தெலுங்கு வருடப்பிறப்பாகிய யுகாதி நாளன்று நாம் அனைவரும் புதுப்புனலாடி, புத்தாடை அணிந்து, புத்தரிசி அன்னம் மற்றும் பொங்கலிட்டு, பருப்பு, கீரை, பால் பாயாசத்துடன் வடை,லட்டு,அப்பளம்,பப்படம்,காய்கறிகள்,பலவித அறுசுவை உணவு மற்றும் முக்கியமாக "சேந்தாகு" முதலியவற்றை பகவானுக்குப் படைத்து நெய்வேத்தியம் செய்து பூஜை,தூப,தீப ஆராதனைகள் செய்து,கீர்த்தனைகள்,நாம கீர்த்தனம் செய்து திருப்திகரமாக போஜனம்(உணவு) செய்து களிபேருவகை அடைகின்றோம்.
மேலும் அன்று நம் அன்பர்கள், நண்பர்கள், உற்றார், உறவினர்களை அழைத்து விருந்தினை அளித்து சந்தோசமாக அளவளாவுகிறோம்.
குறிப்பாக, அன்று நாம் அனைவரும் நம்முடைய குருமார்களாகிய ஆச்சாரியார்கள்,வேதப்பிராமனர்கள் மற்றும் புரோகிதர்கள் மூலம் வழங்கப்பட்ட பிரசாதமான "சேந்தாகு" என்று தெலுங்கில் கூறப்படும் பதார்த்தத்தை ஒருவருக்கொருவர் பகிர்த்து கொண்டு உண்பதை தொன்றுதொட்ட வழக்கமாக கொண்டுள்ளோம்..
சேந்தாகு = சேந்து+ஆகு ==> கசப்பு+இலை = வேப்பிலை.
அதில் வேப்பிலை, வெல்லம், புளி ஆகியவைகளை ஒன்றாக இடித்து, அரைத்து, கலந்து செய்யப்படும். இதன் பொருள் யாதெனில், மானிடர்களாகிய நமக்குள் சிறு சிறு பிணக்குகளால் கோப,தாபங்கள் சின்னச்சின்ன பூசல்களினால் சண்டை சச்சரவுகளினால் மனக்கசப்பு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டி எதிரிகள் போல் பேசாமல் இருப்பதுண்டு. இது உலக வழக்கில் அன்றாட நடைமுறையில் கண்கூடாக நாம் அறியும் சம்பவம் ஆகும்.
இப்படிப்பட்டவர்கள் எவ்விதக்கசப்பும் இன்றி(வேப்பிலை), எவ்விதச் சச்சரவும் இன்றி (புளிப்பு), பரஸ்பரம் இன்பமாக வாழ (வெல்லம்,இனிப்பு), இந்தப்பிரசாதம் (சேந்தாகு) தத்துவார்த்தமாக நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட மிகவும் உயர்ந்த கோட்பாடுகளாகும்.
எனவே நாம் நன்கு வாழ்வதுடன் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் துவேசம் பாராட்டாமல்(பேதம் அல்லது வேற்றுமை பாராமல்) "அத்வேஷ்டா ஸர்வ பூதானாம்" என்று வேதத்தில் கூறியபடி நாம் அனைவரும் ஒன்று. இறைவனது குழந்தைகள் என்ற உயர்ந்த லட்சியத்தை கடைப்பிடித்து இறை பேரின்பம்(சச்சிதானந்த நிலை),அதாவது வையத்து வாழ்வாங்கு வாழும் பேற்றினை துய்த்து, நம் மகரிஷிகள், யோகிகள், ஆழ்வார்கள், பாகவதப் பெருமக்கள் வாழ்ந்து காட்டிய நெறிமுறைப்படி வாழ்ந்து உய்ய வேண்டும் என்பதன் அறிகுறியே இந்த "சேந்தாகு" கொடுக்கப்படுவதும், யுகாதி விழா கொண்டாடப்படுவதின் நோக்கமாகும்.
இனிய தெலுங்கு வருடப்பிறப்பு (யுகாதி) நல்வாழ்த்துக்கள்!!
No comments:
Post a Comment