Saturday, December 17, 2016

யாமறிந்த மனிதர்களுள்...!

46ஆண்டுகளாக சோ அவர்களால் நடத்தப்பட்டு வந்த துக்ளக், அவர் இல்லாத நிலையில் வெளிவருவதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. ஆனால், அப்படி ஒரு நிலையைச் சந்திக்க வேண்டியவர்களாகி விட்டோம்.
சோ அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு நன்றாகத் தெரியும், அவர் ஒரு பல்கலைக் கழகம் போன்றவர். அவரது எழுத்துத் திறனும், பேச்சுத் திறனும் நாடறிந்தது. அவரது நகைச்சுவை உணர்வு கடல் போன்றது. உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு அப்பல்லோவில் சேர்க்கப்பட்டிருந்த போதும், இயல்பாக ஜோக் அடித்து சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். மறைவதற்கு இரு தினங்களுக்கு முன்பு - அச்சுக்குப் போகும் துக்ளக் பக்கங்களைக் கொண்டு போய்க் காட்டிய போது கூட, அவருக்கே உரிய கூர்ந்த பார்வையில் திருத்தங்களைச் சொன்னார்.
மனிதர்களைப் புரிந்து கொள்வதில் அவருக்கு இருந்த ஆற்றல் அளவில்லாதது. ஒரு அரசியல் பிரமுகர் வந்து பேசி விட்டுச் சென்றபின், அவர் பேசியதில் எது உண்மை, எது தவறு என்பதை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு, ‘இவர் இப்படிச் சொல்கிறார். ஆனால், இப்படித்தான் செய்யப் போகிறார்’ என்று தீர்க்கதரிசன உணர்வோடு கணிப்பார். அதன்படியே நடக்கும். இந்தத் திறன் அவரிடம் இயல்பிலேயே இருந்தது.
1970-ல் சோ அவர்கள் துக்ளக்கை ஆரம்பித்த போது, அன்றைய ஆளும் கட்சியையோ, முதல்வரையோ விமர்சிப்பதற்கு அதீதமான தைரியம் தேவைப்பட்ட காலம். அந்த நேரத்தில், தி.மு.க.வின் கொள்கைகளிலும், செயல்களிலும் இருந்த நாடகத்தனத்தை துணிச்சலாகவும், நகைச்சுவையோடும் விமர்சித்தார். இப்படிக் கூட விமர்சிக்க முடியுமா என்று வியப்படைந்த அன்றைய வாசகர்கள், அதை மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்றனர். அதன் காரணமாகவே எந்தக் கட்சி, ஸ்தாபனப் பின்புலமும் இல்லாத ஒரு தனி நபராக மேடையேறி, லட்சக் கணக்கான வாசகர்களை ஈர்க்க அவரால் முடிந்தது. இது இன்று வரை, அரசியல் தலைவர்கள் உட்பட எந்த தனி நபராலும் செய்யப்படாத சாதனை.
அச்சம் அறியாது, நேர்மைக் குறைவின்றி, நகைச்சுவையைச் சேர்த்து வெளிவந்த ஒவ்வொரு துக்ளக் இதழும், பத்திரிகை உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. வாசகர்கள் அறிய வேண்டிய விஷயம் என்று ஒன்றை உணர்ந்தால், வாசகர்களின் விருப்பத்தைப் பற்றியோ, விற்பனையைப் பற்றியோ கவலைப் படாமல், அதை துக்ளக்கில் இடம் பெறச் செய்துவிடுவார். எவ்வளவு தான் வற்புறுத்தினாலும், தனக்குப் பிடிக்காதவற்றைப் பிரசுரிக்கச் சம்மதிக்கவே மாட்டார். எவ்வளவு தான் பிடித்த நபராக இருந்தாலும், தேவைக்கு அதிகமாக ஒரு வார்த்தை கூடப் புகழ்ந்ததில்லை. என்ன தான் விமர்சனத்துக்கு உரியவரானாலும், கடுகளவும் தரம் இறங்கித் தாக்கியதில்லை. அலங்கார வார்த்தைகளை விட உண்மையான வார்த்தைகளையே அவர் விரும்பினார். பரபரப்பை விரும்பாமல், நேர்மைக்கே முக்கியத்துவம் தந்தார். இப்படித்தான் துக்ளக்கை வளர்த்தார்.
அரசியலில் உள்ள அவலங்களை அம்பலப்படுத்தி மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கியதோடு, ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிகாசங்களையும், ஹிந்து மஹா சமுத்திரம் தொடரையும் அற்புதமான நடையில் எழுதி, மக்களிடையே பக்தி உணர்வையும் வளர்த்தார் சோ.
எந்தத் தலைவரை எவ்வளவு கடுமையாக விமர்சித்தாலும், அவர்கள் ஆசிரியரிடம் கொண்டிருந்த நட்பு மாறாமல் இருந்தது ஒரு அதிசயமே. சோவின் எழுத்தில் இருந்த கண்ணியமும், உண்மையுமே இதற்குக் காரணமாக இருக்க முடியும். நட்புக்காக விமர்சனத்தைக் குறைத்துக் கொள்ளவும் மாட்டார். எதை இழந்தாலும், துக்ளக் வாசகர்கள் தன் மீது கொண்டுள்ள நம்பிக்கையை இழந்து விடக் கூடாது என்பதில் எப்போதுமே உறுதியாக இருந்தவர்.
தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி அரசியலில் நேரடியாக இறங்கியிருந்தால் உயர்ந்த பதவிகளை அவரால் எளிதில் பெற்றிருக்க முடியும். பதவிகளுக்காக தனது விமர்சன சுதந்திரத்தை இழக்க ஒருபோதும் அவர் விரும்பியதில்லை. (முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் வற்புறுத்தலுக்காக அவர் ஜனதாவில் சேர்ந்தார் என்றாலும், அது தனக்கு ஒத்து வராத தளம் என்று வெகு விரைவிலேயே அதற்கு முழுக்குப் போட்டார்.)
வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கலைஞரும், ஜெயலலிதாவும் முதல்வராவதற்கு அவர் முக்கிய காரணமாக இருந்தும், அவர்கள் ஆட்சியில் அமர்ந்தவுடனேயே, அவர்களுடனான நெருக்கத்தைக் குறைத்துக் கொண்டவர் சோ. அவரை அறியாத இந்தியத் தலைவர் இல்லை. அப்படியும் யாரிடமும் எந்தச் சிறு சலுகையையும் அவர் எதிர்பார்த்ததில்லை. அது தான் எங்கள் எடிட்டர். தொட்ட துறைகள் அனைத்திலும் வெற்றி கண்டவர். தனது வெற்றிகளுக்கு அதிர்ஷ்டம் தான் காரணம் என்று அவர் கூறினாலும், அவரது அசாதாரணமான திறமைகள் வியப்புக்குரியவையே!
எந்தக் கேள்விக்கும் உடனே பதிலளிக்கும் அவரது, Presence of Mind வியப்புக்குரியது. துக்ளக் ஆண்டு விழாக் கூட்டங்களில் வாசகர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்த முறை, யாராலும் கடைபிடிக்கப் படாதது. தமிழானாலும் ஆங்கிலமானாலும், எவ்வளவு நேரம் பேசினாலும் அவ்வளவு நேரமும் கைதட்டலைப் பெறும் பேச்சாற்றல் கொண்டவர். அவரது வாதத்திறன் ஒப்பில்லாதது. துக்ளக் இதழ்களில் அவர் எழுதிய தலையங்கங்கள் அவரது ஆழ்ந்த அறிவையும், தீர்க்க தரிசனத்தையும் வெளிப்படுத்துகின்றன.
எமர்ஜென்ஸி காலத்தில், விளம்பரத்திலும், சினிமா விமர்சனத்திலும் கூட நுணுக்கமாக அரசியலை நுழைத்து, தணிக்கை அதிகாரிகளையே திணற அடித்த எழுத்து அவருடையது.
எந்த அரங்கிலும், தலைவர்களையும் கலைஞர்களையும் மிஞ்சும் வகையில், ‘சென்டர் ஆஃப் அட்ராக்ஷனா’கத் திகழும் ஈர்ப்பு அவரிடம் இருந்தது.
Image may contain: 1 person, sunglasses and closeup
எத்தனை உயர்ந்த நிலைக்கு வந்தும், தனது நண்பர்களுடன் அரட்டை அடிப்பதையே பெரிதும் விரும்பியவர் சோ.
கடுகளவும் போலித்தனம் அற்ற மாமனிதரை ஆசிரியராகப் பெறும் பேறு துக்ளக்கிற்குக் கிடைத் தது. எல்லாவற்றுக்கும் மேலாக அவரிடமிருந்து துக்ளக் ஆசிரியர் குழுவினரான நாங்கள் எவ்வளவோ நல்ல பண்புகளைக் கற்றோம். எங்கள் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் காட்டிய எடிட்டரை மறக்க முடியாமல் தவிக்கிறோம்.
எத்தனையோ ஆண்டுகளாக அவருடன் நெருங்கிப் பழகி விட்டதால், அவர் இப்போது இல்லை என்பது மனதில் பெரும் வலியை ஏற்படுத்துகிறது. ‘அடுத்த இஷ்யூக்கு என்ன ஸார் பண்ணலாம்?’ என்றஅவரது கம்பீரமான அந்த உற்சாகக் குரல் எங்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
‘யாமறிந்த மனிதர்களுள் சோவைப் போல்
இனிதானவர் எங்கும் காணோம்’.

No comments:

Post a Comment