கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க-வின் ஆட்சிக் கனவை தகர்த்ததில் மிக முக்கியப் பங்கு கொங்கு மண்டலத்துக்குத்தான். கொங்கு மண்டலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம் ஆகிய ஆறு மாவட்டங்களில் கவுண்டர் சமூகத்தினர் பெருமளவு உள்ளனர். இங்கு, மொத்தம் உள்ள 47 சட்டமன்றத் தொகுதி களில் 41 தொகுதிகளில் அ.தி.மு.க வென்றிருக்கிறது.
47 எம்.எல்.ஏ-க்கள், 9 அமைச்சர்கள், 9 எம்.பி-க்களை அ.தி.மு.க.வுக்கு பெற்றுக் கொடுத்தது கொங்கு மண்டலம். இதில் 27 எம்.எல்.ஏ-க்கள், 5 அமைச்சர்கள் கவுண்டர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தில் இப்போது பவர்ஃபுல்லாக இருக்கும் அமைச்சர்கள் 5 பேர். இவர்களில் எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகிய 3 பேர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் சீனியர்கள் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அடுத்த முதல்வராகும் வாய்ப்பு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, அதாவது எடப்பாடி பழனிசாமிக்கு வழங்க வேண்டும் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், அது நடக்கவில்லை. இந்த நிலையில் இப்போது, அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் பதவிக்கு வர சசிகலா முயல்வதாக வரும் செய்திகள், கொங்கு மண்டலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 2011-ம் ஆண்டு சசிகலா போயஸ் கார்டனை விட்டு வெளியேற்றப்பட்டபோது, அதை பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடியது கொங்கு மண்டலத்தில்தான்.
மீண்டும் ஜெயலலிதா - சசிகலா சமரசம் ஏற்பட... சசிகலாவுக்கு எதிராகப் பேசியவர்கள் எல்லாம் டம்மி ஆக்கப்பட்டனர். சசிகலாவின் ஆதரவாளர்கள் பலர் உயரே போனார்கள். ஆனால், செங்கோட்டையன் ஒதுக்கி வைக்கப்பட்டார். இதனால் சசிகலாவுக்கு எதிரான மனநிலை கொங்கு மண்டலத்தில் உருவானது. தற்போது, பொதுச் செயலாளர் பதவியை அடையும் முயற்சிக்கும் கொங்கு மண்டலத்தில் இருந்து எதிர்ப்பு வரும் என்று கருதும் சசிகலா தரப்பு, எதிர்ப்பாளர்களைச் சரிகட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது.
முதலில், செங்கோட்டையனை நேரில் அழைத்து சசிகலா தரப்பு சமாதானம் பேசியுள்ளது. அதையடுத்துதான், “கழகத்துக்கும், தலைமைக்கும், புரட்சித்தலைவி அம்மாவுக்கும் உண்மை விசுவாசியாக அன்றும், இன்றும், என்றும் பணியாற்றுவேன்’ என்று அவர் அறிக்கை வெளியிட்டார். கொங்கு மண்டலத்தில் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், எம்.எல்.ஏ-க்கள் என அனைவரும் சசிகலா உறவினரான ராவணனின் கண் அசைவில்தான் இயங்கி வந்தனர். இடையில் சசிகலா குடும்பத்தினர் களை யெடுப்பில் ராவணன் விரட்டப் பட்டு, கைதும் செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் ஜெயலலிதாவால் முழுமையாக ஒதுக்கி வைக்கப்பட்டாலும், கொங்கு மண்டலத்தில் அவரின் செயல்பாடு மறைமுகமாக இருந்து வந்தது.
நிழல் அதிகாரமாக இருந்த ராவணன், தன் புகைப்படத்தைப் போட்டு, ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் விளம்பரத்தை நாளிதழ்களுக்கு தந்துள்ளார். இதன் மூலம், கொங்கு மண்டலத்தில் சசிகலாவுக்கு ஆதரவான சூழலை ஏற்படுத்தும் முயற்சியில் இவர் இறங்கியுள்ளார்.
சசிகலாவுக்கு ஆதரவாக விளம்பரங்கள் கொடுத்து வரும் கோவை எம்.பி.நாகராஜனிடம் பேசினோம். ‘‘அம்மாவுடன் பல ஆண்டுகள் நெருங்கி இருந்தவர் சசிகலா. பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட போதுகூட, தி.மு.க-வின் சதிக்கு ஆளாகாமல் அம்மாவுக்கு ஆதரவாக இருந்தார். அவர்தான் கட்சியை வழிநடத்தும் தகுதியை கொண்டவர். எம்.ஜி.ஆர். விட்டு சென்ற சொத்து அம்மா. அம்மா தந்துவிட்டு சென்ற சொத்து இவர்’’ என்றார்.
ஒரு சிலர் ஆதரித்தாலும் கொங்கு மண்டலத்தில் சசிகலா வுக்கு எதிர்ப்பு குரல்களே அதிகமாகக் கேட்கின்றன. “கொங்கு மண்டலம், அ.தி.மு.க-வுக்கு ஆதரவானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் சசிகலாவுக்கு ஆதரவான நிலையை எடுப்பது என்பதற்கு வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கத்தால் தான் மிக மோசமான சூழலுக்கு கட்சி தள்ளப்பட்டது. அம்மாவும் பல சோதனைகளையும், வேதனை களையும் அனுபவிக்க வேண்டியிருந்தது. எனவே, சசிகலாவுக்கு ஒருபோதும் கொங்கு மண்டலத்தில் ஆதரவு கிடைக்காது’’ என்றார் பெயர் சொல்ல விரும்பாத அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர்.
இதையும் மீறி சசிகலா தரப்பு எடுக்கும் முயற்சிகள் பலிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment