Thursday, November 6, 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்!

1971 ஆம் ஆண்டு மே திங்கள் 21 ஆம் நாள் வெள்ளிக்கிழமை 
காலை கண் விழித்தபோது புது தில்லியில் உள்ளோரும் 
ஏன் இந்தியாவில் உள்ளோர் எவருமே அன்று நடக்க இருக்கும் 
ஒரு நிகழ்வு நாட்டையே உலுக்கப் போகிறது என 
அறிந்திருக்கவில்லை. அந்த நிகழ்வில் தானும் ஒரு பகுதியாக
இருக்கப் போகிறோம் என்று பாரத ஸ்டேட் வங்கியின்
தலைமை காசாளர் ஒருவரும் எண்ணியிருக்கமாட்டார்!

அன்று காலை புது தில்லியில் உள்ள கன்னோட் பிளேஸ் 
மற்றும் அதை சுற்றியுள்ள வணிக நிறுவனங்கள் வழக்கம்போல் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கின.கன்னோட் பிளேஸிலிருந்து பாராளுமன்ற கட்டிடத்திற்கு செல்லும் பாராளுமன்ற சாலையில் 
(சன்சத் மார்க் (Sansad Marg)) சிறிது தூரத்தில் இருந்த ஸ்டேட் 
பாங்க் ஆஃப் இந்தியாவின் கிளையிலும் அதே  சுறுசுறுப்பைக் காணமுடிந்தது.

அந்த கிளையில் பணிபுரிந்துகொண்டிருந்த தலைமை காசாளர் 
(Chief Cashier) திரு வேத் பிரகாஷ் மல்ஹோத்ரா (Ved Prakash Malhotra)அவர்களும் வழக்கம்போல் தனது பணியில் மும்முரமாக 
இருந்தபோது அவருக்கு ஒரு தொலை பேசி அழைப்பு  வந்தது.


அவரை தொலைபேசியில் அழைத்தவர் அப்போதைய பிரதமர் 
திருமதி இந்திராகாந்தி அவர்கள். நாட்டின் தேசிய முக்கியத்துவம் 
வாய்ந்த ஒரு இரகசியப் பணிக்கு (Secret Mission) பணம் தேவைப்படுவதாகவும் எனவே உடனே 60 இலட்சம் ரூபாய்களை 
தயார் செய்து வைக்கும்படியும், அதை தான் அனுப்பும் ஒரு 
பங்களா தேசத்தவரிடம் (Bangladeshi) தருமாறும் 
சொல்லியிருக்கிறார். 

(அப்போது கிழக்கு பாகிஸ்தானில் உள் நாட்டுப் போர் நடந்துகொண்டிருந்தது.பங்களா தேஷ் உருவாகாத நேரம்)

திரு மல்ஹோத்ரா அவர்களும் இரகசியப் பணிக்கு பணம் 
வேண்டும் என பிரதமரே தன்னிடம் நேரடியாக சொன்னதால் 
யாரையும் கலந்து ஆலோசிக்காமலும், பிரதமர் அலுவலகத்திற்கு திரும்பவும் தொலைபேசியில் பேசி, பேசியது பிரதமர் தானா 
என உறுதி செய்யாமலும் கேட்ட பணமான ரூபாய் 
60 இலட்சத்தை வங்கி பெட்டகத்திலிருந்து எடுத்து அந்த 
கிளைக்கு சிறிது நேரத்தில் வந்தபிரதமரால் 
அனுப்பிவைக்கப்பட்ட அந்த பங்களா தேசத்தவரிடம் 
கொடுத்துவிட்டார்.

அந்த பணத்தை வாங்க வந்தவர், தான் பிரதமர் 
அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு விரை தூதர் (Courier) 
என்றும் தன்னிடம் கொடுத்த பணத்திற்கான பற்றுச்சீட்டை 
(Receipt) பின்னர் அலுவலகம் வந்து பெற்றுக்கொள்ளளலாம் 
என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

அதை நம்பிய வங்கியின்  தலைமை காசாளர் திரு மல்ஹோத்ரா,
பிரதமர் அலுவலகத்தில்  பணி புரிந்து கொண்டிருந்த 
பிரதமரின் முதன்மை செயலர் திரு ஹஸ்கர் (P.N. Haksar 
அவர்களை சந்தித்து தான் கொடுத்த பணத்திற்கான பற்றுச் 
சீட்டைக் கேட்டிருக்கிறார். 

அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த திரு ஹஸ்கர்  திருமதி இந்திரா காந்தி அதுபோல் யாரிடமும் பணம் தர சொல்லி ஆணை பிறப்பிக்கவில்லை 
என்றும் உடனே காவல் துறையினரிடம் அது குறித்து முறையீடு செய்யுமாறும் சொல்லியிருக்கிறார்.

தான் ஏமாற்றபப்ட்டதை அறிந்த தலைமை காசாளர் உடனே காவல் துறையினரிடம் புகார் கொடுத்திருக்கிறார். திரு ஹஸ்கர் அவர்களின் ஆணையின் பேரில் உளவுத்துறையினர் ஒரே நாளில் திருமதி இந்திரா காந்தியின் குரலில் பேசி பணத்தை பெற்று சென்ற நபரை 
கைது செய்ததோடு, பணத்தையும் மீட்டுவிட்டனர்.

கைது செய்யப்பட அந்த நபர் இந்திய இராணுவத்தில் 
கேப்டன் ஆக இருந்து பின்னர் RAW எனப்படும் 
இந்திய அரசின் நுண்ணறிவு பிரிவில் அலுவலராக 
பணிபுரிந்து வந்த Rustom Sohrab Nagarwala என்பவர். அவர் 
அன்றைக்கு பிடிபடாமல் இருந்திருந்தால் நேபாளம் 
தப்பி சென்றிருப்பாராம்.

ஒன்றை இங்கே சொல்லியாகவேண்டும். ரூபாய் 60 இலட்சத்தை 
பெற்று சென்ற நகர்வாலாவுக்கும்  அந்த வங்கியில் கணக்கு 
இல்லை. திருமதி இந்திரா காந்தி அவர்களுக்கும் அந்த வங்கியில் 
கணக்கு இல்லை.பின் எப்படி அந்த தலைமை காசாளர் காசோலை 
ஏதும் இல்லாமல் அந்த பெரிய தொகையை யாரையும் கலந்து ஆலோசிக்காமல் எந்த கணக்கிலிருந்து எடுத்து கொடுத்தார் 
என்பது இன்றுவரை புரியாத புதிராகவே உள்ளது. 

No comments:

Post a Comment