
பித்தளைச் செம்பை புளி போட்டு விளக்கி நீங்கள் கொடுப்பீர்கள் – அதில் அமெரிக்க பண்ணையார் வந்து புளிச் புளிச்சென்று துப்பிச் செல்வான். இதற்குப் பெயர் தான் சுவஷ் பாரத்.
இந்த மோ(ச)டிக்கு நீங்களும் உடந்தையாகப் போகிறீர்களா என்ன?