2025 ஆம் ஆண்டு. காலை 11.30 மணி இருக்கும். நியூயார்க்
நகரிலிருந்து அரவிந்த் சென்னையில் இருக்கும் அவனது
அம்மாவை தொலைபேசியில் அழைக்கிறான்.‘அம்மா.
ஒரு மகிழ்ச்சியான செய்தி. அலுவலக வேலையாக இன்று
சென்னை வருகிறேன்.’ என்றதும் அவனது அம்மா
'என்னப்பா. நேற்று பேசியபோது கூட இந்தியா வருவதாக சொல்லவில்லையே. எப்போது கிளம்புகிறாய்? எங்கிருந்து
பேசுகிறாய். இப்போது அங்கு மணி என்ன?’ என்றதும்,
அரவிந்த், ‘அம்மா. அவசரவேலையாக என்னை எனது
நிறுவனம் இன்றைக்கே கிளம்பவேண்டும் என்று சொல்லி
சென்னைக்கு அனுப்புகிறார்கள். நான் இப்போது
விமான நிலையத்திலிருந்து தான் பேசுகிறேன்.
இப்போது இங்கு இரவு மணி 1.00. சரி. விமானத்தில்
ஏற அழைக்கிறார்கள்.மற்றவற்றை நேரில் வந்து
சொல்கிறேன்.’ என்று சொல்லிகைப்பேசி இணைப்பை
துண்டிக்கிறான்.
அவனது அம்மாவும் மகனின் வரவை எண்ணி
மகிழ்வுடன் காத்திருக்கிறாள். மாலை மணி 3.45
இருக்கும். தொலைபேசி அழைப்பு மணி அடிக்க அந்த
அம்மா தொலைபேசியை எடுத்து பேசுகிறாள்.
தொலைபேசியில் பேசியது அரவிந்துதான். ‘அம்மா சென்னை வந்துவிட்டேன்.’ இன்னும் அரைமணியில் வீட்டுக்கு
வந்துவிடுவேன்.’ என சொல்லி தொலைபேசி தொடர்பை
துண்டிக்கிறான்.
அவனது அம்மாவால் நம்பமுடியவில்லை.காலையில்
11.30 மணிக்குத்தானே ‘போன்’ செய்தான். 4 மணி
நேரத்திற்குள் எப்படி நியூயார்க்கிலிருந்து சென்னை
வரமுடியும்?’என எண்ணி காத்திருக்கிறாள் மகனை காண.
இப்படி நடக்குமா என்று சிலர் நினைக்கலாம். ஆனால்
இன்னும் சில ஆண்டுகளில். இது நடக்க வாய்ப்புண்டு
என சொல்கிறது Times of India நாளிதழில் வந்த செய்தி
ஒன்று. இங்கிலாந்தில் Oxfordshire என்ற ஊரில் உள்ள
Reaction Engines Limited என்ற Aerospace நிறுவனம் ஒன்று
உலகில் எங்கிருந்தும் எந்த இடத்திற்கும் 4 மணி
நேரத்திற்குள் 300 விமானப்பயணிகளை அழைத்துசெல்லும்
விதமாக ஒரு விமானத்தை வடிவமைத்துக்
கொண்டிருக்கிறார்களாம்.
அந்த விமானத்தின் வேகம் ஒலியின் வேகத்தைவிட
ஐந்து மடங்கு அதிகமாக இருக்குமாம். ஒலியின் வேகம்
ஒரு மணித்துளிக்கு 344 மீட்டர் அதாவது மணிக்கு 1235
கிலோமீட்டர் என்பதை நாம் அறிவோம். அப்படியென்றால்
இந்த விமானத்தின் பறக்கும் வேகம் மணிக்கு சுமார் 6175
கிலோ மீட்டர். அதாவது 4 மணி நேரத்தில் அந்த விமானம்
24700 கிலோமீட்டர் தூரத்தை கடக்கும் என்பது வியப்பாக
இருக்கிறது.
நியூயார்க்கிற்கும் சென்னைக்கும் இடையே உள்ள தூரம்
13,476.65 கிலோமீட்டர் (7276.81 nautical miles) என்பதால்
நான்கு மணி நேரத்திற்குள் சென்னை வருவது சாத்தியமே.
இந்த விமானத்தில் இருக்கும் குளிரூட்டும் தொழில்நுட்பம்,
அதிலுள்ள Sabre engine system த்தில் நுழையும் காற்றை
0.01 மணித்துளியில் 1000 டிகிரி செல்சிஷியஸ் குளிர
வைத்துவிடுமாம். இதனால் அந்த விமானத்தின்
ஜெட் இஞ்ஜின் அதிக சக்தியோடு பறக்க இயலுமாம்.
இந்த விமானம் 276 அடி நீளம் கொண்டதாயிருக்கும் என்றும்
அதனுடைய விலை மிக குறைவுதான் என்கிறார்கள்!
அதாவது 1.1 பில்லியன் டாலர் தானாம். (110 கோடி ரூபாய்கள்)
இந்த விமானத்திற்கு Skylon என பெயரிட்டிருக்கிறார்கள்.
இன்றைக்கு அறிவியல் தொழில் நுட்பம் அடைந்திருக்கின்ற
வளர்ச்சியை நோக்கும்போது, இந்த செய்தியை நம்புவது
ஒன்றும் கடினமில்லை. ஏனெனில் 1949 ஆண்டிலேயே
நகைச்சுவை மன்னன் திரு N.S.கிருஷ்ணன் அவர்கள்
அவரது மனைவியும் நகைச்சுவை நடிகையுமான
திருமதி T.A. மதுரத்துடன் சேர்ந்து நல்லதம்பி என்ற
திரைப்படத்தில் ‘விஞ்ஞானத்தை வளர்க்கப்போறேண்டி’
என்ற பாடலில், அப்போது நடக்கமுடியுமா என
எண்ணியதை நடத்திக் காட்டுகிறேன் என்று பாடியதை
நம்பாத நாம், பின்னாட்களில் அவை நடந்தேறியது
கண்டிருக்கிறோம்.
எனவே காத்திருப்போம் குறைந்த நேரத்தில்
உலகை வலம் வர!
No comments:
Post a Comment