பூனை குறுக்கே நடந்தால் அபசகுனம். வடக்கே தலை வைத்து படுத்தால் உடல் நலத்திற்கு கேடு. இவ்விரண்டு சமூக நம்பிக்கைகளை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். எனக்களிக்கப்பட்ட இவற்றின் அன்றாட ‘விளக்கங்களும்’, சார்ந்த என் அறிவியல் தேடல்களையும், புரிதல்களையும் அனுபவக்கல்வி தடவி இக்கட்டுரையில் விவரிப்போம். முக்கியமாக மிருகங்களின், மனிதனின் மேக்னெட்டோரிஸப்ஷன், காந்தவிசையேற்புத்திறன் பற்றி அறிமுகம் செய்துகொள்வோம். கடைசிபக்கத்தை முதலில் வாசித்தபின்னரே மர்மக்கதை மிச்சத்தை வாசிப்பவர்களுக்கு: மேலிரண்டு நம்பிக்கைகளை மேக்னெட்டோரிஸப்ஷன் கொண்டு நிரூபிக்கமுடியவில்லை என்பதே இக்கட்டுரையின் கடைசிபக்கம்.
பூனையில் தொடங்குவோம். பூனைகள் எகிப்தியர்களால் வழிபடப்பட்டது. பூனைக்கு பல ஆயுள்கள், மறுவாழ்வுகள் (பிறவிகள்), என்று நம்பப்பட்டது. இந்நம்பிக்கையின் சமூகதாக்கத்தை இன்றும் உணரலாம். வி.ஐ.பி.க்கள் கோரும் ‘ஜெட்-க்ளாஸ் செக்கூரிட்டி’ கருப்பு பூனைகளுக்கு புல்லட் புரூஃப் வெஸ்ட் தயவில் ஆயுள் கெட்டி. எவரெடி பாட்டரியின் உருளைபரப்பில் உறையும் கருப்புபூனைக்கும் ஒன்பது ஆயுள்.
பூனையின் மீ-ஆயுள் சமூக நம்பிக்கைத்தான். ஆனால் அறிவியல் சிந்தையிலும் பரிசோதித்து ஒப்புக்கொள்ள இதில் விஷயம் உண்டு. மாடியிலிருந்து கீழே கட்டாந்தரையில் விழுந்தால் நமக்கு எலும்புகள் நொறுங்கிவிடலாம். சிறுவயதில் எனக்கு இதில் உடன்பாடில்லை. காற்றினூடே விழுந்து, தரைக்கருகில் சட்டென காலை நீட்டி, ஊன்றி, நடந்துசென்றுவிடலாமே. விழுந்துபார்க்காமல் கப்ஸா விடுகிறார்கள் என்றிருந்தேன். வீட்டுத் திண்ணையில் இருந்து ரோட்டில் விழுந்து தோள் எலும்பு முறியும்வரை (காசி டாக்டர் போட்ட மாவுக்கட்டோடு, தாத்தா முதுகில் கொடுத்ததுதான் முறிவை குணமாக்கியது).
ஆனால் பூனைக்கு இப்படியில்லை. திண்ணையென்ன, மாடியென்ன, மேல் மாடியிலிருந்து கூட விழலாம். தப்பிவிடும். மேனகா என்று பெயருடன் அக்கா யாரும் சுற்றுவட்டாரத்தில் இல்லை என்று உறுதிசெய்துகொண்டு மொட்டை மாடியின் திட்டில் நடந்துகொண்டிருந்த அடுத்த வீட்டு பூனையை ’அத்திரிபச்சா…’ என்று அலறியபடி ஓடி, குவியலாக கீழே ரோட்டில் தஞ்சம்புகவைத்து சோதித்திருக்கிறேன். சிறுவயதில், என் எலும்பு முறிந்த அதே தாத்தா வீட்டில். மருட்சியுடன் எழுந்து, சிலிர்த்துக்கொண்டு, சிறிய ’மியாவுடன்’, ஜம்மென்று நடந்து அடுத்தாத்துக்குள் போய்விட்டது.
இதை ஆராய்ந்திருக்கிறார்கள். ஃபெலைன் பெஸிமெட்டாலஜி என்று. தொன்னூறுகளின் தொடக்கத்திலேயே நின்றுபோய்விட்ட ’சயின்ஸ் டுடே’ மாதாந்த்ரியில் என்றோ ஒரு கட்டுரை வந்தது. அட்டைப்படம், நிர்வாண பூனையழகி (கேட்-வுமன் இல்லை, வுமன்-காட்) மரத்திலிருந்து டைவ் அடிப்பதின் ’ஸ்லோமோ ஷாட்ஸ்’. முதல் மாடியிலிருந்து விழும் பூனையைக்காட்டிலும், ஏழாவது மாடியிலிருந்து தரையில் விழும் பூனை அதிக சேதாரமின்றி தப்பிவிடும் வாய்ப்பு அதிகம் என்று பௌதீகஸ்தர்கள் நிறுவியுள்ளனர். காற்றின் வழியே விழுகையில் பூனை பாரசூட் போல தன் உடலை வளைத்து கால்களைப்பரப்பி விரித்துக்கொள்கிறதாம். காற்றின் உராய்வையும், குடை போன்ற வடிவத்தின் கீழ் மேல்புறங்களின் அழுத்த வித்தியாசங்களினாலும் கிட்டத்தட்ட மிதந்தவாறே தரையை அடைகிறது. தலைகுப்புறத் தள்ளிவிட்டாலும் சுதாரித்து இந்த ’பாரசூட் நிலையை’ அடைந்துவிடுமாம். முதல் மாடியிலிருந்து தள்ளிவிட்டால், சுதாரித்துகொண்டு இவ்வாறு பாரசூட் போல விழுவதற்குள் தரையை தொட்டுவிடுவதால் அடி பலமாக வாய்ப்பு அதிகம். இதேபோல்தான் பறக்கும் அணிலும் அதீதமாய் அடிபடாமல் மரத்துக்கு மரம் தாவுகிறதாம்.. எப்படியோ, நான் மனிதனால் செய்யமுடியும் என்று நினைத்ததை, பூனை செய்கிறது. எகிப்தியர்களின் சமூகநம்பிக்கையும் அறிவியல் சுவாரசியமாகவே வலுவூட்டுகிறது.
இப்படியாப்பட்ட பூனை நாம் காரியமாய் போகையில் குறுக்கே வந்தால் ஆகாது என்று சமூக நம்பிக்கை வைத்திருக்கிறோம். ”சகுனம் சரியில்லை, போற காரியம் ஜெயமாகாது; உள்ளே வா, ஒரு டம்ளர் தண்னி குடிச்சுட்டு போ” என்கிறோம். எப்படி நாம் செய்யப்போகும் காரியத்தை குறுக்கே வருவதால் பூனை கெடுத்துவிடும் என்று இயல்பாய் கேள்விவரும். ”அசமஞ்சம், சொன்னத கேளு, செத்த நாழி கழிச்சு போனா குடியா முழுகிடும்” என்று இயல்பான விளக்கம் அளிக்கப்படும். ”அப்படி பாத்தா, உலகத்துல எல்லா பூனையும் எங்காவது நடந்தாலே, யாருக்காவது குறுக்காத்தான் போய்ண்டிருக்கும். எல்லாருக்கு காரியம் கெட்ருமா? இல்ல கண்ணால பாத்தாதான் கெடுமா?” என்று மேலதிகமாய் எழும் சந்தேகங்களை ”போடா அபிஷ்டு. எதச்சொன்னாலும் நன்னா எதுத்து பேசு.” என்கிற மேலதிக விளக்கம் தெளியவைப்பதும் இயல்பே.
மேற்படி இயல்புகளின்மேல் என் அதிருப்திகளை ’மெட்டாலிக்கா’, ’ஆஸி-ஆஸ்போர்ன்’, ’அயன் மெய்டன்’ என்று கேட்பது மூலம் பதிவுசெய்திருந்த ஒரு சமயம், ஆசார அனுஷ்டானங்களை ஆங்கிலத்தில் கற்பிக்கும் ஒருவர் என் கேள்விக்கு பின்வரும் விளக்கமளித்தார்: உலகமே ஒரு பெரிய காந்தம் இல்லையோனொ. அதுல நீ மாட்டுக்கு நடந்துபோறச்சே பூனை குறுக்க வந்தா, காந்த அலைக்கோடுகளை அது வெட்றது. இதனால, நீ மனசுல நினைச்சுண்டிருக்கிற விஷயம் — அதுவும் மன அலைகள்தானே – வேறமாதிரியாய்ட்றது. புரிஞ்சுதா. எல்லாத்துக்கும் பெரியவா சயிண்டிஃபிக்கா யோசிச்சுவச்சிருக்கா.
இவ்வகை விளக்கங்களை கேட்டவுடன் ஒருகாலத்தில் செய்வதறியாமல் வெகுண்டெழுந்து, பானையில் கவிழ்ந்த ஸ்பீக்கரின் ஒயரை பிடுங்கி ’அயன் மெய்டனை’ வாயடைத்துவிட்டு, சட்டையமாட்டிக்கொண்டு, சமுதாயம் சகித்துகொள்ளும் ஏதாவது ஒரு மினி கெட்டகாரியம் செய்ய வெளியே கிளம்பிவிடுவேன். இன்று ’தெரதீயகராதா…’, என தியாகையருடன், ’(மனத்) திரை விலகாதா’ என மனதினுள் எழுகிறேன்.
ஏனெனில், மேற்படி ‘விளக்கத்திலும்’ நிரூபணவாதத்திற்கு உட்படுத்தமுடிந்த சில கருத்துகள் இருக்கிறது.
பூனை நகர்ந்தால் காந்த அலைகளை வெட்டுமா? மனிதனும் நகர்கையில் இவ்வாறு செய்கிறானா?
அதாவது, ஒரு காந்தத்திலிருந்து வெளிப்படும் காந்த அலைகளை இன்னொரு காந்தத்தினாலோ, அல்லது காந்த விசையினால் உந்தப்படும் இரும்பு போன்ற பொருள்களினாலோ பாதிப்படையச்செய்யமுடியும் என்பதை பௌதீகத்தில், லௌகீகத்தில், நிரூபித்துக்கொண்டுள்ளோம். இதனால், பூமி எனும் காந்தத்தின் காந்தவிசை அலைகளை நகர்ந்தால் பாதிக்கமுடியும் என்கையில், பூனை ஒரு காந்தமா என்று கேட்கலாம். இக்கேள்விக்கான பதிலை நேரடிச் சோதனையில் அறியலாம். செய்தால் மேற்படி விளக்கத்தின் நம்பகத்தன்மை அதிகரிக்கரிக்கிறதா என்றும் தெளியலாம்.
உயிரினங்களுக்கு இருக்கும் காந்தவிசையை பாதிக்கும் குணத்தை மேக்னெட்டோரிஸப்ஷன், காந்தவிசையேற்புத்திறன் என்கிறார்கள். ஒரு காலத்தில் மூட நம்பிக்கை, மொத்தமாக உட்டாலக்கடி, என்றிருந்த மிருகங்களின் காந்தவிசையேற்புத்திறன் பற்றிய ஆய்வுகள் கடந்த இரு பத்தாண்டுகளில் பெருகிவருகிறது.
ஏற்கனவே தேனீக்கள், சலமாண்டர் பல்லிகள், கடல் ஆமைகள், சுறாமீன்கள், சில பறவைகள் என்று பல உயிரினங்கள் காந்தவிசையேற்பிகள் என்று சோதித்து தெளிந்திருக்கிறர்கள். நமக்கு பழக்கமான உதாரணமாக, புறாக்கள் எத்தருணத்திலும் திசைகளை சர்வநிச்சயமாய் அறிந்திருக்கிறது. ”ஹோமிங் பிஜியன்”கள் எங்கு தொடங்கினாலும் உலகின் குறிப்பிட்ட இடத்தை அடைவதில் கில்லாடி. இதற்குக்காரணம் அவைகளுக்கு மூக்கின் உட்புறத்தில் மினி காந்தம் இருக்கிறதாம். அதைக்கொண்டு, உலகின் காந்தவிசை அலைக்கோடுகளின் திசையை புறாக்களால் ’உணர்ந்து’ கணிக்கமுடிகிறது. இதை நிரூபிப்பதற்காக மூக்கிலிருந்து காந்தத்தை உருவிவிட்டு, திசையறிவையிழந்து புறா தடுமாறுவதை நிறுவியிருக்கிறார்கள். மேலும், சக்திவாய்ந்த காந்ததை புறாக்களின் அருகில் வைத்தாலும் திசையறிவில் குழம்பிவிடுகிறதாம். ஆனால் எவ்வாறு உயிரினங்கள் காந்தவிசையை அறிந்து ‘உணர்கின்றன’ என்பது அனைத்து தருணங்களிலும் இன்னமும் முழுவதுமாய் விளங்கவில்லை. இதை ஆராய்வது ஸென்ஸரி பயாலஜி எனும் துறை.
மேக்னெட்டோரிஸப்ஷன் மூன்று வகையாக உயிரினங்களிடம் தோன்றலாம். தூண்டு மின்சாரம் (இண்ட்யூஸ்ட் கரண்ட்), ஃபெர்ரி காந்தவிசை ஈர்ப்பு, மற்றும் காந்தவிசை சூழலில் அயனிகளின் ரசாயன உறவாட்ட ஈர்ப்பு. மூன்று விளைவுகளாலும் சூழலில் (பூமியின்) காந்தவிசை இருப்பதை உயிரினங்கள் அறியலாம். ஒரு விளைவை, சுறாமீனை வைத்து விவரிப்போம்.
அதற்குமுன் தெரிந்துகொள்வதற்கு, நம் பூமி ஒரு காந்தம். ஆனால் அதன் காந்தவிசைவெளியின் (ஜியோமேக்னெட்டிக் ஃபீல்ட்) மதிப்பு மிகக்குறைவு; 0.3 – 0.6 கௌஸ் (30 – 60 டெஸ்லா என்றும் குறிக்கலாம்). ஒப்பீட்டிற்கு, ஃப்ரிட்ஜில் பொருத்தும் சாதா ஸ்டிக்கர் காந்தத்தின் காந்தவிசை மதிப்பு 100 கௌஸ். ஆனால், சிறு காந்தத்தின் வீச்சு (தூரம்) மிகக்குறைவு. பூமியின் காந்தவெளி அயனோஸ்பியருக்கும் மேற்புறம் மேக்னெட்டோஸ்பியர் என்று பெரிய காந்தவிசைக்கோடுகளினாலான ’உருளையாய்’ பூமியை சூழ்ந்துள்ளது. பூமியின் காந்தவிசையினால்தான் மாலுமிகளின் ‘காம்பஸ்’கள் கடலெங்கும் வேலைசெய்து கிட்டத்தட்ட வடக்கை காட்டுகிறது. ஏன் கிட்டத்தட்ட என்றால், காந்த வடக்கு-தெற்கு புலன்கள் பூமியின் சரியான வடக்கு-தெற்கிலிருந்து 11 டிகிரி சாய்ந்துள்ளது. சூரியனிலிருந்து வெளிப்படும் காந்தப்புயல்கள், பூமியின் பரப்பை அண்டாவண்ணம் நம் மேக்னெட்டோஸ்பியர் தடுக்கிறது. ’ஓஸோன் பூச்சும்’ தப்பிக்கிறது. விளைவாய் அல்ட்ரா-வயலட் கதிர்வீச்சிலிருந்து நம்மை காக்கிறது. மேலதிகத் தகவல்கள் விக்கிப்பீடியாவில் இருக்கிறது.
(ஜியோடைனமோ – உலக காந்தவிசைக்கோடுகள் – உபயம்: விக்கிப்பீடியா)
சுறாமீன் இந்த காந்தவிசையை எவ்வாறு உணர்கிறது?
சுறாமீன் ‘தூண்டு மின்சாரம்’ வகையில் காந்தவிசையேற்புத்திறனை வெளிப்படுத்துகிறது என்று 2008 வாக்கில் அனுமானித்துள்ளனர் (ஊர்ஜிதமாகத் இன்னும் தெரியவில்லை). தூண்டு மின்சாரம் பற்றி பள்ளியில் எட்டாவது ஒன்பதாவது அறிவியல் புத்தகங்களில், சார்ந்த பௌதீக பரிசோதனைகளில் அறிந்திருக்கிறோம். “லொரண்ட்ஸ் விசை” அல்லது “ ஃபாரடே விதி” என்று வாசித்திருக்கலாம். பம்பரத்தின் மீது சுற்றப்படும் கயிறுபோல ஒரு உருளையின் மீது நேர்த்தியான அடுக்காய் சுற்றப்பட்ட உலோகக்கம்பிக் கற்றையை காந்தப் பிளவின் இடையே முக்கி முக்கி எடுத்தால் (காந்தவிசைச்சூழலில் நகர்த்துவதால்), கற்றையில் மின்சாரம் தோன்றுவதை. கற்றையின் இருபுறத்தையும் ஒயர்கொண்டு அம்மீட்டர் எனப்படும் மின்சாரத்தை அளக்கும் கருவியில் இனைத்து அதன் முள் ஆடுவதை வைத்து பரிசோதித்து அறிந்திருக்கிறோம். (இங்குhttp://www.metacafe.com/watch/601268/faradays_law_of_induction/ சோதனையை சிறிய கானொளியாய் பார்த்து ஞாபகப்படுத்திக்கொள்ளலாம்.) தூண்டு மின்சாரம், மோட்டார், ஜெனரேட்டர், டிரான்ஸ்ஃபார்மர் என இன்றைய வாழ்வின் பல பொருட்களின் இயங்குவிதிகளின் அடிப்படை.
(சுறாமீன் காந்தவிசையேற்பி – உபயம்: பிஸிக்ஸ் டுடே, சான்றேடு சுட்டி 1)
சுறாமீன் இவ்வகை ‘தூண்டு மின்சாரம்’ கொண்டே உலகின் காந்தவிசையை ’உணர்கிறது’. ஆனால் சொலினாய்டு சுருளை சுற்றிய உருளைக்கு பதில் மின்கடத்தும் ஜெல்லி போன்ற வஸ்து அடங்கிய நுண்ணிய வாய்கால்கள் கொண்டு. சுறாவின் வாயைச் சுற்றி சருமத்தின் பரப்பிலில் மயிர்கண் துளைபோல விரவியிருக்கும் இந்த நுண்ணிய உருளை வாய்க்கால்களின் உள்முனைகள் ’செல்-குழுமத்தில்’ முடிகிறது. இந்த செல்கள் ”ஒரு மீட்டரில் விரவியிருக்கும் 2 மைக்ரோ வோல்ட்” என்கிற மிகச்சிறிதான அளவு ’தூண்டு மின்சாரத்தை’ அளக்கவல்லது. அதாவது, சுறாவின் இவ்வுருளைகள் மிகச்சக்திவாய்ந்த காந்தவிசையேற்பிகளாய் இயற்கையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏனெனில், மிகக்குறைவான விசை மதிப்புடைய (ஏற்கனவே விளக்கினோம்) உலகின் காந்தவிசை ஏற்படுத்தும் மிகச்சிறிய மதிப்புடனான ’தூண்டு மின்சாரத்தை’யே உணரவேண்டுமே.
படத்தில் புள்ளிகள் குறிப்பது சுறாவின் வாயைச் சுற்றி, சருமப்பரப்பில், இருக்கும் அம்ப்யுலா வாய்கால்களுக்கான துளைகள். கோடுகள், உடலை ஊடுருவும் வாய்கால்கள். சுறா நகர்கையில், அதாவது, கடலில் வேகமாக நீந்துகையில், உலகின் காந்தவிசைக்கோடுகளை வெட்டிக்கொண்டே செல்கிறது. சொலினாய்டு உருளை காந்தப் பிளவைக்குள் செய்வதைப்போல. இதனால், சுறாவின் இந்த வாய்க்கால்களில் மிகச்சிறிய அளவில் ‘தூண்டு மின்சாரம்’ உற்பத்தியாகிறது. மயிர்க்கூச்செறிவதைப்போல.
இரண்டாவது படத்தில் சுறாவின் வாயில் இருபுறத்திலிருக்கும் துளைகள் சார்ந்த வாய்க்கால்கள் குறிக்கப்பட்டுள்ளன. சுறா, உலகில் எங்கோ, கடலில், கிழக்காய், நீங்கள் பார்க்கும் படத்தின் பரப்பின் உட்புறம் நோக்கி ’v’ எனும் வேகத்தில் நீந்திக்கொண்டிருக்கிறது என்போம். இதனால் உலகின் வடக்கு-தெற்காய் (‘Bh’ விசையுடன்) ஓடிக்கொண்டிருக்கும் காந்தவிசைக்கோடுகளுடன் குறுக்கிடுவதால், படத்தின் பரப்பின் மீதான செங்குத்தான திசையில் ‘vBh’ எனும் மின்சார விசை தோன்றுகிறது. அதாவது, சுறாவின் வாய்க்கு இருபுறத்தையும் இணைக்கும்படி ‘தூண்டு மின்சாரம்’ பாய்கிறது. சுறாவின் சருமம் ‘மின்-எதிர்ப்பி’ என்பதால் அங்கு வோல்டேஜ் எதுவும் தோன்றுவதில்லை (சுறாவை தொட்டால் ஷாக் அடிக்காது; இருந்தாலும் தள்ளியே இருங்கள்). ஆனால், அம்ப்யூல்களில் உள்ள வாய்கால்களுக்குள் இருக்கும் மின்கடத்தி ஜெல் வஸ்துவில் மின்சாரம் கடத்தப்படுகையில் இரு முனைகளுக்கிடையே அதிக வோல்டேஜ் வித்தியாசம் ஏற்படுகிறது. படத்தில் கவனியுங்கள்.
இப்படி மிகக்குறைவான மதிப்பில் தோன்றும் ‘தூண்டு மின்சாரத்தை’ சுறாவின் செல்-குழுமம் ‘உணர்கிறது’. நீந்தும் வேகத்திற்கு ஏற்ப இந்த மின்சார அளவும் மாறுபடும். அதேபோல, குறிப்பிட்ட இடத்தில் கடலினுள் உலகின் காந்தவிசை மதிப்பைச் சார்ந்தும் இந்த தூண்டு மின்சார மதிப்பு மாறுபடும். இதைத்தான் ’v’ மற்றும் ’Bh’ என்று குறித்துள்ளனர்.
ஆக, சுறா “எலக்ட்ரோரிஸப்ஷன்” (மின்சாரவிசையேற்பு) கொண்டு மேக்னெட்டோரிஸப்ஷன் (காந்தவிசையேற்பு) தோற்றுவித்துக்கொள்கிறது.
நொடிக்கு ஒரு மீட்டர் (மணிக்கு கிட்டத்தட்ட இரண்டு மைல்கள்) வேகத்தில் நீந்தும் சுறா, ஏற்படும் ’தூண்டு மின்சாரத்தினால்’ தன் அம்ப்யுலா செல்-குழுமத்திற்கு அருகில் மீட்டருக்கு 25 மைக்ரோ வோல்ட் மதிப்புடன் வோல்டேஜை பாய்ச்சமுடியுமாம் (சுறாவின் அம்ப்யுலா செல்-குழுமம் 2 மைக்ரோ வோல்ட் மதிப்பையே கண்டுகொள்ளும் என்று முன்பே சொன்னோம்). இட்ந்த ‘உணர்தலை’ வைத்து சுறா சமுத்திரத்தில் நீந்துகையில் திசையை ஒருவாறு அனுமானித்துக்கொள்கிறது.
ஆனால் இப்படி மின்சாரவிசையேற்பியாய் இருக்கும் அனைத்து உயிரினங்களாலும் காந்தவிசையேற்பிகளகவும் செயல்படமுடிவதில்லை. உதாரணமாய், எலக்ட்ரிக்-ஃபிஷ் எனப்படும் ஒரு வகை விலாங்கு மீன். தொட்டால் குதிரையையே மூர்ச்சையாக்கிவிடும் அளவிற்கு ஷாக் கொடுக்கக்கூடிய இதனால், நீந்தும் வேகத்திற்கு, உலகின் காந்தவிசையை ‘உணர’முடிவதில்லை.
பூனைக்கு வருவோம். எப்படிப் பிழிந்து பார்த்தும், புறாவிடம் உள்ள காந்தமோ, சுறாவிடம் கண்ட மேற்படி மின்கடத்தும் ஜெல் வஸ்துவோ பூனைகளிடம் தட்டுப்படவில்லை. அழுத்திப் பிழிந்ததில் சில புனுகு ஈந்தது. சில முனகியது. அவ்வளவுதான்.
பூனைகள் காந்தவிசையேற்பிகள் இல்லை. அவைகளால் விளக்கிய மூன்று விதங்களிலும் உலகின் காந்தவிசையை (அல்லது, அவைகளின் அருகில் நம்மால் வைக்கப்படும் காந்தத்தின் விசையை) ‘உணர’ முடியாது. அதனால், பூனைகள் நடக்கையில், நமக்கு குறுக்காக வருகையில் உலகின் காந்தவிசைக்கோடுகளை பாதிப்பதில்லை. அவ்வகையில், நம்மையும்.
உலகெங்கிலும் பூனையும் மனிதனும் பொது. அதனால், “பூனை குறுக்கே வந்தால் அபசகுனம்” என்பதை உலகப்பொதுவாய் நம்புவதற்கு நிரூபணவாதமாய் வேறு விளக்கம் தேவை.
***
அடுத்து வடக்கே தலைவைத்துப் படுத்தால் கேடு என்பது பற்றி. இதையும் மேக்னெட்டோரிஸப்ஷன் பின்புலத்தில் அலசுவோம்.
‘தென் திசை இலங்கை நோக்க’ வடதிசை சிரசை வைத்து உறங்கினால், நாம் உலகின் (துருவ) காந்தப்புலன்களுக்கிடையே காந்தவிசைக்கோடுகளூடன் ஒத்து கிடக்கிறோம். இதனால், உடல் நலத்திற்கு கேடு என்று ஒரு நம்பிக்கை உள்ளது. “அங்க தல வச்சு படுக்காத, கெட்ட கனவா வரும்” போன்ற லேசாக திரிந்த ரூபத்தில் நீங்களும் அறிந்திருக்கலாம். என் ’கனவுக்கன்னி’களெல்லாம் நிஜத்தில் இன்று என்னிடம் மதர்ஸ்-டே கார்ட்டு எதிர்பார்ப்பவர்கள். அதனாலோ என்னவோ இன்றெல்லாம் எனக்கு எழுந்ததும் ஞாபகத்தில் உறையுமாறு, தாக்கத்துடன், நீடித்த கனவுகள் வருவதில்லை. எத்திசையில் தலைவைத்து எப்பரப்பில் தூங்கினாலும். இதனால் எனக்கு மேற்படி நம்பிக்கையே பிடிபடவில்லை. இருந்தாலும், விளக்கத்தை கடாசாமல் யோசித்தால், இங்கு கேட்கப்படவேண்டிய நிரூபணவாத கேள்வி, மனிதனால் உலகின் காந்தவிசையை ‘உணர’முடியுமா?
அதாவது, முற்பகுதியில் விலங்குகளுக்கு விவரித்ததைப்போல, மனிதனும் ஒரு காந்தவிசையேற்பியா?
சுருக்கமான விடை. இல்லை. மனிதனின் இழையங்கள் (டிஷ்யூ) காந்தவிசையினால் பாதிக்கப்படுவதில்லை என்று நிறுவியுள்ளார்கள் (கட்டுரையின் சான்றேடுகளில் முதல் ஆய்வை வாசித்துப்பாருங்கள்). நமக்கு ‘அல்ட்ரா-வயலட்’ கதிர்களையும் ‘பார்க்க’ முடியாது. இருந்தாலும் அப்படி செய்வதற்கு, நம் ’பார்வைப் புலனின்’ நீட்சியாய் உடனே ஒரு கருவியை கண்டுபிடிக்கமுடிகிறது. ஆனால் காந்தவிசையை உணர்ந்துகொள்ள நம்மிடம் ‘புலன்கள்’ இல்லை. இதனால் மற்ற விலங்குகளிடம் இதைக் காண்கையில், எப்படி இது சாத்தியம் என்று மண்டையை பிய்த்துக்கொள்கிறோம்.
அடுத்த கேள்வியாய் “வடக்கு-தெற்காய் படுத்தால் கெட்ட கனவுகள் வரும்” என்கிற கூற்றையும் மனதில்கொண்டு, அப்ப மனித மூளையை மட்டுமாவது காந்தவிசை பாதிக்குமா என்று கேட்கலாம்.
இதற்கு விடையை 2007இல் செய்யப்பட்ட நியூரோசயின்ஸ் ஆராய்ச்சி வழங்குகிறது. கர்ருபா, ஃப்ரில்லோட்டி, மரினோ என்று ஆராய்ச்சி குழுவினர் காந்தவிசை மனித மூளையை பாதிக்கிறதா என்று பரிசோதித்துள்ளனர்.
(படம் உபயம்: Neuroscience ஆராய்ச்சி சஞ்சிகையின் கட்டுரை; சான்றேட்டில் மூன்றாவது சுட்டி)
சிவப்புல ஒண்ணு, பச்சைல ஒண்ணு, என கலர் கலராய் ஸீரோ-வாட்ஸ் பல்புகள் அணைந்து எரிய, வெண்புகை கலந்த செவ்வொளிச் சூழலில், தலையில் பஞ்சவர்ணங்களில் ஒயர்கள் சிதறும் எலக்ட்ரோடுகளாலான ஹெல்மெட் அணிவித்து ‘உலகம் சுற்றும் வாலிபனில்’ விஞ்ஞானி வாத்தியாரை ’ரகஸியத்தை சொல்லிடு, இல்ல…’ என்று பட்டை பெல்ட் கலந்த பெல்பாட்டம் அணிந்தவர் படுத்துவரே, அதைப்போல ஒரு பரிசோதனையிலிருந்து.
பதினேழு நபர்களை இவ்வண்ணம் தலையில் எலக்ட்ரோடுகள் ஒட்டவைத்து (அருகில் படத்தில் (a) பகுதி) இரண்டு கௌஸ் மதிப்புள்ள காந்தவிசைப்புலனுக்குள் இருத்தி, அவர்களுக்கு magnetosensory evoked potentials (MEPs) காந்தவிசை அழுத்த பேதம் ஏற்படுகிறதா என்று அளந்துள்ளனர். ஏன் இரண்டு கௌஸ் என்றால், இது மனிதன் புழங்கும் அன்றாட சூழலில் தட்டுப்படும் காந்தவிசையின் மதிப்பு. காந்த விசையை அனைத்து-ஏற்றி, அதற்கேற்ப மூளையில் ஆங்காங்கே சற்றே சலனங்கள் ஏற்படுவதை பொருத்திய எலக்ட்ரோடுகளில் தோன்றும் மின்சார சலனங்களை வைத்து அறிந்துள்ளனர்.
ஆனால், மூளையின் குறிப்பாக எப்பகுதி காந்தவிசையினால் பாதிக்கப்படுகிறது என்று நிறுவமுடியவில்லை. அதேபோல், காந்தவிசையை சற்றே தூரமாய் அகற்றினாலும் மூளையில் சலனங்கள் குறைந்துவிடுகிறது. இரண்டு கௌஸ் அளவை குறைத்தாலும் சலனங்கள் குறைந்துவிடுகின்றன.
இதையெல்லாம்விட முக்கியமாக காந்தவிசையினால் ஏற்படும் சிறிய மின்சார சலனங்களை மூளை வேறு எந்த புலங்களை வைத்தும் ‘உணர’ முடியவில்லை. அதாவது, சோதித்த நபர்களுக்கு எவ்விதத்திலும் காந்தவிசைப்புலனுள் இருப்பதை ‘அறிய’ முடியவில்லை. மிக அதிகமான மதிப்பில் 10000 கௌஸ் காந்தவிசை வைத்து transcutaneous magnetic stimulation என்று மூளையின் ஆக்ஸான்களை பாதிப்படைந்து துள்ளியெழச்செய்யமுடியும். ஆனால் சுமார் 1 கௌஸ் போன்ற சத்து குறைவான காந்த விசையினால் பெரிதாய் ஒன்றும் செய்யமுடியவில்லை.
இதனால், மிக அருகே வைக்கப்படும் ஓரளவு அதிக அளவிளான காந்தவிசையினால் மூளையில் சலனங்கள் ஏற்படலாம் என்பதுவரை மட்டுமே நியோரோசயின்ஸ் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன எனலாம்.
இம்முடிவு ஒரு தொடக்கமே. இருந்தாலும், இதை வைத்துப் பார்க்கையில், உலகின் காந்தவிசை மதிப்பு ஏற்கனவே பார்த்தபடி 0.3 – 0.6 கௌஸ் என்பதால் (சோதித்த 2 கௌஸைவிட மிகக்குறைவு), இது மூளையை பாதிக்கு சாத்தியம் மிகக்குறைவு.
என் கெட்ட கனவுகளுக்கு வடக்கு-தெற்காய் படுக்கும் வாகை, அது உலக காந்தவிசைக்கோடுகளுடன் ஒத்திசைவதால், காரணம் என்று கருதமுடியாது.
அதனால் மட்டும் இவ்வகை நம்பிக்கைகள் அனைத்தும் ‘மூட நம்பிக்கைகள்’ என்று ஆகாது. ஆனால் பூனை குறுக்கிட்டாலும் போகும் காரியம் பலமுறை ஜெயமானாலோ, வடக்கே தலைவைத்து தூங்கினாலும் (மற்ற கெட்டபழக்கங்களின்றி) ஓரளவு தேக ஆரோக்யத்துடன் வருடங்கள் இருப்பதோ, உத்திரவாதமாய் இந்நம்பிக்கைகளின் அனுபவரீதியாக எதிர்ச் சான்றுகள்.
இவ்வகை, என்றைக்கும் நிச்சயமில்லா இன்றைக்கான மனச்சமநிலையுடன் வாழலாம்தானே.
No comments:
Post a Comment