Tuesday, December 20, 2016

மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கும்."பின்னணி இசையின் பிதாமகன் இசைஞானி இளையராஜா" - கானா பிரபா மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ரசிகர் நெஞ்சகளில் தன் இசையால் வீற்றிருக்கும் இசைஞானி இளையராஜா சமீப ஆண்டுகளாக தமிழகத்திலும், அதைத்தாண்டித் தமிழர் வாழும் உலக நாடுகளிலும் இசை மேடை கட்டித் தான் இதுநாள் வரை சினிமாவில் அள்ளித்தந்த இசையின் தாற்பரியத்தைக் கண்ணெதிரே காட்டும் போதெல்லாம் நமக்கும் இந்த வாய்ப்புக் கிட்டாதா என்று ஏங்கிய நாட்கள் பல. இன்றைய காலகட்டத்தில் எல்லாமே சுருங்கிவிட்ட பிறகு, இசையையும் ஒரு கீபோர்ட்டில் அடக்கிவிட்டர்கள். ஆனால் வயலின் தொடங்கி ஒவ்வொரு வாத்தியத்துக்குமாக சாரி சாரியாகக் கலைஞர்களை மேடையில் நிரப்பி, எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் வந்த தன் பாடல்களை மீண்டும் இசைக்கும் போது, மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பு என்ற சொலவாடையையும் தாண்டி, ஒத்திசைவாக எல்லாக் கலைஞர்களும் பிசிறின்றி இசைக்கும் போது தொலைக்காட்சியில் பார்க்கும் போதே மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கும்.
அன்னக்கிளியில் தொடங்கிய சாம்ராஜ்ஜியம், தமிழ் கடந்து, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக ஒரே சமயத்தில் இருந்தது ஒன்றும் அவ்வளவு இலேசுப்பட்ட காரியமல்ல. இதைத்தவிர ஹிந்தி, மராட்டி மொழி சார்ந்த படைப்பாளிகள் இவரைத் தேடி வந்து தம் படைப்புக்கு இசையால் சிறப்பும், பெருமையும் சேர்க்கவேண்டும் என்பது அன்று தொட்டு இன்றுவரை தொடர்கின்றது. ஒருமுறை ஆனந்த விகடனின் மதன் கேள்வி பதில்களில் "இளையராஜா அமர்ந்த சிம்மாசனத்தில் அவரைத் தவிர வேறு யாரும் அமரமுடியாது" என்று சொல்லியிருந்தார். மேம்போக்காக ஒரு படத்தில் வரும் நான்கோ ஐந்தோ பாடல்களின் ஹிட்டை வைத்துப் பார்க்கும் சராசரி ரசிகனுக்கு இதில் முரண்பட்ட கருத்து இருக்கலாம். ஆனால் ஆயிரமாயிரம் பாடல்களைக் கடந்து அந்தந்தப் படங்களிலே இசைஞானி இளையராஜா இழைத்த பின்னணி இசையை எடுத்து ஆராயப் போனால் வாழ்நாள் போதாது. அவ்வளவுக்கு தான் பணியாற்றிய ஒவ்வொரு படத்திலும் ஒரு இணை இயக்குனராக நின்று செயற்பட்டிருக்கிறார். இங்கேதான் இளையராஜாவுக்கும் மற்றைய இசையமைப்பாளர்களுக்குமான வேறுபாடு முன்வந்து நிற்கும். ஒரு படத்துக்கு இன்னென்ன ஒளிச்சேர்க்கை வேண்டும் என்றோ, உடை, அரங்க அமைப்பு, ஏன் பாடல்கள் வரை சுயமாகத் தீர்மானிக்கும் வல்லமை ஒரு தேர்ந்த இயக்குனருக்கு வாய்க்கலாம் ஆனால் அதையும் கடந்து ஒரு முழுப்படத்தின் எழுத்தோட்டத்தில் இருந்து முடிவுப்புள்ளி வரையான அசையும் பிம்பத்துக்கான ஓசையைப் பொருத்தி அந்த ஓசையால் உயிர்கொடுக்கும் பணி என்பதே ஒரு சராசரி இசையமைப்பாளனைத் தாண்டி இசைஞானியின் அதீத வல்லமையின் தாற்பரியத்தைக் காட்டும். எத்தனையோ இயக்குனர்களை நான் வானொலிப் பேட்டி கண்ட போது அவர்கள் பிரமித்துச் சொன்ன விஷயம் இது. நாட்கணக்காக ஸ்கிரிப்ட் எழுதி எடுத்த படத்துக்கு ஒரு சில மணி நேரத்திலேயே தேவையான இசையால் அந்தப் படத்தின் நிறத்தையே மாற்றி இன்னும் பல படி உயர்த்திக் காட்டியிருக்கிறார் இளையராஜா. இதையே ஒரு இசைமேடையில் பிரபல ஹிந்தி இயக்குனர் பால்கி தன்னுடையை "பா" படத்தின் காட்சியை, பின்னணி இசைக்கு முன்பாகவும், இசைக்குப் பின்பாகவுமாகச் செய்துகாட்டி, "இளையராஜாவின் பின்னணி இசைத் துணுக்குகளை வைத்துக் கொண்டே இன்னும் ஏராளம் பாடல்களை இசையமைக்கலாம்" என்று சிலாகித்திருந்தார். ஒரு குறிப்பிட்ட படத்தின் ஓரிரு பாடல்களில் இழையோடும் ஆதார சங்கீதத்தை வைத்தே வெவ்வேறு வாத்தியங்களால் வாசித்துப் பின்னணி இசை கொடுக்கும் மாமூல் இசையமைப்பாளர்களை அதிகம் காணலாம். ஆனால் படத்தின் பாடல்களை முன்னிறுத்தாத இசையை எடுத்துக் கொண்டு அந்தப் படத்துக்கான தீம் ஆகக் காட்டியிருக்கிறார் ராஜா, இதெல்லாம் முப்பது வருஷங்களுக்கு முன்பே, ஒரு படத்தின் கலைநுட்பம் பற்றி ரசிகர்களுக்கு அவ்வளவு ஈடுபாடில்லாத சூழலில் செய்து காட்டியிருக்கிறார். இன்றும் நிறம் மாறாத பூக்கள், ஜானி, முள்ளும் மலரும் போன்ற படங்களை எடுத்துப் போட்டுப் பார்த்தீர்களானால் அந்தத்தப் படங்களுக்குப் பின்னால் செய்து காட்டிய பின்னணி இசையின் மகத்துவம் புரியும்.ஒரு குறிப்பிட்ட இசை மெட்டை வைத்து காதல், சோகம், நகைச்சுவை, ஊடல், அழுகை என்று விதவிதமாக வித்தியாசமான வாத்தியங்களில் வேறுபடுத்திக் காட்டுவதில் ராஜா ராஜா தான் என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை. ..

No comments:

Post a Comment