Saturday, March 25, 2017

'விருத்தாசலம்'

நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் நாயகரான சிவன், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பழமலைநாதர் என்ற பெயரில் வீற்றிருக்கிறார். இங்கு கோபுரம், கொடிமரம், விநாயகர், நந்தி, பிரகாரம் என்று எல்லாமே ஐந்து ஐந்தாக இருக்கிறது.
தல வரலாறு: அப்பர், சம்பந்தர், சுந்தரர் காலத்தில் இந்தக் கோவில் பழமலை என்று அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் 'விருத்தாசலம்' என மாறியது. 'விருத்தம்' என்றால் 'பழமை'. 'அசலம்' என்றால் 'மலை'. காலத்தால் முந்தியமலை என்பது இதன் பொருள். இத்தலத்தில் மலை தோன்றிய பின்பு தான் உலகிலுள்ள  அனைத்து மலைகளும் தோன்றின. சிவன், பழமலைநாதர் என்ற பெயரில், இங்கு மலை வடிவில் முதலில் தோன்றினார். சுந்தரரை, ஆட்கொண்டு தேவாரம் பாட வைத்ததோடு, 12 ஆயிரம் பொற்காசு வழங்கினார். காசி போல விருத்தாசலம் முக்தி தலமாக விளங்குகிறது. இங்குள்ள மணிமுத்தாறு நதியில் நீராடி பழமலைநாதரை வழிபட்டால், கங்கையில் நீராடி, காசி விஸ்வநாதரை வழிபட்ட பலன் கிடைக்கும். எனவே இந்தக்கோவில் 'விருத்தகாசி' எனப்படுகிறது.
இரண்டு அம்பிகை: இங்குள்ள அம்மனின் திருநாமம் விருத்தாம்பிகை என்னும் பெரியநாயகி. ஒருமுறை திருவண்ணாமலையிலிருந்து வந்த குரு நமச்சிவாயர் என்ற மகான், அம்பிகையிடம் உணவு கேட்டு, 'கிழத்தி' (மூதாட்டி) என்ற சொல் வரும்படி பாடல் ஒன்றைப் பாடினார்.
அம்பிகையும் மூதாட்டி வடிவில் தோன்றி “ஒரு கிழவியால் எப்படி சோறு சுமந்து வர முடியும்? என்று கேட்டு மறைந்தாள். பின், குருநமச்சிவாயர் அம்பிகையின் இளமை பற்றி சிறப்பித்துப் பாடினார். அதைக் கேட்டு மகிழ்ந்த அம்பிகை, இளையவளாக காட்சியளித்து அன்னமிட்டாள். அவளுக்கு 'பாலாம்பிகா' என்ற பெயர் ஏற்பட்டது. இருவர் பெயரிலும் சன்னிதிகள் உள்ளன.
எல்லாமே ஐந்து: இக்கோவிலில் எல்லாமே ஐந்து தான். விருத்தகிரீஸ்வரர், பழமலைநாதர், விருத்தாசலேஸ்வரர், முதுகுன்றீஸ்வரர், விருத்தகிரி என சுவாமிக்கு ஐந்து பெயர்கள் உண்டு. திருமுதுகுன்றம், விருத்தகாசி, விருத்தாசலம், நெற்குப்பை, முதுகிரி என ஊருக்கு ஐந்து பெயருண்டு. ஆழத்து பிள்ளையார், மாற்றுரைத்த விநாயகர், முப்பிள்ளையார், தசபுஜ கணபதி, வல்லப கணபதி என ஐந்து விநாயகர் சன்னிதிகள் உள்ளன. கோபுரம், கொடிமரம், பிரகாரம் ஆகியவையும் ஐந்தாக உள்ளன. இந்திரநந்தி, வேதநந்தி, ஆத்மநந்தி, மால்விடைநந்தி, தர்மநந்தி என ஐந்து நந்திகளும் உள்ளன. தல இங்குள்ள ஆழத்துப் பிள்ளையாரை 18 படிகள் கீழிறங்கி ஆழத்தில் தரிசிக்க வேண்டும்.
கூலிக்கு வன்னி இலை: ஒருமுறை, உலகம் அழிந்தபோது, இவ்வூர் மட்டும் அழியாமல் இருந்தது. தேவர்களை மகிழ்ச்சிப்படுத்த சிவன் இங்கு ஆனந்த தாண்டவம் ஆடினார். இங்குள்ள அர்த்த மண்டபத்தில் வேதங்கள் தூண்களாக அமைந்துள்ளன. தல விருட்சம் வன்னிமரம் மூவாயிரம் ஆண்டு பழமைமிக்கது. விபசித்து முனிவர் என்பவர், இக்கோவிலில் திருப்பணி செய்த ஊழியர்களுக்கு, இந்த வன்னிமர இலைகளைக் கூலியாகக் கொடுத்தார். அவை அவர்களின் உழைப்பிற்கு ஏற்ப தங்கக் காசுகளாக மாறியது.
ஆகமக்கோவில்: சிவஆகமங்கள் 28. இதைக்குறிக்கும் விதத்தில் இங்கு 28 லிங்கங்கள் உள்ளன. முருகனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இவை, தெற்கு வரிசையிலுள்ள ஆகம லிங்கங்களின் நடுவில் விநாயகரும், மேற்கு வரிசையில் உள்ள ஆகம லிங்கங்களின் நடுவில் வள்ளி தெய்வானையுடன் முருகனும் அருள்பாலிக்கின்றனர்.
நேரம் : காலை 6:00 - மதியம் 12:00, மதியம் 3:30 - இரவு 9:00 மணி
இருப்பிடம்: சென்னை - மதுரை சாலையில் உளுந்தூர்பேட்டையில் இருந்து 23 கி.மீ.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...