Thursday, January 12, 2017

ராஜா ராஜா தான். ...ஆரம்பம் முதல் தனது இசையை மட்டுமே முன்வைத்து இயங்கி யிருப்பவர் இளையராஜா. அவர் அறிமுகமானது பிரம்மாண்டமான பட்த்தில் அல்ல. தொடர்ந்து அவர் பணியாற்றியதும் சிறிய படங்களில் தான். தனது இசையைப் பகிர்ந்து கொள்ளக் கிடைத்த வாய்ப்புகளாகவே அந்தப் படங்களைக் கருதியிருக்க வேண்டும். தனது மேதைமை மூலம் தனக்கான இட்த்தை உருவாக்கிக் கொண்ட பின்பே பெரிய ஆட்களும் பெரிய படங்களும் அவரைத் தேடி வந்தன.
திரையிசையில் இளையராஜாவின் சாதனைப் பங்களிப்புகளாக எவற்றைச் சொல்லலாம்? இந்தக் கேள்விக்கு மூன்று நிலைகளிலிருந்து பதில் காணலாம். இசையை ஒரே சமயத்தில் காட்சியின் துணையாகவும் காட்சியிலிருந்து விலகிய தனித்துவமாகவும் மாற்றினார். சத்தியன் மலையாள இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கிய படம் 'அச்சுவின்டெ அம்ம'. இசை இளையராஜா. படத்தின் திருப்புமுனைக் காட்சியை இளைய ராஜாவின் இசையே தீர்மானிக்கிறது. தன்னைத் தாயாக நினைத்து வளர்ந்த அச்சு ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அம்மா வனஜாவிடம் தனது தகப்பனைப் பற்றிக் கேட்கிறாள். அவள் ஒரு அநாதை என்பதையும் தான் அவளை எடுத்து வளர்த்த கதையையும் அச்சுவின் காதலனிடம் வனஜா சொல்கிறாள். அநாதையான வனஜா பாலியல் வன்முறைக்குத் தப்புவதையும் அங்கே சின்னச்சிறு குழந்தையாக நடமாடிய அச்சுவை மீட்டதையும் சொல்லும் காட்சிகள் பெரும்பாலும் உரையாடலின் துணையின்றியே நகர்கின்றன. முதலில் சோகமும் பின்னர் பதற்றமும் அதன் பிறகு ஆசுவாசமுமாக இழையும் இசையே அந்தக் காட்சிகளை உணர்வுபூர்வமாக்குகின்றன. அந்த இசையை சும்மா இருக்கும்போது கேட்டாலும் அந்தப் பதற்றமும் சோகமும் ஆசுவாசமும் மனதுக்குள் திரள்கின்றன. தளபதி படத்தில் வரும் ரயில் கூவலும் இசையும் இதே வகையிலானதுதான். இசையைக் காட்சிப்படிமமாக நிலைநிறுத்துகிறது. இது இளையராஜாவின் பங்களிப்பு. அவரது'ஹௌ டு நேம் இட்' ஆல்பத்தின் அதே பெயரிலான இசைத்தடம் பாலு மகேந்திராவின் 'வீடு' படத்தின் தீம் மியூசிக் ஆகவே உருமாறுகிறது.
Image may contain: 3 people
மைய இசை(தீம் மியூசிக்) என்ற கருத்தை தமிழ்த் திரையிசையில் வலுவாக நிறுவியவர் இளையராஜா. அதுவரை பாடலின் ஏதோ மெட்டையும் வாத்திய இசையையும் பொத்தாம் பொதுவாகப் பயன் படுத்திய தமிழ் சினிமாவில் மைய இசைக்கான முக்கியத்துவத்தை அவரது இசையே வலிய்றுத்தியது.’சின்னத்தாயவள்’ என்ற பாடலின் இசைக் கோலமே கல்யாணிக்கும் அவளால் கைவிடப்பட்ட சூரியாவுக்கும் அவளுடைய மகன் அர்ஜுனுக்குமான இசையாக அமைகிறது. ஆனால் ஒவ்வொரு வருக்கும் வெவ்வேறு பின்னணியில் இசைக்கப்பட்டு அவர்களுடைய அக உணர்வுகளை வெளிக்காட்டுவதாக மிக இயல்பாக அமைகிறது. குயிலின் கூவலாக ஒலிக்கும் குழலிசை ’முதல் மரியாதை’படத்தின் எல்லாக் காட்சிக¨ளையும் ஒன்று சேர்க்கிறது.'உதிரிப் பூக்கள்'படத்தின் அழகிய கண்ணே பாடலில் வரும் ரெக்கார்டரின் ஓசை படம் முழுக்க வியாபிக்கிறது.
இளையராஜாவின் இசை, துணைப்பிரதிகள் - சப் டெக்ஸ்ட் - நிறைந்தது. பாடல்களிலும் பின்னணி இசைக் கோர்ப்பிலும் இதைப் பார்க்கலாம். ஒரு அடுக்கின் கீழ் நுட்பமான வேறு பல அடுக்குகள் கொண்ட இசையை லாவகமாகக் கையாள்கிறார் இளையராஜா
என்று கூறினால் மிகையாகாது. ..

No comments:

Post a Comment