Thursday, January 26, 2017

'வேலைக்கு ஆகாது...'

💐💐💐 பரமபத சோமபான படம். விவரம் தெரிந்த நாளிலிருந்தே பரமபதம் விளையாடி இருக்கேன். சோழிகளை உருட்டி, விழும் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டங்களில் நகர்த்தி, சிறு ஏணியில் உயரே ஏறும் போது, மகிழும் அதே வேளையில், இறுதி நிலையைத் தொடும் முன் இருக்கும் பெரிய பாம்பின் தலையில் அமர்ந்து, 'ஐயோ...' என, தலையில் கை வைத்து, மறுபடி பழைய நிலைக்கே வந்ததும், சிலருக்கு, ஏனோ வாழ்க்கையே வெறுத்துப் போனது போல இருக்கும்.
பெரிய பாம்பின் தலையை நெருங்க நெருங்க, நெஞ்சு படபடக்கும். எல்லா கடவுள்களும் கண்முன் வருவர்.
இத்தகைய அனுபவத்தை, விவரமறியா விடலைப் பருவத்தில் கடந்து வரலாம்; ஆனால், இந்த வயதிலுமா?
வாழ்க்கையே பரமபதம் தான். பலர் வாழ்க்கையில், சாண் ஏறினால், முழம் சறுக்குகிறது. சிலர் வாழ்க்கையிலோ எழுந்திருக்கவே முடியாதவர்களாக ஆகிப் போகின்றனர். அப்படி வாழ்க்கை சுனாமியால் அடித்துச் செல்லப்படுவோர், 'ஓரோண் ஒண்ணு, ரெண்டோன் ரெண்டு...' என்று மறுபடி வாழ்க்கையை துவங்க வேண்டியது தான்.
எப்படி பரமபதத்தில் திரும்ப திரும்ப விளையாடி, பாம்புகளுக்கு நடுவே ஏணிகளும் இருந்து நமக்கு உதவினவோ, அப்படி தேடிவரும் மறு வாய்ப்புகளை பயன்படுத்தத் தான் வேண்டும். சளைத்து, களைத்து விட்டால் எழுந்திருக்கவே முடியாது.
ஆற்றில் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருந்தவனைப் பார்த்து கரையிலிருந்தவன், 'அட முட்டாளே... இந்த வேகமான ஆற்றில் எதிர்நீச்சல் போடுகிறாயே... உன்னால் ஓரடியாவது முன்னேற முடியுமா... உனக்கென்ன கிறுக்கா பிடிச்சிருக்கு...' என்றானாம். அதற்கு நீச்சலடித்துக் கொண்டிருந்தவன், 'நான் நீச்சலடிப்பதை நிறுத்தினால், இப்போது இருக்கும் இடம் கூட இருக்காது; ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டு விடுவேன்...' என்றான்.
இதுதான் வாழ்வின் நிலையும்! முயற்சிகளை விடாது செய்கிறவன், இருக்கிற இடத்தையாவது, தக்க வைத்துக் கொள்கிறவன், முன்னேற வாய்ப்பு உண்டு. போராட்டத்தை நிறுத்திக் கொள்கிறவனோ, முடங்கிப் போகிறான்.
ஒருவர், துணி துவைக்கும் இயந்திரத்தில் போடப்படும் சோப்பிற்கு பதிலாக, சிறு சிறு பாக்கெட்டுகளில், திரவ வடிவில் பயன்படுத்தும் அமெரிக்க தொழில் நுட்பத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்துவதில் தீவிரமாக இறங்கினார். செய்து கொண்டிருந்த நல்ல வேலையை உதறி, அமெரிக்காவிற்கும் பறந்தார். 'இந்தியாவில் இதை அறிமுகப்படுத்தும் பெருமை தனக்கே சேரப் போகிறது...' என்று, ஏகப்பட்ட பணத்தை முதலீடு செய்ததுடன், கடனும் வாங்கினார்.
எனக்கும் மாதிரி தந்தார். வீட்டில் கொடுத்தேன். 'வேலைக்கு ஆகாது...' என்று இரண்டே நாளில் சான்றிதழ் தந்தனர். அவர் தொழிலுக்கு நேர்ந்த கதியும் இதுதான்!
ரொம்ப நாளா ஆளையே காண முடியவில்லை. மனிதர் அடங்கிப் போனார் என்றே எண்ணினேன். ஆனால், நீண்ட இடைவெளிக்குப் பின் பார்த்த போது, 'நல்ல முதலீட்டாளர் ஒருவர் கிடைத்தார். நான், பணி பங்குதாரர். சூரிய ஒளி சார்ந்த தயாரிப்புகளை தருவித்து, விற்றுக் கொண்டிருக்கிறேன். நல்லாப் போகுது...' என்றார். கூடவே, 'வாயில் கதவு அடைக்கப்பட்டால் என்ன; ஜன்னல் கதவு திறந்து இருக்கிறதே!' என்ற வசனத்தையும் சொன்னார்.
இன்று பலருக்கும் தேவைப்படும் வசனம் இது!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...