Monday, October 6, 2014

இங்கே வராதீர்கள்; போய் வேலையை பாருங்கள்: ஜெ., உத்தரவால் அவசரமாய் திரும்பிய அமைச்சர்கள்:

c

சிறையில் இருக்கும் ஜெயலலிதாவிடம்இருந்து வந்த அதிரடி உத்தரவை அடுத்து, பெங்களூரில் முகாமிட்டிருந்த, தமிழக அமைச்சர்கள், அ.தி.மு.க., எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட அத்தனை பேரும், நேற்று, அவசரமாக சென்னை திரும்பினர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட பின், அவரை சந்திப்பதற்காக, தினமும் அ.தி.மு.க.,வினர், அங்கு குவிந்து வருகின்றனர். இதில், அ.தி.மு.க.,வினர் இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளதால், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் எல்லாரும், தங்கள் பணிகளை ஒதுக்கி வைத்து விட்டு, பெங்களூரு செல்வதை வாடிக்கையாக்கி உள்ளனர். ஜெயலலிதாவின் தண்டனையை நிறுத்தி வைக்க கோரும் மனு, இன்று, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், விசாரணைக்கு வர உள்ளது. இது ஏற்கப்பட்டால், சிறையில் இருந்து வெளியே வருவார். அப்போது, சிறை வாசலில் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு அளிக்க வேண்டும் என, ஆளுங்கட்சியினர் திட்டமிட்டனர். அதற்காக, மூத்த அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, எம்.சி.சம்பத் உள்ளிட்டவர்கள், நேற்று முன்தினம் இரவே, பெங்களூரு வந்து விட்டனர். வளர்மதி, எஸ்.பி.வேலுமணி, கோகுல இந்திரா, விஜயபாஸ்கர் உள்ளிட்ட சிலர், நேற்று காலை, பெங்களூரு வந்தனர். மேலும், ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களும் வந்தனர். எம்.பி.,க்களும் அங்கே திரண்டனர்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தவிர்த்து, ஒட்டுமொத்த அ.தி.மு.க., கூடாரமும் பெங்களூருக்கு குடிபெயர்ந்ததால், நேற்று முன்தினம் வெறிச்சோடிய பரப்பன அக்ரஹார சிறை பகுதி நேற்று பரபரப்புடன் காணப்பட்டது. அ.தி.மு.க.,வினர் ஆயிரக்கணக்கில் கூடியதால், போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.இந்நிலையில், நேற்று பகல், 2:00 மணியளவில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சிறை வாசலில் காத்திருந்த அமைச்சர்களை சந்தித்தார். அப்போது, அவர், சிறையில் இருந்து ஜெயலலிதா கூறிய உத்தரவை வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு:
சிறை வாசலில் ஒருவர் கூட இருக்கக் கூடாது; எல்லாரும் உடனடியாக இடத்தை காலி செய்ய வேண்டும். விடுமுறை நாட்கள் முடிந்து, நாளை முதல் அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்பட உள்ளன.இந்த நேரத்தில், அமைச்சர்கள் சிறை வாசலில் காத்து கிடப்பது சரியல்ல.அமைச்சர் அனைவரும் பெங்களூரு வருவதை தவிர்த்து, சென்னையில் அரசு பணிகளை கவனிக்க வேண்டும். அரசு நிர்வாகம் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டை கிளப்ப காரணமாகாதீர்கள்.என்னை சந்திக்கவோ அல்லது வரவேற்கவோ யாரும் வர வேண்டாம். சிறை வாசலில், கூட்டத்தை காட்டுவதற்காக, எந்த மாவட்ட செயலரும் கட்சியினரை திரட்டிக் கொண்டு இனிமேலும் இங்கே வரக் கூடாது.இவ்வாறு, ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக, பூங்குன்றன் தெரிவித்தார்.அதையடுத்து, அமைச்சர்கள் உள்ளிட்ட அத்தனை பேரும் அவசர அவசரமாக அங்கிருந்து கிளம்பினர். 

வழக்கறிஞர்களும் இங்கே வரக்கூடாது:

வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்களை தவிர, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த வேறு எந்த வழக்கறிஞரும் பெங்களூரு வரக் கூடாது என, ஜெயலலிதா தடை போட்டுள்ளார்.ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், மூத்த வழக்கறிஞர் பி.குமார், ஆஜராகி வருகிறார். தீர்ப்புக்கு பின், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மேல் முறையீட்டு மனு மீதான வழக்கில், பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜாராகிறார்.இவர்களும், இந்த வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்களும் மட்டுமே பெங்களூருக்கு வர வேண்டும். மற்றபடி, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் எவரும் இங்கே வரக் கூடாது என, ஜெயலலிதா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக, அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...