Monday, November 3, 2014

சுப்ரமணிய சாமியும் தமிழுணர்வும்...

இரண்டு, மூன்று நாட்களாகவே ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி பேசியதைப் போட்டுத்தான் நாளிதழ்கள், டிவிக்கள் இரண்டும் கூவிக்கூவி காசு பார்த்துக்கொண்டிருக்கின்றன... நம்ம ஆளும் சும்மா இருக்க மாட்டார்.. திடீரென்று ஒரு ப்ரெஸ்மீட் வைத்து, உண்மையா பொய்யா என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு ஒரு விசயத்தைக் கொழுத்திப்போட்டு அவர் பாட்டுக்கப் போய்விடுவார்.. இங்கு ஒவ்வொருத்தனும் தலையைப் பிய்த்துக்கொண்டு தங்களுக்குள் ஒரு ரத்தக்களறியையே நடத்திக்கொண்டு இருப்பார்கள்.. சமீபத்தில் அவர் பேசியதும் அப்படிப்பட்ட விசயம் தான்.. அது என்னவென்று தெரியாதவர்களுக்காக, அவர் சொன்னதன் சுருக்கம் கீழே:

“இலங்கை அரசிடம், எல்லை தாண்டி மீன் பிடிக்கச்செல்லும் தமிழக மீனவர்களை விட்டுவிட்டு அவர்களின் படகுகளை மட்டும் பிடித்து வைத்துக்கொள்ளச் சொன்னவன் நான் தான்.. ஏனென்றால் படகுகள் பெரும் முதலாளிகளினுடையது.. அதைப் பிடித்து வைத்துக்கொண்டால் மீண்டும் எல்லை தாண்ட மாட்டார்கள் நம் மீனவர்கள்.. ஏழை மீனவனின் உயிர் போய்விடக்கூடாது என்பதற்காகவே படகை மட்டும் பிடித்து வைத்துக்கொண்டு, அவர்களை மட்டும் விடச் சொல்லிவிட்டேன்.. நான் சொன்னதைத் தான் இலங்கை அரசாங்கம் இப்போது செய்து கொண்டிருக்கிறது..”



என் முதல் சந்தேகமே இவர் எப்படி ஹார்வர்டில் பொருளாதாரத்தில் டாக்டரேட் வாங்கினார் என்பது தான்.. சிலர் சொல்வார்கள், ”சிவகாசியில் பட்டாசு ஆலைகளை எல்லாம் மூடிவிட்டால், விபத்துக்களே நடக்காது, சிவகாசி மக்கள் உயிரோடு, சந்தோசமாக இருப்பார்கள்” என.. பட்டாசு ஆலையில் விபத்து வந்தால் அன்றோடு அவன் உயிர் போய்விடும்.. குடும்பமும் ஒரு வாரம் அழுதுவிட்டுத் திரும்ப தன் பிழைப்பைப் பார்க்க ஓடிவிடும்.. அதுவே விபத்தைத் தடுக்கிறேன் பேர்வழி என்று எல்லா ஆலைகளையும் மூடினால், விபத்தன்று ஒரேடியாகப் போகும் அவன் உயிர் பட்டினியால் கொஞ்சம் கொஞ்சமாகப் போகும்.. அவ்வளவு தான் வித்தியாசம்.. ஏனென்றால் எங்களுக்கு அதைத்தவிர வேறு தொழில் தெரியாது, அரசும் எங்கள் பிழைப்பிற்கு வேறு வழியைக் காட்டவில்லை.. கிட்டத்தட்ட கூலிக்கு மீன் பிடிப்பவனின் கதியும் இதே தான்...

ஒரு முதலாளியின் படகைப் பிடித்து வைத்துகொண்டு, மீனவனை மட்டும் விடுவித்தால் என்ன பயன்? அந்த மீனவன் அதன் பின் எங்கு வேலைக்குப் போவான்? அட்லீஸ்ட் படகோடு சேர்த்து அவனையும் பிடித்து வைத்துக்கொண்டால், இலங்கை ஜெயிலில் மூன்று வேளை சோறாவது போடுவார்கள் என நம்புகிறேன்.. படகு இல்லாமல் கரைக்குத் திரும்பும் அவனுக்குச் சொந்தப் படகு வாங்கவும் காசு இருக்காது.. முதலாளிகளின் படகையும் நம்ம சு.சாமியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு இலங்கை பிடித்து வைத்துக்கொள்வதால் கூலிக்கும் மீன் பிடிக்கப் போக முடியாது.. அரசாங்கமும் மீனவர்களுக்கு பிழைப்பிற்கான வேறு வழிமுறைகளை இதுவரைச் செய்ததில்லை.. பின் அவனால் என்ன தான் செய்ய முடியும்? சாக வேண்டியது தான்.. இலங்கைக் கப்பல் படையின் ஒரு துப்பாக்கி குண்டினால் உடனே போக வேண்டிய அவன் உயிர், தமிழ் மண்ணில் தினம் தினம் பசியால் போய்க்கொண்டிருக்கும்.. அவ்வளவு தான் வித்தியாசம்..

அதனால் தான் ஏதோ பெரிய உலக சாதனை நிகழ்த்தி விட்டது போல் பேசிக்கொண்டிருக்கும் சு.சாமி, பொருளாதார ரீதியில் இது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனமானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.. இந்த மிகப்பெரிய ஓட்டையைத் தவிர அவரது பேட்டியில் வேறு எந்தப் பெரியக் குற்றமும் எனக்குத் தெரியவில்லை.. சு.சாமியின் கருத்தை எதிர்ப்பதால் நான் ஒன்றும் தமிழக மீனவர்களின் ஆதரவாளனும் கிடையாது!!!! சரி மேட்டருக்கு வருகிறேன்..

உங்கள் வீடும் உங்கள் தம்பி வீடும் அருகருகே இருக்கிறது.. உங்கள் வீட்டில் இருக்கும் மளிகைச் சாமான் மற்றும் காய்கறிகளை நீங்கள் ஊதாரித்தனமாய் கணக்கு வழக்கு இல்லாமல் எடுத்துக் காலியாக்கி விட்டீர்கள்.. இப்போது உங்கள் வீட்டில் சோறாக்க அரிசி இல்லை, குழம்பு வைக்கக் காய்கறி, பலசரக்குச் சாமான்கள் இல்லை.. நீங்கள் நேராக, உங்கள் வீட்டை ஒட்டியிருக்கும் உங்கள் தம்பி வீட்டிற்குள் நுழைகிறீர்கள்.. அவன் ஒரு சிக்கனப் பேர்வழி.. பார்த்துப்பார்த்துச் செலவு செய்பவன்.. நீங்கள் அவனைக் கேட்காமலேயே அவன் வீட்டில் இருக்கும் சமையல் ஐட்டங்களை ஆட்டையைப் போட்டுக்கொண்டு வந்துவிடுகிறீர்கள்.. ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல, பல நாட்களாக நீங்கள் இதைத் தான் செய்து கொண்டிருக்கிறீர்கள்.. எத்தனை நாள் தான் அவன் பொறுமையாக இருப்பான்? அண்ணன் தம்பி என்றாலும், தொப்புள்க்கொடி உறவு என்றாலும் அவரவர் வயிற்றுக்கு அவரவர் தானே சாப்பிட வேண்டும்?

இந்த அண்ணன் இடத்தில் நம் கடல் வளங்களையும், மீன் வளங்களையும் அனுமதிக்கப்படாத வாரியல்களைக் கொண்டு அழித்துவிட்டத் தமிழக மீனவர்களையும், தம்பி இடத்தில் இலங்கையின் வடக்கு மாகானங்களில் இன்னமும் தங்கள் மீன் வளங்களைக் காத்துக்கொண்டிருக்கும் தமிழ் மீனவர்களையும் வைத்துக்கொள்ளுங்கள்.. இப்போது இந்தக் கதையின் அர்த்தமும், இலங்கை அரசின் நடவடிக்கைகளில் இருக்கும் ஞாயமும் உங்களுக்குப் புரியும்..




இலங்கையைச் சேர்ந்தத் தமிழக மீனவர்கள் பல முறை சொல்லிவிட்டார்கள், நம் இந்தியத் தமிழ் மீனவர்கள் பயன்படுத்தும் வலைகள் மிக மிக மோசமானவை; அவை கடல் வளங்களை மொத்தமாக அழித்துவிடும் என்று.. நாம் அதைப் பற்றிக் கொஞ்சம் கூட சட்டையே செய்யாமல், “என் இனம், என் தமிழன்.. அவனுக்கு மீன் பிடிக்கக்கூட உரிமை இல்லையா?” என்று பொங்குகிறோம்.. இதே தமிழன், தன் கடல் வளத்தை அனுமதி இல்லாத வாரியல்கள் கொண்டு அழித்த போது இன்று கூப்பாடு போடும் ஆட்கள் எல்லாம் எங்கே போனார்கள்? சரி நம் நாட்டுக் கடல் வளத்தை அழித்த போது நாம் மூடிக்கொண்டு இருந்த மாதிரி, மற்ற நாட்டுக்காரனும் இருப்பானா? கடலில் எல்லை தெரியாது, மீனவனுக்குக் கடல் சொந்தம் என்று சொல்வதெல்லாம் லாஜிக்கலாக ஏற்கக்கூடிய வாதமே இல்லை.. கடல் எல்லை தெரியாத மீனவன் இருக்கவே மாட்டான்.. தெரிந்தே தான் போகிறான்.. இந்த பார்டரைத் தாண்டிப் போனால் இலங்கை கப்பற்படை பிடிக்கிறது, சுடுகிறது என்றுத் தெரிந்தும் ஏன் போகிறான்? எல்லாம் பேராசை.. இது அவன் தவறு தானே?

இன்னொரு முக்கிய விசயம் நாம் பாகிஸ்தானை எப்படிப் பார்க்கிறோமோ, ஒரு பாகிஸ்தான்காரனை எப்படி பயத்துடன் அணுகுவோமோ அப்படித்தான் இலங்கைக்காரனுக்கு நாம்.. அவனுக்கு தமிழன் என்றாலே, “ஒரு வேளைத் தீவிரவாதியாக இருப்பானோ?” என்கிற பயம் இருக்கத்தானே செய்யும்? இப்படிப் பட்டச் சூழலில் நம் உயிரையும், பொருட்களையும் காப்பாற்றிக்கொள்ளப் பார்ப்போமோ, அல்லது திமிர் பிடித்துக் கடலில் எல்லை தாண்டிச் செல்வோமா?



சில தமிழ் உணர்வாளர்கள் இருக்கிறார்கள்.. தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ் உணர்வு இதற்கெல்லாம் அவர்கள் தான் wholesale agency எடுத்து, கிட்டத்தட்ட ஒரு carrying and forwarding agent ஆகச் செயல்படுவார்கள்.. இவர்களைப் பொறுத்தவரை, தமிழன் கொலையே செய்தாலும் அதுவும் சரியே.. ஏன்னா அவன் தமிழன்.. தமிழன் எதுவும் செய்யலாம்.. அதற்கு இவர்களின் ஆதரவு என்றும் உண்டு.. ஆனால் இலங்கையிடம் மட்டும் ”இனவாதம் கூடாது” என்பார்கள்.. அதாவது தமிழனுக்கு கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு அளிக்கும் இவர்கள் தான், அதே போல் கண்ணை மூடிக்கொண்டு தன் இன மக்களுக்கு ஆதரவளிக்கும் இலங்கை செய்வதைத் தவறு என்பார்கள்.. சரி அவர்களுக்கும் இந்தக் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? சொல்கிறேன்..

இதே தமிழின ஆதரவாளர்கள் தான், இலங்கைத் தமிழருக்காக இங்கே குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள்.. ஆனால் இவர்கள் இந்தியாவில் அகதிகள் முகாமில் அடைபட்டு, வாழ்வை இழந்த ஈழத் தமிழனைப் பற்றிக் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்பது வேறு விசயம்.. இந்தத் தமிழின ஆதரவாளர்கள் இலங்கையில் இருக்கும் தமிழனின் வளத்தைத் தன் இந்தியத் தமிழன் அழிப்பதை மட்டும் ஏன் கண்டுகொள்வதில்லை? அவனும் தமிழன் தானே? அவனது உயிரை போர் என்னும் பெயரில் இலங்கை பறித்தது.. அவன் வளத்தை, வாழ்வாதாரத்தை “இனம்” என்கிறப் பெயரில் இவர்கள் பறிக்கிறார்கள்.. தான் மீன் திங்க வேண்டும் என்பதற்காக, தொப்புள்க்கொடியின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, அவனின் வளத்தைத் திருடலாமா? உன் வீட்டுக்குள் எவனோ ஒருவன் வந்து பீரோவில் இருக்கும் நகை, பணத்தை எல்லாம் அள்ளிக்கொண்டு போனால் சும்மா இருப்பியா நீ? ஆனா நீ மட்டும் இன்னொருத்தன் நாட்டுக்குள்ள போயி அவன் கடல் வளத்தை அழிப்ப, அதை அவன் தட்டிக்கேட்டா ”இன அழிப்பு”, “இன வெறி”னு பட்டம் கொடுத்து அரசியல் ஆக்குவ, அப்படித்தானே மை டியர் டமிலின போராளீஸ்? 

இன்னும் சிலர் இருக்கிறார்கள், ”மனிதாபிமான அடிப்படையில் பாருங்கள்.. வெறும் மீன் பிடித்ததற்காக மீனவனைக் கொல்லலாமா? வலையை அறுக்கலாமா? படகைப் பிடிக்கலாமா?” என்று ஜீவகாருண்யம் பேசுவார்கள்.. ஐயா வாழும் வள்ளலாரே, உலகமே பணத்தை அடிப்படையாகக் கொண்டு தான் ஓடுகிறது.. ஒரு நாடு தன் வளத்தைப் பாதுகாத்து, அதைப்பெருக்குவதில் முனைப்புடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் போது மனிதமாவது மானமாவது.. பக்கத்து வீட்டுக்காரன் செத்தாலும் கண்டுகொள்ளாத, ரோட்டில் ஒருவர் அடிபட்டுக்கிடந்தாலும் ஆஃபிஸுக்கு லேட் ஆகிவிடும் என்பதால் அதைக் கண்டு கொள்ளாமல் போகிற நாம் தான் மனிதாபிமானம் பேசுகிறோம் என்பது மிகப்பெரிய நகைமுரண்.. தனிமனிதனான நமக்கே பணம் தான் முக்கியம் என்று ஆன பின்பு, ஒரு நாடு, அதற்குத் தன் இயற்கை வளங்களும் பொருளாதாரமும் தானே முக்கியம்? அதைத் தன் குடிமக்களுக்குத் தானே கொடுக்க நினைக்கும்? வருபவன் போறவன் எல்லாம் அள்ளிக்கொண்டுப் போக அது என்ன தமிழ்நாட்டு ஆற்று மணலா? இந்த விசயத்தில் தவறை எல்லாம் நம் பக்கம் வைத்துக்கொண்டு இலங்கையைக் கண்டிப்பது, இலங்கை மீது கோபப்படுவது என்பது சுத்த முட்டாள்த்தனமாகத் தெரிகிறது..



முதலில் இந்திய அரசு தன் மீனவர்களுக்கு இந்திய எல்லைக்குள் மட்டும் தான் மீன் பிடிக்க வேண்டும் என்கிற உத்தரவைப் போட வேண்டும்.. மீறிச் செல்பவர்கள் அதன் பின் கடலுக்குள்ளேயே இறங்க முடியாத அளவிற்கு தடை விதிக்க வேண்டும்.. இந்திய எல்லையில் மீன் வளம் இல்லையென்றால் மீனவர்களுக்கு வேறு சில வாழ்வாதார வழிகளைச் செய்து கொடுக்க வேண்டும்.. அதை விட்டுவிட்டு அவர்களின் உயிரோடும் உடமையோடும் இன்னொரு நாடு விளையாண்டு கொண்டிருப்பதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது.. அதே போல் அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முடிவுகள் தேவைப்படும் இது போன்ற விசயங்களில், மக்களின் உணர்வுகளைத் தூண்டிப் பிழைப்பை நடத்தும், பொது அறிவே இல்லாத மூன்றாம் தர அரசியல்வாதிகள் மூக்கை நுழைப்பதையும் உடனுக்குடன் கண்டிக்க வேண்டும்.. சும்மா “தமிழ், தமிழன், என் இனம், தொப்புள்க்கொடி உறவு” என்று மேடைக்கு மேடை மைக்கைப் பிடித்துக் கத்துவதால் மட்டும் எதுவும் ஆகிவிடப்போவதில்லை என்று தெரிந்தும் கத்திக்கொண்டிருக்கும் அது போன்ற சில்லறை அரசியல்வாதிகளையும் மக்கள் நிராகரிக்க வேண்டும்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...