1978ல் முள்ளும் மலரும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மகேந்திரன். அப்படத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடித்திருந்தார். அதையடுத்து உதிரிப்பூக்கள், பூட்டாத பூட்டுகள், நெஞ்சத்தை கிள்ளாதே, மெட்டி, ஜானி, நண்டு உள்பட 12 படங்களை இயக்கியிருக்கிறார். 2006ல் இயக்கிய சாசனம் படத்திற்கு பிறகு அவர் படம் இயக்கவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் சினிமாவும் நானும் என்ற பெயரில் தான் எழுதிய நூலை வெளியிட்டுள்ளார் மகேந்திரன். இந்த விழாவில் அவர் பேசுகையில், நான் இயக்கிய பல படங்களில் வசனங்கள் குறைவாக இருப்பதாக சொல்வார்கள். என்னைப்பொறுத்தவரை மெளனத்தை விட சிறந்த வார்த்தை எதுவும் இல்லை என்று நினைக்கிறேன். அதனால்தான் வசனங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுப்பதில்லை. அதேசமயம், என் படங்களுக்கான வசனங்களை இளையராஜா தனது இசையால் எழுதியிருப்பார்.
மேலும், டூயட் பாடல்கள் படத்தின் இயல்பு தன்மையை கெடுத்து விடும் என்பதால் எனது படங்களில் டூயட் பாடல்களுக்கு நான் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மேலும், இளையராஜாவின் இசையை நான் ரொம்பவே ரசிப்பேன். இன்னும் சொல்லப்போனால், மனம் சோர்வாக இருக்கும்போது அவரது இசையைக்கேட்டால் உற்சாகமாகி விடுவேன். அந்த அளவுக்கு அவரது இசை ஒரு மாமருந்து என்று சொல்லும் மகேந்திரன், இளையராஜாவின் இசைக்கு அன்றும் இன்றும் நான் அடிமையாகவே இருக்கிறேன் என்கிறார்..
No comments:
Post a Comment