Sunday, April 2, 2017

பிள்ளைமார் ன்னு சொன்னாலே ஒரு திமிரு வரும்............

வெள்ளாளர் சொந்தங்களே ஒரு 5 நிமிடம் இதை படித்து நம் வரலாறை தெரிந்து கொள்ளுங்கள், இதை படித்த பிறகு பிள்ளைமார் ன்னு சொன்னாலே ஒரு திமிரு வரும்............
"அந்த இளைஞனைப் பார்த்து வெள்ளையர்கள் பயந்துதான் போனார்கள். அவனது அஞ்சா நெஞ்சுரமும் விடுதலை வேட்கையும் கண்டு பரங்கியர் நடுநடுங்கினார்கள். அவனோடு நேருக்குநேர் பேசியோ போரிட்டோ அவனை வெல்லமுடியாது என்று முடிவு கட்டிய வெள்ளையர்கள், அவனை சிறைப் பிடித்தவுடன் தூக்கிலிட்டார்கள். அப்போதும் ஆத்திரம் அடங்கவில்லை. அவன் தலையை வெட்டித் துண்டித்து ஈட்டியில் குத்தி காட்சிப் பொருளாக நடுச்சந்தியில் நட்டு வைத்தார்கள்.
``கட்டபொம்மு நாயக்கர் பிடிபடுவதிலும், அவரது மந்திரியான சுப்ரமணியபிள்ளை பிடிபட்டதே நமக்கு வெற்றி'' என்று வெள்ளையர்கள் மேலே நடந்த நிகழ்ச்சியை மேலிடத்திற்கு இப்படித்தான் தெரிவித்தார்கள்.
கட்டபொம்முவின் மந்திரியாக இருந்த தானாபதிப் பிள்ளைதான் அந்த இளைஞன். பெயர் சுப்ரமணிய பிள்ளை. தூக்கிலிட்டாலும் மீண்டும் எழுந்து வந்துவிடுவாரோ என்று பரங்கியரை அஞ்சி நடுங்க வைத்த இந்த சுத்த வீரரைத் தந்த சமூகம் `பிள்ளைமார்' என்று அழைக்கும் வேளாளர் சமூகம்.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சமூகங்களுள் தொன்மை வாய்ந்தது பிள்ளைமார் சமூகம்.
கன்னியாகுமாரி, திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள வேளாளர்கள்தான் பெரும்பாலும் பிள்ளைமார் என்று அழைக்கப்படுகிறார்கள். பிள்ளை என்ற குலப்பட்டம் பூண்டுள்ள இவர்கள் பாண்டிய வேளாளர், நாஞ்சில் நாட்டு வேளாளர், நாமதாரி பிள்ளைமார், நாங்குடி வேளாளர்கள், கோட்டை வேளாளர், நீர்பூசி வேளாளர், கார்காத்த (அல்லது) காரைக்கட்டு வேளாளர், அரும்பு கோத்த வேளாளர், அகமுடைய வேளாளர் என்று பலவாறாக வழங்கி வருகிறார்கள்.
தென் தமிழகம்தான் இவர்களின் பூர்வீகம் என்றாலும் வேலை நிமித்தமாக இப்போது தமிழகம் முழுவதும் இவர்கள் பரவி இருக்கிறார்கள். எங்கு சென்று வாழ்ந்தாலும் `பிள்ளைமார்' தங்கள் அடையாளத்தையும் பண்பாட்டுக் கலாச்சாரத்தையும் விடாமல் பாதுகாத்து வருகிறார்கள்.
தொடக்கத்தில் பிள்ளை என்ற பட்டம் இவர்களுக்கு மட்டுமே உரியதாக இருந்தது. இடைக்காலத்தில் பிற சமூகத்தினரும்கூட இப்பட்டத்தைப் போட்டுக் கொள்வதைப் பெருமையாகக் கருதத் தொடங்கி விட்டனர். ஆனால் அவர்களுடன் பண்பாட்டு ரீதியில் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை.
சேர சோழ பாண்டியர்களின் அமைச்சர்களாக இருந்து வழி நடத்திச் சென்றவர்களாக இவர்களைச் சொல்வதுண்டு. மன்னர்களுக்கு முடிசூட்டு விழாவில் முடி எடுத்துக்கொடுக்கும் உரிமை இருந்ததாகக் கூறுவோரும் உண்டு.
பிள்ளைமார்களின் அடிப்படைத் தொழில் விவசாயம். என்றாலும் நேரடியாக விவசாயத்தில் ஈடுபடாமல் ஆட்களை வைத்து விவசாயத் தொழில் செய்கின்றனர்.
அன்றைய பாண்டிய நாட்டில் மழையின்றி பஞ்சம் தலைவிரித்தாடியது. தனது நாட்டில் மழையைப் பொழிவிக்காத மேகங்களைப் பிடித்து வந்து பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதி சிறையில் அடைத்து விட்டான். தேவர்கள் உட்பட அனைவரும் கார்முகில்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இனிமேல் மேகங்கள் தங்களது வேலையை ஒழுங்காகச் செய்யும் என்று யாராவது ஒப்புதல் கொடுத்து பிணையக் கைதியாக இருந்தால் மட்டுமே மேகங்களை விடுவிப்பேன் என்றான் மன்னன். அப்போது வேளாளர் ஒருவர்தான் மேகங்களுக்குப் பதில் தான் சிறையில் இருப்பதாக வாக்குறுதி அளித்து மேகங்களை விடுவித்தாராம்.
இதனால் அவர்கள் கார்காத்த வேளாளர் என்று அழைக்கப்பட்டதாக செவிவழிக் கதை உண்டு. அந்தளவிற்கு பிறரின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக பிள்ளைமார் சமூகத்தார் இருந்திருக்கிறார்கள்.
வேளாளர்களில் ஒரு பிரிவினர் சைவப் பிள்ளைமார். இவர்கள் அதிகாலை சிவநாமத்தை உச்சரித்துவிட்டுத்தான் விழிக்கிறார்கள். காலை, மதிய, இரவு உணவுக்கு முன்னும் இறைவழிபாடு நடத்துவதை இவர்கள் மறப்பதே இல்லை.
இவர்களுக்கு பல குலதெய்வங்கள் இருக்கின்றன. பிள்ளைமார்களில் வைணவத்தைக் கடைப்பிடிப்போரும் இருக்கிறார்கள். நாமதாரி பிள்ளைமார்கள் திருமண் இட்டுக்கொள்கிறார்கள். இப்போது சைவம், வைணவம் கடைப்பிடிப்போரிடையே திருமண உறவு வைத்துக்கொள்வதும் உண்டு.
திருச்செந்தூர், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், தென்காசி, குற்றாலம் கோயில்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடு செய்வது சைவப் பிள்ளைமார்களின் வழக்கம். அதேசமயம், வைணவத்தில் ஈடுபாடுடைய பிள்ளைமார்கள் ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, நாங்குனேரி போன்ற நவ திருப்பதி ஸ்தலங்களுக்குச் சென்று வழிபாடு நடத்துவது பிரசித்தம்."
"சுதந்திரப் போராட்டக் காலத்தில் இச்சமூகத்தினர் ஆற்றிய பங்கு மிகப் பெரியது.
இந்திய சுதந்திரப் போராட்டம் என்பது ஒரு வீர வரலாறு. இந்தப் போரில் எண்ணற்றவர்கள் சிறை சென்றார்கள். இலட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இதில் ஈடுபட்டோரில் பிள்ளை மார்களின் பங்கு மகத்தானது.
உறங்கிக்கிடந்த தமிழ் மக்களைத் தட்டி எழுப்பி, நாமிருக்கும் நாடு நமக்குச் சொந்தமானது என்று மக்களை எழுச்சிபெறச் செய்தவர் வ.உ.சி. நாமே கப்பல் ஓட்டி கடல் ஆதிக்கத்தைக் கைப்பற்ற முடியும் என்று முனைந்து வெள்ளையனுக்கு எதிராக சுதேசிக் கப்பல் நிறுவனத்தை நிறுவி இரண்டு கப்பல்களை விட்டார். சுதந்திரப்போரில் தென்னகத்தின் தளபதியாக இருந்து ஆங்கிலேயரை ஆட்டம் காண வைத்தார். அதனாலேயே வெள்ளையரின் அடக்குமுறைக்கு ஆளாகி, சொத்து சுகங்களை இழந்து செக்கிழுத்து கல் உடைத்து சொல்லொணாத் துன்பங்களைச் சுமந்தார்.
நமது பாரதநாட்டின் விடுதலை வரலாற்றில் மாவீரர் சர்தார் வேதரத்தினம் பிள்ளையின் பெயர் அழுத்தமாகப் பதிந்துள்ளது.
தமிழ்நாட்டில் நிகழ்ந்த உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் தளபதியாக இருந்து வெள்ளையர்களை அச்சுறுத்தியதால் பலமுறை சிறை சென்றார். காந்தியடிகளின் தலைமையின்கீழ் போராடிய அகிம்சா வீரர்.
பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடிய பிள்ளைமார் சமூகத்தவர்களின் பட்டியல் மிகப் பெரியது.
அதேபோல், இச் சமூகத்தினர் சைவத்திற்கும் தமிழுக்கும் ஆற்றிய தொண்டு அளப்பரியது.
அன்றைய சென்னைப் பட்டினம் அதிர்ச்சியில் உறைந்துபோய் கிடந்தது. திடீரென பொழிந்த வெடிகுண்டு மழையில் ஜனங்களைவிட வெள்ளைக்கார ஆட்சியாளர்கள் ஆடிப்போய்விட்டார்கள். அவர்கள் நடுக்கத்துடன் உச்சரித்த ஒரே பெயர் ஜெய்ஹிந்த் செண்பகராமன். ஏன்?
1914-ல் செப்டம்பர் மாதம் 22-ஆம் நாள் எம்டன் நீர்முழுகிக் கப்பலில் பயணித்து சென்னையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைத் தகர்க்க வெடிகுண்டு வீசிய பெருவீரன். இந்தியாவைவிட்டு வெள்ளையர்களை வெளியேற்ற, இந்தியாவுக்கு வெளியே இந்திய தேசீய தொண்டர் படையை (ஐ.என்.வி.) ஆரம்பித்தவர். அதன் பேராற்றலைக் கண்டு பிரிட்டிஷார் கலக்கம் அடைந்தனர். சுபாஷ் சந்திரபோஸின் ஐ.என்.ஏ.வுக்கு முன்னோடி அது.
இப்படி தன்னலம் கருதாத வீரர்களை தாய்மண்ணின் விடுதலைக்கு அர்ப்பணித்ததன் விளைவு, பிள்ளைமார் சமூகத்தின் மேல் மற்ற சமூகத்தார்க்கு ஒரு மதிப்பும் மரியாதையும் கூடியது.
பழங்காலந்தொட்டே, தம் சமூகத்தாரையும் தம்மை சுற்றியுள்ள பிற சமூகத்தாரையும் கல்வியும் பக்தியிலும் சிறந்து விளங்க வைக்க பிள்ளைமார் சமூகத்தார் எடுத்துக் கொண்ட முயற்சிகள் போற்றப்பட வேண்டியவை.
பிள்ளைமார்களின் சமயப் பற்றுக்கும் அருள்நெறித் தொண்டிற்கும் சான்றாய் விளங்குவதுதான் பதினெட்டு சைவ ஆதீனங்கள். அவை சைவ சமய வளர்ச்சிக்காக மட்டும் பாடுபடுவையாக இல்லாமல், கல்வியையும் நீதிநெறிகளையும் மக்களுக்கு கற்றுத் தரும் மடங்களாக விளக்குவதுதான் அவற்றின் சிறப்பு. சைவ சித்தாந்த நூல்களை தமிழுக்குத் தந்தார்கள். அதன் மூலம் கல்வியையும் ஒழுக்கத்தையும் போதித்தார்கள்.
மனித சமூகம் வாழ வழிகாட்டிய வடலூர் வள்ளல் பெருமான் இச்சமூகத்தாரின் பெருமைகளை நிலை நாட்டியதில் முன்னவராய்த் தன் முத்திரையை பதித்திருக்கிறார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...