Monday, October 6, 2014

ஜெ., மேல்முறையீடு மனு: ஆச்சார்யா சொல்வது


பெங்களூரு : ''ஊழல் தடை சட்டம் -1988ன் கீழ் தண்டனைக்கு ஆளாகியுள்ள குற்றவாளி, உயர் நீதிமன்றத்தில் தண்டனை அளவு குறைப்பு, குற்றவாளி என்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு என்ற ரீதியில் மனு தாக்கல் செய்யலாம். ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றவாளி என்று நிரூபணமான வழக்குகளில் உயர் நீதிமன்றம் எந்த காரணத்துக்காகவும் சலுகைகளை வழங்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது,'' என தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக பணியாற்றி, ராஜினாமா செய்த ஆச்சார்யா தெரிவித்தார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியாகி, சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். ஜாமின் கோரி, அவர் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது.இது தொடர்பாக, ஆச்சார்யா நிருபர்களிடம் கூறியதாவது: உயர் நீதிமன்றம் ஜாமின் மனுவை ஏற்று, தண்டனை அளவை நிறுத்தி வைத்து, மனுதாரருக்கு ஜாமின் வழங்கலாம். கிரிமினல் மனுவை, விரைவில் விசாரித்து முடிப்பது சாத்தியமில்லை என்று உயர் நீதிமன்றத்துக்கு தோன்றினால், கீழ் நீதிமன்றம் விதித்துள்ள தண்டனையை நிறுத்தி வைத்து மனுதாரருக்கு ஜாமின் வழங்குவது நல்லது என்று உச்ச நீதிமன்றம், பல வழக்குகளில் தெரிவித்துள்ளது.ஐந்தாண்டுகள் அல்லது அதற்கு குறைந்த ஆண்டுகள் தண்டனைக்கு ஆளாகியிருந்தால், மனுதாரருக்கு ஜாமின் கிடைக்கலாம். இது தொடர்பாகவும், உச்ச நீதிமன்றம், சில தீர்ப்புகளில் தெரிவித்துள்ளது. கடந்த 1999ல், பகவான் ராம்சிந்தே கோசாய்-குஜராத் அரசுக்கு இடையேயான வழக்கு தொடர்பாகவும், உச்ச நீதிமன்றம், இதுபோன்ற தீர்ப்பை அளித்திருந்தது. மிகவும் முக்கியமான வழக்குகளை தவிர்த்து, அனைத்து சந்தர்ப்பங்களிலும் தண்டனைக்கு தடை விதிக்க கோரி, தாக்கல் செய்யும் மனுதாரரின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளலாம்.இது போன்ற கருத்தை, 2000ல், சுரேஷ் குமார், கிரண் குமார், மத்திய பிரதேச அரசுக்கிடையிலான வழக்கு கே.சி.சரீன் மற்றும் சி.பி.ஐ.,க்கு எதிரான வழக்கிலும், உச்ச நீதிமன்றம் வெளிப்படுத்தியி ந்தது.ஐந்து ஆண்டு அல்லது அதற்கும் குறைந்த ஆண்டு தண்டனை பெற்றுள்ள வழக்கில், ஒரு வேளை மனு நிராகரிக்கப்பட்டால், குற்றவாளி தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். மற்றொரு புறம், அவர், பெரும்பாலான தண்டனையை அனுபவித்திருந்தால் இறுதி நேரத்தில் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டு விடுதலையானால் சிறையில் இருந்த காலத்தை அவருக்கு திரும்ப தர முடியாது. இதுபோன்ற காரணங்களால், தண்டனை அளவை ரத்து செய்யக் கோரி, தாக்கல் செய்யும் மனுக்களை ஏற்றுக் கொண்ட உதாரணங்கள் பல உள்ளன.விசாரணை நடந்து வரும் சந்தர்ப்பத்தில், ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கும் வாய்ப்புகளும் உள்ளன. சாட்சிகளை கலைக்கவும், அவர்களை அச்சுறுத்தவும் சாத்தியமுள்ளது என்பதால், ஜாமின் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம். ஆனால், தண்டனை அளவு ரத்து, விடுதலைக்காக மனு விசாரணை ஆகியவை, இதற்கு மாறுபட்டதாகும். ஏனென்றால், விசாரணையின்போது, சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு செய்து கொள்ளப்படுகிறது.ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், குற்றவாளி என்று நிரூபணமான வழக்குகளில், உயர்நீதிமன்றம், எந்த காரணத்துக்காகவும் இது போன்ற சலுகையை வழங்க கூடாது, என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக தெரிவித்துள்ளது.ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், தண்டனைக்கு உள்ளாகும் நபர், ஏதாவது ஒரு மக்கள் பிரதிநிதி பதவியில் இருந்தால், அவர் அப்பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார். தண்டனை காலகட்டத்தை தவிர்த்து, ஆறு ஆண்டுகள் மீண்டும் அவர் போட்டியிட வாய்ப்பிருக்காது.இது போன்ற சூழ்நிலையில் சிக்கிய அரசு அதிகாரிகள், உடனடியாக அப்பதவியிலிருந்து நீக்கவும் சட்டத்தில் இடமுள்ளது. இதை தவிர்த்து கொள்ள வேண்டும் என்றே அதிகாரிகள், இது போன்ற வழக்குகளில் தண்டனைக்கு தடைவிதிக்கக் கோரி, மனு தாக்கல் செய்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment