Tuesday, December 9, 2014

வங்கி செல்ஃப் சர்வீஸ் திட்டங்கள்!



சரியாகப் பயன்படுத்தினால் நேரம் மிச்சம்!
வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கில் பணம் போட அல்லது தங்களுக்கு வரும் செக்குகளை கலெக்‌ஷனுக்குப் போட வங்கிகளுக்குச் செல்லவேண்டிய கட்டாயம் இருந்தது சில ஆண்டுகளுக்கு முன்புவரை.
இன்றோ பணம் போட, செக்கை கலெக்‌ஷனுக்குப் போட, கணக்குப் புத்தகத்தில் வரவு வைக்க என எதற்கும் வங்கிக்குள் நுழைந்து காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதற்கென இருக்கும் செல்ஃப் சர்வீஸ் மெஷின் களைச் சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் நம் வேலையை எளிதாகச் செய்து முடித்துவிட முடிகிறது.
இந்த செல்ஃப் சர்வீஸ் சேவைகளை எப்படி பாதுகாப்பாகப் பயன்படுத்த வேண்டும், இதில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் எப்படி தீர்வு காண்பது என்பது குறித்து வங்கித் துறை சார்ந்த சிலரிடம் பேசினோம். ஆக்ஸிஸ் பேங்கின் ரீடெயில் லெண்டிங் மற்றும் பேமென்ட் பிரிவின் தலைவர் ஜெய்ராம் தரன் இதுபற்றி தெளிவாக எடுத்துச் சொன்னார்.
பணத்தை டெபாசிட் செய்ய...
“பெரும்பாலான வங்கிகளில் இந்த செல்ஃப் சர்வீஸ் சேவைகள் செயல்படத் தொடங்கிவிட்டன. இதில் ஏடிஎம், கால்சென்டர், இன்டர்நெட் பேக்கிங், மொபைல் ஆப்ஸ் ஆகியவை மிகவும் பிரபலம். இந்தச் சேவைகளை வாடிக்கை யாளர்கள் ஏற்கெனவே பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இதில் பணம் டெபாசிட் செய்யும் மெஷின் தற்போது பிரபலமாகி வருகிறது. இதில் பணத்தை டெபாசிட் செய்வது மிகவும் சுலபம்.
இந்த டெபாசிட் மெஷின் மூலமாக பணத்தை முதலீடு செய்வதற்குமுன் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்வது நல்லது. அதாவது, யாருடைய பெயரில் பணத்தை வரவு வைக்கிறீர்கள், அவரது பெயர், வங்கிக் கணக்கு எண், டெபாசிட் செய்யும் தொகை, ரூபாய் நோட்டு விவரம் ஆகியவற்றை முன்கூட்டியே தெளிவாக எழுதிவைத்துக் கொள்வது நல்லது. முடிந்தவரை கசங்கிய, கிழிந்த பழைய ரூபாய் நோட்டுகளைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இந்த ரூபாய் நோட்டுகள் மெஷினில் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது.
மேலும், ஒவ்வொரு வங்கியிலும் ஒவ்வொருவிதமான மெஷின் உள்ளது. இதில் ரூபாய் நோட்டுகளை எப்படி வைக்க வேண்டும் என்ற விவரம் இருக்கும். அதன்படி செயல்படுவதன் மூலமே சிக்கல் இல்லாமல் இந்த மெஷின்களை பயன்படுத்த முடியும். இந்த மெஷின்கள் பெரும்பாலும் வங்கிக் கிளையுடன் சேர்ந்துதான் இருக்கும். எனவே, ஏதாவது சந்தேகம் இருந்தால், வங்கி ஊழியர்களிடம் கேட்டு, பதில் பெறலாம்.

இந்த மெஷின்கள் கள்ள ரூபாய் நோட்டுகளை ஏற்றுக்கொள்ளாது.
சில மெஷின்கள் ஏற்றுக்கொண்டாலும் அந்தப் பணத்தை வரவில் வைக்காது. வங்கி ஊழியர் அடுத்தநாள் மெஷினில் இருந்து பணத்தை எடுக்கும்போது கள்ள நோட்டுகள் தனியாக இருக்கும். மேலும், இந்த மெஷினில் உள்ள சாஃப்ட்வேர், கள்ள ரூபாய் நோட்டை யார், எந்த நேரத்தில் டெபாசிட் செய்தார்கள் என்பதை கச்சிதமாக தெரிவித்துவிடும். இதுகுறித்த விவரம் ஆர்பிஐக்குத் தெரிவிக்கப்படும். எனவே, ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யும்முன், அவற்றை ஒருமுறைக்கு இருமுறை பரிசோதனை செய்துவிட்டு, அதன்பிறகு டெபாசிட் செய்வது நல்லது” என்றார்.
தவறு ஏற்பட்டால்..?
இந்த மெஷின்களில் பணத்தை டெபாசிட் செய்யும்போது ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையை மெஷின் தவறாகக் காண்பித்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் அவர் எடுத்துச் சொன்னார்.
“பெரும்பாலான மெஷின்கள் ரூபாய் நோட்டுகளை மிகச் சரியாக எண்ணி உங்களுக்குக் காட்டும். அதில் எதாவது பிரச்னை இருந்தால், அந்தப் பரிவர்த்தனையை ரத்து செய்து கொள்ளலாம். இந்த வாய்ப்பைத் தவறவிட்டீர்கள் எனில், இதுகுறித்து வங்கிக் கிளையில் புகார் தெரிவிக்கலாம். அடுத்தநாள் வங்கி ஊழியர் மெஷினை திறந்து பரிசோதனை செய்யும்போது, முதலீடு செய்த தொகை குறித்த விவரம் தெரிந்துவிடும். நீங்கள் சொல்வது உண்மை எனில், சரியான தொகையை உங்கள் கணக்கில் வங்கி ஊழியர்கள் வரவு வைப்பார்கள்.
பணத்தை முதலீடு செய்யும் கணக்கு எண்ணை பதிவு செய்ததும், வாடிக்கையாளரின் பெயரை திரையில் காண்பிக்கும். இது சரியாக உள்ளதா என்பதை உறுதிபடுத்திக்கொள்வது அவசியம். நோட்டுகளின் விவரத்தை இப்படி சரிபார்த்துக் கொள்வது நல்லது. பரிவர்த்தனை முடிந்ததும் பணத்தை டெபாசிட் செய்ததற்கான ரசீது வரும். இதைப் பெறுவது முக்கியம்” என்றார்.
காசோலையை கலெக்‌ஷனுக்குப் போட..!
அடுத்து, காசோலையை எப்படி கலெக்‌ஷனுக்குப் போடுவது என்று பார்ப்போம். முன்பெல்லாம் காசோலைக்கு உண்டான விண்ணப்பத்தை நிரப்பி, கவுன்டர் ஃபைலை மட்டும் நாம் கிழித்து வைத்துக் கொண்டு, அதற்கென இருக்கும் பெட்டியில் கலெக்‌ஷனுக்குப் போட்டுவிடுவோம். ஆனால், இப்போது இதையும் மெஷின் மூலமாக முதலீடு செய்ய முடியும். இதுகுறித்து கனரா வங்கி அதிகாரிகள் விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள்.
“யாருடைய வங்கிக் கணக்கில் காசோலை முதலீடு செய்யப்படுகிறதோ, அவர் பற்றிய  விவரம், செக்கில் குறிப்பிட்டுள்ள தொகை, தேதி, ஆகியவற்றைக் கொடுத்து காசோலையை மெஷினில் வைக்க வேண்டும்.
அதன்பிறகு காசோலையை, மெஷின் திரையில் காட்டும். அதைப் பார்த்து ஓகே செய்தால் போதும். இப்படி டெபாசிட் செய்யப்படும் காசோலைகள் ஒரேநாளில் பணமாக்கப்பட்டு உங்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால், கசங்கிய, கிழிந்த காசோலைகளை மெஷின் அனுமதிக்காது. எனவே, காசோலைகளை மடிக்காமல் வைத்திருப்பது நல்லது” என்றார்கள்.

வங்கிகளின் வேலைபளுவைக் குறைக்க வும், வாடிக்கையாளர்களின் பொன்னான நேரம் வீணாகாமல் இருக்கவும்தான் இந்த செல்ஃப் சர்வீஸ்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. இதனைச் சரியாகப் பயன் படுத்துவதன் மூலம் அங்குமிங்கும் அலையாமல், நேரத்தை மிச்சப்படுத்தலாமே!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...