Tuesday, January 10, 2017

இளையராஜாவை வெல்ல இளையராஜாவால் மட்டுமே முடியும் - இயக்குநர் ராசி அழகப்பன்

தமிழ் சினிமாவில் ராஜா சாரைப் பற்றி பேச வேண்டுமென்றால், ஒரு வருடம் முழுக்க அல்ல நம் வாழ்நாள் முழுவதுமாகவே பேசிக்கொண்டிருக்கலாம். இயக்குநர் ராசி அழகப்பனிடம் பேசும்போது அதைத்தான் கண்டு கொண்டோம். இயக்குநர் மற்றும் நடிகர் கமலிடம் சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக பல்வேறு திரைப்படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். ‘வண்ணத்துப் பூச்சி’ படம் மூலம் டைரக்டராக புரமோஷன் ஆனவரிடம் இளையராஜா குறித்து கேட்டபோது,
“இளையராஜா என்றாலே ஒரு ஐம்பதாண்டு கால கிராமத்து மணம் சார்ந்த இசைதான். அதற்கு முன்னாடி நல்ல கவிதை வரிகளும் பாடல்களும் இருக்கும். அதைப் பிரபலமான நடிகர்கள் ஏற்று நடித்தால் மட்டுமே வெளியே தெரியும். ஆனால், ‘அன்னக்கிளி’ படத்துக்குப் பிறகு அந்த நிலைமை மாறிவிட்டது. பிரபலமான எந்தப் பின்னணி காட்சியும் இல்லாமல், ஒரு சாதாரண காட்சிக்கு கூட இசைஞானி உயிர் கொடுத்திருப்பார். ஒரு இலையோ, பறவையோ காட்சியில் வரும்போது அதை ஒரு சிம்ஃபொனி மாதிரி ட்ரீட் பண்ணி வாசித்திருப்பார்.
இயக்குநர் பாலுமகேந்திரா இயக்கிய ‘வண்ண வண்ண கோலங்கள்’ படத்தின் கதையெல்லாம் எனக்கு ஹைலட்டா தெரியல. ஆனா, படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில் ஏரியினுடைய ஓரத்திலிருந்து நாலைந்து கொக்குகள் அப்படியே வானத்தை நோக்கிப் பறந்து போகும். அப்படி போகும்போது வயலின் இசையில் ஆரம்பிப்பார் ராஜா. அந்தப் பறவைகள் அப்படியே பறந்துபோய் வேறொரு இடத்தில் அமரும். பறவை பறக்கிற அந்த நாற்பத்தைஞ்சு அடி ரீலுக்கு வயலின் இசையை அப்படியே நிப்பாட்டுவார். பறவைகளுடையே வேகத்துக்கு அப்படியே பல வித்தைகளை இசையில காமிச்சிருப்பாரு ராஜா சார்.
அந்தக் காட்சியில பறவைகளுடைய பயணம், பார்க்கிற நம்மோட மனநிலை இரண்டையும் இசையில கொண்டு வந்திருப்பாரு. அது நம்மை ஏகாந்த மனநிலைக்கு அழைச்சிட்டுப்போகும். அந்தக் காட்சியில எந்த ஹீரோவும், எந்த கருத்துகளும் இருக்காது. இயற்கையோடும் இசையோடும் விளையாடிருப்பாரு இளையராஜா!
இயக்குநர் மகேந்திரன் படங்களில் எங்கெல்லாம் சைலன்ஸ் தேவைப்பட்டிருக்குமோ அங்கெல்லாம் மவுனம் எனும் மொழியால் இசையை மீட்டிருப்பார் ராஜா சார். பின் மெல்ல சிறிய அதிர்வுகளோடு ஆரம்பித்து இசையை கோர்ப்பார். ஆக, திரைக்கும் பார்க்கிறவனுக்கும் இடையே இளையராஜாவோட இசை இன்னொரு கதாபாத்திரமாகவே இருந்து செயல்படும். பெரும்பாலான படங்களில் இசை என்பது பின்னால் இருந்து கதை நகர்ந்து செல்ல உதவும். ஆனால், இளையராஜா இசையமைத்த படங்களில், குறிப்பாக அவரின் இசை மேலோங்கி நிற்கும். இது தமிழ் சினிமாவில் இசைஞானி செய்த மாபெரும் புரட்சி என்றே சொல்லுவேன்!
இது யாருக்குத் தெரியும் என்றால், ஒரு கிராமத்தில் நள்ளிரவில் கம்மாய் ஓரம் படுத்துக்கொண்டு நிலாவை ரசிக்கிறானே அவனுக்குத் தெரியும். அவன் மீது வேப்பமர காற்று வந்து மோதும்போது அவனுக்குள் ஒரு சிலிர்ப்பு உண்டாகுமே, அதை உணர்ந்தவனால்தான் நல்ல இசையை கொடுக்க முடியும். அப்படியான ஒரு இசையை கொடுப்பவர்தான் இளையராஜா.
சில பேர் இசையில் நல்ல பாண்டித்தியம் பெற்றிருப்பார்கள். சிறப்பான பல டியூன்களையெல்லாம் கூட கம்போஸ் செய்திருப்பார்கள். ஆனால், வாழ்க்கையோடு இணைந்த பல விஷயங்களை, கிடைக்கிற இடங்களில் எல்லாம் பயன்படுத்தி, சாதாரண ரசிகனை தன் வயப்படுத்தியவர் இசைஞானி. அவர் வெறும் இசையமைப்பாளர் மட்டுமில்லை. அவர் இசைக்காத பல இடங்களிலும் அவரே இருக்கிறார்!
பெரும்பலான இசையமைப்பாளர்கள் கிடைக்கிற இடங்களில் எல்லாம் வாசித்துக்கொண்டே இருப்பார்கள். ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் தான் நான் உதவி இயக்குநரானேன். “படத்துக்கு நாலு நிமிஷத்துக்கு சண்டை நடக்குது. அமைதியாவே போய்ட்டு இருக்கே...”ன்னு போய் இளையராஜா சாருக்கிட்டே கேட்டேன். அவரு உடனே, “ஏன்யா... சண்டை நடக்கும்போது பின்னாடி இருந்து சத்தம் வந்துக்கிட்டே இருக்குமாயா?”என்றார். பிறகு, நான் போய் ஒலிப்பதிவாளர் பாண்டு சாருக்கிட்டே இதைச் சொன்னேன். “அவரு சொல்றதுதான் சரி. கமல் போன்ற ஆளுமை நடிக்கும் படத்தில் அதுதான் சரியாக இருக்கும்” என்றார். அதனால்தான் சொல்றேன், எந்த இடங்களில் இசைக்காமல் விட வேண்டும் என்று இசைஞானிக்கு நன்றாகவேத் தெரியும். அதனால்தான் அவர் இசை ராஜா!
கமல்&இளையராஜா சார் காம்பினேஷன் என்பது சினிமாத்தனமாக இருக்காது. கம்போஸிங்கில் உட்காரும்போது, ஹார்மோனியத்தில் ராஜா வாசிப்பார். அவர் வாசிக்க ஆரம்பித்ததுமே, குறுக்கிட்டு “இது அந்த ராகமாச்சே...”என்பார் கமல். உடனே, “இல்ல கமல்... அந்த ராகத்துல கொஞ்சம் இதை சேர்த்துருக்கேன்...”னு வேறு ஒன்றை சொல்வார். இப்படி ரெண்டு பேரும் சேர்ந்து பேசியே இரண்டரை மணி நேரத்தை போக்கிடுவாங்க. அன்றைய கம்போசிங் க்ளோஸ். இளையராஜாவும் கமலும் சங்கீதத்தைப் பேசிப் பேசியே அந்தப் படத்துக்கு பண்ண வேண்டிய இசையமைப்பை பண்ணாமல், மறுநாளைக்கு தள்ளி வைத்துவிடுவார்கள். இதுல இயக்குநர் சிங்கிதம் சீனுவாசராவும் சேர்ந்து கொள்வார். அதெல்லாம் என்னைப் போன்றவர்களுக்கு ஒரு பயிற்சியாக அமைந்தது.
ஒரு படத்துக்கு இசையமைக்க வேண்டுமென்றால் முதலில் இயக்குநரும், இசையமைப்பாளரும் கலந்து பேச வேண்டும் என்று அறிந்துகொண்டேன். ஆனால், ஸ்டூடியோவிலிருந்து வெளியே வந்தால் இளையராஜாவின் மேனேஜர் சுப்பையாவோ, “என்னய்யா... ரெண்டரை மணி நேரம் முடிஞ்சிடுச்சு. நாலு பாட்டு ரெடியா ஆயிடுச்சா?” என்று கேட்பார். “இல்ல... கமல் சார் நாளைக்கு தள்ளி வைச்சிட்டார்...”ன்னு சொன்னா, “என்னய்யா... கால்ஷீட்டே இல்லையேன்னு...”கதறுவார். அடுத்த நாள் போய் உட்கார்ந்ததும் இளையராஜா கேட்பார், “என்னய்யா... இன்னிக்காவது முடிஞ்சுடுமா....?”. அப்புறம் நான் போய் கமல் சாருகிட்ட சொன்னதும், அவர் சொன்னார், “என்ன பண்றது. எனக்கும் தெரியுது. நான் ஒரு தயாரிப்பாளராகவும் அவர் ஒரு இசையமைப்பாளராகவும்தான் உட்காருகிறோம். ஆனா, அதுமட்டுமே போதுமாய்யா... வாழ்க்கை வேறய்யா” என்பார். இருவரும் ஒருவரையொருவர் “வாடா... போடா...” என்று பேசிக்கொள்வார்கள். அது சினிமாவைத் தாண்டிய... இசையின் மீதான இரண்டு பேரின் நட்பாகத்தான் நமக்குத் தெரியும்!
கடைசியாக ‘அபூர்வ சகோதர்கள்’ படத்துக்காக ரெண்டாவது நாள், கமல், வாலி, இளையராஜா ஆகிய மூன்று பேரும் உட்கார்ந்தார்கள். ராஜா, ஹார்மோனியத்தில் கைவைத்துக்கொண்டு... ம்ம்ம்... ம்ம்ம்... என்று ஆரம்பிக்க... வாலி, வெற்றிலையில் சுண்ணாம்பைத் தடவிக்கொண்டே... “என்ன ராஜா... நீ கைவைச்சா எல்லாம் வந்துடப்போவுது...” என்று சொன்னதும், உடனே கிண்டலாக “ராஜா கைய வைச்சா...” என்று ராகம் வைத்துப் பாட... அதற்கு வாலி, “ஆமாம்... ராங்கா போனதில்ல...” என்றார். அதுதான் படத்தின் பாடலாகவே மாறியது. பட்டித்தொட்டியெல்லாம் கலக்கியது. அதுபோலவே அந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் அடுத்த பதினெட்டு நிமிடங்களில் போடப்பட்டுவிட்டன. அதனால்தான் சொல்றேன். இளையராஜாவின் ஞானத்தை யாரோடும் ஒப்பிடவே முடியாது. இசைஞானியை வெல்ல ஒரேயொருவரால் முடியும் அது...அவரேதான்!” என்றார்...
நன்றி. .

No comments:

Post a Comment