Saturday, March 25, 2017

முடிவுக்கு வருகிறது பஜாஜ் - கவாஸாகி கூட்டணி.

ஜப்பான் நிறுவனமான கவாஸாகியுடன் பத்தாண்டுகளாக கொண்டிருந்த வர்த்தக கூட்டணி முடிவுக்கு வருவதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் அமித் நந்தி தெரிவித்ததாவது:
இந்தியாவில் கவாஸாகி மற்றும் பஜாஜ் நிறுவனங்களுக்கிடையிலான விற்பனை மற்றும் சேவை தொடர்பான கூட்டணி நடப்பு ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முடிவுக்கு வருகிறது.
இந்தியா தவிர்த்து இதர நாடுகளில் இந்த இரு நிறுவனங்களுக்கு இடையிலான தற்போதைய மற்றும் எதிர்கால வர்த்தக உறவுகள் தொடர்ந்து நீடிக்கும். இது பரஸ்பர பேச்சுவார்த்தைக்குப் பிறகு எட்டப்பட்ட சுமுகமான முடிவு என்றார் அவர்.
இந்தக் கூட்டணி முறிவைத் தொடர்ந்து கவாஸாகி மோட்டார் இந்தியா நிறுவனம், தனது மோட்டார்சைக்கிள் விற்பனையை இந்தியாவில் தொடர்ந்து மேற்கொள்ளும்.
இந்த நிறுவனம் அதன் தாய் நிறுவனமான கவாஸாகி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் ஜப்பானுக்கு முழுவதும் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
கவாஸாகி மோட்டார் இந்தியா நிறுவனம், கடந்த 2010-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. பழைய மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் விற்பனைக்கு பிந்தைய சேவைகளை இந்த நிறுவனம் அளித்து வருகிறது.
புணேவைச் சேர்ந்த பஜாஜ் நிறுவனம், ஆஸ்திரியாவைச் சேர்ந்த கே.டி.எம். நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதில் அதிக முனைப்பு காட்டி வருகிறது. இதன் காரணமாகவே, கவாஸாகி தொடர்பைக் கைவிட பஜாஜ் நிறுவனம் முடிவு செய்ததாக தெரிகிறது.
பஜாஜ்-கே.டி.எம். இணைந்து கடந்த 2012-ஆம் ஆண்டு "200 டியூக்' மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் கே.டி.எம். நிறுவனத்தின் விற்பனை 48 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. வரும் 2016-17-இல் கே.டி.எம். பைக்குகள் விற்பனை 37,000-ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...