ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுவிட்டதால் அரசு சார்பில் விழா கொண்டாடக் கூடாது, படமோ, பெயரோ அரசு திட்டங்களில் இடம்பெறக்கூடாது என்று ஆளுநரிடம் கோரி இருப்பதாகவும், வழக்கு தொடுக்க இருப்பதாகவும் ஸ்டாலின் கூறியிருக்கிறார்!
இதை கேட்டதும், "உங்களில் யார் பாவி இல்லையோ, அவர் முதல் கல்லை எறியட்டும்" என்ற இயேசுநாதரின் பொன்மொழிதான் நினைவிற்கு வந்தது!
சரியோ, தவறோ, இன்றைய நிலையில் பெரும்பாலான மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற தலைவராக திகழ்கிறார் ஜெயலலிதா. அதன் வெளிப்பாடாக, அவரின் இறப்புக்கு கூடிய கூட்டமும், சசிகலா சிறைக்கு சென்றபோது கொண்டாடிய நிகழ்வுகளும், பன்னீர்செல்வத்திற்கு உருவாகிய ஆதரவும் திகழ்கின்றன! மக்கள் விரும்பும் ஒரு தலைவருக்கு எதிராக கூறப்படும் எந்த செய்தியும், கூறுபவருக்கு எதிரான விளைவையே உண்டுபண்ணும் என்பது வரலாறு. இதை ஸ்டாலினோ, அவரைப் போன்ற பிற தலைவர்களோ நினைவில் கொண்டதாகத் தெரியவில்லை!
ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு வரக் காரணமாக இருந்த நிகழ்வுகள் 1996 க்கு முன்பு நிகழ்ந்தவை. அதற்குப் பின்னர் ஏறத்தாழ, தி.மு.க.விடுத்த, அனைத்துக் கட்சிகளும் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து அவரை வானளாவ புகழ்ந்து நின்றன. அவரின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கி நின்றன. உண்மையில், இவர்கள் ஊழலுக்கு எதிரானவர்களாக இருந்திருந்தால், ஜெயலலிதாவுடன் எந்தவொரு சமரசமும் செய்திருக்கக் கூடாது. அவருடன் கூட்டணி வைக்க முற்பட்டிருக்கக் கூடாது. அவரே கூட்டணிக்கு அழைத்திருந்தாலும், "உங்கள் மீது வழக்கு இருக்கிறது, அதில் நிரபராதி என்று நிருபித்து வெளியில் வாருங்கள், கூட்டணி பற்றி பேசலாம்" என்று கூறியிருக்க வேண்டும்! குறைந்த பட்சம், இன்றாவது தாங்களாக முன்வந்து, "நாங்கள் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தது தவறு, அதற்கு மன்னிப்புக் கேட்கிறோம், இனி வழக்கு நிலுவையில் உள்ள யாருடனும் கூட்டணி வைக்க மாட்டோம்" என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்!
இப்படி யாரும் செய்யப்போவதில்லை! அவர்கள் யாரும் யோக்கியர்கள் இல்லை. யோக்கியனுக்கு அரசியலும் தேவைப்படாது! தங்களை யோக்கியன் என்று காட்டிக் கொள்ள வேண்டும். அதற்காக சிக்கியவன் மீது சேறு அள்ளி வீச வேண்டும். அவ்வளவே! ஜெயலலிதா சிக்கினார், இவர்கள் இன்னும் சிக்க வில்லை! அதற்கு நம் சட்டநடைமுறை உதவாது. இருந்தும், ஜனநாயகத்தின் வேர்களான மக்கள் ஒரு தீர்ப்பு எழுதிவிடுகிறார்கள். இன்றைய நிலையில் அது ஜெயலலிதாவிற்கு சாதகமாக இருப்பதை தூற்றுவோர் உணர வேண்டும்!!
No comments:
Post a Comment