Friday, December 12, 2014

நாடோடி மன்னன் பணச்சிக்கல்

கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்ட இந்நூலில் ரவீந்தர் வசனம் எழுதிய இப்படத்தை “கண்ணதாசன்” என்று பெயர் போட்டிருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை

தனது பண சேமிப்பு அத்தனையும் முதலீடு செய்து, சொத்து யாவற்றையும் அடமானம் வைத்து முடக்கி “நாடோடி மன்னன்” படத்தை எம்.ஜி.ஆர். தயாரித்தார். “இப்படம் வெற்றி பெற்றால் நான் மன்னன். இல்லையெனில் நான் நாடோடி” என்றுகூட அறிவித்தார். படத்தை எடுத்து முடிந்த தறுவாயில் பாசிட்டிவ் பிலிம் வாங்குவதற்கு 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை. அக்காலத்தில் அது ஒரு பெரிய தொகை. யாரிடமாவது கடன் வாங்கி பணத்தை புரட்டி படத்தை வெளியிடவேண்டிய நிலைக்கு எம்.ஜி.ஆர் தள்ளப்படுகிறார் . வாரி வாரி வழங்கிய அந்த வள்ளலுக்கு இப்படியொரு எதிர்பாராத பணச்சிக்கல்.
‘கெயிட்டி’ திரையரங்கத்தை நடத்தி வந்த ராமச்சந்திர ஐயர்  ஏ.வி.எம் நிறுவனத்தில் பேசி, தேவையான தொகையை வாங்கித் தருவதாக உறுதி யளிக்கிறார்.  இதற்கான பேச்சு வார்த்தையை ஏ.வி.எம் நிறுவனத்திடம் பேச எம்.கே.சீனிவாசன் முன்வந்தபோது எம்.ஜி.ஆர். சற்று நிம்மதி பெருமூச்சு விடுகிறார்..
“கடன் பத்திரத்தில் கையெழுத்து நீங்கள் போட வேண்டாம் அது பின்னர் உங்கள் சொத்துக்கே பிரச்சனையாக வந்துவிடும். நிலைமையை நான் எப்படியாவது சமாளித்துக் கொள்கிறேன்” என்று ஆர்.எம்,வீரப்பன் சொன்னதும் எம்.ஜி.ஆருக்கு மேலும் ஆறுதல். தன்னுடைய “இமேஜ்” எந்த விதத்திலும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது  என்பதில் ஆர்.எம்.வீ.  இந்த அளவுக்கு தன் மீது கரிசனமாக இருக்கிறாரே என்று எம்.ஜி.ஆர். அப்படியே மனம் குளிர்ந்து போகிறார்.
“சோழியன் குடுமி சும்மா ஆடாது” என்பதை அவர் அப்போது அறிந்து வைத்திருக்கவில்லை போலும்.
ஆர்.எம்.வீ.யின் ஆலோசனை எம்.ஜி.சக்கரபாணியின் மனதிலும் சரியாகவே படுகிறது. இக்கட்டான இச்சூழ்நிலையில் கடன் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டு தன் அருமை தம்பி சிக்கலில் மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதில் அவரும் முன்ஜாக்கிரதையாக இருக்கிறார்.
இப்படிப்பட்ட ஒரு தருணத்தைத்தான் ஆர்.எம்.வீ. ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். இந்த இக்கட்டான சூழ்நிலையை தனக்கு சாதகமாக ஆக்கிக்கொள்ள ஒரு திட்டத்தை வகுக்கிறார். அது எப்படிப்பட்ட திட்டம் என்பது சற்று நேரத்திற்குள் உங்களுக்குத் தெரிய வரும்
இதற்கிடையில், ஏ.வி.எம். நிறுவனத்திடம் பேச்சு வார்த்தை நடத்திய எ,ம்.கே.சீனிவாசன் எம்.ஜி.ஆரின் கையெழுத்து இருந்தால் மட்டுமே கடன் கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை விளக்குகிறார். எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் தரப்பினருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.  படம் வெளியாவது தாமதமானால் பலவிதத்தில் பிரச்சினைகளை சமாளிக்க வேண்டிவருமே என்று எம்.ஜி.ஆர். கலங்குகிறார்.
‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தின் இலங்கைங்கான வெளியீட்டு உரிமையை “சினிமாஸ் லிமிடெட்” என்ற கம்பெனிக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்த ஒப்பந்தத்தைக் “Surity”யாக காண்பித்து அந்த நிறுவனத்திலிருந்து வரவிருக்கும் தொகையை அப்படியே ஏ.வி.எம் நிறுவனத்திடம் கொடுத்து விடுவது என்றும், அந்த கடனுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் ஒப்பந்தத்தின் மூலப்பிரதியை அவர்களிடமே அடமானம் வைத்து விடுவது என்றும் முடிவாகிறது. இந்த திட்டத்தை ஆர்.எம்.வீரப்பன்தான் முன்மொழிகிறார். இந்தப் பிரச்சினையை சுலபமாக தீர்க்கும் வகையில் புத்திசாலித்தனமாக இப்படியொரு அற்புதமான ஆலோசனையை வழங்கிய அவரை எம்.ஜி.சகோதரரர்கள் இருவரும் வெகுவாக பாராட்டுகின்றனர்.
ஒப்பந்தத்தில் ஆர்.எம்.வீரப்பனும் எம்,.ஜி.சக்கரபாணியும் கையெழுத்துப் போடுவது என்றும் அதுதான் எம்.ஜி.ஆருக்கு பாதுகாப்பு என்றும் வீரப்பன் எம்.ஜி.ஆரை சம்மதிக்க வைக்கிறார். எம்.கே.சீனிவாசனும் இந்த முறையான திட்டத்திற்கு ஏ.வி.எம்.நிறுவனம் நிச்சயம் சம்மதம் கிடைத்துவிடும் என உறுதியளிக்கிறார்.
பணம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை வந்துவிடுகிறது. படச்சுருள் வாங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உடனே எம்.ஜி.ஆர்.  ஆரம்பித்து விடுகிறார். பட வெளியீட்டுக்கான தேதியும் அறிவிக்கப்படுகிறது.
ஏ.வி.எம். நிறுவனத்திற்கு பணம் வாங்கச் சென்றபோது எதிர்பாராத வேறொரு சிக்கல் முளைக்கிறது. காரணம் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் சார்பில் இலங்கையின் “சினிமாஸ் லிமிடேட்” நிறுவனத்துடன் செய்துக்கொண்ட ஒப்பந்தத்தில் எம்.ஜி.ஆரின் கையெழுத்துதான் இடம் பெற்றிருந்தது. எனவே இந்த கடன் பத்திரத்திலும் எம்.ஜி.ஆர்.தான் கையெழுத்திட்டாக வேண்டும் என்று ஏ.வி.எம்.நிறுவனத்தினர் கறாராகச் சொல்லிவிடுகின்றனர்.
வேறுவழியின்றி எம்.ஜி.ஆரும் ஒப்பந்தத்தில் தானே கையெழுத்துப் போட தயார் என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறார். பெரும் எதிர்பார்ப்புகளோடு ரசிகர்கள் காத்திருக்கும் நாடோடி மன்னன் படத்தை உரிய காலத்தில் வெளியிட்டாக வேண்டுமே என்ன செய்வது?
ஊஹும். ஆர்.எம்வீ. தன் நிலைபாட்டில் உறுதியாக இருப்பதோடல்லாமல் மீண்டும் எம்.ஜி.ஆரை உரிமையுடன் தடுத்துவிடுகிறார். “பணம் திருப்பிக் கொடுப்பதில் ஏதாவது பிரச்சினை ஆகிவிட்டால் உங்களுடைய எதிர்காலமே பாழாகிவிடும். உங்களுக்கு ஏதாவதொன்று என்றால் அதை நான் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. பிரச்சினையை நானே சமாளித்துக் கொள்கிறேன். கவலையை விடுங்கள். நீங்கள் ஒருபோதும் கையெழுத்து போட்டு சிக்கலில் மாட்டிக் கொள்வதை நான் அனுமதிக்க மாட்டேன்” என்று ஆர்.எம்.வீ. கூறியதும் எம்.ஜி.ஆர். மனம் நெகிழ்ந்து போய் விடுகிறார். “இப்படி ஒரு விசுவாசியை அடைவதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்று அவர் மனதிற்குள் நினைத்திருக்க வேண்டும்,
இப்பொழுதுதான் ஆர்.எம்.வீரப்பனின் கிரிமினல் மூளை வேலை செய்ய ஆரம்பிக்கிறது, சாணக்கியத்தனமாக ஒரு திட்டத்தை தீட்டுகிறார்.
“எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் என்றிருக்கும் கம்பேனியின் பெயரை உடனே ‘எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்று பெயர் மாற்றுங்கள் மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று எம்.ஜி.சக்கரபாணிக்கு ஆலோசனை வழங்குகிறார். பெரியவரிடம் கலந்தாலோசித்த பிறகு “இவ்விஷயத்தில் எது நல்லதோ அதன்படி செய்யுங்கள்” என்று கூறி முழு அதிகாரத்தையும் எம்.ஜி.ஆர். அவருக்கே அளித்து விடுகிறார்.
இந்த தருணத்தை எப்படி அவர் தனக்கு சாதகமாக ஆக்கிக் கொள்கிறார் என்பதைப் பாருங்கள். “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடேட்” என்ற புதிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக தன் பெயரை இணைத்துக்கொண்டதோடு மற்றொரு இயக்குனராக எம்.ஜி.சக்ரபாணியின் பெயரை முறைப்படி பதிவு செய்துக் கொள்கிறார்.
“இலங்கையைச் சேர்ந்த  ‘சினிமாஸ் லிலிடேட்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டபோது எங்களது படக்கம்பெனியின் பெயர்  ‘எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்’ என்றிருந்தது. அச்சமயத்தில் அதன் நிர்வாக இயக்குநராக எம்.ஜி.ஆர் இருந்தார். அதனால்தான்  ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்து இடம்பெற்றிருந்தது. இப்போது கம்பெனியின் பெயர்  “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடேட்” என்று மாற்றப்பட்டுவிட்டது. அதன் நிர்வாக இயக்குநராக நானும் இன்னொரு இயக்குநருமான சக்ரபாணியும் இருக்கிறோம் எனவே நாங்கள் இருவரும் கையெழுத்துப் போட்டாலே சட்டப்படி இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகும்” என்று ஏ.வி.எம்.நிறுவனத்தாரிடம் வாதிட்டு அதில் வெற்றியும் காண்கிறார்.. கம்பெனியின் பெயர்மாற்றம் தொடர்பான அத்தனை கோப்புகளையும் ஒப்படைக்கிறார். ஆர்.எம்.வீ. எடுத்து வைக்கும் வாதம் சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்கிறது. அவர்களால் மறுப்பேதும் சொல்ல முடியவில்லை
ஒப்பந்தம் கையெழுத்தாகி பணம் கைமாறியபின் ஏ.வி.எம். நிறுவனத்தின் அதிபர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் சிரித்துக் கொண்டே சொல்கிறார்.  “கடன் பத்திரத்தில் எம்.ஜி.ஆரின் கையெழுத்தை எப்படியாவது வாங்கிவிடவேண்டும் என்று நாங்களும் எவ்வளவோ முயற்சித்தோம். கடைசியில் நீங்கள்தான்  ஜெயித்தீர்கள்” என்று ஆர்.எம்.வீ.யின் முதுகில் செல்லமாகத் தட்டி ‘சபாஷ்’ சொல்கிறார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸின் முழு அதிகாரமும் ஆர்.எம்.வீ.யின் கைக்கு வந்து விடுகிறது. “ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை” ஓட்டியது போல் நாளடைவில் எம்.ஜி.சக்கரபாணியையும் நிர்வாகத்தில் தலையிடாதவண்ணம் ஒதுக்கி வைத்து விடுகிறார்.
இத்தனை சாணக்கியத்தனம் நிறைந்த ஆர்.எம்.வீரப்பனுக்கு ரவீந்தரை பெட்டிப் பாம்பாக ஆக்கி, அடக்கி ஆளத் தெரியாதா என்ன? ரவீந்தரை இவர் மட்டம் தட்டி வைத்திருக்கின்ற விஷயம் எம்.ஜி.ஆருக்கு தெரியாமல் இல்லை. நிர்வாகம் அனைத்தும் ஆர்.எம்.வீயின் கைகளில் இருந்ததால் அவர் பேச்சை கேட்க வேண்டிய சூழ்நிலை அவருக்கு.

அரசியல் தகிடுதத்தம்

எம்.ஜி.ஆர். - கருணாநிதி
2010-ஆம் ஆண்டு ஆர்.எம்.வீரப்பன் மகளின் திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட கருணாநிதி மேடையில் சொன்ன செய்தி நமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது.
“மறைந்தும் மறையாத என் ஆருயிர் நண்பர் எம்.ஜி.ஆரின் அணுக்கத் தொண்டர்களில் ஒருவராக விளங்கியவர் ஆர்.எம்.வீ. 1945-ல் பெரியாரின் குடியரசு பத்திரிகையில் துணை ஆசிரியராக பணியாற்றச் சென்ற காலந்தொட்டு எனக்கும் ஆர்.எம்.வீ.க்கும் நட்பு தொடர்கின்றது. அவர் என்னை எதிர்ப்பதாக காட்டிக் கொண்ட காலத்திலேயும் என்னிடத்தில் கள்ளக் காதல் கொண்டவர். தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையில் சில பிரச்சினைகள் தோன்றும் போதெல்லாம் ஆர்.எம்.வீ.யிடமிருந்து எனக்கு ரகசிய கடிதம் வரும்”
எம்.ஜி.ஆருக்கு விசுவாசியாக வேஷம் போட்டுக் கொண்டிருந்த ஆர்.எம்.வீ. அதேசமயத்தில் அவருடைய அரசியல் எதிரியாக விளங்கிய எதிரணி தலைவரிடத்திலும் எப்படி விசுவாசமாக இருந்தார் என்பதை அறிந்து வியந்து போகிறோம். “கள்ளக்காதல்” என்று சரியான சொற்பதத்தை பயன்படுத்தியிருக்கும் கலைஞரின் மொழித்திறமையையும் நாம் போற்றுகிறோம்.
எம்.ஜி.ஆர்  - வீரப்பன்

எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கிய மற்றொரு விசுவாசியான ரவீந்தரிடம் இப்படியொரு இரட்டை வேடத்தை நம்மால் காண இயலாது. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி கபட நாடகம் ஆடித்திரியும் மனிதர்களுக்குத்தான் யோகம் போலும். இது எம்.ஜி.ஆருக்கு செய்யப்பட்ட பச்சைத் துரோகம் என்றே நான் நினைக்கிறேன்.
1981-ஆம் ஆண்டு  திருச்செந்தூர் கோயில் விடுதியில் கோவில் அதிகாரி சுப்பிரமணியப்பிள்ளை மர்மமான முறையில் இறந்துக் கிடந்தார்.
அப்போது ஆர்.எம்.வீரப்பன்  அற நிலைய துறை அமைச்சராக பதவி வகித்தார். கோவில் அதிகாரி பணத்தை திருடி மாட்டிக் கொண்டதாகவும், அதனால் அவர் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துக் கொண்டார் எனவும்  ஆர்.எம்.வீ. அறிவித்தார்.
அப்போது திமுக தரப்பில் விடுத்த அறிக்கை எல்லோருக்கும் ஞாபகமிருக்கும். உண்டியலில் இருந்த வைர வேலைத் திருடிக் கொண்டது வீரப்பன்தான் என்றும் அதைத் தட்டிக் கேட்ட நேர்மையான அதிகாரி சுப்பிரமணியப்பிள்ளை கொலை செய்யப்பட்டதாகவும் பகிரங்கமாக கருணாநிதி குற்றம் சாட்டினார். இதை மக்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க மாட்டார்கள்.
அதுமட்டுமல்ல, ஆர்.எம்.வீக்கு எதிராக போர்கொடி தூக்கி, நீதி கேட்டு நெடும் பயணமாக மதுரையிலிருந்து திருச்செந்தூருக்கு 150 கிலோ மீட்டர் நடந்து சென்று மக்களிடம் நியாயம் கேட்டதும் நம்ம கருணாநிதிதான்.
இப்பொழுது ஆர்.எம்.வீ.யின் நட்பைப் பாராட்டி கருணாநிதி நற்சான்றிதழ் வழங்குவது நகைப்பிற்கிடமாகத் திகழ்கிறது. கள்ளக்காதல் நற்குணமெல்லாம் பார்க்காது போலும்.
பகுத்தறிவாதியாக, பெரியாரின் சீடராகத் திகழ்ந்த சுயமரியாதைச் சீலர் ஆர்.எம்.வீ “ஆழ்வார்கள் ஆய்வு மைய”த்தின் தலைவராக பதவி வகித்தார். எந்த இராமனை கடுமையாக விமர்சித்து “கம்ப ரசம்” எழுதினாரோ அந்த அண்ணாவின் அன்புத் தம்பி என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட ஆர்.எம்.வீ.தான் பிற்காலத்தில் நாகூர் மு.மு.இஸ்மாயிலுக்குப் பிறகு கம்பன் கழகத் தலைவராக பதவியில் அமர்ந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  கருணையே வடிவான (?) அவரை இப்பொழுது எல்லோரும்  “அருளானந்தர்” என்றுதான் அழைக்கிறார்கள். நாளை சுவாமி அருளானந்தாவாகக் கூட அழைக்கப்படலாம்.
1984-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகையில், கட்சிக்காரர்களைத் ஒன்று திரட்டி தனக்கென்று ஒரு கோஷ்டியை வளர்த்துக் கொண்டு தந்திரமாக தமிழ்நாட்டின் நிர்வாகத்தையே கையில் எடுத்துக்கொண்ட ‘ராஜகுரு’தான் இந்த ஆர்.எம்.வீ.
1981-ஆம் ஆண்டு மதுரையில் நடந்த ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டின்போது  “காவிரி தந்த கலைசெல்வி” என்னும் நாட்டிய நாடகத்தில் நடிக்க சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த ஜெயலலிதாவை அழைத்து வந்து அவருடைய அரசியல் பிரவேசத்திற்கு வித்திட்டவர் அப்போது செய்தி விளம்பரத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பன்தான். வேலியில் போன ஓணானை எடுத்து வேட்டியில் விட்டுக் கொண்ட கதைதான் என் ஞாபகத்திற்கு வந்தது.
அதேசமயம் எம்.ஜி.ஆர், அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து திரும்பி வருகையில், அப்போது உளவுத்துறை ஐ.ஜி.யாக இருந்த, மோகன்தாசிடம் சொல்லி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆரை பார்க்கக் கூடாத வண்ணம் அவரை விமான நிலையத்திலிருந்தே திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்ததும் ஆர்.எம்.வீரப்பன்தான்.
1996-ஆம் ஆண்டு “பாட்சா படத்தின் வெள்ளி விழாவின்போது தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் வளர்ந்துவிட்டது என்று ரஜினி பேசியதை மறுப்பேதும் கூறாமல் ரசித்துக் கொண்டிருந்தார் என்பதற்காக அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் பதவி பறிக்கப்பட்ட சம்பவத்தையும் நம்மால் மறக்க இயலாது.
ஆர்.எம்.வீ.யைப் பொறுத்தவரை அவர் யாருக்கு விசுவாசமாக இருந்தார் அல்லது கொள்கைப் பிடிப்போடு இருந்தார் என்று யாரும் கூறிட முடியாது. ‘பெரியாரின் பாசறையிலிருந்து வந்தவன் நான்’, ‘அண்ணாவின் அன்புத்தம்பி நான்’ என்று பறைசாற்றிக் கொண்ட அவர் எப்படியெல்லாம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டார் என்பதை நாடறியும்.
ஆர்.எம்.வீ.யின் திருவிளையாடல்  ரவீந்தரின் வாழ்க்கையில் எப்படியெல்லாம் இடையூறாகத் திகழ்ந்தது என்பதை பின்னர் பார்ப்போம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...