Thursday, October 2, 2014

அட..போடா, வெங்காயம்..விரிவான ஆய்வு..!

வெங்காய.. நண்பனும்..பகைவனும்..!

சிலருக்கு வெங்காயம் என்றால் படு குஷி. இன்னும் சிலருக்கோ, வெங்காய வாடையே ஆகாது. சிலர் பண்டிகை தினங்களில்/ அமாவாசை/ திதி போன்ற நாட்களில் பயன்படுத்த மாட்டார்கள். பெரும்பாலோருக்கு வெங்காயம் இன்றி உணவில்லை. பழைய சோத்துக்கு ரெண்டு வெங்காயம் கடிச்சிக்கிட்டா போதும்பா. மளமளன்னு சோத்தை உள்ள தள்ளிடலாம்ன்னு சொல்றது ஒரு கும்பல்! இன்னும் சிலருக்கு, மிளகாய் + வெங்காயத் துவையல் இருந்தா போதும். உள்ளே போற நாலு இட்லி, எட்டா மாறிடும்.! வெங்காய சட்னியோட ருசியே.. தனிப்பா. அதுல கொஞ்சம் காயம் மட்டும் தூக்கலா போடு, நாம தூள் கிளப்பிடுவோம்கிற கட்சி தனி. இன்னொரு கோஷ்டிக்கு வெங்காயம் இல்லாம எதுவும் நடக்காது. அதாம்பா.. அசைவக் கூட்டாளிகள்.! மீன், கறி, கோழி, முட்டை, கருவாடு எல்லாத்துக்கும் வெங்காயம் இல்லாம ஆகாதே. எவ்வளவு வெங்காயம் அதிகமோ.. அவ்வளவு ருசிப்பா சாப்பாடு.. சமையல் எல்லாம்.!. பொண்ணு இல்லாம கூட கல்யாணம் நடக்கும். ஆனா வெங்காயம் இல்லாத கல்யாண சமையல் உண்டா? 

குணம் நாடி, குற்றமும் நாடி, மிகை நாடி கொளல்..! 

வெங்காயத்தின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால்.. போடா வெங்காயம் என்று சொல்லத் தோன்றாது. பல ஆயிரம் (5500) ஆண்டுகளுக்கு முந்தையது அதன் பிறப்பு! ஆனால் பிறப்பால் உயர்ந்த வெங்காயம், அதான் மணத்தாலேயே, தாழ்த்தப்பட்டவர்களின் உணவுப் பொருள் என்று கருதப்பட்டதுதான் கொடுமை..! பின்னரே அதன் காரம், மணம், குணம், தரம் அறிந்து இன்று ஓரளவுக்கு மரியாதை என்பது, இந்த மனித சமுதாயத்தால் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு எந்த பதவி, பணம். படிப்பு இருந்தாலும், வெங்காயத்தை நாடாமல் இருக்க முடியாது. நண்பா உடலுக்கும், குடலுக்கும், இரத்தத்திற்கும் நல்லது, இந்த கெட்ட வெங்காயம் போங்கள்..!.! 

காலத்தை .. விஞ்சிய வெங்காயம்..! 

இந்த வெங்காய வரலாறு சுமார் 5,500ஆண்டுகளுக்கு முற்பட்டது. ஆச்சரியமாக இல்லை.! பூண்டைப் போலவே, வெங்காயத்தின் மூலமும் காலத்திற்கு முற்பட்டதாக கருதப்படுகிறது. வெங்காயம் ஆசியாவிலிருந்துதான் உருவானதாக கருதப்பட்டாலும் கூட, வெங்காயம் காட்டுப் பயிராக, உலகின் மூலைமுடுக்கெல்லாம் முளைத்துக் கிடந்திருக்கிறது என்பதே உண்மை. வெங்காயத்தைப் பற்றிய கதை ரொம்பவும் சுவையானது. 

சூப்பால்...உலகப். பிரசித்தம்.!

வெங்காயம் ஆசியாவிலிருந்து கிரீசுக்கும், எகிப்துக்கும் எடுத்து செல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. பின்னர் எகிப்திலிருந்து வெங்காயம் ரோமுக்கு பயணித்தது. ரோமில்தான் வெங்காயத்திற்கு "யுனியோ" (unio) என்ற பெயர் சூட்டப்பட்டது. இதன் பொருள் பெரிய முத்து (large pearl ). பிறகு வெங்காயம் பிரிட்டிஷ் தீவுகளுக்கு வந்த பின், இதனை மத்திய இங்கிலீஷ்காரர்கள் யூனியன் என அழைத்தனர். அதுவே மெல்ல மெல்ல மருவி, ஆனியன் ஆயிற்று. இந்த வெங்காயம் போட்ட "பிரெஞ்சு ஆனியன் சூப் "பை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியதும், அதன் மூலம் வெங்காயத்தின் மவுசும், அந்தஸ்தும், உயர்ந்ததும், போலந்தின் அரசரான, முதலாம் ஸ்டானிஸ்லாஸ் மூலமே என்பது வெங்காய சூப் போல ரொம்ப சுவையான விஷயம்தான்.

எங்கும்.. இருப்பேன்,, எதிலும்.. வளர்வேன்..! 

நம்ம முன்னோர்கள், பண்ணை விவசாயம் செய்யத்துவங்குமுன்பே. எழுத்துக்கள் கண்டுபிடிப்பதற்கு ரொம்ப காலத்துக்கு முன்பே காட்டு வெங்காயத்தை அப்படியே உணவாக தின்னத் துவங்கிவிட்டனர். இது ரொம்பவும் எளிமையான உணவு. சரித்திர காலத்திற்கு முற்பட்ட நம் உணவு வகைகளில், வெங்காயம் முக்கிய உணவாக இருந்தது. அது மட்டுமல்ல துவக்க காலத்தில் பயிர் செய்யப்பட்ட ஆதி காலப் பயிர்களில் ஒன்றாக வெங்காயம் இருந்தது. மேலும் மற்ற உணவுகளைவிட, குளிர்காலத்தில் எளிதில் அழுகி, கெட்டுப் போகாத உணவாகவும் வெங்காயம் இருந்தது. அதைவிட முக்கியமாக, இதனை எங்கு வேண்டுமானாலும், எவ்வித சிரமமும் இன்றி, எளிதில் ஒரு இடத்திலிருந்து, இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்லவும் முடியும். 

அத்துடன், வெங்காயத்தை, வளர்ப்பதுவும் மிகவும் சுலபமாகவே இருந்தது. மேலும் வெங்காயத்தை எவ்வித மண்ணிலும், எந்தவிதமான சீதோஷ்ண நிலையிலும், நல்ல விளைச்சல் தரும்படி, பயிர் செய்ய முடியும் என்பதும் கூட, இது வேகமாக உலகம் முழுவதும் பரவியதன் முக்கிய காரணியுமாகும். 

உயிர் காக்கும் அமிர்தம்..! 

"இந்த வெங்காயம்" பரவ அதுமட்டும்தான் காரணம் என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை. அதைவிட, இன்னும் முக்கியமான ஒரு விஷயம் உண்டே? அதாம்பா..! மனித உயிரைத்தக்க வைக்கவும், இந்த வெங்காயம்தான் உதவியிருக்கிறது என்றால் மிகையில்லை என்றே பதிவுகள் தெரிவிக்கின்றன. வெங்காயம் தாகத்தைத் தவிர்த்திடுமாம். அதனை காய வைத்து, உலர்த்தி எடுத்து வைத்துக்கொண்டால், உணவுத்தட்டுப்பாடு /பஞ்சம் ஏற்பட்டால், இந்த உலர்ந்த வெங்காயத்தின் தாள்/ஏடு/சருகுகள்தான், உயிர் காக்கும் அமிர்தமாக இருந்ததாம். 

இந்த வெங்காயம் பற்றிய உருவாக்கம், துவக்கம், தகவல்கள் எல்லாமே புதிராகத்தான் உள்ளன. இருந்தாலும் கூட, அதனைப் பற்றிய பதிவுகள் மனிதனின் மிகத் துவக்க காலத்திலிருந்தே, அதனை உணவாக பயன்படுத்தியதுடன் மிகவும் கலை நயத்துடனும், மருத்துவ ரீதியாகவும் கையாண்ட பதிவுகளும் உள்ளன. அத்துடன் வெங்காயம், எகிப்தில் இறந்த உடல்களைப் பதப்படுத்தவும் பயன்பட்டு இருக்கிறது. 

கடவுளுக்கு படைக்கும் பொருள்..! 

சுமார் 5 ,000 ஆண்டுகளுக்கு முன்பே, சீனர்களின் தோட்டத்தில் வெங்காயத்தை வளர்த்தனராம். இந்தியாவில் இதனைப் பயிரிட்டது தொடர்பாக, ஆரம்ப கால வேத புத்தகங்களிலும் இத்தகவல் காணப்படுகிறது. சுமேரியர்கள் கி.மு 2 ,500 களில் வெங்காயம் பயிரிட்ட சான்றுகள் உள்ளது. அந்த கால கவர்னர் தோட்டத்தில், வெங்காயம் போட்ட பகுதியை உழுதனராம். எகிப்தில் வெங்காயத்தை வணங்குவதற்குரிய ஒரு பொருளாகப் பார்த்தனர். அவர்கள் வெங்காயத்தை இறவாமையின் அடையாளமாகப் பார்த்தனர். எனவே, அரச பரம்பரையான, பாரோக்கள் இறந்த பின், அவர்களுடன், வெங்காயத்தையும் சேர்த்து புதைத்தனர். 

அதனுடைய உருண்டையான உருவமும், குறுக்கே வெட்டும்போது, அதன் மையத்திலிருந்து உள்ளே செல்ல செல்ல காணப்படும், வட்ட வட்டமான வளையங்கள், இக வாழ்விலிருந்து சொர்க்கத்துக்குக் கொண்டுசெல்லும்,பாதையை, மனிதர்களுக்கு உணர்த்துவதாக அவர்கள் கருதினர் அல்லது இறவாமையின் அறிகுறி/அடையாளம் என்றே எகிப்தியர்கள் தீர்க்கமாக நம்பினர். 

சவத்தைப் பதப்படுத்த வெங்காயமா..?

கிரேக்க கால மத பாதிரியார்கள் அடிக்கடி வெங்காயத் தாள்கள், வேர்களுடன் நின்று ஆராதனை செய்வதாக படங்கள் காணப்படுகின்றன. எகிப்தியரின் புதைவிடங்களில்/ இடுகாடுகளில், வெங்காயம் பயன்படுத்தியதற்கான சான்றுகள்/தடயங்கள் காணப்படுகின்றன. எகிப்திய பிரமிடுகளில் காணப்பட்ட அரசர் கல்லறைகளில் ஒன்று நான்காம் ராமேசேசின் (Ramesses IV ) கல்லறை. இதில் ஏராளமான தங்கம் இருந்ததாகவும், அவற்றை கொள்ளைக்காரர்கள் பலமுறை இந்த பிரமிடுகளுக்குள் நுழைந்து கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த எகிப்திய அரசன், நான்காம் ராமேசேசிஸ் .கி.மு. 1160களில் இறந்தபோது ,கண்குழிகளில் வெங்காயம் வைத்து கட்டியே, கல்லறைக்குள் சமர்ப்பணம் செய்தனர் 

சொர்க்கம்..செல்வோமா !

பதப்படுத்தப்பட்ட ராமேசேசிஸ் மம்மியின் கண்குழிகளின் மேல் வெங்காயத்தின் மிச்ச சொச்சங்கள் காணப்பட்டன. கிரேக்கத்தில் பதப்படுத்தப்பட்ட இறந்த உடல்களில், இடுப்பு, தொண்டை, காதுகள் மற்றும் கண்குழிகளில் வைக்கப்பட்டன. நெஞ்சுக்குழியில், பூத்துக் குலுங்கும் வெங்காயத்தாள் வைக்கப் பட்டது. பாதங்களில் வைக்கப் படும் வெங்காயம், கால்களின் வழியாக, ஆன்மாவுக்குள் செல்லும் என நம்பினார். வெங்காயத்தின் பலமான மணம், அதன் மாய சக்தியால், இறந்தவர்களை மீண்டும் சுவாசிக்கச் செய்து விடும் என அவர்கள் முழுமையாக நம்பினர். மேலும், அதற்கு நிறைய எதிர் உயிரித் தன்மை உண்டு என்பதால் இந்த உயிர் கொடுக்கும் பணியை இது செய்யும் என்றும் கருதினர். எனவே தான், இறந்தவர்களோடு, வெங்காயத்தை இணைத்து வைத்து புதைத்தனர். 

தங்க வெங்காயம் அறிவோமா! 

எகிப்தியர்கள் அவர்கள் உபயோகித்த காய்கறிகளை எல்லாம் விலையுயர்ந்த உலோகங்களில் உருவங்களாக செய்து வைத்திருந்தனர். அதில் வெங்காயத்தை மட்டும்தான் எகிப்திய கலைஞர்கள் தங்கத்தில் வடித்துள்ளனர் என்றால், வெங்காயத்துக்கு அவர்கள் தந்த மரியாதையை கொஞ்சம் எண்ணிப்பாருங்கள் நண்பா! பிரமிடுகளின் உட்புறத்திலும், புதிய மற்றும் பழைய அரசவைக்கோபுரங்களிலும், வெங்காயம் பற்றிய படங்கள் காணப்படுகின்றன. இறப்பு சடங்குகளிலும், பெரிய விருந்து போன்றவற்றிலும் கூட, பெரிய வெங்காயத்தை உரித்து முழுமையாகவும், நீளமாக, ஒல்லியாக வெட்டியும் இளம் வெங்காயத்தையும் வைத்துள்ளனர். கடவுளுக்கு வைத்து வணங்கப்படும் “நைவேத்திய பொருள்களுள் ஒன்றாக வெங்காயம்” கடவுளின் படையல் மேசை மீது இருந்ததாம் எனில் வெங்காயத்தின் மதிப்பை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். 

வெங்காயமா.. விளையாட்டுக்கே அர்ப்பணம்! 

ஆதிகால கிரீசில், ஓட்டபந்தய வீரர்கள் ஏராளமான வெங்காயம் சாப்பிடுவார்களாம். ஏன் தெரியுமா? வெங்காயம் இரத்தத்தின் சமனநிலையை மிகவும் லேசாக வைத்திருக்குமாம். பின் கிரீஸ் ரோமானியர்களின் கைகளுக்குள் அடக்கமானது. விளைவு, ..?ரோமானிய விளையாட்டு வீரர்கள், முக்கியமாக புலி, சிங்கம் மற்றும் காளைகளுடன் போரிட்டு மக்களை குறிப்பாக அரச குடும்பங்களை மகிழ்விக்கும் வீரர்கள், தங்களின் புஜங்களில் தசை நன்கு முறுக்கேறி சண்டையிடுவதற்கு வாகாக, வெங்காய சாற்றை கைகளின் மேற்புறம் தேய்த்துக் கொள்வார்களாம். எப்படி இருக்கு கதை? 

பிரமிடு கட்டும் உழைப்பாளிக்கும் வெங்காயம்..! 

எகிப்தில் பிரமிடுகள் கட்டிக்கொண்டு இருக்கும்போது, அதனைக் கட்டும் தொழிலாளிகளுக்காக தினப்படி உணவு ரேஷனில் கொடுத்தனர். அந்த உணவில் கட்டாயம் வெங்காயம் இருந்தது. வெங்காயம் கொடுத்தால் அவர்கள் பிரமிடு கட்டி முடிக்கும்வரை உடம்புக்கு எதுவும் வராமல் இருக்கவும் உடல் நல்ல பலத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும்தான் வெங்காயத்தைக் கொடுத்தனராம். பழைய கிரேக்கத்தில் வெங்காயம் மட்டுமின்றி பூண்டு மற்றும் வெங்காய வாசனையுள்ள லீக் என்ற அடியில் வெள்ளையாய் இருக்கும் ஒரு தாவரத்தையும் உண்டனர். அங்கே வணிக சந்தையின் ஒரு பகுதிக்கு பூண்டு என்னும் பொருள்பட "டா ஸ்கோராடா" என பெயர் சூட்டியிருந்தனர். ராணுவ வீரர்களுக்கு கட்டாயமாய் வெங்காயம் உணவில் தரப்பட்டது. அது சண்டையிடும் உணர்வை தூண்டிவிடும் என்றும் நம்பப்பட்டது. 

பிசாசை விரட்டும் வெங்காயம்..! 

ரோமானியர்கள் வழக்கமே வேறாக இருந்தது. அங்கே, ஏழைகளின் தினசரி வாழ்வில் ரொட்டியும் வெங்காயமும் கட்டாயம் உண்டு. செல்வந்தர்கள், வெங்காயம் உண்பவர்களை ஏளனமாகப் பார்த்தனர். இருந்தாலும் கூட வெங்காயத்தின் அந்த நெடி கலந்த வாசனை, துர்தேவதைகளை விரட்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தனர். 

அருமருந்தான சமய சஞ்சீவி..! 

பைபிளில் இஸ்ரேலியர்கள் வெங்காயம் பயன்படுத்தியது தொடர்பாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. பாலைவன உணவில் வெங்காயம் பற்றி சொல்லப்பட்டுள்ளது கி.மு 6 ம் நூற்றாண்டில் வாழ்ந்த, இந்திய மருத்துவர் சரகர் எழுதியுள்ள “சரக சம்ஹிதா” நூலிலும்,வெங்காயம் பேசப்படுகிறது. வெங்காயம், சிறுநீர் பிரிதலுக்கும், செரிமானத்துக்கும் , இதய நோய்களுக்கும், கண் மற்றும் மூட்டு வியாதிகளுக்கும் மருந்தாக சொல்லப்பட்டுள்ளது. .அது போலவே, முதல்லாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க மருத்துவர் டையோஸ்கோரிடேஸ் (Dioscorides ), வெங்காயத்தின் பலவகையான மருத்துவ குணங்கள் பற்றி சொல்லுகிறார்.

கிரேக்கர்கள் ஒலிம்பிக் விளையாட்டின்போது, உடலுக்கு நல்ல பலம் தருவதிற்காக போட்டியின்போது ஏராளமான வெங்காயம் உண்டனர், ஏராளாமான வெங்காய ஜூஸ் (நாம சாத்துக்குடி, ஆப்பிள் ஜூஸ் குடிக்கிறமாதிரி) குடித்தனர். வெங்காயத்தை உடம்பு, கை, கால் தசைகளில் தேய்த்துக் கொண்டனர். ரோம் நகர பிளினி, என்ற எழுத்தாளர், ரோமானியர்கள் நல்ல தீர்க்கமான பார்வை கிடைக்க, உறக்கம் தூண்ட, வாய்ப் புண் ஆற, பல்வலி போக, வயிற்றுப்போக்கு நிற்க, முதுகுவலி குறைய என அனைத்து வியாதிகளுக்கும் வெங்காயம் சஞ்சீவியாக உதவியது என்று குறிப்பிடுகிறார். 

வீட்டு வாடகைக்கும் வெங்காயம்..! 

மத்திய காலத்திலிருந்த மூன்று முக்கிய காய்கறிகள் பீன்ஸ், முட்டைகோஸ் மற்றும் வெங்காயமே. தலைவலி, பாம்புக்கடி, ஏன் முடிகொட்டுதலுக்கும் கூட வெங்காயம் பயன்பட்டது. அனைத்து மக்களும் எல்லாவற்றுக்கும் வெங்காயத்தையே பயன்படுத்தினர். ஒரு விஷயம் தெரியுமா! அப்ப ரோமாபுரியிலே, வீட்டு வாடகையாக மட்டுமில்லே, திருமணப் பரிசாகவும் கூட வெங்காயம் கொடுக்கப்பட்டதாம்..! எப்படி இருக்கு கதை.?.! 

கொலம்பசும். .கண்டுபிடிப்பும்..!

கிறிஸ்டோபர் கொலம்பஸ் , ஹிஸ்பனியோலாவைக் கண்டுபிடிக்கிறேன் பேர்வழி என்று 1492ல் கிளம்பியபோதுதான் வட அமெரிக்காவில் போகிற போக்கில் வெங்காயத்தை அறிமுகப்படுத்தினார். 1500களின் துவக்கத்தில் மருத்துவர்கள், பெண்களின் மலட்டுத்தன்மைக்கும், நாய், பூனை, மாடு மற்றும் வீட்டு பாசமிகு விலங்குகளின் சிகிச்சைக்கும் கூட வெங்காயமே பயன்பட்டதாம்!

பிரெஞ்சு பிளேக்கும் வெங்காயமும்..!

ஆங்கிலேயர்களும் பிரெஞ்சு மக்களும். பிளேக் நோய் சிகிச்சைக்காக வெங்காயம் பயன்படுத்தினர். இன்றும்கூட உலகின் பல இடங்களில் சளி பிடிக்கும் போலிருந்தால், படுக்கைக்கு பக்கத்தில் நறுக்கிய வெங்காயம் வைத்துக்கொள்வார்கள். தொண்டை பிரச்சினை உள்ளவர்களும் கூட, வெங்காயம் போட்டு மென்றால் அது குறையும் என எண்ணுகின்றனர். 

நம்ம வெங்காயத்தின் அறிவியல் பெயர்..! 

நாம் இப்போது அறிவியல் கதைக்கு வருவோமா? அல்லியம் என்ற அறிவியலின் பொதுப் பெயர் வெங்காய, பூண்டு குடும்பத்தை சேர்ந்த அனைத்து நண்பர்களுக்கும் வழங்கப்படுகிறது. ஆனால் நமது வெங்காயத்தின் பெயர் இங்கே, அல்லியம் சீப்பா(Allium cepa) என்பதாகும். தோட்ட வெங்காயம், குண்டு வெங்காயம், பெல்லாரி வெங்காயம் என்ற பட்டப் பெயர்களும் இதற்கு உண்டு. ஒரு விதையிலை தாவரத்தைச் சேர்ந்த வெங்காயம், தரைக்கு மேல், ஒற்றைத் தண்டுகளாய் வளரும். வெங்காயம் என நாம் பயன்படுத்தும் பகுதி, தரைக்கு கீழ் உள்ள தண்டுதான். இந்த வகை தாவரங்களில், தண்டுப் பகுதிதான் உணவை சேமிக்கும். இதுவே எதிர்காலத்தில் தன் சந்ததி தழைக்க உதவும் பகுதியாகும்.

உன் கண்ணில் நீர் வடிந்தால்..! 

உங்களுக்கு ஒரு போட்டி? யாராவது, கண்ணீர் வடிக்காமல் வெங்காயம் உரிக்க முடியுமா? கல்யாணம் முடிந்து ஊர் போகும்போது, மாப்பிள்ளை, தன் மாமனாரிடம், "மாமா நான் உங்கள் பெண்ணை கண் கலங்காமல் பார்த்துக் கொள்கிறேன்.. நானே வெங்காயம் உரித்து தருவேன்" என்று சொல்வதாக பழைய கால நகைச்சுவை ஒன்று உண்டு. அதன் பின்னணி, வெங்காயம் உரிக்கும்போது நம் கண்ணில் நீர் வடிவதுதான்.. 

இதன் காரணம் என்ன தெரியுமா. ? வெங்காயம் வெட்டும்போதோ/உரிக்கும்போதோ, அதன் செல்கள் உடைபடுகின்றன. அதனால், வெங்காயத்திலிருந்து, அல்லினஸ்(Alliinase) என்ற நொதி வெளிப்படுகிறது. இதிலிருந்து சல்போக்சைடு மற்றும் சல்பெனிக் அமிலம் போன்றவை உண்டாகின்றன. பின் அதிலிருந்து சைன்-ப்ரோபனேதியால்-S -ஆக்சைடு (syn-propanethial-S-oxide,) மற்றும் ஐசோ தையோ சயனேட் என்ற பொருட்களும் இணைந்து எளிதில் ஆவியாகும் வாயு வெளியேறுகிறது. இதுதான், வெங்காயம் உரிக்கும்போது நம் கண்களை உறுத்தி, கண்ணீர் வரவழைக்கும் வேதிப் பொருளாகும்.

இதோ நமது வெங்காய சஞ்சீவி .! ..

இப்போ ..நாம இந்த "வெங்காய" மருத்துவரைச் சந்திப்போமா? சாதாரண சளியில் துவங்கி, பலவகையான நோய்களை ஓரம் கட்டுகிறது வெங்காயம்.! இதய நோய், சர்க்கரை நோய், எலும்பில் சிதைவு போன்ற பெரும்பாலான நோய்களை கட்டுப்படுத்துகிறதாம் இந்த பொல்லாத வெங்காயம்.! இதில் உள்ள வேதிப் பொருள்கள், வீக்கம் குறைக்க, கொழுப்பை கட்டுப்படுத்த, புற்றுநோய் தடுக்க, இளமையை நிலைநிறுத்த உதவுகின்றன. இன்றைய ஆராய்ச்சிகளில் முக்கியமாக, அதிகமாக வெங்காயம் உண்பது, தலை மற்றும் கழுத்துப் புற்றை தடுக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் மட்டும் சில சாரார், வெங்காயம் சாப்பிடுவது பாலுணர்வைத் தூண்டும் என்பதால் தவிர்க்கின்றனர். உலகின் பல பகுதிகளில், உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு வெங்காயம் மருந்தாக போடப்படுகிறது. சில பகுதியிலுள்ள கிராம மக்கள், அம்மை போட்டு முடிந்ததும், குழந்தைகளின் கழுத்தில் வெங்காயத்தைக் கட்டி தொங்கவிடுவார்கள். வைரசை வெளியேற்ற செய்யும் முறைதான் இது.. பெண்களுக்கு, மாதந்திர தொந்தரவு காலத்திலும், எலும்பு உறுதிபடவும், வெங்காயம் தான் உதவுகிறது. 

நமக்கு வேண்டிய வேதிப்பொருள்கள்..!

நண்பா..இப்போ சும்மா 100 கிராம் வெங்காயத்திலுள்ள உணவு ஆற்றலை/சக்தியை பார்ப்போமா,?மாவுப்பொருள்:9 .34 கிராம் , சர்க்கரை:4 .24 கிராம், நார்ச்சத்து:1 .7கிராம் , கொழுப்பு: 00.1 கிராம் , பூரித கொழுப்பு 0.042 கிராம் , ஒற்றை பூரிதம்:00.013கிராம், பல்வகை பூரிதம் :00.017 கிராம், புரதம்:1 .1கிராம் , நீர்: 89.11கிராம் . வைட்டமின் A :0(0%), B1 :0 .046 mg ( 4 %), B2 : 0 .027mg (2 %), B3 : 0 .116mg ( 1 %), B6 : 0.12mg (9), போலியட்-B9 :19 மி. கிராம் (5 %), B 12 :00. வைட்டமின் C :7 .4 mg (12 %), வைட்டமின் E :00.02 mg (0%), வைட்டமின் K 0:0.4 மி.கிராம் ,கால்சியம்:23 mg (2 %), இரும்பு:00.21 mg (2 %), மக்னீசியம்:00.129mg (00%), பாஸ்பரஸ்: 29 mg (4 %), பொட்டாசியம்:146 mg (3 %), சோடியம்: 4 mg, துத்தநாகம்:00.17 mg (2 %) . போதுமாப்பா,வெங்காயத்திலுள்ள ஒரு மனிதனுக்கு வேண்டிய பொருள்கள்.! 

மூவண்ண சிகாமணி..!

வெங்காயம் இயற்கையில் வெள்ளை, சிவப்பு மற்றும் மஞ்சள் என்ற மூன்று நிறங்களில் கிடைக்கிறது. பொதுவாக, வெங்காயத்தை 100நாட்களில் அறுவடை செய்யமுடியும். ஓர் அமெரிக்கர் ஓர்ஆண்டில் சுமார் 81 .4 கிலோ வெங்காயம் உள்ளே தள்ளுகிறார். நம்மைப் பற்றிய கணக்கீடு எதுவும் இல்லை. உலகிலேயே மிகப் பெரிய வெங்காயம், 47 கிலோ எடையில், இங்கிலாந்திலுள்ள தார்ப் என்பவரால் விளைவிக்கப்பட்டது. வெங்காய வாடையை கையிலிருந்து அகற்ற, உப்பு பொடி /எலுமிச்சை சாறு போதும். உலகிலுள்ள அனைத்துக் கலாச்சாரங்களிலும் வெங்காயம் உணவில் ரொம்பவே ஏழை, பணக்காரர் வித்தியாசம் இன்றி பயன்படுகிறது. வெங்காய உற்பத்தியில் நம் இந்தியாதான் நம்பர் ஒன். இரண்டாவது இடம் சீனாவுக்கு, மூன்றாவது ஆஸ்திரேலியா. 4 ம் இடத்தில் நிற்கிறார், அமெரிக்கர். 

அய்யா.. சாப்பிட.. வாங்க..! 

இப்படி ஒரு அற்புத சஞ்சீவியான வெங்காயத்த நாம சாப்பிடாம விடறதா!. அதன் இருக்கே, சூப், சாலட்,ஸ்டுயூ மற்றும் பச்சை வெங்காயம். பாத்துடுவோம் ஒரு கை. 

No comments:

Post a Comment