Thursday, January 19, 2017

உண்மையை சொல்லட்டுமா?

நிறையப் பேருக்கு தெரியாத ஒரு உண்மையை சொல்லட்டுமா? கப்பலுக்கு, 'பிரேக்' கிடையாது.
ஓர் இடத்தில், கப்பலைச் சரியாக நிறுத்த, ஒரு கப்பலோட்டி எவ்வளவு சிரமப்படுவார் தெரியுமா... கப்பல் ஓட்டுவது அவ்வளவு எளிதல்ல; கப்பல் மோதி, திமிங்கலங்கள் இறப்பதும்; சிறு படகுகள் சிதறுவதும் இதனால்தான்.
ஆனால், பிரேக் இல்லாத மனிதக் கப்பல்களோ, தங்களைத் தான் முதலில் சேதப்படுத்திக் கொள்கின்றன.
'அவன் யார் பேச்சும் கேட்க மாட்டான்; அவனுக்கு என்ன தோணுதோ, அதைத் தான் செய்வான். நாங்க எவ்வளவோ சொல்லி பாத்துட்டோம் திருந்துறதாத் தெரியல...' என்று, தங்கள் குடும்ப உறுப்பினர் பற்றி, மற்றவர்கள் புலம்பும் வார்த்தைகள் உங்கள் காதுகளைக் கடந்து போயிருக்கும்.
இத்தகைய நபர்களுக்கு, தப்பித் தவறி, ஏதோ ஒரு சூழ்நிலையில், ஒரு துறைத் தலைமையோ, ஒரு நிறுவன உரிமையோ கிடைத்துவிடுமாயின், இவர்களுக்குக் கீழே பணி புரிபவர்கள் பாடு ரொம்பச் சிரமம்.
சொன்னதைக் கேளாதவர்களின் தன்மையைப் பார்க்க பார்க்க, மற்றவர்கள் மெல்ல இவர்களிடமிருந்து ஒதுங்க ஆரம்பிப்பர். சொல்லி என்ன பயன் என்பது மட்டுமல்ல; நம் மரியாதையைக் காப்பாற்றி கொண்டால், அதுவே போதுமானது என்பதும், ஒரு காரணம்.
'நான் இப்படிப்பட்ட ஆள் அல்ல...' என்று, சிலர் மறுக்கலாம்; ஆனால், நமக்குள் இருக்கும், 'பிரேக்' இல்லா கப்பல், அவ்வப்போது நம்மை அறியாமல் பயணப்பட ஆரம்பித்து விடுகிறது.
இதனால், நாம் இப்போது பார்த்தவர்களைப் போல், சில நேரங்களில், சில விஷயங்களில், சில சந்தர்ப்பங்களில், நாம், 'பிரேக்' இல்லாக் கப்பல்களாகி போகிறோம். யார் என்ன சொன்னாலும், அந்த நேரத்தில் மட்டும் காதில் ஏறுவதில்லை.
இவர்களுக்கு, சில கேள்விகள்... நீங்கள் எடுத்தது சுயமுடிவுதானா, நீங்கள் எடுக்கும் முடிவுகள் பிறர் தலையீடு செய்யாத சுயமுடிவு என்றால், உங்கள் முடிவு எத்தனை முறை சரிவர அரங்கேறியிருக்கிறது... உங்கள் முடிவின், வெற்றி சதவீதம் என்ன?
'சரியோ, தவறோ நான் எடுப்பதே முடிவு; விளைவுகளைப் பற்றி எனக்குக் கவலையில்லை...' என்று வாதிடுபவரா நீங்கள்? அடடே.... நானும் உங்களிடமிருந்து ஒதுங்கிக் கொள்கிறேன்; சிதறும் படகாய் ஆக எனக்கு விருப்பமில்லை.
பெரும்பகுதி சரியாகவே நடக்கும் என்கிறவரா நீங்கள்... சில நேரங்களில் மட்டும் தவறு நடக்கிறது என்கிறீர்களா... அப்படியானால் உங்களிடம் கொஞ்சம் பேசலாம்.
சில பிழைகளுக்கு விலை இல்லைதான்; ஆனால், சில பிழைகளுக்குக் கடுமையான விலையைக் கொடுக்க வேண்டி வருகிறதே!
பிழையற்ற சரியான செயலா; அதெப்படி முடியும்? பிறர் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்கும் போது, அதில் அவர்கள் கூறும் சாதக, பாதகங்களை அலசும் போது, ஒரே கோணத்தில் பார்க்கக் கற்றுக் கொண்டவர்கள் தாம் அதிகம் தவறு செய்கின்றனர் என்பது தெரிய வருகிறது.
'ஆளாளுக்கு அபிப்ராயம் கேட்டுக் கொண்டிருந்தால், அது கட்டுபடியாகிற விஷயமா... எல்லாருமா சேர்ந்து குழப்பி விடுவர்; அதெல்லாம் சரிப்பட்டு வராது...' என்கிறீர்களா?
பல்வேறு கோணங்களிலிருந்து பார்க்கும் போதுதான், ஒரு பொருளின் முழுப் பரிமாணமும் தெரியவருவது போல், ஒரு முடிவும் பல கோணங்களிலிருந்து பார்க்கப்படும்போது, பெரும்பாலும் பிழையற்ற முடிவு எடுப்பது சாத்தியமாகிறது. காரணம், அனைத்து ஓட்டைகளும் அடைக்கப்பட்டு விட்டனவே!
ஒரே கோணத்தில் பார்த்து தன்னிச்சையாகவே எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு, இனி முடிவு கட்டிவிட்டு, ஒவ்வொன்றையும் அலசி எடுத்துப் புரட்டிப் புடம் போட்ட பின், முடிவுகளை எடுத்தால், அதுவே தங்கமான முடிவாக இருக்கும்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...