Sunday, January 22, 2017

என் வெற்றி உறுதி ..

நம் மீது கோபப்படுகிறவர்களைப் பற்றி!
ஒருவர் என் மீது கோபப்பட்டால், அவர், என்னிடம் வகையாகச் சிக்கிக் கொண்டார் என்றும், அவருடனான வார்த்தைப் போரில் அப்போதே என் வெற்றி உறுதி என, நினைப்பேன்.
பந்தை எதிராளி விட்டெறிந்தால், நாம் கடினமான சுவர்ப்பகுதியாக இருந்தால் தானே, பந்து அவருக்கு திரும்பும்... இவ்விஷயத்தில், நான் கெட்டிக் குழம்பு போல் ஆகி, 'பச்சக்' என்று பந்தைத் தக்க வைத்துக் கொள்வேன்.

'துணிகடையில், வெள்ளை பேன்ட்டுக்கு, 'டிரயல்' (போட்டுப் பார்க்கும் அனுமதி) கிடையாது. இஷ்டம்ன்னா எடுங்க; இல்லன்னா வேற கடைய பாருங்க...' என்றார் ஒரு துணிக்கடை அதிபர் சூடாக!
வேறு எவராக இருந்தாலும், 'சரி தான் போய்யா... உன் கடைய விட்டா வேறு கடை இல்லயாக்கும்...' என்று பதிலுக்கு சூடாகி, வெளியேறியிருப்பர். நானோ, 'நீங்க சொல்றது ரொம்ப சரி... அழுக்காயிட்டா அப்புறம் யார் வாங்குவாங்க; இதே மாதிரி பிட்டிங்குல, கலர் பேன்ட் கொடுத்தீங்கன்னாப் போதும்...' என்றேன் கூலாக!
உடனே அவர். 'சாரி சார்... கடைக்கு கிளம்பும் போது, வீட்ல கொஞ்சம் பிரச்னை. அந்தக் கோபத்த உங்க கிட்ட காண்பிச்சிட்டேன்; தப்பா எடுத்துக்காதீங்க...' என்றாரே பார்க்கலாம்!
நான் வேறு எப்படிப் பிரதிபலித்திருந்தாலும், தன் தவறை அவர் உணர்ந்திருக்க மாட்டார்.
'இது என்ன உங்கப்பன் வீட்டு ரயிலா... சூட்கேசை நகர்த்த முடியாது. யார் கிட்ட வேணும்ன்னாலும் புகார் செய்துக்க...' என்கிற சக பயணியை வீழ்த்த, 'உங்கள சிரமப்படுத்திட்டேன்; பரவாயில்ல நான், 'அட்ஜஸ்ட்' செய்துக்கிறேன். ஒண்ணும் பிரச்னையில்ல...'
'காலை மிதிச்சிட்டுப் போறியே... அறிவிருக்காய்யா உனக்கு... கடவுள் உனக்கு கண்ணை பின்னாடியா படைச்சிருக்கான்? எருமை மாட்டு ஜென்மங்க...' என்பவருக்கு, நான் பூசும் மருந்து...
'நான் செய்த தப்புக்கு, நீங்க இன்னும் கூட திட்டலாம் சார்... (சற்றே குனிந்தபடி) உங்க காலை பாக்கலாமா... ரொம்ப பாதிப்பா சார். என் கவனக் குறைவுதான்னாலும் தப்பு தப்பு தான்...'
'எல்லாரும் செருப்பைக் கழற்றிட்டு தான் உள்ளே வர்றாங்க. நீங்க என்ன ஸ்பெஷலா... உங்களுக்கு மட்டும் தனியா சொல்லணுமா?' என்கிற ரத்தக் கொதிப்பாளருக்கு, நாம் போட வேண்டிய ஊசி, 'கவனிக்காம தப்பு செய்துட்டேன்; என் தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி!'
நண்பர்களே... ஒன்றைக் கவனிக்கத் தவறியிருக்க மாட்டீர்கள்... எதிலுமே, 'சாரி, மன்னியுங்கள்...' என்கிற வார்த்தைகளை பயன்படுத்த யோசனை சொல்லவில்லை.
ஏனெனில், இப்போதெல்லாம் இவ்வார்த்தைகள் சர்வ சாதாரணமாகிப் போனதுடன், நமக்கெதிராகவே வேலை செய்கிறது.
'சாரி என்ன சாரி... செய்ற தப்பையும் செய்துட்டு சாரியாம் சாரி. யாருக்கு வேணும் உங்க சாரி...' என்று புரியாமல் இன்னும் சூடாகின்றனர் அல்லவா... அது, இனி நம்மிடம் நடக்காது.
அதேநேரத்தில், இம்மாதிரி பதில் கூறிப் பாருங்கள்... வாயடைத்துப் போவர். காரணம், சாரிகளுக்கு மட்டுமே பழகிப் போனவர்களுக்கு, மேற்கூறிய பதில்களுக்கு எப்படிப் பிரதிபலிப்பது என்றே தெரியாது.
ஆம்! இத்தகைய புதிய அணுகுமுறைக்கு இவர்களிடம் ஆயத்தமான பதில் இல்லை. திணறிப் போவர் திணறி!
கொதித்துப் பொங்கி வருகிற பாலை, தண்ணீர் தெளித்து, அதைப் பாத்திரத்திற்குள்ளேயே அடக்கும் கலையை, நம் இல்லத்தரசிகள் மட்டும் தானா பின்பற்ற வேண்டும்? நாமும் பின்பற்றலாமே!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...