Sunday, December 25, 2016

கடவுள் எங்கே? எப்படி?

ஒரு குளத்தில் ஒரு குட்டி மீனுக்கு நீரைப் பார்க்க வேண்டுமென்று ஆசை. ''அம்மா! நாம் வாழ தண்ணீர் மிக அவசியமென்று சொல்கிறாய். அந்த தண்ணீர் எங்கே இருக்கிறது ? எனக்குக் காட்டு'' எனக் கேட்டது. உடனே தாய் மீன் இதுதான் தண்ணீரென்று தண்ணீரைக் காட்டியது. குட்டி மீனுக்கு ஒன்றும் புரியவில்லை. ''அம்மா!நீ தண்ணீரைக் காட்டு'' என மீண்டும் சொல்லியது. மீண்டும் தாய் மீன் தண்ணீரைக் காட்டியது. அப்போதும் குட்டிமீனுக்கு தண்ணீர் தெரியவில்லை.
உடனே அது இந்த அம்மாவுக்கு ஒன்றுமே தெரியாது என சொல்லிக் கொண்டே, அப்பா மீனிடம் இதே கேள்வியைக் கேட்டது. அப்பாவும் அதே மாதிரி தண்ணீரைக் காட்ட அப்பாவுக்கும் ஒன்றும் தெரியாது எனத் தீர்மானித்து விட்டது. பிறகு உறவினர்களிடம் போய் இதே கேள்வியைக் கேட்டது. எல்லோரும் ஒரே பதிலையே சொன்னார்கள். திருப்தி அடையாத மீன் யாருக்குமே ஒன்றும் தெரியாது என்று தீர்மானித்து இறுதியில் உருவத்தில் பெரிய திமிங்கலத்திடம் வந்து தண்ணீரைக் காட்டச் சொன்னது.
உடனே திமிங்கலம் குட்டி மீனை தன் முதுகில் ஏறச் சொன்னது. குட்டி மீனும் முதுகில் ஏறியது. கரை நோக்கிச் சென்ற திமிங்கலம் குட்டி மீனை கரையில் எறிந்தது. குட்டி மீன் தண்ணீர் இல்லாமல் துடிதுடித்து உயிருக்குப் போராடியது. அப்போது திமிங்கலம் இதுதான் தண்ணீர் என்று தண்ணீரைக் காட்டி மீண்டும் குட்டி மீனைத் தண்ணீரில் விட்டது. அப்போதுதான் குட்டி மீனுக்கு தண்ணீர் தண்ணீராகத் தெரிந்தது.
அதுபோல்தான் கடவுளும் உலகின் ஒவ்வொரு அணுவிலும் ஒவ்வொரு உருவில் நிரம்பி இருந்தாலும் பலருக்கும் அவர் தெரிவதில்லை. எல்லோரும் கடவுளைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். தனக்கு உள்ளே இருக்கும் கடவுளை யாரும் உணர்வதே இல்லை. கடவுளை அனுபவித்துதான் அறிய முடியும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...