1987 டிசம்பர் 24-ம் தேதி மறைந்த எம்.ஜி.ஆர் அதற்கு முந்தைய ஆண்டு ஏப்ரல் 28ல் ஓர் உயில் எழுதியிருந்தார். பின் அதனை ரத்து செய்து விட்டு தனது மறைவிற்கு 11 மாதங்களுக்கு முன் 1987 ஜனவரி 18-ம் தேதி புதிய உயிலை எழுதினார். அந்த உயில் பற்றிய விவரங்களை எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் முன்னிலையில் அ.தி.மு.க தலைமை கழகத்தில் வைத்து வழக்கறிஞர் ராகவாச்சாரி வெளியிட்டார். அ.தி.மு.க நிர்வாகிகளான வள்ளிமுத்து, ராகவானந்தம், மாதவன் ஆகியோர் உடனிருந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மணப்பாக்கத்தில் உள்ள ராமாவரத்தில் எம்.ஜி.ஆர் தோட்டத்தில் குடியிருக்கும் எம்.கோபாலன் குமாரனாகவும், தமிழக முதல் அமைச்சராகவும் பணியாற்றி வரும் எம்.ஜி.ராமச்சந்திரன் எனும் நான் சுயநினைவோடும், மனப்பூர்வத்தோடும், பிறர் தூண்டுதல் இல்லாமல் இந்த புதிய உயிலை எழுதி வைத்து இருக்கிறேன்.
எனக்கு குழந்தைகள் கிடையாது. எனக்கு ஒரே வழிமுறை (வாரிசு) என் மனைவி ஜானகி அம்மாள்தான். அவளைத் தவிர வேறு யாரும் எனக்கு வாரிசு இல்லை. என் காலத்திற்கு பிறகு என் சொத்துக்கள் சம்பந்தமாக எவ்வித வழக்குகள், தகராறுகள் வராமல் இருக்கவும், எனது உறவினர்கள் எவரும் பாத்தியதை கொண்டாடாமல் இருக்கவும் சுய சம்பாத்தியத்தின் மூலம் நான் வாங்கிய சொத்துக்கள் விஷயமாக இந்த உயில் ஏற்பாட்டினை செய்து இருக்கிறேன்.
இந்த உயிலை நிறைவேற்றுபவர்களாக மூத்த வழக்கறிஞர் என்.சி.ராகவாச்சாரி மற்றும் எனது மருமகன் ராஜேந்திரனையும் நியமிக்கிறேன். அவர்கள் காலத்திற்கு பின் சட்டப்படி சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி நிறைவேற்றுபவர்களை நியமிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என குறிப்பிட்டிருந்த எம்.ஜி.ஆர் தனக்கு சொந்தமான 7 வகையான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வரிசைப்படி பட்டியலிட்டு உயிலில் குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி எம்.ஜி.ஆர் குடியிருந்து வந்த ராமாவரம் தோட்டத்தில் அவரது பெயரில் இருந்த ‘எம்.ஜி.ஆர். கார்டன்’ எனும் பங்களாவும் தோட்டமும் (6 ஏக்கர் 34 சென்டு), சென்னை தி.நகர் ஆற்காடு சாலையில் 27-ம் எண்ணில் இருந்த கட்டிடமும், அடி மனையும், சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் சத்யா தோட்டம் (8.5 ஏக்கர்), சென்னை ஆலந்தூர் மார்க்கெட் சந்தில் எண் 43 முதல் 47 வரை உள்ள கட்டடங்களும், அடிமனையும். ராமாவரம் தோட்டத்தில் உள்ள அசையும் சொத்துக்களான தனக்கு சினிமா துறையில் கிடைத்த விலை உயர்ந்த பரிசுகளும், மற்றபடி கிடைத்த விலை உயர்ந்த பரிசுகளும். தன் சொந்த மர இரும்பு சாமான்கள், வெள்ளிப் பாத்திரங்கள், மோட்டார் வாகனங்கள், பசு உள்ளிட்ட கால்நடைகள். சத்யா ஸ்டியோ நிறுவனத்தில் தனது பெயரில் உள்ள பங்குகள் (எம்.ஜி.ஆர் பெயரில் 95% பங்குகளும், ஜானகி அம்மாள் பெயரில் 5% பங்குகளும் இருந்தன). என இவை எல்லாம் தனது சுய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்டவை எனவும், தனக்கு சர்வ சுதந்திரமாக பயன்படுத்தப்பட்டவை எனவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு குறிப்பிடப்பட்ட சொத்துகளில் ராமாவரம் தோட்டத்தில் உள்ள பங்களா, கார்செட், கோவில் பழத்தோட்டம் ஆகியவற்றை தனது மனைவி வி.என்.ஜானகிக்கு அவரது ஆயுள் பரியாந்தம் ஆண்டு அனுபவித்துக் கொள்ள குறிப்பிட்ட அதே வேளையில் அவற்றை விற்கவோ, அடமானம் வைக்கவோ, தானமாக கொடுக்கவோ உரிமை கிடையாது எனவும் எழுதியிருந்தார்.
ஜானகியின் காலத்துக்குப் பின் அவரது சொந்தக்கார பெண் கீதா, நிர்மலா, ராதா, ஜனம் சுதா ஆகிய நால்வரும் ராமாவரம் தோட்டத்தில் ஏற்கெனவே குறிப்பிட்ட ஏ, பி, சி, டி. என்று வரைபடத்தில் குறிப்பிடப்பட்ட கட்டடங்களை அவரவர் ஆண்டு அனுபவித்துக் கொள்ளவும் அதே வேளையில் அவற்றை விற்கவோ, குத்தகைக்கு விடவோ உரிமையில்லை எனவும் அவர்களது காலத்துக்குப் பின் இந்த சொத்துக்களை அவரவர் வாரிசுகள் பெற வேண்டும் என தனித்தனியே உயில் எழுதியுள்ளார்.
இவை தவிர ராமாவரம் தோட்டத்தில் உள்ள காலி இடங்களை எல்லாம் சேர்த்து இந்த உயிலை நிறைவேற்றுபவர் அதில் ‘‘எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்லம்’’ என்ற பெயரில் ஊமைகள், காது கேளாதவர்கள் இல்லமாக அதை ஏற்படுத்த வேண்டும். அந்த ஏழைகள் இலவசமாக தங்கியிருப்பதற்கும், உணவுக்கும், காதுகேளாதவர்கள் இலவசமாக கருவிகள் பெறுவதற்கும், உடுத்த உடை, மருந்துகள் வசதி, கல்வி, தொழில் முதலியவற்றுக்காக அந்த காலி இடங்களில் செட்டுகள் மற்றும் கட்டடங்களும் அமைத்துக் கொள்ள வேண்டும்.
அத்துடன் ஊமைகள் பேசுவதற்கு சிகிச்சையும், பேச்சுப் பயிற்சியும் ஏற்பாடு செய்தாக வேண்டும். இதே போல் காது கேளாதவர்களுக்கு தங்கும் வசதி, காது கேட்பதற்கான கருவிகள் வாங்கி கொடுத்தல் ஆகியவற்றையும் செய்ய வேண்டும். எம்.ஜி.ஆர் ஊமைகள் இல்லத்துக்கான செட்டுகள், கட்டடங்கள் அமைக்கவும் இதர செலவுகளுக்கும் சாலிகிராமத்தில் உள்ள சத்யா தோட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் இருந்து செலவு செய்ய வேண்டும்.
தனது வீட்டில் இருக்கும் பரிசுப் பொருட்கள், ஆற்காடு சாலை வீட்டில் இருக்கும் பரிசுப் பொருட்கள், புத்தகங்கள், நூல்கள் ஆகியவற்றை கொண்டு ஆற்காடு சாலையில் உள்ள கட்டடத்தில் தனது காலத்துக்குப் பிறகு ‘எம்.ஜி.ஆர். நினைவு இல்லம்’ என பெயரிட்டு பாதுகாக்க வேண்டும். அந்த இடத்தை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வசதி செய்து தரப்பட வேண்டும்
எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தை யாரும் விற்கவோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோ உரிமை இல்லை. இந்த இல்லத்தின் பராமரிப்பு செலவுக்கும், காவல் காப்பதற்கும் ஏற்படும் செலவுக்கு ஆலந்தூர் மார்க்கெட் கட்டடங்களில் இருந்து வரும் வருமானத்தைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இதற்கென அந்த மார்க்கெட் கட்டடங்களை எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்துக்கு எழுதி வைத்தும் உள்ளார்.
பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் நினைவு இல்லங்கள் அரசின் செலவிலேயே ஏற்படுத்தப்பட்டன. அரசுக்கு ஏற்படும் இந்த செலவினை தவிர்த்திட என்னுடைய வீட்டையே இந்த நினைவு இல்லமாக ஏற்பாடு செய்து இருக்கிறேன் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
சத்யா ஸ்டுடியோ கம்பெனியில் (95 கிரவுண்டு பரப்பு) தனக்கு உள்ள பங்குகள் அனைத்தும் தன்னால் ஆரம்பிக்கப்பட்ட அ.தி.மு.க கட்சிக்கு கீழே சொல்லப்பட்ட நிபந்தனைக்கு உட்பட்டு சேர வேண்டும், அந்த பங்குகளை அ.தி.மு.க கட்சி பெற்று கொண்டு நிர்வாகம் செய்து அதன் மூலம் வரும் வருமானத்தை கட்சியின் பயனுக்காக எடுத்து கொள்ளவும்,
ஒருவேளை கட்சி பிளவு பட்டாலோ அல்லது கலைக்கப்பட்டாலோ சத்யா ஸ்டுடியோ பங்குகளை எல்லாம் இந்த உயிலை நிறைவேற்றுபவர் கைப்பற்றி எம்.ஜி.ஆர் ஊமைகள் இல்ல செலவுகளுக்கு பயன்படுத்த வேண்டும். அத்துடன் சத்யா ஸ்டுடியோ கட்டடத்துக்கு தனது தாயின் பெயரான ‘‘சத்யபாமா எம்.ஜி.ஆர் மாளிகை’’ என பெயர் வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
எம்.ஜி.ஆரின் உயில்படி அமைய உள்ள எம்.ஜி.ஆர் ஊமைகள் இல்லத்துக்காக 2.5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த இல்லம் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் துவக்கப்பட்டு இன்றளவும் இயங்கி வருகிறது.
இளமைக் காலத்தில் ஏழ்மையின் பிடியில் தவித்த எம்.ஜி.ஆர் தன்னால் ஈட்டப்பட்ட வருவாயில் ஒவ்வொரு ரூபாயினையும் எப்படி எதற்கு செலவழிக்க வேண்டும் என்பதை தனது உயிலின் மூலம் வெளிகாட்டி இருந்தார்.
"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்" என நிழல் உலகில் தான் பாடிய பாடலை உண்மையாக்கி சென்று விட்டார் எம்.ஜி.ஆர்.
No comments:
Post a Comment