Wednesday, December 3, 2014

குற்றால அருவிகள் - kutralam falls

குற்றால அருவி என்றவுடன் நினைவுக்கு வருவது எண்ணெய் குளியல், குளிர்ச்சியான வானிலை, மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆக்குரோசத்துடன் கொட்டித்தீர்க்கும் தண்ணீர், இவை எல்லாவற்றிற்கும் மேலாக, பல உயிர்களை பலிவாங்கும் அருவி என பல உண்டு.  இப்படி எவ்ளோ நாளைக்குத்தான் நினைத்துக் கொண்டே இருப்பது, போய் இதெயெல்லாம் எப்போது அனுபவிப்பது என்று ஏங்கிக் கொண்டிருப்போர் பலர். அப்படிபட்ட குற்றால அருவியைப் பற்றி இன்று பார்க்கலாம்.


குற்றால அருவி, அல்வாவுக்கு பேர் போன திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. தென்காசிக்கு மிக அருகில் இருக்கிறது.  குற்றால அருவியில் குளிக்கும் சுகமே தனி!  மற்ற அருவிகளில் குளியல் வெறும் பொழுதுபோக்காகவே இருந்துவரும் நேரத்தில், குற்றாலம் மருத்துவக் குணம் வாய்ந்தது. இந்த அருவி பல மூலிகைச் செடிகளைத் தழுவி வந்து பாய்வதால் இந்த அருவி மிகவும் சிறப்பு வாய்ந்தது.  ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தண்ணீர் ஆர்ப்பரித்து பாயும் இந்த அருவிக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து போகிறார்கள்.  தண்ணீர் கொட்டும் இந்த மாதங்கள் குற்றால சீசன் என்றழைக்கப்படுகிறது. என்னதான் நாம் ஜூன் முதல் செப்டம்பர் வரை குற்றால சீசன் என்று கணித்தாலும் சில வருடங்கள் இயற்கை மாற்றத்தால் சீசன் நேரம் மாறுபடுகிறது. என்ன செய்வது, இயற்கையை மாற்ற முடியாது.  


குற்றாலம் முழுவதும் மொத்தமாக ஒன்பது அருவிகள் பாய்கின்றன.  இந்த ஒன்பது அருவிகளை பார்க்க, அவற்றில் குளிக்க நாம் மிகவும் சிரமப்படவேண்டாம். நமக்கு உதவ ஆட்டோக்கள் இருகின்றன. காலை தென்காசி அடைந்தவுடன், ஒரு காபி சாப்பிட்டு, எதாவது ஒரு ஆட்டோகாரரிடம் பேரம் பேசி, ஆட்டோவில் ஏறி உட்கார்ந்துவிட்டால் போதும், அனைத்து அருவிகளுக்கும் அழைத்துச் சென்றுவிட்டு உங்களை உங்கள் இடத்திற்கே கொண்டுவந்து விட்டுவிடுவார்கள். (வீட்டுக்கெல்லாம் கொண்டுபோய் விடமாட்டங்க! நீங்க குற்றாலத்துல தங்குற இடத்துல கொண்டுபோய் விடுவாங்க)

குற்றாலத்தின் அழகை ரசித்து குளிக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் வேண்டும். குளிக்கிறதுக்கு 
இரண்டு நாள் வேணுமானு கேட்காதீங்க!  வேலைக்கு போற அவசரத்துல தினம் பத்து நிமிஷம் காக்காக் குளியல் போட்டுட்டு அரக்கப் பரக்க ஆபிஸுக்குப் போற நாம,  ரெண்டு நாள் முழுசாக் குளிச்சா ஒன்னும் தப்பில்ல. எல்லா அருவி முன்னாடியும் உங்க உடம்புக்கு எண்ணெய் தேய்க்கிறதுக்குன்னு பல பயில்வான்கள் கடையைத் திறந்து வைச்சிருப்பாங்க. உங்க உடம்ப கொஞ்ச நேரம் அவங்களுக்கிட்ட கொடுத்தீங்கனா,  உடம்பு வலியெல்லாம் ஒரு மணிநேரத்துல போக்கிடுவாங்க. அப்படியே போய் அருவிக்கு கீழ நின்னீங்கனா, பல அடி உயரத்துலே இருந்து கொட்டுற மூலிகை கலந்த தண்ணிர் அப்படியே மஸாஜ் பன்னுறமாதிரி கொட்டும்போது இருக்கிற சுகமே தனி. என்ன சுகத்த அனுபவிக்க ரெடியா? இந்த சுகத்தை எங்கெல்லாம் அனுபவிக்கலாமுன்னு பாப்போம்..

பேரருவி..
குற்றாலத்தின் மிக முக்கியமான அருவி பேரருவி. செங்குத்தான பாறையில் இருந்து பாயும் தண்ணீர், தனது கவர்ச்சியால் சில உயிர்களைக் கூட பலிவாங்கியிருக்கிறது. பல நேரங்களில் செய்திகளில் எல்லாம் நாம் இந்த அருவியின் காட்சிகளை பார்த்திருக்கக் கூடும்.  உயிர்கள் பலியாவதைத் தடுக்க சுற்றுலாத் துறை அருவிக்கு மிக அருகில் ஒரு தடுப்புச் சுவரை கட்டியுள்ளது. இந்தச் சுவர்தான் அருவியின் வீரியத்தை அளக்க உதவுகிறது, ஆம் சுவரையும் தாண்டி தண்ணீர் கொட்டினால் அருவி மிகவும் ஆர்ப்பரிக்கிறது என்று அர்த்தம். அப்படி சுவரைத் தாண்டி கொட்டும் நேரத்தில் குளிக்கத் தடை விதிக்கப்படும்.  மீண்டும் அருவி சுவருக்கு உள்ளே பாயும் வரை இந்தத் தடை நீடிக்கும். எனவே நீங்கள் இந்த அருவியில் குளிப்பதை அருவியே தீர்மானிக்கிறது.  அருவியே தீர்மானிக்குதுன்னா காவல் துறை தீர்மானிக்குதுன்னு அர்த்தம். இப்படி எல்லா அருவிகளிலும் தண்ணீர் மிக வேகமாக பாயும் நேரத்தில் குளிக்க தடை விதிக்கப்படும். அதெல்லாம் ஒருபக்கம் இருக்க தண்ணீர் பாறையிலிருந்து பாயும்போது சில மீட்டர் தொலைவுக்கு தண்ணீர் சாரல் அடித்து நம் உடம்பை கூலாக்கி சந்தோஷப்படுத்தும்.

சிற்றருவி..
பேரருவிக்கு இந்த அருவியில் இருந்துதான் தண்ணீர் வருகிறது. பேரருவிக்கு மேல் இருக்கிறது. கிட்டத்தட்ட பேரருவி போன்ற சூழலே இங்கும் இருக்கும்

செண்பகாதேவி அருவி..
பேரருவிக்கு மேல் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது இந்த அருவி.. பேரருவிக்கு மேல் கிட்டத்தட்ட காடு போன்ற பகுதியில் இயற்கையை ரசித்துக்கொண்டே நடந்து இந்த அருவியை அடையவேண்டும். நடக்கணும், ஆட்டோ உள்ளே போகாது.. இந்த அருவிக்கு அருகில் இருக்கும் செண்பகாதேவி அம்மன் கோவிலில் சித்திரா பவுர்ணமி நாளில் திருவிழா நடைபெறும்.  இந்த அருவியில் பாதுகாப்பு அம்சங்கள் குறைவு என்றாலும், காவல் துறை சொல்வதைக் கடைபிடித்தாலே நாம் இந்த அருவியில் எந்தவித அச்சமும் இல்லாமல் குளிக்கமுடியும். ஆனால் பல பேர் காவல்துறையினரின் கட்டுப்பாடுகளையும் மீறி உல்லாசமாய் குளிக்கிறேன் என்ற பேரில் தங்கள் உயிர்களை இழக்கின்றனர்.


தேனருவி..

செண்பகாதேவி அருவிக்கும் மேலே இந்த அருவி இருக்கிறது. பல தேன்கூடுகள் இங்கு இருப்பதால் இந்தருவிக்கு தேனருவி என்ற பெயர் ஏற்பட்டது. தேனீக்களாலும், அருவி அமைந்துள்ள இடத்தாலும் இந்த இடம் மிக அபாயகரமான பகுதியாக் அறிவிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் இந்த அருவியில் குளிப்பது நிரந்தரமாக தடைசெய்யப்பட்டுள்ளது.  மிகவும் மேலே அமைந்திருப்பதால் இந்த அருவிக்கு போகும் வழிகூட மிக அபாயகரமானது. 


ஐந்தருவி..

பேரருவியில் இருந்து ஐந்து கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.  திரிகூடமலையில் தோன்றி சிற்றாற்றின் வழியே பாயும் இந்த அருவி பாறையில் இருந்து பாயும் இடத்தில் ஐந்து கிளைகளாக பிரிந்து பாய்கிறது.

பழந்தோட்ட அருவி, புலியருவி, பாலருவி..
பேரருவியில் இருந்து எட்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பழந்தோட்ட அருவி. புலியருவி இரண்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.  இவை இரண்டும் பேரருவி போல் பிரமாண்டமாய் இல்லையென்றாலும் கூட மக்கள் கூட்டம் பேரருவிபோல் இல்லாததால் பல மணிநேரம் சுதந்திரமாய் குளிக்கலாம். பாலருவி தேனருவிக்கு அருகில் அமைந்துள்ளது. தேனருவியைப் போல் பாலருவியிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பழைய குற்றால அருவி..
தமிழகத்தில் எல்லாமே பழையது, புதியது என்று இருக்கும். உதாரணமாக பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் என்று இருப்பது போல.  இதற்கு குற்றாலமும் விதிவிலக்கு அல்ல.  ஏனோ குற்றாலத்தையும் பழையது,புதியது என்று பிரித்து விட்டார்கள். பேரருவிதான் புதிய குற்றாலம்.  பழைய குற்றாலத்துக்கு முன்னர் அதிக அளவில் மக்கள் வந்திருக்கலாம், ஆனால் இப்போது பேரருவியில்தான் அதிக மக்கள் கூட்டம் காணப்படுகிறது. இந்த அருவி பேரருவியில் இருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பேரருவி போலவே இங்கும் தண்ணீர் மிக உயரத்தில் இருந்து பாய்கிறது. கிட்டத்தட்ட பேரருவிபோலேயெ இருக்கிறது இந்த அருவி.


குளித்து முடித்து வந்தால் மிகவும் பசியெடுக்கும் என்பதை புரிந்து கொண்டு பல அருவிகளில் உணவுப் பொருட்கள் விற்பனையும் அதிகம் நடைபெறுகிறது. குளித்து முடித்து பஜ்ஜி, சொஜ்ஜி என பலவற்றை வயிற்றுக்குள் அனுப்பிவிட்டு பின்னாளில் அவதிப்படாதீர்கள். குளித்தவுடன் ஒரு நல்ல ஓட்டலில் சாப்பிட்டு போய் படுத்தால் நல்ல உறக்கம் கிடைக்கும்.


தண்ணீர் அருவிகளில் சீசன் நேரங்களில் எந்நேரமும் பாய்வதால், சீசன் காலங்களில் இரவு 12 மணிக்கூட மக்கள் குளிக்கத் தயங்குவதில்லை. மது அருந்தி தண்ணீரில் குளிக்கும் இளைஞர் கூட்டமே இரவு நேரங்களில் காணப்படும், சில நேரங்களில் காலை நேரத்தில் இவர்களின் உயிரற்ற உடல்களே கிடைக்கும்.  குற்றாலத்தில் அதிகம் பலியாவது இளைஞர்களே! இவர்களின் உடல்களை கண்டெடுப்பதையே ஒரு தொழிலாக செய்துவருகிறார் குற்றாலத்தில் இருக்கும் கண்ணன் என்பவர். உயிர்கள் பலியாவது ஒருவருக்கு வேலை அளித்திருக்கிறது, என்ன உலகம் இது!


குற்றாலம் போனால் மிகவும் ஜாக்கிரதையா இருங்கள், காவல் துறை சொல்வதை கொஞ்சமாவது கேளுங்கள். உங்களின் உயிர் உங்கள் கைகளில்தான் இருக்கிறது.  


எப்படி போவது?
1)குற்றாலத்திற்கு திருநெல்வேலி, தென்காசி மற்றும் பல இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


2)அருகில் உள்ள ரயில் நிலையம் - தென்காசி 6 கி.மீ தொலைவில்


3)அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை 200 கி.மீ தொலைவில்


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...