Thursday, December 25, 2014

ஊழியர்களை பலி கொடுக்கும் டி.சி.எஸ்சின் தர மேம்பாடு

கவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கல்சன்டன்சி சர்வீஸ் (டி.சி.எஸ்) ஆட்குறைப்பை ஆரம்பித்திருக்கிறது. ஆட்குறைப்பு என்று அறிவிக்காமல் மறுசீரமைப்பு என்ற பெயரில் இதனை செய்துவருகிறது. இதன் மூலம் சுமார் 25,000 பணியாளர்கள் வெளியேற்றப்படுகிறார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஆன்சைட் ஊழியர்கள் என்று அழைக்கப்படும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட ஊழியர்களும் இதில் அடக்கம்.
டி.சி.எஸ் ஆட்குறைப்பு
வரும் காலங்களில் மற்ற ஊழியர்கள் தலையிலும் கைவைக்கப்படலாம்.
மாதம் சில லட்சங்களை சம்பளமாக பெறக்கூடிய மேல்மட்ட ஊழியர்கள் முதலில் குறிவைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆலோசகர் (கன்சல்டன்ட்), இணை ஆலோசகர் (associate consultant), துணைத் தலைவர் (vice prisident) பதவியில் இருப்பவர்கள் இதனால் உடனடியாக பாதிக்கப்படுவார்கள். வரும் காலங்களில் மற்ற ஊழியர்கள் தலையிலும் கைவைக்கப்படலாம்.
நீக்கப்பட வேண்டியவர்களின் பட்டியல் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விட்டதாகவும் அதை பல்வேறு கட்டமாக பிப்ரவரி மாதம் வரை அறிவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஊழியர்கள் மத்தியில் பேசப்படுகிறது. இதனால் தினமும் காலை அச்சத்துடனேயே மின்னஞ்சலை திறக்கிறார்கள், மேல்மட்ட ஊழியர்கள்.
கீழ்மட்ட ஊழியர்களிடையே பீதியும் நிச்சயமற்ற தன்மையும் பலமடங்கு அதிகரித்துள்ளது. பலர் வங்கித் தேர்வுக்கான தயாரிப்பில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார்கள்.
ரூ.64,991 கோடி மதிப்பிலான டி.சி.எஸ் 3.13 லட்சம் மேற்பட்ட ஊழியர்களைக்கொண்டுள்ளது. செப்டம்பருடன் முடிந்த காலாண்டில் மட்டும் ரூ 5,244 கோடி லாபமாக ஈட்டியுள்ளது. இது கடந்த காலாண்டைவிட ரூ 324 கோடி குறைவாக இருப்பினும் சென்ற ஆண்டின் இதே காலாண்டைவிட ரூ 611 கோடி அதிகம். ஆயினும், மேலும் மேலும் லாபத்தை பெருக்கும்  நோக்கத்திற்காக பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை வெளியேற்றிவருகிறது, டி.சி.எஸ்.
அப்ரைசல் எனப்படும் பணித்திறன் கணக்கீட்டின் அடிப்படையில் தான் ஊழியர்கள் நீக்கப்படுகிறார்கள் என்று பொதுவாக சொல்லப்படுகிறது. இந்த பணித்திறன் கணக்கீடே ஒரு ஏமாற்று வேலை என்பது தான் உண்மை.
டி.சி.எஸ் ஆட்குறைப்பு
படம் : நன்றி http://profit.ndtv.com
ஒரு மேலாளரின் கீழ் வேலை செய்பவர்கள் அனைவமே சிறப்பாக வேலை செய்தால் கூட அவர்களை தரம் பிரித்து புள்ளிகள் அளிக்கப்படுகின்றன. இத்தனை ஊழியர்களை திறன் குறைந்தவர்கள் என்று கூறி குறைந்த புள்ளிகள் அளிக்கப்படவேண்டும் என்பது விதி. ஆக தினமும் ஒன்பது மணிநேரம் வேலை செய்து, கொடுக்கப்பட்ட வேலையை முடித்தாலும் கூட ஒருவர் குறைந்த புள்ளிகளைத்தான் பெறமுடியும். யாராவது ஒரு சிலர் மட்டும்தான் அதிக புள்ளிகள் பெறமுடியும். ஆக அப்ரைசல் என்பதே மோசடி என்பது தான் உண்மை. அந்த மோசடி அப்ரைசலின் அடிப்படையில் தான் தற்போது பணிநீக்கம் செய்கிறார்களாம்.
இது குறித்து அந்நிறுவனத்தின் ஊழியர்கள் சிலரிடம் பேசியபோது
“ஒவ்வொரு துறைவாரியாகவும், புராஜெக்ட் வாரியாகவும் இத்தனை இத்தனை ஊழியர்களை நீக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்கள். இதன்படி எச்.ஆர் நீக்கப்பட வேண்டிய ஊழியர்களின் பட்டியலை தயாரித்திருக்கிறார்கள். இப்படி எண்ணிக்கையை முடிவு செய்துவிட்டு அதற்கு ஆட்களை தேடுகிறார்கள். திறமையான ஊழியர்களும்தான் நீக்கப்படுகிறார்கள். தற்போது ஒவ்வொருக்காக மெயில் வருகிறது. அவர்கள் மூன்று மாதச் சம்பளத்துடன் உடனடியாக வெளியே அனுப்பபடுகிறார்கள்.”
வேலைபறிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள டி.சி.எஸ் செய்தி தொடர்பாளர், “எங்களைப் போன்ற திறனை முன்னிறுத்தும் நிறுவனங்களில் தரமேம்பாடு என்பது தொடர்ந்து நடக்கும் ஒன்றுதான். அச்சமயங்களில் ஊழியர் எண்ணிக்கை குறைவதும் சகஜமானதுதான். கருத்து கூறும் அளவுக்கு இது ஒரு சிறப்பான விசயம் இல்லை.” என்று திமிராக தெரிவித்துள்ளார். அதாவது, தர மேம்பாடு என்பது ஊழியர்களை கழித்துக் கட்டுவது, அதிக செலவு பிடிக்கும் ஊழியரை நீக்கி விட்டு குறைந்த  ஊதியத்தில் ஆள் அமர்த்திக் கொள்வதுதான்.
அதன்படி சுமார் 55,000 பேரை புதிதாக வேலைக்கு எடுக்கப்போவதாகவும் அறிவித்திருக்கிறார், செய்தித் தொடர்பாளர். ஆட்குறைப்பினால் ஏற்படும் பற்றாக்குறையை போக்க குறைந்த ஊதியத்தில் புதிய பணியாளர்களை எடுக்கப்போகிறார்கள். காரணம், வெளியேற்றப்படுவர்களின் ஊதியத்தை விட எடுக்கப்படுவர்களின் ஊதியம் பல மடங்கு குறைவல்லவா!
இது எதிர்பார்த்த ஒன்றுதான்.
டி.சி.எஸ் ஆட்குறைப்பு
“இது ஒன்-டூ-ஒன் டிஸ்கசன் அல்ல. பேசுவதற்கு எதுவுமில்லை” என்று கூறி வேலைநீக்கத்துக்கான காரணத்தைக் கூட தெரிவிப்பதில்லை.
தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் திறக்கப்பட்டிருக்கும் பொறியியல் கல்லூரிகளில் பயின்றவர்கள் பல லட்சம் பேர் உழைப்புச் சந்தையில் குவிந்திருக்கிறார்கள். எவ்வளவு குறைந்த சம்பளத்திற்கும் வேலை செய்ய தயார் என்பது அவர்களது நிலைமை. வாங்கிய கல்விக்கடனை எப்படியாவது அடைக்க வேண்டும் என்று திக்குத் தெரியாமல் தவிக்கிறார்கள் இந்த மாணவர்கள். வேலைக்கு எடுக்கப்படவிருக்கும் இவர்களும், ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் கல்விக்கடனை அடைத்து, வீட்டுக்கடன் வாங்கும் நிலைக்குவரும்போது நீக்கப்பட்டு விடுவார்கள்.
இந்த ஆட்குறைப்பு டி.சி.எஸ் உடன் முடியவில்லை. விப்ரோ மற்றும் இன்போசிஸ் நிறுவனங்கள் ஏற்கனவே இதைச் செய்ய ஆரம்பித்துவிட்டன.
“நீங்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் விரும்பினால் உடனடியாக இப்போதே வேலையை விட்டு நின்றுவிடலாம். இல்லை மூன்று மாதம்வரை பணிபுரியலாம்.” என்று எச்.ஆர் சமபந்தப்பட ஊழியர்களிடம் தெரிவிப்பார். ஊழியர்கள் மறுபேச்சு பேசாமல் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏதேனும் கூற முற்பட்டால், “இது ஒன்-டூ-ஒன் டிஸ்கசன் அல்ல. பேசுவதற்கு எதுவுமில்லை” என்று கூறி வேலைநீக்கத்துக்கான காரணத்தைக் கூட தெரிவிப்பதில்லை.
மூன்று மாத நோட்டீஸ் கூட வேலை நீக்கம் தொடர்பான அலுவலக நடைமுறைகளை செய்ய மட்டுமே. ஐ.டி கார்டுகள் பிடுங்கப்பட்டுவிடும். இனி வாயிற்காப்பாளர் உள்ளே அனுமதிக்கமாட்டார். மன உழைச்சலும் விரக்தியுமாக பலர் வீட்டிற்குத் திரும்புகின்றனர். தங்களுக்கு என்றைக்கும் அழைப்புவருமோ என்று பலர் விரக்தி, மன உளைச்சலுடன் காத்திருக்கிறார்கள்.
வேலை இழந்தவர்கள் பணித்திறன் இல்லாதவர்கள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். இதனால் இனி வேலைதேடும் நிறுவனங்களின் நேர்முகத்தேர்வில் ‘தன்னுடைய தவறு’ குறித்து விளக்கமளிக்க வேண்டும்.
டி.சி.எஸ் ஆட்குறைப்பு
டி.சி.எஸ். வேலை நீக்கம் செய்யப்படும் ஊழியருக்கு தருவதாக வாட்ஸ்-அப்-இல் சுற்றுக்கு விடப்பட்டுள்ள கடிதத்தின் நகல்.
வேறு எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் இருப்பவர்கள் தங்கள் கவனத்தை சனிப்பெயர்ச்சியின் பக்கம் திருப்பியிருக்கிறார்கள். மோடிவந்தால் வளர்ச்சி வந்துவிடும் விவாதித்தவர்கள் இப்போது தங்களை சனி பிடிக்காமல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். நாட்டையே மறுகாலனியாக்கத்தின் ஏஜென்டான மோடி என்ற சனி பிடித்து ஆட்டும் போது ஐ.டி வர்க்கம் மட்டும் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்.
வேலை இழந்ததைவிட கொடுமையானது, அதை எதிர்த்து கேட்க நாதியில்லாமல் அடங்கியிருப்பதுதான். நீக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் எதிர்த்து பேசுவதற்கு பல கேள்விகள் நிச்சயமாக இருந்திருக்கும். இந்த வேலையை நம்பி வாங்கிய வீட்டுக் கடன்கள், கிரெடிட் கார்டு பில்கள், திருமணங்கள் என பல விசயங்கள் கண்முன்னால் வந்து மறைந்திருக்கும். ஆனால் எதுவும் செய்யும் நிலையில் அவர்கள் இல்லை என்பது தான் உண்மை.
எழுத்துக்கூட்டி படிக்கக்கூட தெரியாத தொழிலாளர்கள் தங்கள் மீதான நிறுவனத்தின் அடக்குமுறைகளை எதிர்த்து போராடுகிறார்கள். குறைந்தபட்சம் தங்கள் சுயமரியாதையை காத்துக்கொள்கிறார்கள். அதற்கு காரணம் அவர்கள் சங்கமாக அணிதிரண்டிருப்பதுதான். தொழிலாளர்களில் ஒரு அங்கம் தான் நாம் என்பதை ஐ.டி ஊழியர்கள் உணரவேண்டிய தருணம் இது.
அநீதியான இந்த ஆட்குறைப்பு ஐ.டி. துறை ஊழியர்கள் சங்கமாக அணிதிரள்வதுதான் தேவையை முன்னிலும் அதிகப்படுத்தியிருக்கிறது. இன்று மேல்மட்ட ஊழியருக்கான குறி நாளை அனைவர் மீது திருப்பப்படும் என்பது உறுதி. இப்பொழுது போராடாவிட்டால் எப்பொழுதும் போராட முடியாது. கிடைத்திருக்கும் இந்த அவகாசத்தில் சங்கமாக அணிதிரள்வீர்.

No comments:

Post a Comment