Monday, April 3, 2017

1966இல் பரமாச்சார்யாள் உத்தரவு*

1. மாப்பிள்ளை அழைப்பு: முன் காலத்தில் மாப்பிள்ளை வெளியூரிலிருந்து வரும்போது ஊரின் எல்லையில் சென்று மேளத்தாளத்துடன் குதூகலமாக அழைத்துவருவது வழக்கம் தற்போது முதல் நாள் அன்றே மாப்பிள்ளை சத்திரத்திற்கு வந்துவிடுகிறார். தங்கி டிபன் முதலியன சாப்பிட்டு இளைப்பாறுகிறார். பிறகு இரவு (ஏற்கனவே வந்துவிட்ட வரை) வெளியில் அனுப்பி, ஓரிடத்திலிருந்து அழைப்பது அர்த்தமற்றது. இது சத்தியத்திற்குப் புறம்பானது. தவிர்க்கப்பட வேண்டும்.
2. காசியாத்திரை: முன் காலத்தில் பிரம்மச்சாரிகள் காசிக்குப் படிக்கச் செல்வார்கள். வழியில் பெண் வீட்டார். தங்கள் பெண்ணை ஏற்றுக்கொண்டு கிரஹஸ்தாஸ்ரமம் நடத்தச் சொல்வார்கள். சரி என்று பையனும் சம்மதித்துத் திரும்புகிறான். இதுதான் தற்போது நடக்கிறது. ஆனால் முதல் நாளே நிச்சயதார்த்தம் செய்து லக்னப் பத்திரிகை படித்து ஏற்பாடாகிறது. பிறகு காசிக்குப் போவது முரண்பாடான ஏற்பாடு தவிர்க்க வேண்டும் (நம்பிக்கை மோசடி என்றுகூடச் சொல்லலாம்)
3. ஊஞ்சல்: சாஸ்திரப்படி கல்யாணம் ஆனபிறகு தம்பதிகளாய்ச் சேர்ந்த பிறகுதான் அவர்களை ஊஞ்சலில் வைத்துக்கொண்டாட வேண்டும். பகவான் கல்யாண உற்சவங்களில் விவாஹம் ஆன பிறகுதான் திவ்ய தம்பதிகளை ஊஞ்சலில் வைத்து பூஜிக்கிறோம். கல்யாணத்திற்கு முன்னால் தம்பதிகளைச் சேர்த்துவைப்பது நல்லது இல்லை. ஏதாவது ஏற்பட்டு விவாஹம் தடைபட்டால் அவர்கள் வாழ்வு பாதிக்கப்படும்.
4. பாணிக்ரஹணம்: சுபமுகூர்த்தம் வைத்து நல்ல லக்னத்தில் மாப்பிள்ளை பெண்ணின் கரத்தை க்ரஹிக்க வேண்டும். இப்பொழுது முதலிலேயே (ஊஞ்சல் பிறகு) கையைப் பிடித்து அழைத்து மணமேடைக்கு வருகிறார்கள். கைப் பிடிக்கும் வேளை ராகு காலம் எமகண்டமாய் இருக்கலாம். சுப லக்னத்தில்தான் கைப் பிடிக்க வேண்டும்.
5. கைகுலுக்குதல்: மாப்பிள்ளை பெண் இருவரும் விரதம் செய்து, கையில் ரக்ஷா பந்தனம் செய்துகொள்கிறார்கள். கைகள் புனிதமாகி இருவரும் விவாதச் சடங்குகள். ஹோமம், சப்தபதி முதலியன செய்யத் தகுதி அடைகின்றன. இந்தப் புனிதத்வத்தைக் கெடுத்து எல்லாரும் வந்து பெண், மாப்பிள்ளை இருவரும் சடங்குகள் முடியும் முன் கைகுலுக்குகிறார்கள். கைகள் சுத்தம் இழக்கின்றன. ஆகையால் விவாஹச் சடங்கு, சப்தபதி முடியும் முன் யாரும் தம்பதிகளைக் கை குலுக்கக் கூடாது. இதைப் பத்திரிகைகளில் (NB) என்று போட்டுக் குறிப்பிட்டுவிட்டால். விவாஹத்திற்கு வருபவர்கள் தக்கபடி நடந்துகொள்வார்கள்.
6. பட்டுப்புடவை: விவாஹம் செய்யும்போது பாவம் சேரக் கூடாது. ஆயிரக்கணக்கான பூச்சிகளைக் கொன்று பட்டு இழை எடுக்கிறார்கள். ஆகையால் பாவம் சேர்ந்த இந்த பட்டுப் புடவையைக் கட்டிக்கொண்டால் விவாஹம் பாவத்திற்கு உட்படுகிறது. தம்பதிகள் க்ஷேமத்திற்கு உதந்ததல்ல இதற்காகத்தான் பரமாச்சார்யாள் இதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். அஹிம்ஸா பட்டு உடுக்கலாம்.
7. விவாஹப் பணம் (Dowry): மாப்பிள்ளை வீட்டார் எதிர் ஜாமின் வகையறா வாங்குவது சாஸ்திர விரோதம். மேலும் விரதங்களை தங்கள் வீட்டில் செய்துகொண்டுதான் கல்யாணத்திற்கு வர வேண்டும். அவர்கள் பொறுப்பு. இப்படிச் செய்தால் சத்திரத்திற்கு காலையில் வந்தால் போதும். நேரே விவாஹம் மந்தர பூர்வமான சடங்குகளைப் பிரதானமாகச் செய்யலாம். நிறைய வேத வித்துகளுக்கு தக்ஷிணைக் கொடுத்து அக்னி சாக்ஷியான விவாகத்தைச் சிறப்பாக நடத்தலாம். சிலவும் குறையும். நகை ஆடம்பரம் தவிர்த்து ஒருவேளை ஆகாரத்துடன் முடித்து மிச்சமாகும் பணத்தை ஒரு ஏழைக் குடும்ப கல்யாணத்திற்கு உதவலாம் அல்லது சேமிக்கலாம்.
8. வரவேற்பு: முதல் நாள் வரவேற்பு கொடுப்பது தவறு. தம்பதிகளாகச் சேரும் முன் இருவரையும் ஒன்றாய் உட்காரவைப்பது தவறு. நமது கலாசாரத்திற்கு முரண்பட்டது. கோவில்களில் கல்யாணம் செய்தால் வரவேற்பு ஏதாவது சத்திரத்தில் காலியாயிருக்கும் தினத்தில் (கிழமை பார்க்க வேண்டாம்) செய்யலாம். சிலவு குறையும்.
9. திருமங்கல்ய தாரணம்: விவாகம் என்பது திருமங்கல்ய தாரணம் மட்டும் அல்ல. வேத பூர்வமான மந்த்ரம் திருமங்கல்ய தாரணத்திற்கு இல்லை. ஸ்லோகம்தான். மந்த்ர பூர்வமான விவாகம்தான் முக்கியம் உதாரணமாக 9-10:30 முகூர்த்தம் என்றால் 10:30க்குள் திருமங்கல்ய தாரணம் செய்துவிடுகிறார்கள். எல்லாரும் எழுந்து போய்விடுகிறார்கள். உண்மையான விவாகச் சடங்குகள் பிறகுதான் நடக்கின்றன. சாட்சிக்கு யாரும் இருப்பதில்லை. மேலும் முகூர்த்த காலத்திற்குப் பின் ராகுகாலம், எம கண்டம் இருக்கலாம். ஆகையால் எல்லாம் சப்தபதி உள்பட முகூர்த்த காலத்திற்குள் முடித்துவிட வேண்டும். சுபகாலத்தில் தான் சடங்குகள் செய்ய வேண்டும். அப்போதுதான் தம்பதிகளுக்கு க்ஷேமம் உண்டாகும்.
10. கூரைப்புடவை: மாயவரத்திற்கு அருகில் கொறை நாடு என்ற ஊரில்தான் முகூர்த்தப் புடவை செய்வது வழக்கம். கொறை நாடு புடவை என்பதைக் கூரப்புடவை என்கிறோம். நூலில் சிவப்புக் கட்டம் போட்டு அழகாக நெய்வார்கள். உண்மையான கூரப்புடவை என்றால் நூல் புடவை என்று அர்த்தம். நாம் தற்போது பணவசதியால் பெருமைக்கு ஆசைப்பட்டுப் பட்டு ஜரிகையை, ஆயிரக்கணக்கில் செலவு செய்து பாவத்தைத் தேடிக்கொள்கிறோம்.
NB: 1966இல் பரமாச்சார்யாள் உத்தரவு: ?என் நிபந்தனைகளுக்கு
உட்படாமல் செய்யப்படும் விவாஹப்
பத்திரிகைகளில் என் பெயரைப் போடுவது
தவிர்க்கப்பட வேண்டும்?.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...