Tuesday, January 3, 2017

நன்றி: நாஞ்சில் சம்பத் அவர்கள்.

விடையாக இருந்த அம்மா விடை பெற்றார்..!
விடுகதை ஆகிவிட்ட தமிழர்களின் கேள்விக்கு விடையாக இருந்தவர் விடை பெற்றுவிட்டார்.
அடக்க முடியாத கடலலையின் பெருமுழக்கம் அடங்கிவிட்டது.
விலக்க முடியாத விரிவானம் விலகிச் சென்றுவிட்டது.
குடிசைகளில் ஏற்பட்டுவிட்ட காயத்திற்கு மருந்தாகவும் குடிசை வாசிகளுக்கு விருந்தாகவும் இருந்த அம்மா காலனுக்கு விருந்தாகிவிட்டார்.
தமிழ் மக்களின் பசிக்குச் சோறாகவும் மழைக்குக் குடையாகவும் இருந்த தலைவர் மறைந்து விட்டார்.
உப்பாகவும், சர்க்கரையாகவும் இருக்கிற தலைவர்களுக்கு மத்தியில் வானமும் சிறகுமாக இருந்த தலைவர் திரும்பி வர முடியாத ஊருக்குத் திரும்பி விட்டார்.
தாய்த் தமிழகத்தின் உரிமைக்கு வாளாகவும் தமிழர்களுக்குக் கேடயமாகவும் இருந்த தலைவர் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டார்.
அச்சத்திலிருந்து விடுதலை, பசியிலிருந்து விடுதலை, அறியாமையில் இருந்து விடுதலை என மூன்று விடுதலைக்கு வழி கண்டவர் விட்டு விடுதலை ஆகிவிட்டார்.
‘தாய் அன்பில்’ என்ற கம்பன் வரிகளுக்கு உயிர் தந்தவரின் உயிர் போய்விட்டது.
சாதி சமயக் கட்சிகளுக்கு சந்தனத் தமிழகத்தில் முடிவுரை எழுதிய தலைவர் முடிவெய்தினார்.
தடைக்கற்கள் உண்டென்றாலும் தடந்தோள் உண்டு என்பதைத் தன் பொது வாழ்வில் நிரூபித்து வாகை சூடிய வரலாற்று நாயகி வரலாறு ஆகிவிட்டார்.
அறிஞர் அண்ணா சொன்ன சாமான்யர்களின் சகாப்தத்தை நிறைவேற்று முகமாக முகம் தெரியாத தொண்டனுக்கு முகவரி கொடுத்து முதல் வரிசையில் உட்காரவைத்து அழகு பார்த்தவர் அமைதி ஆகிவிட்டார்.
சாமியார்களே மாமியார் வீட்டுக்குப் போகிற இக்காலத்தில் ரத்த சம்பந்தமுள்ள உறவுகளின் சகவாசமின்றி, ‘மக்களால் நான்; மக்களுக்காகவே நான்’ என்பதை நடைமுறைப்படுத்திய அரசியல் அதிசயம் அஸ்தமித்துவிட்டது.
விளி்ம்பு நிலை மக்களின் கண்ணீரைத் துடைத்ததற்காக அரை உலகமாம் அமெரிக்காவின் வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஹிலரி கிளிண்டன், பெலிகாம் பறவையின் பெண் வடிவமாய் வாழ்ந்து மறைந்த வங்க தேவதை அன்னை தெரசா, பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அமர்த்யா சென் ஆகியோரின் பாராட்டு மழையில் நனைந்தவர் தொண்டர்கள் கண்ணீர் மழை பொழிய கடற்கரையில் சங்கமமானார்.
நீயின்றி நானில்லை; நெஞ்சில் ஓர் கனல் ஆகிய புதினங்களையும், மனதைத் தொட்ட மலர்கள், எண்ணங்கள் சில போன்ற நூல்களையும், வேதா நிலையம், ஐம்பதின் கொடுமை ஐந்தை வாட்டுகிறது என்ற தொடர் கட்டுரைகளையும் எழுதிய எழுத்தாளர் போய்ச் சேர்ந்துவிட்டார்.
தமிழில் 87, தெலுங்கில் 30, கன்னடத்தில் 7, இந்தியில் 2, மலையாளத்தில் 1, ஆங்கிலத்தில் 1 என 128 படங்களில் ஜொலித்த நட்சத்திரம் நமது வானத்தில் இருந்து உதிர்ந்துவிட்டது.
பள்ளியில் பந்தி, ஆலயத்தில் அன்னதானம், வீட்டில் விலையில்லா அரிசி, அங்கிங்கெனாதபடி அம்மா உணவகங்கள் என அன்னதானப் புரட்சியை அரங்கேற்றிய அன்ன பூரணியை காலம் கவர்ந்து கொண்டுவிட்டது. இந்தியா - பாகிஸ்தான் யுத்தத்தின் போது யுத்த நிதியாக அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியிடம் தன் மேனியை அலங்கரித்த பொன் நகைகளை அள்ளிக் கொடுத்த வள்ளலின் வாரிசு வள்ளல் கண்ணுறங்கும் இடத்திலேயே கண்ணுறங்கிவிட்டார்.
மலரக் கூடாது என்று மறுக்கப்பட்ட மொட்டுக்களாகவும், தாயின் மார்பகத்தில் பால் குடிக்கக் கூடாது என்று விலக்கப்பட்ட கன்றுகளுக்காகவும் 69 சதவிகித இட ஒதுக்கீடு பெற்றுத் தந்து அதை அரசியல் அட்டவணையின் ஒன்பதாவது இடத்தில் இடம் பெறச் செய்ததன் மூலம் தந்தை பெரியாரின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு உத்தரவாதம் தந்தவரின் உடற் கூட்டிலிருந்து உயிர்ப்பறவை பறந்து போய்விட்டது.
அறிஞர் அண்ணா ஏற்றி வைத்த மாநில சுயாட்சி தீபத்தை அணையாமல் காப்பாற்ற அயராது போராடிய தீபம் அணைந்து விட்டது.
அம்மாவைக் கொண்டாடியவர்களுக்கு நல்லன எல்லாம் கிடைத்தன. தனம் கிடைத்தது. கல்வி கிடைத்தது. பதவியும் உதவியும் கிடைத்தது. எல்லார்க்கும் எல்லாம் கிடைக்க ஏணியாக இருந்தார். ஏழைகளைத் தூக்கிச் சுமக்கிற தோணியாக இருந்தார். ஏணி உடைந்து விட்டது. அந்தத் தோணி கவிழ்ந்து விட்டது.
கழுகால் விரட்டப்பட்ட புறா சிபிச் சக்கரவர்த்தியிடம் அடைக்கலம் புகுந்ததைப் போல் அம்மாவிடம் அடைக்கலம் புகுந்தவன் நான். அடைக்கலம் புகுந்த அந்த பொன் வேளையில் எளியவன் எனக்குக் கிடைத்ததோ ‘ஒரு நாளும் தளர்வறியா மனம்’. அந்த மனத்திற்கு இனி நான் எங்கே செல்வேன்?
பறம்பு மலைப் பாரி மறைந்தபோது தந்தையை இழந்த துயரத்தில் அவன் பெற்றெடுத்த பிள்ளைகள் அங்கவையும் சங்கவையும் அந்த நாளில் வானம் இருந்தது. வானத்தில் நிலவு இருந்தது. எந்தைக்கு குன்றும் அரசும் இருந்தது. இந்த நாளில் வானமும் இருக்கிறது. வானத்தில் நிலவும் இருக்கிறது. ஆனால் குன்றும் இல்லை. எந்தையும் இல்லை.
தந்தையை இழந்த கையறு நிலையில் பாரி மகளிர் அன்று பாடியதைப் போல் தாயை இழந்த கையறு நிலையில் இன்று பாடிக் கொண்டிருக்கிறேன். வாடிக் கொண்டிருக்கிறேன்.
கண்ணீருடனும் கவலையுடனும்...
நாஞ்சில் சம்பத்.

No comments:

Post a Comment