செல்லாக்காசு நடவடிக்கையை முழுமனதாக ஆதரிக்க வேண்டும் என்று என்னிடம் கூறும்போது, பகுத்தறிவு என்னை அனுமதிக்க மாட்டேன் என்கிறது.
நான் என்ன செய்ய வேண்டும்? கூட்டத்தோடு கோவிந்தா போட வேண்டுமா? மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கூத்தாடிக் காட்ட வேண்டுமா?
ஆதரித்து எழுத வேண்டுமா? ஆதரவாக எழுதப்பட்ட கட்டுரைகளைப் பகிர வேண்டுமா?
செயல்பாட்டை கேள்வி கேட்பதை நிறுத்திகொள்ள வேண்டுமா? செயல்படுத்துவதில் உள்ள குளறுபடிகளைப் பற்றிப் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டுமா?
வலிகளையும் வேதனைகளையும் பற்றிக் கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டுமா? அரசியல் சாராத, அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த ரிசர்வ் வங்கி கவர்னர் எனக்கு தேசப்பற்றை போதிக்க வேண்டுமா?
என்னைப் பொறுத்தவரை தேசப்பற்று என்பது —
சரியானதைச் செய்வது;
சரியானதைப் பேசுவது;
வரி செலுத்துவது;
சட்டத்தைப் பின்பற்றுவது; தெருக்களில் குப்பையை வீசாதிருப்பது;
செல்வாக்கைப் பயன்படுத்தாமல் இருப்பது;
அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் இருப்பது; லஞ்சம் கொடுக்காமல் இருப்பது;
சக குடிமக்களைப் பாதுகாப்பது;
பெண்களை மதிப்பது; இல்லாதவர்க்கு ஈவது.
சரியானதைப் பேசுவது;
வரி செலுத்துவது;
சட்டத்தைப் பின்பற்றுவது; தெருக்களில் குப்பையை வீசாதிருப்பது;
செல்வாக்கைப் பயன்படுத்தாமல் இருப்பது;
அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் இருப்பது; லஞ்சம் கொடுக்காமல் இருப்பது;
சக குடிமக்களைப் பாதுகாப்பது;
பெண்களை மதிப்பது; இல்லாதவர்க்கு ஈவது.
நம் நாடு தேசப்பற்று உள்ள நாடாக இருந்தால், இன்று நாம் இந்த நிலையில் இருந்திருக்க மாட்டோம்.
லஞ்சம் கொடுக்கிறோம், வரி செலுத்தாமல் ஏய்க்கிறோம்,
செல்வாக்கையும் அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்துகிறோம்,
தெருக்களில் குப்பை போடுகிறோம், சட்டத்தை மீறுகிறோம், பெண்களை அவதூறு செய்கிறோம், ஏழைகளை குற்றம் சாட்டுகிறோம்.
உண்மையான தேசப்பற்று என்பது பாகிஸ்தானுக்கு எதிராக வன்மம் காட்டுவதோ, பாரத் மாதா கீ ஜே என்று கோஷமிடுவதோ, அரசு எதைச் செய்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதோ அல்ல.
அரசு தேசம் ஆகிவிடாது; தேசம் என்பது வேறு, அரசு என்பது வேறு. யுபிஏ அரசை விமர்சித்துக் கொண்டிருந்தபோது யாரும் தேசப்பற்று குறித்து எனக்கு உபதேசிக்கவே இல்லையே!
அதிருப்தி அடைகிற அளவுக்கு உனக்கு பாதிப்பு ஏதும் இல்லையே? பிறகென்ன என்று கேட்டார் ஃபேஸ்புக் நண்பர் ஒருவர்.
என்னிடம் பிளாஸ்டிக் பணம் இருக்கிறது, எனக்கு பாதிப்பு ஏதும் இல்லை. சொல்லப்போனால், என் வாழ்க்கை பெரிய அளவுக்கு மாறிவிடவும் இல்லை.
ஆனால் என்னைச் சுற்றிலும் வலியும் வேதனையும் கண்ணீரையும் பார்க்கிறேன்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையிழந்து ஊருக்குத் திரும்புவதைப் பார்க்கிறேன்.
என் அலுவலகத்தை ஒட்டியிருக்கிற வங்கியில் நீண்டிருக்கும் வரிசைகளைப் பார்க்கிறேன், பணத்துக்காக மக்கள் அல்லாடுவதன் வேதனையைப் பார்க்கிறேன்.
சம்பளத்தை காசோலையாக வாங்கும் என் டிரைவர், இந்த மாதம் டிசம்பர் 1ஆம் தேதி கொஞ்சம் ரொக்கமாகவும் வேண்டும் என்கிறார்.
டோக்கன் கிடைக்காமல் கண்ணீர் விட்டு அழுத ஒரு முதியவரை நேற்று பார்த்தேன்.
அரசாங்கத்தின் திமிர்த்தனமான கருத்துகளையும், ரிசர்வ் வங்கியின் அக்கறையற்ற சுற்ற்றிக்கைகளையும் பார்க்கிறேன்.
திட்டமிடலோ, தொலைநோக்கோ, தெளிவான சிந்தனையோ தெளிவான இலக்கோ இல்லாததைப் பார்க்கிறேன்.
பொருளாதார எதார்த்தங்களையும் புள்ளிவிவரக் கணக்குகளையும் பொருட்படுத்தாத நிலைமையைப் பார்க்கிறேன்.
இது என்னை வேதனைப்படுத்துகிறது. மிக அரிதாகவே செய்யப்படக்கூடிய இந்த நடவடிக்கை சரி செய்யப்பட முடியாத அளவுக்கு குளறுபடி ஆக்கிவிட்டது.
துல்லியமாகத் திட்டமிட்டு செயல்படுத்தியிருக்க வேண்டிய ஒரு நடவடிக்கை, சர்ஜிகல் ஸ்டிரைக் என்ற கோஷத்துக்குள் நீர்த்துப்போய்விட்டது.
நான் குரல் கொடுக்கிறேன் என்றால் நான் பாதிக்கப்பட்டேன் என்பதற்காக அல்ல. மற்றவர்களின் வேதனைகளுக்காக குரல் கொடுக்கிறேன்.
நான் எழுதுவதால் எனக்கு வேதனை ஏற்படுத்தலாம், நண்பர்கள் விலகலாம், மக்கள் எனக்கு எதிராகத் திரும்பலாம்.
அச்சுறுத்தல்கள், அவதூறுகள், ஆபாசத் திட்டுகள் எனக்கு வருகின்றன. இவை எல்லாவற்றையும் நான் அமைதியாக சகித்துக்கொள்வேன்,
எப்போதும் செய்வதுபோல தனிமையில் அவற்றிலிருந்து மீண்டு கொள்வேன்.
ஆனால் இது என்னைப் பற்றியல்ல, என்னைச் சுற்றியிருப்பவர்களைப் பற்றியது. எனக்கு ஏற்பட்ட வசதிக் குறைபாடுகள் பற்றியதல்ல, என் நாட்டைப் பற்றியது.
இது எனக்கான குரல் அல்ல; குரலற்ற, செல்வாக்கற்ற, அதிகாரமற்ற மக்களுக்கானது.
வேதனைகளை சகித்துக்கொண்டு குளிரிலும் வெயிலிலும் மழையிலும் மணிக்கணக்காக வரிசைகளில் நின்று கொண்டிருக்கிறார்களே, அந்தக் குரலெழுப்பும் வசதியற்ற மக்கள் நம் எல்லாரையும்விட அதிக தேசப்பற்றுள்ளவர்கள்தான்.
நான் எழுதுவது, நாட்டின்பால் எனக்குள்ள தேசப்பற்றின் வெளிப்பாடுதான்.
எனவேதான் எழுதுகிறேன்,
குரல் கொடுக்கிறேன்!
குரல் கொடுக்கிறேன்!
No comments:
Post a Comment