பல உயிரினப் பூங்காக்களுக்கு சென்றிருப்போம்! கடல் வாழ் உயிரினப் பூங்காவுக்களுக்கு என்றாவது சென்றதுண்டா? ஆம் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடாவில் தமிழக சுற்றுலாத் துறையும் வனத்துறையும் இணைந்து கடல் வாழ் உயிரினப் பூங்காவை உருவாக்கியுள்ளன. அதைப் பற்றி இன்று பார்ப்போம்.
இந்தியாவின் மிகப் பெரிய கடல் வாழ் உயிரினப் பூங்கா இதுதான். இதுவரை இந்த பூங்காவில் 3600க்கும் மேற்பட்ட கடல் தாவரங்களும், உயிரினங்களும், 117 வகையான பவளப் பாறைகளும் இங்கு இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 560 சதுர கி.மீ பரப்பளவில் இராமேஸ்வரம் முதல் தூத்துக்குடி வரையிலான மன்னார் வளைகுடாப் பகுதியில் நீண்ட கடற்கரையோரம் இந்த பூங்கா அமைந்துள்ளது. மன்னார் வளைகுடாவின் மொத்தப் பரப்பளவு 10,500 சதுர கி.மீ , அதில் 560 சதுர கி.மீ பரப்பளவை தேசிய கடல் வாழ் உயிரினப் பூங்காவாக செயல்படுகிறது. இந்த பகுதியில் இருக்கும் 125 கிராமங்களில் வசிக்கும் மரைக்காயர் என்னும் பிரிவைச் சேர்ந்த மக்கள் இங்கு இருக்கும் உயிரினங்களை வேட்டையாடுவதையே தொழிலாக கொண்டுள்ளனர். இவர்களால் இந்த பகுதியில் வாழும் பல உயிரினங்கள் அழிவைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றன என்பது மிகவும் வருத்தமான செய்தி.
இந்த மன்னார் வளைகுடா இந்தியப் பெருங்கடலில் இலட்சத்தீவுப் பகுதியில் இந்தியாவின் தென்கிழக்கு முனையும், இலங்கை கடற்கரைக்கும் இடையில் 160 கி.மீ முதல் 200 கி.மீக்கு இடைப்பட்ட இடத்தில் உள்ளது. தமிழகத்தின் தாமிரபரணி ஆறும், இலங்கையின் மல்வத்து ஆறும் இந்த வளைகுடாவில் வந்து சேர்கிறது. 1986 ஆம் ஆண்டு இந்த வளைகுடாப் பகுதியில் இருக்கும் 21 தீவுகளை தேசிய கடல் வாழ் உயிரினப் பூங்காக்காவாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 1989 ஆம் ஆண்டு இந்த பூங்காவும் அதைச் சுற்றியுள்ள 10 கி.மீ பகுதியும் biosphere resereve ஆக அறிவிக்கப்பட்டது.
21 தீவுகளின் பெயர்கள்:1) வான் 2)கோஸ்வரி 3)விலங்குச்சாலி 4)கரியாச்சாலி 5)உப்புத் தண்ணி 6)புலுவினிச்சாலி 7)நல்ல தண்ணி 8)அனைப்பர் 9)வலி முனை 10)பூவரசன் பட்டி 11)அப்பா 12) தலரி 13)வலை 14)முள்ளி 15)முசல் 16)மனோலி 17)மனோலி புட்டி 18)பூமாரிச்சான 19)புலிவாசல் 20)குருசடை 21)சிங்கலம்
முன்னர் பாண்டியன், புன்னையடி என்ற இரு தீவுகளையும் தூத்தூக்குடியில் துறைமுகம் கட்டுவதற்காக அழித்துவிட்டனர். இல்லையெனில் அதுவும் இந்தப் பூங்காவில் ஒரு பகுதியாக இருந்திருக்கும்.
இந்த பூங்கா பலருக்கு ஆராய்ச்சிக் கூடமாகவும் விளங்குகிறது. நாம் இதுவரை நேரில் கண்டிராத பல வகையான உயிரினங்களை இங்கு கண்டு களிக்க முடியும். ecosystem என்று அழைக்கப்படும், உயிரினங்கள் வாழத்தகுந்த பவளப் பாறைகள், கடற்கரைகள், தீவுகள், மாங்குரோவ் வகைக் காடுகள் போன்றவை இந்தப் பூங்காவில் காணப்படுகின்றன். இங்குள்ள தீவுகளுக்குச் செல்ல இங்கு வாழும் மக்களால் சிறிய படகுகள் இயக்கப்படுகின்றன.
இங்கு பல அரிய சிறப்புமிக்க கடல் தாவரங்கள் இங்கு இருக்கின்றன. இந்தியாவில் இருக்கும் பதினொன்று வகையான கடல் பாசிகளையும் ஒரே இடத்தில் இந்த பூங்காவில் காணமுடியும். வனத்துறையின் கணக்கெடுப்பின் படி 147 வகையான தேவையில்லா செடிகளும் இந்த பூங்காவில் இருக்கிறது.
உயிரினங்களுக்கும் இங்கு பஞ்சமில்லை. அரிய வகையான கடல் பசுக்கள், டால்பின்கள், கடற்குதிரைகள், பச்சை நிற கடல் ஆமைகள், பவள மீன்கள், சிங்க மீன்கள், ஆலிவ் ரிட்லி போன்ற பல வகை ஆமைகள், ஸீ-அனிமோன் போன்ற நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும் பல உயிரினங்கள் இங்கு உள்ளன. இங்கு இருக்கும் கடல் பாசிகளும் தேவையில்லா செடிகளும் கடல் பசு போன்ற உயிரினங்களுக்கு உணவளிக்கிறது. இங்கு இருக்கும் பல ஆமைகள் அழிவை சந்திக்கும் நிலையிலும் மிக அபாயகரமானதாகவும் இருக்கின்றன.
கடல் வாழ் உயிரினப் பூங்காவான இந்த பூங்காவில் இடம்பெயரும் பறவைகளையும் காணலாம். சிலிகா ஏரி, காலிமோர் மற்றும் இலங்கையிலிருந்து இடம்பெயரும் பல பறவைகளுக்கு இந்த பூங்கா சில நாட்கள் தங்குமிடமாகவும் பயன்படுகிறது. இப்படி இடம்பெயரும் பறவைகள் மட்டும் 180க்கும் மேற்பட்டவை. பல பறவைகள் தங்கள் இனப் பெருக்கத்திற்காகவும் இங்கு வருகின்றன.
இங்கு இருக்கும் மாங்குரோவ் வகைக் காடுகளில் இருக்கும் தாவரங்கள் தனிச் சிறப்பு வாய்ந்தவை. அனைத்து தீவுகளில் மாங்குரோவ் வகைக் காடுகள் காணப்பட்டாலும், மனோலி தீவில் இருக்கும் காடுகளில் மற்ற காடுகளைக் காட்டிலும் அதிக அளவிலான தாவரங்கள் இருப்பது சிறப்பு. இங்கு வீசும் பலமான காற்றால் மரங்கள் அதிகம் வளர்வதில்லை, இருந்தாலும் மரங்கள் நல்ல நலத்தோடும், உறுதியானாதாகவும் இருக்கின்றன. இந்த மாங்குரோவ் காடுகள் முழுவதும் pneumatophores என்னும் மரங்களின் வேர்களால் சூழப்பட்டிருக்கின்றன. இந்த காடுகளில் திசம்பர் - ஜனவரி மாதங்களில் பூக்கள் பூத்துக் குழுங்கும்.
இங்கு இருக்கும் பாறைகளின் மதிப்புகளை அறிந்துகொண்டு பலர் இந்தப் பாறைகளை உடைத்துச் சென்றதால் பல பாறைகள் இன்று இல்லை. தமிழக வனத்துறையின் முயற்சியால் இப்போது பாறைகளை உடைப்பது முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் தற்போது நாள் ஒன்றுக்கு 250 மீ3 பாறைகள் இந்த வளைகுடாப் பகுதியில் இருந்து இயற்கைக்கு எதிராக செயல்படும் சிலரால் அகற்றப்படுகிறது. இயற்கை நமக்களித்த வரங்களை
பாதுகாப்பது நமது கடமை, அதை விட்டுவிட்டு பல இயற்கை வளங்களை நாம் அழித்துக் கொண்டிருக்கும். இப்படி அழிக்கும் நாம் ஒரு நாள் இயற்கையின் ஆற்றலால், பேரழிவுகளால் அழியப்போகிறோம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
மாணவர்களுக்கும், உயிரியல் ஆராய்ச்சியாளர்களுக்கும், இயற்கையை ரசிப்பவர்களுக்கும், மாங்குரோவ் காடுகளின் அழகை அனுபவிக்க ஆசைப்படுபவர்களுக்கும், வியக்கவைக்கும் கடல் உயிரினங்களை காணத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த மன்னார் வளைகுடாவின் தேசிய கடல்வாழ் உயிரினப் பூங்கா ஒரு சிறந்த இடமாகும்.
எப்படி செல்வது?
மன்னார் வளைகுடா இராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபத்திற்கு அருகில் அமைந்துள்ளது. அங்கு சென்று படகுகள் மூலம் மன்னார் வளைகுடாவை அடையலாம்.
1)மண்டபத்திற்கு இராமநாதபுரம், இராமேஸ்வரம், மதுரை, தூத்துக்குடி போன்ற இடங்களில் இருந்து பேருந்துகள் இருக்கின்றன.
2)அருகில் உள்ள ரயில் நிலையம் - மண்டபம், தூத்துக்குடி.
3)அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை
உகந்த நேரம் - அக்டோபர் முதல் ஜனவரி வரை.
No comments:
Post a Comment