Friday, April 7, 2017

விஜயபாஸ்கர் வளைக்கப்பட்ட பின்னணி--பினாமி கம்பெனி-கார்டன் கஜானா-தங்கக் குவியல்!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் தேடுதலைத் தொடங்கியிருக்கிறது வருமான வரித்துறை. " சேகர் ரெட்டி கைது செய்யப்பட்ட நாளில் இருந்தே, விஜயபாஸ்கரின் வர்த்தகத் தொடர்புகளை முழுமையாகக் கைப்பற்றிவிட்டது வருமான வரித்துறையின் புலனாய்வுத்துறை. தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி உள்பட பலரும் இந்த ஆய்வில் சிக்கியிருக்கிறார்கள். ஆர்.கே.நகர் தேர்தல் பரிவர்த்தனை தொடர்பாகவும் சிலர் வளைக்கப்பட்டிருக்கிறார்கள்" என்கின்றனர் அதிகாரிகள்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வரலாறு காணாத அளவுக்குப் பண விநியோகம் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகாலையில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட புத்தம் புதிய இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் அரசியல் கட்சிகளிடையே பெருத்த சலசலப்பை ஏற்படுத்தின. இதன் பின்னணியில் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் இருப்பதாகவும் தகவல் வெளியானது. நேற்று அ.தி.மு.க அம்மா அணி வேட்பாளர் தினகரனை ஆதரிப்பதாக அறிக்கை வெளியிட்டார் நடிகர் சரத்குமார். இன்று காலை நடந்த வருமான வரித்துறை சோதனையில் அவரும் தப்பவில்லை. மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, அ.தி.மு.க எம்.பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் உள்பட பலரும் வளைக்கப்பட்டிருக்கிறார்கள்.
" இது ஏதோ ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக நடக்கும் தேடுதல் வேட்டை என எடுத்துக் கொள்ள வேண்டாம். கடந்த 100 நாட்களாக ஆளும்கட்சி புள்ளிகளின் தொலைபேசி உரையாடல்கள், ஊழல் பணத்தை வைத்து நடக்கும் பரிவர்த்தனைகள், தொழில் முதலீடுகள், கார்டனுக்கான வரவு செலவுகள் கையாளப்படும் விதம் என அனைத்து விவரங்களையும் சேகரித்து வந்தோம். இவர்களின் வர்த்தக தொடர்புகள் குறித்து, நம்பகமான சோர்ஸுகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் துல்லிய ஆய்வை மேற்கொண்டோம். அதையொட்டியே, இன்று காலை களத்தில் இறங்கினோம்" என விவரித்த வருமான வரித்துறையின் அதிகாரி ஒருவர், " டிசம்பர் மாதம் 8-ம் தேதியில் இருந்து இந்த ஆய்வு நடந்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரி நடத்துவதற்கு உரிமம் வாங்கி வைத்திருக்கிறார் சேகர் ரெட்டி. அவருக்கு சொந்தமான ஆறு குடியிருப்புகள், 2 அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டோம். போயஸ் கார்டனுக்கு மிகவும் நெருக்கமான தொழிலபதிபர் சேகர் ரெட்டி, சீனிவாசலு மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் பிரேம்குமார் உள்ளிட்டவர்களின் வீடுகளில் சோதனையை நடத்தினோம். இந்த ரெய்டில், 96 கோடியே 89 லட்சம் ரூபாய்க்கு பழைய ரூபாய் நோட்டுகளும் 9 கோடியே 63 லட்சத்துக்கு புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கூடவே, கணக்கில் காட்டப்படாத தங்கமும் வாங்கிக் குவிக்கப்பட்டிருந்தது. இந்த சோதனையில் எங்களை அதிர வைத்த ஓர் ஆவணமும் கிடைத்தது. அது, தமிழக அமைச்சர்கள் 5 பேரின் கணக்கு வழக்குகள். அவற்றைப் பராமரிப்பதே சேகர் ரெட்டியின் நிறுவனம்தான். ஊழல் பணத்தை இவர்கள் தொழில் முதலீடுகளாக மாற்றியிருந்தனர்.
சுகாதாரத்துறை அமைச்சர்
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்னால், மத்திய நேரடி வரிகள் வாரியத்தை அதிர வைத்தது ஆளும்கட்சி புள்ளிகளின் ஊழல் விவகாரங்கள். ரூபாய் நோட்டு மதிப்பு நீக்கப்பட்ட நாட்களில், இவர்கள் அனைவரும் பாரிமுனையில் உள்ள நகைக்கடை ஒன்றில், தங்கக் கட்டிகளை வாங்கிக் குவித்திருந்தனர். இந்தத் தங்கக் கட்டிகளை வாங்கிக் கொடுக்கும் தரகராக பிரேம்குமார் என்பவர் செயல்பட்டார். இவரும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் கல்லூரிகால நண்பர்கள். பிரேம்குமாரின் கீழ்பாக்கம் வீட்டிலும் சோதனை நடத்தினோம். இதில் ஏராளமான ஆவணங்கள் கிடைத்தன. நகைக்கடைகளில் நாங்கள் ஆய்வு செய்தபோது, நொடிப் பொழுதில் 100 கிலோ தங்கம் வரையில் வியாபாரமாகியிருந்தது. அதைப் பற்றி விசாரிக்கும்போதுதான், பிரேம்குமார் சிக்கினார். அவரைத் தொடர்ந்து முன்னாள் பெண் அமைச்சர்கள், கார்டன் உறவுகள் என பலரை நோக்கிக் கைகள் காட்டப்பட்டன. முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவின் மகன் உள்பட பலரையும் வருமான வரித்துறை விசாரணைக்குள் கொண்டு வரப்பட்டனர்.
விஜயபாஸ்கர்அமலாக்கத்துறையின் விரிவான விசாரணைக்கும் சேகர் ரெட்டி ஆட்படுத்தப்பட்டார். முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு, 'எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்' என அமைச்சர்கள் பலரும் கணக்குப் போட்டார்கள். இதன்பின்னர் தங்களுடைய ஊழல் பரிவர்த்தனைகளையும் வெளிப்படையாகவே நடத்திக் கொண்டார்கள். இவற்றையெல்லாம் நாங்கள் மௌனமாகவே கவனித்து வந்தோம். ரெய்டுக்கு ஆளான அமைச்சர்தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அனைத்தையும் செய்து வந்தார். இத்தனைக்கும் முன்னாள் மாண்புமிகு ஒருவரும் இவரும் பினாமி கம்பெனிகளை நடத்தி வருகின்றனர். முன்னாள் மாண்புமிகு எதிர் முகாமில் இருந்தாலும், தொழில் மட்டும் சிறப்பாக நடந்து வருகிறது. ஆனால், வெளியில் பிரசாரம் செய்யும்போது, ' அந்த அமைச்சர் ஓர் ஆல் ரவுண்டர்' என விமர்சனம் செய்வார். உள்ளுக்குள் எந்த சிரமமும் இல்லாமல் இவர்களின் வர்த்தகம் நடந்து வருகிறது. அமைச்சர்களின் செல்போன் தொடர்புகளை தொடர்ந்து கண்காணித்தபோதுதான், பல ஆதாரங்களைத் திரட்ட முடிந்தது. இனி வரக்கூடிய நாட்கள் விஜயபாஸ்கர் உள்பட சில அமைச்சர்களுக்கு மிகவும் சோதனைக்காலமாக அமையும்" என்றார் விரிவாக.
" முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகுதான், வருமான வரித்துறையின் சோதனைகள் வேகமெடுத்தன. அந்த நேரத்தில் ஐதராபாத்தில் இருந்து ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள் குழு ஒன்று சென்னைக்கு வந்ததாக செய்தி வெளியானது. அந்த அதிகாரிகளுக்கு எந்தப் பணிகளும் வழங்கப்படவில்லை. சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டார்கள். அவர்களுக்கான உணவு, தங்கும் இடத்துக்கான செலவுகளே லட்சங்களைத் தாண்டியது. நகை, நிலம், தொழில்கள் என ஒவ்வொரு பிரிவிலும் அந்த அதிகாரிகள் நிபுணத்துவம் பெற்றவர்கள். அவர்களை முழுமையாகப் பயன்படுத்தாமல் இருப்பதும் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. வருமான வரித்துறை, புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் ஜெனரலும் நுங்கம்பாக்கம், ஆயக்கர் பவனிலேயே தொடர்ந்து மீட்டிங் நடத்தி வந்தார். மீட்டிங் குறித்த தகவல்களை எல்லாம் மிக ரகசியமாக பாதுகாத்துக் கொண்டார்கள். 100 நாட்களுக்குப் பிறகு வகையாகச் சிக்கியிருக்கிறார் விஜயபாஸ்கர். அவரது உதவியாளர் சரவணன் நடத்திய அத்தனை முறைகேடுகளையும் வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கிறோம்" என்கிறார் வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவர்.
" இந்த ரெய்டு ஏதோ ஆளும்கட்சியை மட்டுமே குறிவைத்து நடத்தப்படுவதைப் போன்ற தோற்றம் காண்பிக்கப்படுகிறது. அது மிகவும் தவறானது. நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் இந்த ரெய்டு நடக்கிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின் நாட்டை சுத்தப்படுத்தும் பணியில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார். அந்தப் பணியின் ஓர் அங்கம்தான் இந்தச் சோதனைகள்" என நம்மிடம் விவரித்தார் பா.ஜ.கவின் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன்.
'நாட்டை சுத்தப்படுத்தும் வேலையா... அல்லது 2019 நாடாளுமன்றத் தேர்தலை குறிவைத்து அ.தி.மு.கவை சுத்தப்படுத்தும் வேலையா?' என்ற கேள்விகளும் அரசியல் விமர்சகர்கள் மட்டத்தில் எழுந்துள்ளது. 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...