*கோவன்புத்தூர்*
*கோயமுத்தூர்*
*கோவை...*
*கோயமுத்தூர்*
*கோவை...*
*தல வரலாறு :*
கொங்கு நாடான கோவை மாநகர் ஆதியில் அடர் மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. இருளர்களின் தலைவன் கோவன் அதனை சீர்படுத்தி நகராக மாற்றி ஆட்சி புரிந்து வந்தான்.
ஒரு சமயம் அவன் ஆட்சி புரிந்த பகுதியில் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் வாழ வழியின்றி தவித்தனர். அவர்களின் நிலையைக் கண்ட கோவன், தனது ஆட்சியின் கீழ் வசிக்கும் மக்கள், வாழ்வில் நன்மைகள் பல பெற்று பஞ்சம், பிணிகள் ஏற்படாமல் சிறந்து வாழ்ந்திட வேண்டி வனப்பகுதியில் சிறு நிலத்தை சீரமைத்து அங்கு கல் ஒன்றினை வைத்து அம்மனாக எண்ணி வழிபடத் தொடங்கினான். அதன்பிறகு கொங்கு நாட்டு மக்கள் செழிப்புற்று திகழ்ந்தனர். அதன்பின், இருளர்கள் அந்த அம்மனையே தங்களது குலதெய்வமாக எண்ணி கோயில் கட்டி வழிபடத் தொடங் கினர்.
இக்கோயில் கோவைக்கு வடக்கு திசையில் அமைந்தது. அம்பிகை காவல் தெய்வமாக நகரைக் காத்தாள். அவனது ஆட்சி முடிந்த பல்லாண்டுகளுக்குப்பின் இப்பகுதியை இளங்கோசர் என்பவர் ஆண்டு வந்தார். அப்போது சேரமன்னர் ஒருவர் படையெடுத்து வந்தார். அவரின் படையெடுப்பில் இருந்து நாட்டைக் காக்க கோவன்புத்தூரின் மையத்தில் ஓர் கோட்டையையும், மண்மேட்டையும் கட்டி, காப்புத்தெய்வமான அம்மனை அங்கு வைத்து வழிபட்டார். இவளே கோனியம்மனாக வழிபடப்படுகிறாள்.
சிவ அம்ச அம்பிகை: கோனியம்மன் வடக்கு நோக்கி, எட்டு கரங்களில் சூலம், உடுக்கை, வாள், சங்கம், கபாலம், அக்னி, சக்கரம், மணி ஏந்தி காட்சியளிக்கிறாள். சிவனைப் போல, இடது காதில் தோடும், வலது காதில் குண்டலமும் அணிந்திருப்பது அபூர்வமான அமைப்பு. சிவமும், சக்தியும் வேறில்லை என்பதை இந்த வடிவம் உணர்த்துகிறது. அம்பிகை சன்னதி எதிரே சிம்மவாகனம் உள்ளது. முன்மண்டபத்தில் சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகிய தேவியர் உள்ளனர். ஆடி மாதம் முழுவதும் ஊஞ்சல் உற்சவம் நடக்கும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் விசேஷ பூஜை உண்டு.
தலபெருமை:
கோவை நகரின் மூன்று கண்கள் போல விளங்கும் கோயில்களில் ஒன்றாக வீற்றிருந்து பராசக்தியின் ஓர் உருவாக கோனியம்மன் அருள்புரிகிறாள். தனது எட்டு கரங்களில் சூலம், உடுக்கை, வாள், சங்கம், கபாலம், தீ, சக்கரம், மணி, இடது காதில் தோடு, வலது காதில் குண்டலம் அணிந்து உக்கிரமான பார்வையுடன் காட்சி தருகிறாள். இத்தலத்தில் வேப்பம், வில்வம், நாக லிங்கம், அரசமரம் ஆகிய தேவ மரங்கள் உள்ளன. இங்கு வேறு அம்மன் தலங்களில் இல்லாத சிறப்பாக ஆடியில் 30 நாளும் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
இன்று வரையிலும் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தாங்கள் செய்யும் அனைத்து சுப காரியங்களுக்கும் முன்பு கோவையின் அரசியாக திகழும் கோனியம்மனை வணங்கி உத்தரவு கேட்ட பின்பே தொடங்குகின்றனர்.
கோவை நகரில் இங்கு மட்டுமே தேர்த்திருவிழா நடத்தப்படுகிறது.
அக்னி திருமணம்: மாசித்திருவிழாவின் போது சிவன், அம்பிகையை திருமணம் செய்து கொள்வார். அப்போது, கோயில் எதிரே யாககுண்டம் வளர்த்து, அக்னியை சிவனாகப் பாவித்து பூஜை செய்வர். பூஜையில் பயன்பட்ட தீர்த்த கலசத்தின் மேலே வைத்த மாங்கல்யத்தை அம்பிகைக்கு அணிவிப்பர். அக்னி வடிவ சிவன், அம்பிகையை திருமணம் செய்து கொள்வதாக ஐதீகம். மறுநாள் தேர்த்திருவிழா நடக்கும்.
தம்பதி கிரகம்: நோய் நீங்கவும், மாங்கல்ய பாக்கியத்திற்கும் மாவிளக்கு, பொங்கல் நேர்ச்சை செய்கின்றனர். இங்குள்ள ஆதிகோனியம்மன் சிலை மார்பளவு உள்ளது. அருகில் மாசாணியம்மன், சப்தகன்னியர் மற்றும் காவல் தெய்வங்கள் உள்ளனர். அரச மரத்தின் கீழ் பஞ்சமுக கணபதி பத்து கைகளுடன் காட்சி தருகிறார். நவக்கிரக சன்னதியிலுள்ள கிரகங்கள் மனைவியருடன் காட்சி தருவது விசேஷம். சூரியன் ஏழு குதிரை பூட்டிய ரதத்தில் வீற்றிருக்கிறார். தம்பதியர் ஒற்றுமைக்காகவும், சனி, ராகு கேது மற்றும் குரு பெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் தோஷ நிவர்த்திக்காகவும் இங்கு வேண்டிக்கொள்கின்றனர். சாந்த விநாயகர், மாகாளியம்மன், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் சன்னதிகளும் உள்ளன.
அருணகிரிநாதர் கோவை மேவிய கோனியம்மன் என்று பாடியதாக கூற்று உண்டு. கோவைகிழார் இதுவோ எங்கள் கோவை எனும் நூலில் இது குறித்து குறிப்பிட்டுள்ளார். கோவை மாவட்ட காவல் தெய்வம் என்றும், கோவை அரசி என்றும் அழைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment